உள்ளுக்குள்ளே ஓர் மிருகம்!
உள்ளுக்குள்ளே
ஓர் மிருகம்!
ராம்நாத் தன் இருசக்கர
வாகனத்தில் வேகமாக செல்கையில் அந்தபெண் எதிரே வந்தாள். இருபதை கடக்காத வயது. கூந்தலைவிரித்து
பின்னியிருந்தாள். காட்டன் சுடியில் கலக்கலாக இருந்தாள். ராம்நாத் கடக்கையில் புன்னகை
புரிந்து தலையசைத்து ஓர் வணக்கம் சொன்னாள்.
பதில் வணக்கம்
சொன்ன ராம்நாத், யோசித்தான்… யார் இந்தபெண்? எதற்கு நமக்கு வணக்கம் சொல்கிறாள்? எங்கோ
பார்த்தமாதிரி இருக்கிறதே?என்று மண்டைக்குள் குடைய விடை கிடைத்தது.
பக்கத்து டவுன் டிபார்மெண்டல் ஸ்டோரில் வேலை செய்கிறாள்.
பில்லிங் செக்ஷனில். பல முறை வீட்டுச்சாமான்கள் வாங்க அங்கே செல்வதுண்டு அங்கே என்னை
பார்த்திருக்க கூடும். அந்த அறிமுகத்தில் வணக்கம் செலுத்துகின்றாள் போல எண்ணினான்.
ராம்நாத் ஒரு தனியார் அலுவலகத்தில் வேலை செய்கிறான். எல்லோரையும் திரும்பி பார்க்க
வைக்கும் உயரத்தில் இருந்தான். அசப்பில் சிவகார்த்திகேயனை காப்பியடித்தார் போல இருப்பான்.
நல்லவன் தான். ஆனால் கொஞ்சம் சபலபுத்திக் காரன்.
தெருவில் அழகாய் ஒரு பெண் சென்றால் வெட்கமே
இல்லாமல் கூர்ந்து பார்ப்பான். பக்கத்தில் அவன் மனைவி இருந்தால் ஓர் வார்த்தைப் போரே
நடக்கும். “ அப்படி என்ன காணததை கண்டிட்டீங்க”? என்பாள்.
“அழகை
ரசிக்கிறேண்டி! உனக்கேன் பொறாமை?”
“ நான் ஏன் பொறாமை படனும்? இப்படியா ஒரு முன் பின்
தெரியாத பொண்ணை வெறிச்சுப் பார்ப்பீங்க?”
“ பார்க்கிறா மாதிரி போறது அவங்க தப்பு?”
“அது அவங்க விருப்பம்? ஆனா நாகரிகமே இல்லாம இப்படி
பார்த்தீங்க இனிமே நடக்கிறதே வேற?”
அது முதல் மனைவியுடன்
இருக்கும் போது அடக்கிவாசிப்பான். மற்றசமயம் அவனுள் இருக்கும் அந்த மிருகம் அவ்வப்போது
எட்டிப்பார்க்கும்.
“அட இந்த
பெண்ணை கவனிக்காமல் விட்டுவிட்டோமே? நம்ம ஏரியா பொண்ணா இருந்து இத்தனை நாளா எப்படி
விட்டோம்?” மனசுக்குள் நினைத்துக்கொண்டான் ராம்நாத்.
அன்று மாலைப்பொழுதில் டவுனில் இருந்து திரும்பும்
போது அந்தபெண் கடையில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தாள். ராம்நாத் அவளைக் கடக்கையில்,
‘சார்! ஊருக்கா போறீங்க… நானும் வரட்டுமா? என்னை ட்ராப் செஞ்சிடறீங்களா? தேனாக ஒலித்தது
அவள் குரல்.
வலிய வந்து சிக்கும் வாய்ப்பை வீணாக்குவானா?
“ வாங்க! நீங்க நம்ம ஏரியாதானா? இதுவரைக்கும் பார்த்ததே இல்லையே? எந்த தெருவில இருக்கீங்க?”
இப்பத்தான் ஒரு வாரமா அங்கே குடிவந்திருக்கோம்!
பிள்ளையார் கோயில் தெருவிலதான் வீடு..!
ஓ… அதான் இத்தனை நாள் உங்களை அந்த பக்கம் பார்த்தது
இல்லையே எப்படின்னு நினைச்சேன்…
அவள் சிரித்தாள். ராம்நாத்துக்கு சில்லறைக்கொட்டுவது
பொல சிலிர்த்தது.
”ஒண்ணு சொன்னா கோச்சுக்க மாட்டீங்களே! நீங்க ரொம்ப
அழகா சிரிக்கறீங்க!” என்றான்.
