“சுண்டக்கா பேரன்” பாப்பாமலர்!
“சுண்டக்கா பேரன்”
ரொம்ப வருஷத்துக்கு
முன்னாடி ஒரு ஊர்ல ஒரு பாட்டி குழம்பு வைக்கிறதுக்கு சுண்டக்கா பறிச்சிக்கிட்டு இருந்தாங்க.
அப்போ அவங்க அழ ஆரம்பிச்சாங்க. கண்ணுல இருந்து விழுந்த தண்ணி சுண்டக்கா ஒண்ணுமேல விழுந்துச்சு.
அதுக்கு உடனே குட்டியா கையும் காலும் முளைச்சிருச்சு. அது அப்படியே பாட்டி மேல குதிச்சு
தாவி அவங்க கண்ணீரை துடைச்சி விட்டது.
இதைப் பார்த்து பாட்டிக்கு அதிசயமா போயிருச்சு!
“ சுண்டக்காயே உனக்கு எப்படி கை காலு முளைச்சுது?” அப்படின்னு கேட்டாங்க.
நான் ஒரு வன தேவதை, ஒருசாபத்தினாலே இப்படி சுண்டக்காயா
மாறிட்டேன். நீங்க ஏன் அழறீங்க? என்று சொன்னது சுண்டக்காய்.
“ அப்படியா? என்னோட கவலை தீராது! அதனால நான் அழறேன்!”னாங்க
பாட்டி.
“ அப்படியென்ன கவலை?ன்னு கேட்டுச்சு சுண்டக்கா.
“எனக்கு பிள்ளையில்லை! என் புருஷன் வயசான காலத்துல
வயல்ல ஏர் ஓட்டி கஷ்டபட்டுகிட்டு இருக்காரு. கஞ்சி கொண்டுபோய் கொடுக்க கூட ஆளில்லை!
பிள்ளையிருந்தா இப்போ அவருக்கு உதவியா இருப்பான். அத நினைச்சேன் அழுகை வந்திருச்சு!”
அப்படின்னாங்க பாட்டி.
“ பாட்டி இனிமே நீ கவலைப்படாதே! நான் இருக்கேன்
உனக்கு உதவி செய்ய என்னை உன் பிள்ளையா நினைச்சுக்கோ! இல்லைன்னா பேரனா நினைச்சுக்க நான்
தாத்தாவுக்கு கஞ்சி கொண்டு போய் கொடுக்கிறேன்!”னுச்சு சுண்டக்கா.
பாட்டியும் சுண்டக்கா கிட்ட கஞ்சி கொடுத்து அனுப்பிச்சாங்க. வயல்ல உழுதுட்டிருந்த தாத்தா பசியோட உழுதுகிட்டு
இருந்தாரு. அவரு முன்னாடி போய் கஞ்சியோட நின்னுது சுண்டக்கா.
என்னடா இது பாட்டியை காணலை கஞ்சி கலயம் மட்டும்
வந்து இருக்குது! அப்படின்னு ஆச்சர்யத்தோட பார்க்க கலயத்துக்கு கீழே சுண்டக்காயை பார்த்து
வாயைப் பிளந்து நின்னாரு.
சுண்டக்கா, தாத்தாகிட்ட ”ஆச்சர்யபடாதீங்க! உங்க
கவலையை தீர்க்கறதுக்காக வந்திருக்கிற பேரன் நான். நீங்க கஞ்சியை குடிங்க நான் மாடுங்களை
பார்த்துக்கறேன் “னு சொல்லுச்சு.
தாத்தாவும் பக்கத்து மர நிழல்ல உக்காந்து கஞ்சியை
குடிச்சாரு. உண்ட மயக்கம் கண்ணை அசத்த அப்படியே கண்ணசந்துட்டாரு.
அப்ப பார்த்து அந்த பக்கம் போன திருடனுங்க ஆளில்லாம நடு வயல்ல ரெண்டு மாடு நிக்கவும் வயல்ல இறங்கி மாட்டை ஓட்டிக்கிட்டு போக ஆரம்பிச்சிட்டாங்க!
