நாற்பதில் நான்!

நாற்பதில் நான்!


3-7-75 ல் இந்த பூமியில் பிறந்தேன். இன்று 39 ஆண்டுகளை நிறைவு செய்து நாற்பதில் அடியெடுத்து வைக்கிறேன்! ஆம் இன்று எனது பிறந்தநாள். இந்த பிறந்தநாள்கள் வருடா வருடம் வந்து நம்முடைய எக்ஸ்பையரி டேட்டை நினைவுபடுத்திச் செல்கிறது.
   இத்தனை வருடங்களில் எதையும் பெரிதாய் சாதித்து கிழித்துவிடவில்லை! பெரிய தலைவனும் இல்லை, அரசியல்வாதியும் இல்லை, பணக்காரனும் இல்லை பிறந்தநாள் கொண்டாடுவதற்கு! மேலே சொன்ன வகையினருக்கு பல்வேறு வகையில் காரணங்கள் இருக்கின்றன பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்கு.
     நானும் எனது பிறந்தநாளை வருடாவருடம் மகிழ்ச்சியாக கொண்டாடி கழித்த நாட்கள் இருக்கிறது. அது என் இருபத்தி ஐந்தாம் வருடத்தில் துவங்கி முப்பத்து ஐந்தாம் வயதில் நின்று போனது. அப்போது டியுசன் நடத்திக் கொண்டிருந்தேன். டியுசன் மாணவர்களோடு கொண்டாடி இனிப்புக் கொடுத்து பேனா, பென்சில் நோட்புக் என்று அவர்களுக்கு பரிசுகள் கொடுத்து மகிழ்வேன். சிறிய அளவிளான பரிசுப் பொருள்கள்தான். ஆனால் அதைப்பெறுகையில் அவர்களிடம் உண்டாகும் மகிழ்ச்சி! உண்மையாக உள்ளத்தில் இருந்து வரும் வாழ்த்து வேறு எதற்கும் நிகர் ஆகாது. டியுசன் நிறுத்திவிடவே பிறந்தநாள் கொண்டாட்டமும் நின்று போய்விட்டது.
  ஆனால் முக நூல் நட்புக்கள் பிறந்தநாள் வாழ்த்து செய்திகளை பறிமாறியுள்ளார்கள். காலம் நம்மை எப்படியெல்லாம் மாற்றிவிடுகிறது. அருகில் உள்ளவர்களோடு அளவளாவி கொண்டாடியது போய் தொலை தூரத்தில் முகமறியாத நண்பரின் நண்பர்கள்கூட வாழ்த்து தெரிவிக்கும்போது ஒரு நெகிழ்ச்சி ஏற்படத்தான் செய்கின்றது.
  எப்போதுமே எனக்கு இரண்டு பிறந்தநாள்கள்! அதாவது நானாக கொண்டாட ஆரம்பித்த போது இப்படி பிரித்துக் கொண்டேன். நான் பிறந்த ரேவதி நட்சத்திரத்தன்று வீட்டில் உள்ளவர்களோடு கொண்டாடுவேன். மற்றொன்று என் மன திருப்திக்காக தேதிப்படி டியுசன் மாணவர்களோடு கொண்டாடுவேன். இந்த வருடமும் போனவாரமே ரேவதி நட்சத்திரத்தன்று சாமி கும்பிட்டுவிட்டு ஒரு பாயசம் அருந்தி பிறந்த நாள் கொண்டாட்டம் நிறைவடைந்துவிட்டது. இன்று தேதிப்படி பிறந்தநாள். இப்போது டியுசன் இல்லாததால் இன்றைய கொண்டாட்டம் இல்லை! உடல் நிலைவேறு ஞாயிறு மாலைமுதல் சரியில்லை! இரண்டுநாட்களாக பதிவிடக் கூட இல்லை!
   நாம் பிறந்து என்னத்தை சாதித்துவிட்டோம்! பெற்றவர்களுக்காகாவாது எதையாவது உருப்படியாக செய்திருக்கிறோமோ என்று எண்ணிப் பார்க்கத் தூண்டியது.  குறைந்த பட்சம் இருபத்தி ஐந்து வயதில் சம்பாதிக்கத் துவங்கி வீட்டு நிர்வாகத்தை எடுத்துக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் இருபத்தி ஐந்தாவது வயதில்தான் டியுசன் சேவை அது இது என்று ஆரம்பித்து இருந்தேன். இதற்கு தடை சொல்லாத பெற்றோர்கள் இன்று வரை என் சம்பாத்யம் பற்றி கேட்பது இல்லை! என்னிடம் செலவிற்கு கூட பணம் வாய் திறந்து கேட்டது இல்லை என்றால் அவர்கள் எத்தனை உத்தமமானவர்கள்! அவர்களுக்கு நான் ஏதாவது செய்திருக்கிறேனா என்றால் இதுவரை எதுவும் இல்லை! இந்த பிறந்தநாளில் இருந்தாவது அடுத்த வருடத்திற்குள் அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன்! குறிப்பாக எங்களுக்கு சொந்த வீடு இல்லை! சொந்தமாக ஒரு மனையாவது வாங்கவேண்டும் இந்தவருடத்தில் என்பது குறிக்கோள். அதில் வீடுகட்டி சகலவசதிகளுடன் பெற்றோரை தங்கவைத்து பார்க்க வேண்டும் என்ற ஆசை எழுந்துள்ளது. நியாயமான ஆசைதானே! நிறைவேறும் என்ற நம்பிக்கை உள்ளது. அதற்கடுத்தபடியாக பதிவுலகம்.

