ரோஸிக்கு ஒரு முத்தம்!

ரோஸிக்கு ஒரு முத்தம்!

வீட்டில் யாரும் இல்லை! மனைவி கடைவீதிக்குச் சென்றிருந்தாள். குழந்தைகள் பள்ளியில் இருந்து திரும்பவில்லை! தனிமை! தனிமை! இனிமைதான்! டீவியில் ஒளிர்ந்து கொண்டிருந்த குத்துப்பாட்டை ரசித்து கொண்டிருந்தவன் திரும்பினேன்! எதிர் சோபாவில் ரோஸி. எனக்கே எனக்கான நான் மிகவும் விரும்பும் ரோஸி.
    வெல்வெட் உடல்! ஆரஞ்சு நிறம்! மான் போல மிரளும் விழிகள்!
என்ன அழகு இவள்? அவள் நடக்கும் போது மனசு அப்படியே தூக்கி முத்தமிட துடிக்கும். அப்படி ஒரு அதிர்வு மனதில்! அவளுக்கும் என்னைக் கண்டால் மிகவும் பிடிக்கும்! இந்த வீட்டில் அவளை பிடிக்காத ஒரு ஜென்மம் இருக்கிறது என்றால் அது என் மனைவிதான். அவளுக்கு பொசஸிவ்னெஸ் அதிகம்! தன்னைத்தவிர வேறு யாரையும் நான் விரும்ப கூடாது என்று.
    அவள் இருக்கும் வரை யாரும் ரோஸியை நெருங்க முடியாது. அவள் அகன்றால் ரோஸியோடு ஒரே அரட்டைதான்! என் இரண்டு மகள்களும் அவளோடு ஒட்டி உறவாடி மகிழும் சமயம் எனக்கும் ஆசை துளிர்க்கும். ஆனால் மனைவி பூரிக்கட்டையையோ கரண்டியையோ தூக்கி அடிக்க வந்துவிட்டால் நாலு பேர் முன்னால் மானம் போகுமே! என்று அடக்கிக் கொள்வேன்.
   ரோஸிக்கும் என் மீது கொஞ்சம் ஆசைதான் போல! மனைவி இல்லாத சமயம் நெருங்கி வந்து ஒரு பார்வை பார்ப்பாள். அந்த பார்வை ஒன்றே போதுமே! அத்துடன் நின்றால் பரவாயில்லை! அவள் வெல்வெட் உடலால் உரசி செல்லும் போது ஆயிரம் ஓல்ட் மின்சாரம் பாயும்.
    என்னுடைய மனைவியும் இருக்காளே! ராட்சஸி! அவள் ஒரு நாளாவது இப்படி நடந்து கொண்டது உண்டா? போனதுதான் போகட்டும்! ரோஸி என்னிடம் பழகவாவது விடுகின்றாளா? சதா அதன் மீது “வள் வள்” என்று எரிந்து விழுவாள். ஒவ்வொரு முறை அவள் அப்படி கத்தும் போதும் ரோஸியை பார்க்கவேண்டுமே பரிதாபமாக இருக்கும். ஒரு முறை ரோஸியை அடித்தும் விட்டாள். ஆனால் ஒரு சின்ன அழுகையோடு ரோஸி ஒதுங்கிக் கொண்டாள். பெரிதும் பிரஸ்தாபிக்கவில்லை!  அவ்வளவு சாது அவள். அவளைப் போய் இவளுக்குப் பிடிக்கவில்லையே!
   என் மனைவிக்கு போட்டியாகத்தான் ரோஸியையே வீட்டுக்கு அழைத்து வந்தேன். நண்பன் வீட்டில் பார்த்ததுமே பிடித்து போனது. வருகிறாயா? என்றேன்! துள்ளிவந்தாள். என் கன்னங்களில் முத்தமிட்டாள். அதை பார்த்த என் மனைவி கொக்கரித்தாள். மரியாதையாக இந்த பழக்கத்தை நிறுத்திக் கொள்ளுங்கள்! இதென்ன புதுப்பழக்கம்? நம் குடும்பத்திற்கு ஆகாது என்றாள்.
    ஆனால் நான் விடாப்பிடியாக இருந்தேன். ரோஸி இங்கேதான் இருப்பாள். நம்மோடு ஒருத்தியாக! என்னை நம்பி வந்துவிட்டாள் அனுப்ப முடியாது என்று சொல்லிவிட்டேன். அப்போதே ஒப்பாரி வைத்தாள். ஆனால் என் மகள்களுக்கும் ரோஸியை பிடித்துப் போக அவளால் ஒன்றும் பேசமுடியவில்லை!
  அதோ ரோஸி!  சோபாவில் படுத்து உறங்கிக் கொண்டிருக்கிறாள். அவளது வெல்வெட் உடல்! பஞ்சு போன்ற கன்னங்கள்!  என்னை என்னமோ செய்தது. அவளை அப்படியே தூக்கி முத்தமிட ஆசை! ஆனால் மனைவி வந்துவிட்டால்? ஊரையே கூட்டிவிடுவாளே?
   முத்தம்தானே! அதில் என்ன தப்பு? அவனவன் யார் கேட்பார்கள் என்று பொது இடத்தில் கொடுக்கிறான்?  நான் என்னடா என்றால் யோசித்து கொண்டிருக்கிறேனே? இந்த வாய்ப்பு திரும்ப வராது!  கடும் போராட்டத்தில் மனசாட்சியை வென்று மெதுவாக சத்தம் போடாமல் ரோஸியின் அருகே நெருங்கி அப்படியே அவளை அள்ளினேன். அப்படியே அவள் உடலில் என்  இதழ்களை பதிக்க…
  “ ஐயையோ! இந்த அக்கிரமத்தை கேட்பாரில்லையா? ஒரு மனுசி வீட்டில் இல்லைன்னா இந்த அநியாயம் நடக்குதே இங்கே? ஒரு தெரு நாயை கூட்டி வந்து வீட்டில வெச்சதும் இல்லாம… அதை சோபாவுல படுக்க வெச்சதும் இல்லாம…  அதுக்கு முத்தம் வேறயா? முதல்ல அதை கீழே போடுங்க!  என்று வலுக்கட்டாயமாக அதை என்னிடம் இருந்து பிடுங்கி தூர வீசினாள்.
  எஜமானியம்மாளின் திடீர் கோபத்தில் பயந்து போய் கீழே விழுந்து  ‘வவ் வவ்’  என்று ஓடியது அந்த நாய்க்குட்டி.



தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. பதிவின் தொடக்கத்திலேயே ரோசி என்றால் யாராக இருக்கும் என நான் நினைத்தது சரியாக இருந்தது.

    ReplyDelete
  2. :))))

    யூகிக்க முடிந்தது.

    ReplyDelete
  3. அருமை. படித்தேன். ரசித்தேன்.
    இன்று நமது வலையில்: உதவும் கரங்களிடம் ஒரு விண்ணப்பம்!

    ReplyDelete
  4. நாய்க்கோர் கதை நல்லாத்தான் போனது பொழுது.

    ReplyDelete
  5. ஆரம்பத்துலேயே ரோசி ஒரு பூனைக்குட்டியோ, நாய்க்குட்டியோ என்று தெரிந்து விட்டது.
    இருந்தும் உங்களின் நடை, கதையை முழுமையாக படிக்கத் தூண்டியது.

    ReplyDelete
  6. அட இவ்வளவு தானா...! ஹா... ஹா....

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம் அவ்வளவு தான் சகோதரா :)))))

      Delete
  7. சுரேஷ் மிக அருமையான கதை! மிக அழகாக எழுதியுள்ளீர்கள் சஸ்பென்ஸ் வைத்து....படமும் அதற்குத் துணை போகின்றது! ஆனால், வெல்வெட் உடல்......மான் விழிகள்.. என்று ஆரம்பிக்கும் இடத்திலேயே புரிந்துவிட்டது அது நாய்குட்டி/பூனைக் குட்டியாய் இருக்கும் என்று! மிகவும் ரசித்தோம்!

    ReplyDelete
  8. ரோசி நாய் என்று தெரிந்து விட்டாலும் சொன்ன விதம் படு சுவாரசியம்.

    ReplyDelete
  9. பதிவின் தொடக்கத்திலேயே தெரிந்து விட்டது ரோஸி யாரென்று... வெல்வெட் உடலென்ற வர்ணனையிலேயே

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!