தித்திக்கும் தமிழ்! பகுதி 24 தமிழர்கள் கொண்டாடிய தீபாவளி!

தித்திக்கும் தமிழ்! பகுதி 24

 தமிழர்கள் வாழ்வில் விளக்கினுக்கு பெரும்பங்கு உண்டு. எந்த ஒரு செயலைத் தொடங்கும் முன் விளக்கேற்றி வழிபடுவது தமிழர் மரபு. இருளினை அகற்றி ஒளியினை தருவது விளக்கு. பஞ்ச பூதங்களில் ஒன்றான அக்னியின் அம்சம். அந்திப் பொழுதிலும் அதிகாலையிலும் வாசல் தெளித்து கோலமிட்டு அகல் விளக்கினை ஏற்றி வைத்து வழிபட வீட்டின் இருள் அகன்று அருள் சிறக்கும் என்பது பழந்தமிழர் நம்பிக்கை.


     இன்று தீபாவளி என்று ஆயிரக்கணக்கான ரூபாய்களுக்கு பட்டாசுகள் வெடித்து இனிப்புக்கள் உண்டு மகிழ்கிறோம். பண்டைக் காலத்தில் இந்த தீபாவளிக்கு நிகராக கார்த்திகைத் திருநாள் கொண்டாடப்பட்டது. சங்க இலக்கியங்களில் கார்த்திகை திருநாள் குறித்து பல பாடல்கள் உண்டு.
    கார்த்திகை மாதத்தில் முழுநிலவு நாளன்று கிருத்திகை நட்சத்திரம் உதிக்கும் நன்னாளில் வீடுகளில் விளக்கேற்றி வழிபடுவர்.  அகநானூறில் 141ம் பாடல் இதைப் பற்றி விரிவாக கூறும்.

   இந்த வருடம் கார்த்திகை முழுநிலவு கிருத்திகை நாள் வரும் புதனன்று வருகிறது. தமிழர்களின் சிறப்பான பண்டிகையை அன்று இல்லங்கள் தோறும் அகல்விளக்கேற்றி இருளகற்றி கொண்டாடி மகிழ்வோம்.  கொண்டாடும் சமயம் இந்த நற்றினை பாடலை நினைவு கூர்வோம்.

      புலி பொரச் சிவந்த புலால்அம் செங் கோட்டு
      ஒலி பல் முத்தம் ஆர்ப்ப, வலி சிறந்து
      வன் சுவல் பராரை முருக்கி, கன்றோடு
       மடப் பிடி தழீஇய தடக் கை வேழம்,
      தேன் செய் பெருங் கிளை இரிய, வேங்கைப்
      பொன் புரை கவளம் புறந்தருபு ஊட்டும்
      மா மலை விடரகம் கவைஇ காண்வர,
      கண்டிசின் – வாழியோ, குறுமகள்!-நுந்தை,
      அறுமீன் பயந்த அறம் செய் திங்கள்
      செல் சுடர் நெடுங் கொடி போல,
      பல் பூங் கோங்கம் அணிந்த காடே,

துறை:  உடன்போகா நின்ற தலைமகன் தலைமகட்கு சொல்லிது
பாடியவர் } பாலை பாடிய பெருங்கடுங்கோ

  தலைவன் தலைவியை அழைத்துக் கொண்டு தன் நாட்டிற்கு செல்கின்றான். அவன் நாடு செல்லும் வழியில் ஓர் யானை தன் துணையோடு குட்டிகளையும் தழுவிச் செல்கிறது.

  அந்த யானை நீண்ட துதிக்கையும் முற்றிய கொம்புகள் உடைய தந்தங்களை உடையது. தந்தங்களில்முற்றிய முத்துக்கள் ஒலிக்க அது அங்கிருந்த மேடான பகுதியில் ஓங்கி வளர்ந்திருந்த வலிமையான வேங்கை மரத்தை தன்னுடைய துதிக்கையால் முறித்துப் போட்டது
.
  வேங்கை மரத்தின் உச்சியில் தேனீக்கள் பலநாட்களாக சேர்த்து வைத்திருந்த தேன்கூடு சிதறி அதிலிருந்த ஈக்கள் பறந்தோடின. யானையானது வேங்கை மரத்தின் பொன் போன்ற பூக்களை உடைய இலைத்தழைகளை தன்னுடைய துணைக்கும் குட்டிக்கும் உணவாக அளித்தது.

தானம் செய்ய சிறந்த கார்த்திகை மாதத்தில் முழுநிலவு நாளன்று கார்த்திகை நட்சத்திரம் உதிக்கும். அந்நாளன்று வரிசையாக ஏற்றிவைக்கப்படும் விளக்கில் இருந்து ஒளிக்கற்றை பரவும். அவ்விளக்குகளின் ஒழுங்கைப் போல கோங்கு மரங்களின் பூக்கள் வரிசையாக பூத்து அழகாக இந்தக் காட்டை அலங்கரிக்கின்றன. இந்த அழகான உன் தந்தையின் காட்டின் அழகை ரசித்துக் கொண்டே என்னுடன் வருவாயாக! என்கின்றான் தலைவன்.

பாட்டில் அறுமீன்  என்று சொல்லப்படுவது கார்த்திகை முழுநிலவு நாளை குறிக்கின்றது.

கன்றொடு பிடி தழுவிய வேழம் கவளம் ஊட்டும் என்ற வரிகள் தலைவன் தலைவியை மணந்து பிள்ளைகள் பெற்று இருவருக்கும் உணவளிப்பேன்! என்று காதலிக்கு மறைமுகமாக உணர்த்தும் இறைச்சிப் பொருள் ஆகும்.
  
அழகிய பாடலை ரசித்தீர்களா? கார்த்திகை நாளன்று இல்லங்களில் விளக்கேற்றி தமிழ் தீபாவளி கொண்டாடுவோம்! தமிழர் பெருமை சேர்ப்போம்!

மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தில் இன்னுமொரு அழகிய பாடலுடன் சந்திப்போம்!
உங்கள் கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
   

Comments

 1. அழகிய பாடல்... அருமையான விளக்கம்...

  ReplyDelete
 2. படிச்சிருக்கேன், எனினும் ரசித்தேன்.

  ReplyDelete
 3. விடயம் நன்று நண்பரே...

  ReplyDelete
 4. வணக்கம்
  ஐயா
  அற்புதமான பாடலுக்கு அற்புதமாக விளக்கம் கொடுத்துள்ளீர்கள் வாழ்த்துக்கள் ஐயா

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 5. இலக்கியப் பதிவு ரசனையோடு அருமையாக இருந்தது. நன்றி.

  ReplyDelete
 6. ரசிக்கவைத்த பதிவு. பாராட்டுகள்.

  ReplyDelete
 7. அழகான பாடல் விளக்கத்துடன் மிகவும் ரசிக்க வைத்தது சுரேஷ்!

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

என்னைக் கவர்ந்த நேரு! குழந்தைகள் தின ஸ்பெஷல்!

சிரிக்க வைத்த சிரிப்புக்கள்! பகுதி 6

வெற்றி உன் பக்கம்! கவிதை!