காணாமல் போன சூரியன்! பாப்பாமலர்!
காணாமல் போன சூரியன்!
பாப்பாமலர்!
ரொம்பரொம்ப நாளுக்கு
முன்னாடி சைபீரிய காட்டுக்குள்ளே நிறைய மிருகங்களும் பறவைகளும் ரொம்ப சந்தோஷமா வசிச்சு
வந்ததுங்க. அந்த பகுதிக்கு பேரு துந்த்ரா.
அதுங்களோட மகிழ்ச்சியிலே யாரு கண்ணு பட்டுதோ தெரியலை!
ஒரு நாள் அந்த காட்டுல சூரியன் காணாம போயிருச்சு! காடெங்கும் ஒரே இருட்டா போயிருச்சு.நிமிஷங்கள்
மணியாகி, நாளாகி வாரங்களாகி மாதங்களாகியும் காணாம போன சூரியன் திரும்பவும்வரவே இல்லை!
காடே இருண்டு செடிகள் வளர முடியாமல் பெரும் பயங்கரமா
இருந்துச்சு அப்போது. காணாமல் போன சூரியன் எங்கே போயிருக்கும்னு கண்டுபிடிக்க மிருகங்கள்
பறவைகள் எல்லாம் கூடி ஒரு கூட்டம் போட்டுதுங்க அப்போது சூரியன் காணாமல் போனதால் உலகமே
இருண்டு கிடக்குது! எதுவுமே கண்ணுக்குத் தெரிய மாட்டேங்குது. உணவு கிடைக்கலை! உயிர்கள்
வளராம இருக்குது. இது தொடர்ந்தா உலகமே அழிஞ்சு போயிரும். உடனே நாம எப்படியாவது சூரியனை
கண்டுபிடிச்சு கொண்டு வரணும்னு பேசிக்கிச்சுங்க.
எப்படி சூரியனை கண்டுபிடிக்கிறது?
நான் போய் தேடிக்
கண்டுபிடிச்சு வரேன்! அப்படின்னு ஒரு அண்டங்காக்கை முன் வந்துச்சு. அது ரொம்ப புத்திசாலி,
கொஞ்சம் மூத்த காகம். அது உலகின் பல பகுதிகளுக்கு பறந்து போய் வந்திருக்கு.
உன்னாலே எப்படி முடியும்? உலகமே இருட்டா இருக்கே!
வழி தெரியுமா? அப்படின்னு மிருகங்க கேட்டுச்சு.
நானும் இருட்டாத்தானே இருக்கேன்! எனக்கு பயம் இல்லை!
நான் எப்படியாவது சூர்யனை யாரு கடத்திட்டு போயிருக்காங்க எங்க ஒளிச்சு வைச்சிருக்காங்கறதை
கண்டுபிடிச்சுட்டு வந்துருவேன்! அப்புறம் அதை மீட்டு கொண்டு வர்றது உங்க பொறுப்பு.
இப்படி சொல்லிட்டு காகம் பறந்து போயிருச்சு!
காகம் திரும்பி வரட்டும்னு மிருகங்க எல்லாம் காத்து
இருந்தது. அதுங்க நம்பிக்கை வீண் போகலை! ஒரு வாரம் கழிச்சு காகம் நல்ல தகவலோட வந்து
சேர்ந்தது.
நண்பர்களே! நமக்கு ஒளிகொடுத்துட்டு இருந்த சூரியனை
தீய சக்திகள் கடத்திக் கொண்டு போய்விட்டது. அவை சூரியனை ஒரு பெரிய பாதாளத்தில் குகையில்
புதைத்து வைத்து இருக்கின்றதாம். இதுதான் நான் கண்டுபிடித்து வந்த தகவல். இந்த பூமியை
இருட்டாக்கி அழிக்கணுங்கிறது தீய சக்திகளோட விருப்பம். அந்த விருப்பம் நிறைவேறாம சூரியனை
வெளிக்கொண்டு வர்றது இனிமே உங்க வேலை! அப்படின்னு காக்கா சொல்லிருச்சு.