அதற்கும் அவள் சிரித்தாள். அவளது வேலை சம்பளம்..
என்று சிலவற்றை பேசியபடியே அவள் தெருவருகே இறக்கி விட்டான்.
இவளைப் போல் ஒருவள் தன் மனைவியாக இல்லையே.. என்று
கொஞ்சம் ஏங்க ஆரம்பித்துவிட்டான் ராம்நாத். அன்று முதல் அவள் பலமுறை அவனுடன் பைக்கில் வந்தாள்.
அவளுடன் பைக்கில் வருகையில் ஏகத்துக்கு மிதப்பான்
அவன். அவளது வசீகர சிரிப்பும் டியோடரண்ட் வாசனையும் அவனை எங்கோ அழைத்துச்செல்லும்.
அவள்.. அவள் மட்டும் சம்மதித்தால்… என்று ஏதேதோ கற்பனைகளில் இருப்பான்.
டேய்
நினைப்பது தப்பு! உனக்கு திருமணமாகிவிட்டது. அவள் அடுத்தவன் மனைவி.. என்று உள்ளுக்குள்
மனசாட்சி உறுத்தும். குத்திக்காட்டும். ஆனால் அந்த மிருகம் அவனது மனசாட்சியையும் அடிக்கடி
தின்றுவிடும்.
தீபாவளிக்கு முந்தின நாள்! மழை வெளுத்துக் கட்டிக்
கொண்டிருந்தது. எங்கும் மழைநீர் தேங்கி சாலையே தென்படவில்லை! ராம்நாத் புதிதாக வாங்கியிருந்த
மாருதி எஸ்டீமில் அந்த கடையருகே நின்றான். நேரம் பத்தை கடந்து இருந்தது. கடையில் கூட்டம்
அப்போதுதான் மட்டுப்பட துவங்கியிருந்தது.
கடையிலிருந்து அவள் வெளிப்பட்டு குடையை விரித்து
பத்தடி தூரம் நடக்கையில் காரை மெதுவாக நகர்த்தி அவளருகே நிறுத்தினான். ஜன்னலை இறக்கி
கதவை திறந்தான் வாங்க! என்றான்.
திடுமென தன் முன் கார் நிற்பதையும் குரல் அழைப்பதையும்
கேட்டு திடுக்கிட்டாலும் ராம்நாத் என்றதும் அவள் கொஞ்சம் ஆசுவாசித்தாள். ராம் நாத்,
நம்ம கார்தான் புதுசா இப்பத் தான் வாங்கினேன். மழையிலே நனையாதீங்க ஏறுங்க என்றான்.
எப்படியும் இன்று இவள் சம்மதத்தை பெற்றுவிட வேண்டும்
என்று குழைந்தான் ராம்நாத்.
நம்மை பிடிக்காமாலா நம்முடன் பைக்கில் வருகிறாள்
சிரித்து பேசுகிறாள். நாம் தான் தயங்கிக் கொண்டிருக்கிறோம் இன்று எப்படியும் முயற்சித்து
பார்த்துவிட வேண்டும் என்றுதான் காரை கொண்டுவந்து நிறுத்தி காத்திருந்தான்.
அவள் காரில் ஏறவும், ரொம்ப நனைஞ்சிட்டீங்க போல!
குடை இருந்தாலும் சாறல்ல தாங்காது… என்றான் அவள் அங்கங்களை வெறித்தபடி!
அவள்
அமர்ந்ததும் காரை நகர்த்தினான். நீங்க முன்னாடியே உட்கார்ந்திருக்கலாம்! பின்னாடி உட்கார்ந்திருக்கீங்க!
நான் டிரைவர் போல ஆயிட்டேன் என்று ஏதோ ஜோக் சொல்வது போல சிரித்தான்.
அவள் சங்கடமாக நெளிந்தாள். அப்போது அவள் செல் ஒலித்தது. எடுத்தாள்.
யாரு? என்றான்.
ஹஸ்பெண்ட் அவள்
சொன்னதும் அவன் முகம் கொஞ்சம் கறுத்தது.
அவள் ஸ்பீக்கரை
ஆன் செய்து பேசினாள்.
என்னம்மா மழை அதிகமா இருக்கே? நான் வரட்டுமா?
எங்கே இருக்கே?
நீங்க கவலைப்படாதீங்க! நான் நம்ம ராம்நாத் அண்ணாவோட
வண்டியிலே வர்றேன்.
யாரும்மா அவரு?