சுண்டக்கா பலம் கொண்ட மட்டும் திருடங்க! திருடங்க! மாட்டை பிடிச்சிக்கிட்டு போறாங்கன்னு
கத்திக்கிட்டே பின்னால ஓடுச்சு! ஆனா அது திருடங்க காதுலயும் விழலை! தாத்தா காதுலயும்
விழலை!
சுண்டக்கா திரும்பவும் தாத்தாகிட்ட வந்து உருண்டு
புரண்டு அவரை எழுப்பி விஷயத்தை சொல்லுச்சு! அவரு, பாவம் உன்னால என்ன செய்ய முடியும்?
தப்பு என் மேலதான்! நான் போய் திருடங்க கிட்ட இருந்து மாட்டை மீட்டுகிட்டு வாரேன்!னு
சொல்லி கிளம்பிட்டாரு.
சுண்டக்கா வீட்டுக்கு திரும்பி பாட்டிகிட்ட நடந்ததை
எல்லாம் சொல்லுச்சு! பாட்டி திரும்பவும் அழ ஆரம்பிச்சிட்டாங்க. வயசான தாத்தாவை திருடங்க
அடிச்சி போட்டுருவாங்களே! அவரு வீடு திரும்புவாரான்னா தெரியலையேன்னு புலம்ப ஆரம்பிச்சிட்டாங்க.
எனக்கொரு பிள்ளையிருந்தா இந்த கதி வருமா? மாட்டை
பிடிக்க அவன் இல்லே போயிருப்பான்? இப்ப கிழவன் இல்லே போக வேண்டியதா போச்சு! அப்படின்னு
அவங்க சொல்லவும் சுண்டக்காவுக்கு ரோஷம் வந்துருச்சு!
“ பாட்டி நீ கவலைப்படாதே! நான் போய் திருடங்களை
பிடிச்சு மாடுகளையும் ஓட்டிக்கிட்டு தாத்தாவையும் கூட்டியாரேன்! நீ எதுக்கும் பயப்படாதே!
அப்படின்னு சொல்லிட்டு கிளம்பிச்சு.
சரி சரி போற வழியிலே உனக்கு பசிக்குமே! கொஞ்சம்
கொள்ளு வறுத்து தரேன்! தின்னுக்கிட்டே போ! அப்படின்னு பாட்டி கொஞ்சம் கொள்ளு வறுத்து
தந்தாங்க. சுண்டக்காயும் அந்த பயிறை தின்னுக்கிட்டே
திருடங்க போன வழியா அப்படியே நடந்து போய்கிட்டே இருந்துச்சு. கண்ணுக்கெட்டின தூரம்
வரை அதுக்கு ஒண்ணுமே தென்படலை.
ரொம்பதூரம் போனப்புறம் ஒரு கருவேல மரத்துல ஓணான்
ஒண்ணு உக்காந்து தலையை ஆட்டிகிட்டு இருந்துச்சு. அதுங்கிட்ட இந்த வழியா திருடங்க மாட்டை
ஓட்டிக்கிட்டு போனதை பார்த்தியா? அப்படின்னு சுண்டக்கா கேட்டுச்சு.
ஓணானும் தலையை ஆட்டி ஆட்டி பார்த்தேன் பார்த்தேன்!
நீ எங்க போறே? அப்படின்னு கேட்டுச்சு.
கொள்ளுப்பயறு தின்னுக்கிட்டு மாடு திருடன திருடங்களை
பிடிக்க போறேன்! அப்படின்னுச்சு சுண்டக்கா.
எனக்கு கொஞ்சம் கொள்ளு கொடு! நானும் உதவிக்கு வரேன்னு
ஓணான் சொல்லுச்சு.
சரின்னு அதுக்கிட்ட கொஞ்சம் கொள்ளை தந்து கூட கூப்பிட்டுச்சுக்கு
சுண்டக்கா.
கொஞ்ச தூரம் போனதும் ஒரு தேளு கண்ணுல பட்டுச்சு!
அதுங்கிட்ட திருடங்களை பத்தி கேட்டுச்சு சுண்டக்கா.