சரி சூரியனை தீய சக்திகள் கிட்டே இருந்து கொண்டு
வர வலிமையான ஆளு வேணும். யாரை அனுப்பலாம்னு மிருகங்கள் யோசிச்சது. அப்புறம் உருவத்துல
பெரிய துருவ கரடியை அனுப்பலாம்னு எல்லாம் முடிவு செய்தது. கரடி பெரிய நகங்கள், வலிமையான
உடல் கொண்டது. அதுதான் தீய சக்திகளை எதிர்க்க முடியும்னு விலங்குகள் நம்புச்சுங்க.
அப்போ பாதி செவுடான ஒரு ஆந்தை! நீங்க என்ன பேசறீங்க?
எனக்கு உரக்க கொஞ்சம் சொல்றீங்களான்னு கேட்டுது.
மிருகங்க ஆந்தை கிட்ட காணாம போன சூரியனை மீட்டெடுக்க
கரடியை அனுப்ப போறோம்னு சொல்லவும், ஆந்தை சொல்லுச்சு! உங்களுக்கு என்ன ஆச்சு? கரடி
பெருசுதான் வலிமையானதுதான் ஆனா ரொம்ப மெதுவானது. வழியிலே ஏதாவது சாப்பாடு கிடைச்சா
வந்த வேலையை விட்டுட்டு சாப்பிட ஆரம்பிச்சிரும்! அதை நம்பி இந்த வேலையை கொடுக்கலாமான்னு
கேட்டுது செவிட்டு ஆந்தை.
எல்லா மிருகங்களும் ஆந்தை சொல்வது உண்மைதான்! கரடியை
அனுப்ப வேண்டாம்! காரியம் கெட்டுப் போயிரும்! அடுத்த வலிமையான மிருகம் எதுன்னு யோசிக்க
ஆரம்பிச்சுது.
அங்கே இருந்த ஒரு சுண்டெலி, அப்ப கரடி இல்லேன்னா அதுக்கடுத்துவலிமையானது ஓநாய்தான்!
இது வேகமா ஓடும்! இதுக்கு கூர்மையான பற்கள் இருக்கு! எதிரியை பலமா தாக்கக் கூடியது
அதை அனுப்பலாமான்னு கேட்டுச்சு.
ஆந்தை வேகமாக தலையாட்டி மறுத்தது. ஓநாய் வேகமா ஓடும்!
பலமானது எல்லாம் சரி! ஆனா எதிரே ஒரு மானை பார்த்தா சும்மா விடாது! வந்த வேலையை மறந்துட்டு
மான் பின்னாடி துரத்திட்டு போக ஆரம்பிச்சுரும்னுச்சு!
அப்ப யாரை அனுப்பலாம்? நீயே சொல்லு! அப்படின்னு
கேட்டுதுங்க விலங்குகள் எல்லாம்.
என்னோட சாய்ஸ்
முயல் தான்!
என்ன முயலா? துளியுண்டு
பயல்? அவன் எப்படி தீய சக்திகளை எதிர்த்து சூரியனை மீட்டுட்டு வருவான்?
முயல் வலிமை இல்லாதாதுதான்! ஆனா எல்லாரையும் விட
வேகமா ஓடக்கூடியது. சுயநலம் இல்லாதது. பிறருக்காக தன்னையே கொடுக்க கூடிய ஓர் விலங்கு.
அதை யாராலும் அவ்வளவு எளிதில் பிடிக்க முடியாது. என்னை பொறுத்த வரை முயலால்தான் சூரியனை
மீட்டு வர முடியும் அப்படின்னு தீர்மானமா சொல்லுச்சு ஆந்தை.
எல்லோரும் அதை ஆமோதிச்சு முயலை சூரியனை மீட்டு வர
அனுப்பிச்சாங்க. காகம் வழிகாட்ட முயல் சூரியனை தேடி புறப்பட்டுச்சு. நீண்டநாள் பயணத்துக்கு
அப்புறம் ஒரு பாறை வெடிப்புல இருந்து பள பளன்னு வெளிச்சம் வருவதை முயல் பார்த்துச்சு.
மெதுவாக அந்த பாறை வெடிப்புக்குள்ளே எட்டி பார்த்தது.