    பதிவுலகில் சென்றவருடம்வரை காப்பி- பேஸ்ட் பதிவராகவே அறியப்பட்டவன். நான். பதிவுக்கும் பகிர்வுக்கும் வித்தியாசம் தெரியாமல் தளத்திற்கு நிறைய பேர் வரவேண்டும் என்ற ஆசையில் செய்தி தளங்களில் இருந்து சுவையான செய்திகளை பகிர்ந்து கொண்டேன். கூடவே என்னுடைய படைப்புக்கள் வந்தாலும் அது யாருக்கும் தெரியாது. இப்படி இருக்கும் போதுதான் திடங்கொண்டு போராடு சீனு தன் பதிவில் என்னைப் போன்றவர்களுக்கு ஓர் அறிவுரை சொன்னார். அப்போது கமெண்டில் என்னுடைய வலைதள முகவரியை பகிர்வேன் நான். அது தேவையற்றது என்றும் சொந்தமாக எழுதுங்கள் தானாக படிக்க வருவர் என்றும் சொல்லியிருந்தார். என் பெயரைக் குறிப்பிட்டு இப்படி சொல்லியிருந்தார் சீனு. எனக்கு அது தவறாக தெரியவில்லை! ஆனால் அதற்கு வந்த பின்னூட்டத்தில் மதுரைத் தமிழன் எனக்கும் அந்தவகை கமெண்ட் வந்தது என்றும் தளத்திற்கு சென்றுபார்த்து வொர்த் இல்லை என்று கமெண்ட் மாடரேசன் வைத்து என் கமெண்ட்களை நீக்கிவிட்டதாகவும் சொன்னபோது மனதில் ஒரு வலி தைத்தது. கொன்றை வானத் தம்பிரான் அவர்கள் என் தளத்தில் வந்து பின்னூட்டத்தில் பின்னியெடுத்ததைவிட  மோசமான ஓர் வலி அது. யாரோ ஓர் முகம் தெரியா நண்பர் நம்மை முழுமையாக அறியாமல் ஒதுக்கிவிட்டாரே என்ற வருத்தம்.
   அவர் ஒதுக்கினாலும் அவர் தளத்திற்கு நான் சென்றுவந்தேன். தவறு அவர் மீது இல்லையே! இந்த பிறந்தநாளில் எனக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு மதுரைத் தமிழன் அவர்கள் எனது பாலோவராக இணைந்ததுதான். போனவாரத்தில் நான் நட்சத்திரப்படி பிறந்தநாள் கொண்டாடிய சமயம் அவர் என் தளத்தில் இணைந்திருந்தார். அவரது தொடர்பதிவில் நானும் கலந்து பதிவிட அதற்கு பின்னூட்டமும் இட்டு இருந்தார். அன்று நான் அடைந்த மகிழ்ச்சி அளவிட முடியாதது.
    அடுத்த பிறந்த தினத்திற்குள் வசிஷ்டர் வாயால் பிரும்மரிஷி பட்டம் வாங்கிவிட முடியும் என்று நினைக்கிறேன்! யார் அந்த வசிஷ்டர் என்கிறீர்களா? திரு கொன்றைவானத் தம்பிரான் அவர்கள்தான். கிட்டத் தட்ட அவர் யாரென்று ஊகித்துவிட்டாலும் அவர்தானா என்ற சந்தேகம் இன்னும் உள்ளது. அவரது தொடர்ச்சியான பின்னூட்டங்கள்தான் என்னுடைய வலைப்பூவை இந்த அளவிற்கு மாற்றி அமைத்துள்ளது என்றால் மிகையாகாது. இன்னும் இந்த ஆண்டில் சிறப்பாக  ஒரு பதிவாவது எழுதி அவர் வாயால் பதிவர் என்ற பட்டம் வாங்கிவிட்டால் அதைவிட சிறப்பேதும் இல்லை என்றே தோன்றுகிறது. இந்த வருட பிறந்தநாள் லட்சியங்கள் இதுதான். இப்போது கொன்றைவானத் தம்பிரான் அவர்கள் ரொம்ப பிசி ஆகிவிட்டார் போலிருக்கிறது. ஜனவரி மாதம் வந்து ஒரு பின்னூட்டம் இட்டார் அதன் பின் காணவில்லை! பிறந்தநாள் பதிவில் அவர் வாழ்த்து கிடைத்தால் அகமகிழ்வேன்!
     பிறந்தநாள் வாழ்த்து கூறிய கூறப்போகும் என் வலையக அன்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். உடல்நிலை சீரானதும் வழக்கம் போல் பதிவுகள் வெளிவரும்!  நன்றி!