இந்த வழியாத்தான் போனாங்க! எனக்கும் கொஞ்சம் கொள்ளு
கொடுத்தா நானும் உதவிக்கு வரேன்னு சொல்லுச்சு தேளு. சரின்னு அதையும் சேர்த்துக்கிச்சு
சுண்டக்கா.
இன்னும் ஒரு அரை மைல் நடந்தப்புறம் பாம்பு ஒண்ணை
பார்த்தாங்க ! அதுங்கிட்ட மாடு திருடன திருடங்களை பார்த்தியா? அப்படின்னு சுண்டக்கா
கேட்டுது.
இந்த வழியாத் தான் போனாங்க! நீ எங்க போறே?
கொள்ளுப்பயறை தின்னுகிட்டே
திருடனுங்களை பிடிக்க இவங்களோட போறேன்னு சொல்லுச்சு சுண்டக்கா. எனக்கும் கொஞ்சம் கொள்ளு
கொடுக்கிறயா? நானும் உதவிக்கு வரேன்னு சொல்லுச்சு பாம்பு. சரின்னு அதையும் சேர்த்துகிட்டு
கிளம்புனாங்க.
கொஞ்ச தூரம் போனதும்
ஒரு குத்துக்கல்லு தென்பட்டுச்சு! அதுங்கிட்ட கேக்கவும் அதுவும் இந்தவழியாத்தான் போனாங்க!
எனக்கும் ஒரே இடத்துல நின்னு போரடிக்குது! நானும் உங்களோட வரேன்னு கிளம்பிருச்சு.
காட்டை தாண்டி போனதும் ஒரு வீடு தென்பட்டுச்சு! அங்கதான்
திருடன் மாடுங்களை கட்டி போட்டிருந்தான். பக்கத்திலேயே ஒரு மரத்திலே தாத்தாவையும் கட்டிப்
போட்டிருந்தான்.
அந்த வீட்டாண்ட போய் ஒவ்வொண்ணும் ஒவ்வொரு இடத்துல
ஒளிஞ்சுகிச்சுங்க! ஓணான் மரத்துல ஏறிக்கிச்சு, தேளு மாடக்குழியிலே தீப்பெட்டி கீழே
பதுங்கிருச்சு. பாம்பு வைக்கோல் போருல பதுங்கிச்சு குத்துக் கல்லு வீட்டு வாசல்ல ஒளிஞ்சிகிச்சு
. சுண்டக்கா திண்ணையோரமா பதுங்கிருச்சு.
திருடனோட பொண்டாட்டி வீட்டு வாசல்ல இருந்த உரல்ல
மாவு இடிச்சுகிட்டு இருந்தாங்க. மரத்துல இருந்த ஓணான். தலையை ஆட்டி திருடன் பொண்டாட்டி
மாவு இடிக்கிறா! சோ சோ! திருடன் பொண்டாட்டி மாவு இடிக்கிறான்னு சோ! சோ!ன்னு கேலி பண்ணுச்சு!
அந்தம்மா உலக்கையை போட்டுட்டு ஓணானை விரட்டுனாங்க!
அது வீட்டுக்குள்ளே ஓடிருச்சு. விளக்கு வைக்கிற சமயங்கிறதாலே இருட்டா இருந்துச்சு!
விளக்கை பொருத்தலாம்னு மாடக்குழியிலெ தீப்பெட்டி எடுக்க கை வைச்சாங்க! அங்க பதுங்கின
தேளு ஒரே போடா போட்டுச்சு!
அந்தம்மாவால வலி தாங்க முடியலை! ஆ!ன்னு அலறிக்கிட்டே தெருவுல ஓடினாங்க! அப்ப குத்துக்கல்லு
வேற வழியிலே வந்து தடுக்கி விட்டது! அதுல முன் நெத்தியிலே வேற அடிபட்டு வீங்கிடுச்சு!
இந்த சத்தம் கேட்டு வெளியே வந்த திருடன் என்ன?
என்ன?ன்னு கேட்டான்.