உள்ளே சூரியன் ஒரு ஓளிவட்டமா இரத்தினக்கல் மாதிரி ஒரு பக்கம் தக தகன்னு எரிஞ்சுகிட்டு
இருக்கிறதை பார்த்து அதுக்கு மகிழ்ச்சி கொள்ளலை. உடனே அது சற்றும் தாமதிக்காமல் அந்த வெடிப்பு வழியே
உள்ளே இறங்கிச்சு. நொடிப் பொழுதில் சூரியனை தூக்கிட்டு அப்படியே இலை மாதிரி பறந்து
வெளியே வந்துச்சு.
அந்த சமயம் சூரியனை திருடி வச்ச பேய்களான தீய சக்திகள்
முயலை துரத்த ஆரம்பிச்சிருச்சுங்க. முயல் சூரியனை விடாம தூக்கிட்டு ஓட தீய சக்திகள்
அதை நெருங்க முயல் ஒரு காரியம் பண்ணுச்சு
.
தன் கையில் இருந்த சூரியனை கீழே போட்டு அதை தன்
காலால் ஒரு உதை உதைச்சிருச்சு. இப்ப சூரியன் இரண்டா போயிருச்சு. ஒரு பக்கம் நெருப்பா
இருக்க இன்னொரு பக்கம் வெண்மையா குளுமையா இருந்துச்சு.
முயல் இப்ப தன் வலிமையெல்லாம் திரட்டி தன் இடது காலால்
வெண்மையான அந்த கல்லை வானத்தை நோக்கி உதைச்சுது. அது முயல் உதைச்ச வேகத்துல மிக வேகமா
எட்ட முடியாத உயரமான வானவெளியிலே போய் ஒட்டிக்கிருச்சு. அங்கிருந்து பால் போல ஒளியை
வீச ஆரம்பிச்சுது. அதைத்தான் நாம இப்போ நிலான்னு சொல்றோம்.
முயல் இப்ப மூணாவது அடியா அந்த நெருப்பு பந்தை ஓர்
உதை உதைக்க அது வேகமா நிலாவையும் தாண்டிப்போய் வானவெளியில் உக்காந்துச்சுகிச்சு. தன்
ஒளியை பிரகாசமா வெளியிடவும் இருட்டு மறைஞ்சு உலகமே வெளிச்சம் பட ஆரம்பிச்சுது.
வெளிச்சம் படவும் தீய சக்திகளாலே தலை காட்ட முடியலை!
தோத்து போன அதுங்க திரும்பவும் அந்த பக்கம் தலைவெச்சு படுக்கல அவை பழைய படி பாதாள லோகத்துக்கு
ஓடிப்போயிருச்சுங்க.
சின்ன விலங்கா இருந்தாலும் புத்திசாலித்தனமா செயல்பட்டு
சூரியனை கண்டு பிடிச்ச முயல் தன்னுடைய காட்டுப்பகுதியான துந்த்ராவிற்கு வந்ததும் எல்லா
விலங்குகளும் அதை கொண்டாடி மகிழ்ந்தன.
ராத்திரி பொழுதுல முயல் நிலாவுக்கு போயி விளையாடிட்டு
வரும்! அதை நீங்க கூட பார்த்து ஐ முயல்!னு சொல்லியிருப்பீங்க! அது நிலா முயலுக்குக்
கொடுத்த பரிசு.
செவி வழிக்கதை)
தங்கள் வருகைக்கு
நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்!
நன்றி!
அருமையான வித்தியாசமான
ReplyDeleteகுழந்தைகள் கதை
சொல்லிச் சென்ற விதம் அருமை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
அருமை.....
ReplyDeleteகுழந்தைகள் 'உம்'போட்டுக் கேட்கிற மாதிரி என்ன அழகாக கதை சொல்கிறீர்கள்.
ReplyDeleteபெரியகர்களுக்கு ஜோக்ஸ், சிறார்களுக்கு இந்த மாதிரி அவர்கள் ஆர்வத்தைக் கிளறுகிற மாதிரி கதைகள்!
இடையே ஹைகூ கவிதைகள், ஒரு பக்கக் கதைகள் என்று தூள் கிளப்புகிறீர்கள், சுரேஷ் சார்!
அருமை நண்பரே
ReplyDeleteகேட்டறியாத கதை!
ReplyDelete