Comments

  1. இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் சுரேஷ். நீங்கள் மென் மேலும் வளர உளமார வாழ்த்துகிறேன்

    ReplyDelete
  2. அடுத்த பிறந்தநாளில் இறைவன் அருளால் தங்களது எண்ணங்கள் அனைத்தும் நிறைவேற இறைவனை வேண்டுகிறேன் நண்பரே.... வாழ்க பல்லாண்டு.

    ReplyDelete
    Replies
    1. கில்ல்ர்ஜி என்னை இப்படி யாரும் வாழ்த்தவில்லை எனது அடுத்த பிறந்தனாள் போது என்னையும் இப்படி வாழ்த்தி விடுங்கள்..

      எனது எண்ணம் எல்லாம் குட்டியும் புட்டியும்தான் அது நிறை வேற வாழ்த்துங்கள் குட்டி என்று சொன்னது பெண்களை அல்ல நாய்க்குட்டியை அதுதான் பூரிக்கட்டையால் அடிக்காது

      Delete
  3. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் சுரேஷ்.

    ReplyDelete
  4. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் சுரேஷ்.

    ReplyDelete
  5. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சுரேஷ். உங்களை பெயர் சொல்லி அழைக்கிறோமே, என்னை விட மூத்தவராக இருந்தால் என்ன செய்வது என்று நினைப்பேன். அந்த நினைப்பை பொய்யாக்கிவிட்டது தங்களின் பிறந்த தின தேதி.

    உங்களுடைய எல்லா ஆசைகளும் நியாயமான ஆசைகள். கண்டிப்பாக இனி வரும் காலங்களில் அவைகள் ஈடேறும் என்பதில் ஐயமில்லை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. சொக்கன் நான் உங்களை சின்ன பையன் என்று அல்லவா நினைத்து கலாய்து வருகிறேன். உங்களின் பதிலை பார்த்தால் நீங்கள் பெரியவர் போலத் தெரிகிறதே. இனிமே சொக்கன் ஐயா என்றுதான் கூப்பிட வேண்டும் என்று நினைக்கிறேன்... இதை சாக்காக வைத்து உங்கள் வயது என்னவென்று என்னிடம் கேட்க கூடாது

      Delete
    2. நன்றி சொக்கன்! பெயர் சொல்லி அழைப்பதில் தவறில்லை என்பேன் நான்! கூப்பிடத்தானே பெயர் வைக்கிறார்கள்! அப்புறம் கூப்பிட்டால் என்ன தவறு! ரொம்பவும் மூத்தவரை வேண்டுமானால் பெயரிடாமல் ஐயா என்று விளிக்கலாம்!