நம்ம ஊருதாங்க ராம்நாத் அண்ணா! மேட்டுத் தெருவுல
குடியிருக்கார்! என்னை ஒரு தங்கச்சி போல பார்த்துப்பார்! அவங்க ஏரியாவுலதான் நாம குடியிருக்கோம்கிறது
அவருக்கு ரொம்ப சந்தோஷம்! அவர் கூடத்தான் நான் காருலே வரேன்.
என்னம்மா சொல்றே? யாரு அவரு? இப்படி முன் பின்
தெரியாதவங்க கூட வந்தா எதாவது அசம்பாவிதமா?....
முதல்ல வாயைக் கழுவுங்க! அண்ணா எவ்ளோ நல்லவருன்னு அவர்கூட பழகிப்பார்த்தா
தான் தெரியும்? பொண்ணுங்களை அவர் தாயாவும் தங்கச்சியாவும்தான் நினைச்சி பழகுவார். ஒரு முறை கூட தப்பானா பார்வை பார்த்தது கிடையாது. அவரும் நம்ம ஊருங்கறதாலே தானா முன் வந்து எத்தனையோ முறை அவர் பைக்கில கொண்டுவந்து விட்டிருக்கார்! ஒருதடவையாவது தப்பா நடந்தது கிடையாது. ஸ்பீட் பிரேக்கர் வர்றப்ப கூட மெதுவாத்தான் வருவாரு! அவர் கூட வர்றதே பெரிய சேப்டி! ஒரு பயமும் இல்லை! நீங்க கவலைப்படாதீங்க
நான் இன்னும் அரைமணிநேரத்துக்குள்ளே வந்திருவேன்! அண்ணன் கூட தங்கச்சி வரும்போது நீங்க
வீணா பயப்படாதீங்க!
ராம் நாத்தின் முகம் வெளிறிப் போனது! அட! நாம்
தான் தவறாக நினைத்துவிட்டோமோ? ஒரு பெண் பொதுவெளியில் சிரித்து பேசினாலே அப்படி நினைத்துவிடலாமா?
அண்ணன் என்று வார்த்தைக்கு வார்த்தை சொல்கிறாளே! இவளைப் போய் தவறாக நினைத்துவிட்டோமே! என்று நினைத்தவாறே, போனை இப்படி கொடும்மா… ஹலோ பயப்படாதீங்க! உங்க வொய்ஃபை பத்திரமா வீட்டுக்கு
கூட்டிட்டு வந்திருவேன்! என்று சொன்னபோது அவனுள் இருந்த மிருகம் கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்து காணாமல் போயிருந்தது.
அவளை
அவள் வீட்டின் முன் இறக்கிவிட்டு கார் கிளம்பியதும்
என்னம்மா? இப்படி மழைக்காலத்திலே முன் பின்
தெரியாதவங்களோட வர்றியே! அந்த ஆள் கெட்டவனா இருந்தா…
அந்த ஆள் கெட்டவன் தான் ஆனா முழு கெட்டவன் இல்லே…
எப்படி சொல்றே?
கொஞ்சம் வழிவான்…! இந்த ஊரிலிருந்து கடைக்கு போய்வர
பஸ்வசதி கிடையாது… அந்த வழிசலை கொஞ்சம் யூஸ் பண்ணி அப்பப்போ அவன் வண்டியிலே போய் வந்துட்டிருந்தேன்.
இன்னிக்கு அந்த ஆளோட பார்வை கொஞ்சம் மோசமாத்தான் இருந்தது.
அப்புறம் எப்படி அவன் கூட வந்தே?
வேற வழி? இந்த
மழையிலே இந்த ஊருக்கு எப்படி வர முடியும்?
அதனாலேதான் மேஸேஜ்
அனுப்பி போன் பண்ண சொன்னேன். ஸ்பீக்கர்ல போட்டு பேசி அவனை ஹீரோவாக்கிட்டேன் அவனும்
தன்னோட இமேஜை ஸ்பாயில் பண்ணிக்க விரும்பலை! என்னை பத்திரமா கொண்டுவந்து விட்டுட்டான்.
நீ ரொம்ப தைரியசாலிதான்! ஆனா உன் ப்ளான் தோத்திருந்தா…
தோற்கறதுக்கு சான்ஸே இல்லை! எந்த ஆணும் தன்னை ஹீரோவா
அண்ணாவா நினைக்கற பொண்ணுகிட்டே வம்பு பண்ண மாட்டான். அவங்களை காப்பாத்த முயற்சிப்பானே
தவிர தப்பு பண்ண மாட்டான் இது ஜெண்ட்ஸ் சைக்காலஜி என்றாள்.