அந்தம்மா பதட்டத்திலே தேளுன்னு சொல்றதுக்கு பதிலா ‘தீ” தீன்னு அலறுனாங்க!
எங்க எங்க!ன்னு அவன் தீயை அணைக்க வைக்கோலை பிடுங்க
ஓடினான். வைக்கோல் போருல பதுங்கன பாம்பு அவனை கொத்திருச்சு! அவன் “ ஓ”ன்னு அலறி அடிச்சு
கத்தவும் மத்த திருடனுங்க ஓடி வந்தாங்க!
அந்த சமயம் பார்த்து குத்துக் கல்லு பறந்து பறந்து
எல்லோரையும் தாக்கி அடிச்சுது.
திருடனுங்க பயந்து போய், ஏதோ பேய் புகுந்திருச்சுன்னு
சொல்லி ஓடிப் போயிட்டாங்க!
சுண்டக்கா ஓடிப்போய் கட்டி வைச்சிருந்த மாடுங்க
தாத்தாவை அவிழ்த்து கூட்டிட்டு வந்துச்சு! ஓணான், தேளும் பாம்பு, குத்துக்கல்லு இவங்களுக்கு
நன்றி சொல்லுச்சு. திருடனுங்க கொள்ளையடிச்சு வச்சிருந்த நிறைய பணம் நகை எல்லாத்தையும்
மூட்டை கட்டி மாடுங்க மேல போட்டு ஓட்டிக்கிட்டு வீட்டுக்கு வந்தாங்க.
பாட்டிக்கு ரொம்ப மகிழ்ச்சி! சுண்டக்காயா இருந்தாலும்
ஒண்ணோட சாகஸம் அட்டகாசம்னு புகழ்ந்தாங்க! எடுத்து வந்த நகை பணத்தை ஏழைகளுக்கு பகிர்ந்து
கொடுத்தாங்க. அப்புறம் ரொம்ப நாளுக்கு அவங்க சந்தோஷமா வாழ்ந்தாங்க!
(செவிவழிக்கதை)
அனைவருக்கும் இனிய குழந்தைகள் தின வாழ்த்துக்கள்!
தங்கள் வருகைக்கு
நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்!
நன்றி!
கதை குழந்தைகளுக்கு மகிழ்ச்சியாய் செல்லும்
ReplyDeleteஅருமை...
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஐயா
அற்புதமாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்ஐயா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
சூப்பர்...கதை...
ReplyDeleteகுழந்தைகளுக்குப் பிடிக்கும் கதை..
ReplyDeleteஅருமையான, அனைவரும் ரசிக்கும் கதை. நன்றி.
ReplyDeleteசூப்பர் கதை. நாங்களும் குழந்தைகளாகிப் போனோம். ஸோ எங்களுக்கும் குழந்தைகள் தின வாழ்த்துகள். !! ஹஹஹ் உங்கள் குழந்தைகளுக்கும் சுரேஷ்!
ReplyDeleteஅருமை நண்பரே
ReplyDeleteநன்றி
அம்புலிமாமாவும் பாலமித்ராவும் ரத்னமாலாவும் பூந்தளிரும் கோகுலமும் உங்கள் இதுபோன்ற சிறார் கதைகளை வெளியிட கொடுத்து வைத்திருக்கவில்லை.
ReplyDeleteமிக ரசித்தேன் நண்பரே!
நன்றி.
செவிவழிக் கதை என்றாலும் கூட வடிவம் பெறும் நுட்பத்தைக் குறிப்பிடுகிறேன்.
Deleteஅட! மிக மிக அற்புதமாய் இருக்கின்றது. சிறுவர் கதை அதிலும் செவிவழிக்கதையின் தேவைகளும் ஆவணப்படுத்தலும் ரெம்ப ரெம்ப பயன் தருப்வை அல்லவா? தங்கள் நற்பணி தொடரட்டும்!
ReplyDeleteசுண்டைக்காயாய் இருந்தாலும் அதன் காரியம் வீரம் தான் என சொல்லி சென்ற கதைப்பகிர்வுக்கும் நன்றி,
அருமையான கதை. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
ReplyDelete