      Delete
  6. ///இந்த பிறந்தநாளில் எனக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு மதுரைத் தமிழன் அவர்கள் எனது பாலோவராக இணைந்ததுதான். போனவாரத்தில் நான் நட்சத்திரப்படி பிறந்தநாள் கொண்டாடிய சமயம் அவர் என் தளத்தில் இணைந்திருந்தார். அவரது தொடர்பதிவில் நானும் கலந்து பதிவிட அதற்கு பின்னூட்டமும் இட்டு இருந்தார். அன்று நான் அடைந்த மகிழ்ச்சி அளவிட முடியாதது....///

    இந்த கிண்டல்தானே வேண்டாம்கிறது. மதுரைத்தமிழன் பெரிய அப்படக்கர் அவர் சேர்ந்துட்டாருன்னு நீங்க சந்தோஷப்படுறீங்க.....வலைத்தளத்தில் எல்லோரும் சமமே யாரும் பெரியவர் சிறியவர் கிடையாது

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே! இதில் கிண்டல் ஏதும் கிடையாது நண்பரே! நம்மை ஒருவர் விலக்குகிறாரே என்ற வருத்தத்தில் இருந்தவனுக்கு அவரே நம்முடன் சேர்ந்தால் ஏற்படும் மகிழ்ச்சிதான் அது!

      Delete
    2. சுரேஷ் வயசோ நாற்பது என்கிறீர்கள் ஆனால் ஒருத்தன் விலக்குகிறான் சேர்க்கிறான் என்பதற்கு எல்லாமா சந்தோஷம் வருத்தம் அடைவது. நோ நோ நோ ஏதாவது பெண் விலக்குகிறாள் என்றால் மட்டுமே வருத்தப்படனும் ஒகே வா

      Delete
  7. எனக்கு தெரிந்த வரையில் ஆரம்ப காலைத்தில் நீங்கள் காப்பி பேஸ்ட் பண்ணிய போஸ்ட்கள்தான் அதிகம் என் கண்ணில் பட்டது. ஃப்ர்ஸ்ட் இம்பரஷன் இஸ் பெஸ்ட் இம்பரஷனாக இருக்கனும் என்பார்கள் அது இல்லை என்பதால்தான் அப்படி கமெண்ட் போட்டேன் யாருடா இவர் காப்பி பேஸ்ட் பண்ணுவது மட்டுமல்லாமல் அதற்கான லிங்கை நமது தளத்தில் கருத்துக்களாக போட்டு நம்து பதிவையே திசை திருப்புகிறார். அதுவும் நமது தளத்தில் உள்ளதை படிக்காமலே சிம்பிளாக அருமை என்று சொல்லிவிட்டு போகிறார் என்ற கோபம்தான் என்னை அப்படி கமெண்ட் போட வைத்தது. அது உங்களை காயப்படுத்தி இருந்தால் அது என் தவறு கிடையாது.. எனக்கு யாரையும் காயப்படுத்தும் நோக்கம் கிடையாது பொதுவாக ஒதுங்கியே போவேன் ஆனால் மேலும் மேலும் அது என்னை இரிடேட் பண்ணினால் இப்படிதான் என் பதில் வந்துவிடும்..


    நீங்கள் காப்பி பேஸ்ட் பண்ணும் போது அதை அப்படியே போடாமல் அதைப் போட்டு விட்டு அதனை சார்ந்த உங்கள் சிந்தனைகளை கருத்துக்களை அழகாக தட்டிவிடுங்கள் அப்போதுதான் படிக்க சுவையாக இருக்க்கும் அது போல மற்றவர்கள் தளத்தில் கருத்துக்கள் இடும் போது நேரம் கிடைக்கும் போது அருமை, பாரட்டுக்கள்,பகிர்வுக்கு நன்றி என்று போடுவதைவிட பதிவை ஒட்டி உங்கள் கருத்தை தட்டிவிடுங்கள் அதன் பின் பாருங்கள் உங்கள் தளம் நோக்கி எத்தனை பேர் வருகிறார்கள் லிங் ஏதும் இல்லாமல்

