நத்தம் ஸ்ரீ வாலீஸ்வரர்.
நத்தம் ஸ்ரீ வாலீஸ்வரர்
அம்பிகை ஆனந்த வல்லியை (ராகு) சர்ப்ப வடிவில் தீண்டியதால் ஏற்பட்ட விஷத்தை ஏற்றுக்கொண்டதால் சிவலிங்கம் கருமையாக உள்ளது. மேலும் சிவனின் ஐந்து முகங்களில் ஒன்றான அகோரமும் கருமை நிறம் கொண்ட லிங்கம் எனவும் கொள்ளலாம்.
வானர அரசன் வாலியின் ப்ரம்மஹஸ்தி தோஷம் இச்சிவனை வழிபட்டதால் நீங்கியது. ஒரு சமயம் வாலி இலங்கை வேந்தன் இராவணனோடு போரிட்டு வென்றான் பின்பு அவனை தம் வாலில் கட்டி காடு மேடு மலைகளில் இழுத்து சமுத்திரத்தில் மூழ்கடித்து பலவாறு துன்புறுத்தினான். இராவணன் அரக்கன் ஆனாலும் விஸ்ரவசு என்னும் ரிஷியின் புத்திரன். மேலும் பிரம்மனின் பேரன். எனவே அவனைதுன்புறுத்திய வாலிக்கு பிரம்மஹஸ்தி தோஷம் பிடிக்கிறது. வாலி ப்ரம்மாவை நாடி தோஷம் நீங்க உபாயம் கேட்கிறான். பிரம்மன் வாலியை புண்யாரண்ய நெல்லி வனத்தில் உறையும் அகோர (கருமைநிற) சிவனை வழிபட்டால் பிரம்மஹஸ்தி தோஷம் நீங்கும் என்று அனுப்பி வைக்கிறார்.
வாலி நெல்லி வனம் வந்து வற்றாத கங்கைநீர் சுனையில் நீராடி செவ்வல்லி தாமரை தடாகத்தில் தீர்த்தமெடுத்துஈஸ்வரனை அபிஷேகித்து தாமரை அல்லி மலர்களால் அர்ச்சித்து வழிபட்டான். ஈசன் வாலியின் வழிபாட்டில் மிகவும் மகிழ்ந்து ஆனந்தவல்லி அம்பிகையுடன் காட்சி தந்து வாலியின் தோஷம் நீக்கியதோடு அல்லாமல் இனி இத்திருத்தலம் வாலி வனம் எனவும் தீர்த்தம் வாலித்தீர்த்தம் எனவும் நான் வாலீஸ்வரர் எனவும் வழங்கப் படுவேன் என்று வரங்களை தந்தருளினார்.
இங்குள்ள தீர்த்ததில் நீராடி என்னை வழிபடுவோர் வாழ்வில் உள்ள தோஷங்கள் துயரங்கள் நீங்கும் எனவும் வரமருளினார்.
லிங்க்த்தின் ஆவுடயார் அலங்காரங்களுடன் கூடிய சதுரவடிவில் அமைந்து இருப்பது அபூர்வமாகும் . லிங்கங்களில் தேவலிங்கம்,மானுடலிங்கம்,ரிஷிலிங்கம்,ராட்சச லிங்கம், பாணலிங்கம்,சுயம்புலிங்கம்,க்ஷணிக லிங்கம் என பலவகை உண்டு அவைகளில் இல்லிங்கம் தேவலிங்கமாகும். ஸ்ரீ வாலீஸ்வரருக்கு பால் அபிஷேகம் செய்தவுடன் வழியும் பால் கோடுகள் கருநீல நிறமாகத் தெரியும். சர்ப்ப தோஷம் உடையவர்கள் அப்பாலை வேண்டுதல் செய்து பருகினால் கால சர்ப்ப தொஷம் நீங்கி திருமணம் கைகூடும்.
அம்பிகையின் ராகு தோஷம் நிவர்த்தியான ஸ்தலமானதால் இவ்விடம் ராகு தோஷம் அங்காரக தோஷம் ஆகியவை பரிகாரத்தின் மூலம் நிவர்த்தியாகி கஷ்டங்கள் விலகும்.
இவ்வாலயத்தில் பிரதோஷ வழிபாடு செய்தால் சுருட்டபள்ளியில் பிரதோஷவழிபாடு செய்ததின் மும்மடங்கு பலன் கிடைக்கும் என்று ஆலய புராணம் கூறுகிறது.
ஆலயத்திற்கு செல்லும் வழி: சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்திலிருந்து 4வது 5வது பிளாட் பாரம் 28,29,30 வது நிறுத்துமிடங்கள் பேருந்து எண்கள் 58சி,90,131,132,133,112ஏ,பி,133ஏ 533,558சி.
பிராட்வேயிலிருந்து 557 வள்ளலார் நகரிலிருந்து 547,558 558ஏ,பி
இறங்குமிடம் பஞ்செட்டி.
பஞ்செட்டியில் இருந்து மேற்கே பிரியும் சாலையில் 3கி.மி தொலைவில் நத்தம் ஸ்ரீ வாலீஸ்வரர் கோயில் உள்ளது. வாகன வசதி இல்லை. வாகன வசதி வேண்டின் மேற்கண்ட பேருந்துகளில் ஏறி ஜணப்பன் சத்திரம் கூட்டு ரோட்டில் இறங்கி விட வேண்டும் அங்கிருந்து ஆட்டோ வசதி உண்டு கட்டணம் ரூ 100.
Comments
Post a Comment