    ReplyDelete
    Replies
    1. இந்த கருத்தையும் ஏற்றுக்கொள்கிறேன்! பதிவுக்கும் பகிர்வுக்கும் வித்தியாசம் தெரியாமல் இருந்த காலம் அது! அது மட்டும் இல்லாமல் அப்போது நான் தொடர்ந்து கொண்டிருந்த சில முன்னனி ப்திவர்கள் இதே வேலையை தொடர்ந்து கொண்டிருந்தார்கள்! அது என் கண்ணை மறைத்துவிட்டது. பெரும்பாலும் எல்லா பதிவுகளையும் ஆழ்ந்தே படிக்கிறேன்! மேலோட்டமாக படிப்பது கிடையாது. ஆனால் பல தளங்களுக்கு செல்வதால் விரிவாக யோசித்து கமெண்ட் செய்வது கிடையாது. சில படைப்புகள் புரிந்தும் புரியாதது போல இருக்கும். சிலவற்றிற்கு என்ன சொல்வது என்று தெரியாது. அதனால் பொத்தாம் பொதுவாக அருமை! என்று கமெண்ட் இடுவேன். இப்போதுதான் காப்பி- பேஸ்ட்டை தவிர்த்து விட்டேனே! நான் மாறி விட்டேனே மதுரைத்தமிழன்!

      Delete
    2. //காப்பி- பேஸ்ட்டை தவிர்த்து விட்டேனே!///

      அட அட காப்பி பேஸ்ட் வாழ்க்கைக்கு அவசியம் அதாவது குடிக்கிற காப்பி பல் துலக்குற பேஸ்ட்டை சொன்னேன்

      அதை தவிர்த்துவிடாதீர்கள் அதிலும் பேஸ்டை அப்புறம்

      Delete
    3. ஞாபகப் படுத்துனதுக்கு நன்றி! இன்னிக்குத்தானே பிறந்தேன்! பல்லு விலக்கணுமான்னு யோசிச்சிக்கிட்டு இருக்கேன்! ஹாஹா!

      Delete
  8. குடும்பத்திற்கு நிகராக
    பதிவையும் இணைத்து எழுதியது
    தாங்கள் பதிவுலகின் மீதும் பதிவர்கள் மீதும்
    வைத்துள்ள மதிப்பை உணரவைத்தது
    மனம்போல் எல்லாம் அமைய
    எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
    இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்களது வாழ்த்திற்கு மனமார்ந்த நன்றி ஐயா!

      Delete
  9. உண்மை நிகழ்வை உளம்திறந் தேற்றினீர்
    திண்மை பெறுவீர் சிறந்து!

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சகோதரரே!..

    உங்கள் எண்ணங்கள் யாவும் நிறைவேற
    இறையருள் கிட்டட்டும்!

    வாழ்க வளமுடன்!

    ReplyDelete
    Replies
    1. கவிதையால் வாழ்த்தியமைக்கு நன்றி சகோதரி!

      Delete
  10. வணக்கம் தளிர் சுரேஷ் அவர்களே!

    ஆறிப்போன காயத்தைக் கீறி பார்க்க வேண்டாம்.
    முடிந்தது எதுவும் முடிந்ததாகவே இருக்கட்டும்.

    இனி வருநாள் அனைத்தும்
    உயர்வை நினைத்தே நிமிர்ந்து பாருங்கள்.

    பிறந்த நாள் வாழ்த்துக்கள் சுரேஷ் ஐயா.

    39 தானே துவங்குகிறது....?
    40 எப்படி....?

    ReplyDelete
    Replies
    1. கீறிப்பார்க்கவில்லை சகோ! சற்றே நினைத்துப் பார்த்தேன்! அவ்வளவே! 39 நிறைவடைகிறது நாற்பது துவங்குகிறது

      Delete
  11. பிறந்த நாள் வாழ்த்துக்கள் .
    யார் அந்த கொன்றை வானத் தம்பிரான் . உங்கள் முந்தைய பதிவுகளை சென்று பார்த்தேன். கண்ணில் படவில்லையே. ஆன்மிகம், கோவில், தமிழ் குட்டிக் கவிதைகள் என்று சொந்த சரக்கே இருக்கும்போது காபி பேஸ்ட் தேவை இல்லை என்ற முடிவை செயல் படுத்தி வருவது பாராட்டுக்குரியது.மற்றவர்கள் சொல்லும் நல்லதோ கெட்டதோ ஓரளவிற்கு மேல் பொருட்படுத்த வேண்டாம். தொடர்ந்து கலக்குங்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி சார்! கொன்றை வானத் தம்பிரான் யார் என்றுதான் நானும் தேடிக்கொண்டு இருக்கிறேன்! 2012 களில் எனது அனைத்து பதிவுகளிலும் கமெண்ட் போட்டுக் கலக்குவார். ஒரு முறை உங்களைக் கூட நக்கலடித்து உள்ளார். நன்றி!

      Delete
  12. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சுரேஷ். தங்களின் ஆசைகள் அனைத்தும் நிறைவேற இறைவனை பிரார்த்திக்கிறேன். எவரும், எதிலும் அனுபவம் பெற்று, பெற்றுத்தான் தெரிந்து கொள்ள முடியும். யாவர்க்கும்......கற்பது என்பது என்றும் முடிவில்லாதது. நன்றி.

    ReplyDelete
  13. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்! கடந்த கால நினைவலைகள் தங்களது வருங்காலங்களில், ஒரு வித எச்சரிக்கையுணர்வுடன் ஒவ்வொன்றிலும் நிதானமாக, ஆழமாக யோசித்து செய்ய வைக்கும்! இறையருளால், அனைத்தும் நல்லவிதமாகவே அமையும். ஒவ்வொன்றிலும் ஒரு அனுபவம் கிடைக்கும். கற்றது கையளவு. இறைவனின் கருணை கடலளவு! இறைவன் அருளால் நீடு வாழ்க! வளர்க!
    அன்பிற்குரிய இளவலே!

    ReplyDelete
  14. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் சார்.நாற்பது வயதில் தான் பக்குவம் வரும் வாழ்க்கை அப்போதுதான் ஆரம்பிக்கின்றது.இன்று புதிதாய் பிறந்துள்ளீர்கள்.இனி உங்கள் கனவுகள் நனவாகட்டும்.

    ReplyDelete
  15. பிறந்த நாள் வாழ்த்துகள் சுரேஷ்....

    உங்கள் கனவு நனவாகட்டும்....

    ReplyDelete
  16. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பரே
    தங்களின் நியாயமான ஆசை இவ்வாண்டு நிச்சயம் நிறைவேறும் நண்பரே

    ReplyDelete
  17. பிறந்தநாளில் சிறப்பான சிந்தனைகள். வாழ்த்துகள் சுரேஷ்.

    ReplyDelete
  18. இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் என் அன்புச் சகோதரனே !
    வாழ்க வளமுடன் நலமும் பலமும் பெற்றுலகில் .

    ReplyDelete
  19. பிறந்த நாள் வாழ்த்துகள்....

    ReplyDelete
  20. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ...!
    எண்ணிய எண்ணமெல்லாம் ஈடேற மனமார வாழ்த்துகிறேன் .சகோ...!

    ReplyDelete
  21. எங்கள் இதயம் கனிந்தபிறந்த நாள் வாழ்த்துக்கள்! சுரேஷ்! தாமதமான வாழ்த்திற்கு மன்னிக்கவும்! எல்ல நாட்களுமே பிறந்த நாட்கள்தானே! நாம் ஒவ்வொரு நாளும் காலையில் எழும்போது நாம் புதிதாய்தான் பிறக்கின்றோம்! இல்லையா சுரேஷ்!!!

    தங்கள் கனவுகள் யாவும் மெய்ப்பட வேண்டும்! எல்லாம் வல்ல அந்த இறைவன் தங்களுக்கு பரிபூரணமாக அருள் வழங்க எங்கள் பிரார்த்தனைகளும், வாழ்த்துக்களும்!

    துளசிதரன், கீதா

    ReplyDelete
    Replies
    1. மன்னிப்பெல்லாம் எதற்கு ஐயா! தங்களின் மனப்பூர்வமான வாழ்த்திற்கு மிக்க நன்றி!

      Delete
  22. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

    ReplyDelete
  23. வணக்கம் ஐயா.. இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.. மிகவும் தாமதமாய் வாழ்த்து தெரிவித்தமைக்கு மன்னிக்கவும் ஐயா..

    நீங்கள் குறிப்பிட்டிருக்கும் தங்களின் நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் தங்களுக்கு கிடைத்திட இறைவன் அருள் புரியட்டும்..

    மீண்டும் ஒருமுறை எனது உளம்கனிந்த வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  24. சற்று தாமதமாக கூறினாலும்... பிறந்தநாள் வாழ்த்துக்கள் ! நீங்கள் மேன்மேலும் வெற்றிகள் பல பெற்று சிறப்படைய வாழ்த்துகிறேன்.

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!