இந்த பொண்ணுங்களை புரிஞ்சிக்கவே முடியலைப்பா…!
என்றான் அவள் கணவன்.
டிஸ்கி} இந்த கதை
கரு உதித்து நீண்ட நாள் ஆயிற்று! ஆனால் எழுத தோணவில்லை! இன்னும் இந்த கதையில் எனக்கொரு
திருப்தி இல்லை! ப்ரியா கல்யாணராமன் ஸ்டைலில் எழுத நினைத்தேன்! வரவில்லை! பொறுத்துக் கொள்ளவும்.
அனைவருக்கும் இனிய
தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
தங்கள் வருகைக்கு
நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்தவும்! நன்றி!
ஆமாம், கதையில் நிறைவு இல்லை. இன்னமும் விரிவாக இருந்திருக்கலாம். :)
ReplyDeleteஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினற்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் சகோ!
ReplyDeleteபெண் புத்தி பின் புத்தி யார் சொன்னது
ReplyDeleteஇதுபோன்ற சிந்தனை ஒளிக் கீற்று
கெட்ட இருளை ஓடோடி விரட்டி விடும்.
தன்னம்பிக்கை தருகின்ற கரு.
நட்புடன்,
புதுவை வேலு
நல்ல யுக்தி.விளக்கம் பிடித்திருந்தது
ReplyDeleteதங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
இனிய தீபத் திருநாள் நல்வாழ்த்துகள்...
ReplyDeleteபதிவர் திரட்டி மூலமாக இத்தளத்தை அறிந்து கொண்டேன்
ReplyDeleteகதை நன்றாக வந்துள்ளது
நல்ல உத்திதான். இருந்தாலும் ஒருவிதத்தில் நம் கதாநாயகர் ஏமாந்துவிட்டாரே என்று நினைக்கும்போது வேதனையாக உள்ளது.
ReplyDeleteநல்ல கதை, தொடர்ந்து எழுதுங்கள்!
ReplyDelete//கவலைப்படாதீங்க நீங்க ! நான் நம்ம ராம்நாத் அண்ணாவோட வண்டியிலே வர்றேன்//
ReplyDeleteஹாஹாஹா ஸூப்பர் எவனுக்குமே வாலாட்ட தோன்றாது அருமை நண்பரே..
நல்லாத்தானே இருக்கு!
ReplyDeleteநல்ல யுக்தி....
ReplyDeleteதங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்.
சுரேஷ் கதை நன்றாகவே வந்திருக்கிறது. வாழ்த்துகள்.
ReplyDeleteகதை நல்லாத்தானே வந்திருக்கு சுரேஷ்! படைப்பாளிக்குத் திருப்தி என்பது வராதுதான். இன்னும் மெருகூட்டலாமே என்று தோன்றுவது இயல்புதான்.
ReplyDeleteசுரேஷ் உங்கள் ஸ்டைலிலேயே எழுதலாமே. என்பது எங்கள் தாழ்மையான கருத்து.
வாழ்த்துகள்!
அட சூப்பரா இருக்கே நான் அவர்கள் கூடவே பயணித்த உணர்வு..வாழ்த்துகள்...கடவுளைக்கண்டேன் தொடரில் உங்களை இணைத்துள்ளேன் சகோ...தொடருங்கள்...காண்க http://velunatchiyar.blogspot.com/2015/11/2.html
ReplyDeleteதளிர் ...
ReplyDeleteகதையில் ஏதோ மிஸ்ஸிங். படித்தவுடன் இது தங்களின் படைப்பு போல் இல்லையே என்ற ஓர் உணர்வு. ஒரு வேலை அது கதையின் கருவாக கூட இருக்கலாம்.
மனைவி என்பவர்கள், மாதகணக்கில் வேறு ஒருவருடன் வாகனத்தில் தன் கணவனிடம் சொல்லாமல் இருப்பது... ?
அவன் பார்வை சரியில்லை என்று தெரிந்தும் அதை அவனுக்கு தெரியபடுத்தாமல் சுயநலத்தோடு இருந்தது.. ?
இப்படி ... சில கரு பொருட்கள்..
நீங்கள் உங்கள் பாணியில் எழுதவேண்டும். அது தான் எங்கள் அவா..
வணக்கம் நண்பரே!
ReplyDeleteநான் வேறுசில வாய்ப்புகளை நினைத்தேன்.
இடையே கார் மழை என்றதும் ஜெயகாந்தனனின் அக்கினிப்பிரவேசம் நினைவில் வந்தது.
ராம்நாத்தின் மனைவி இதுபோல் ஒருவருடன் போவதைப் பார்த்த அவரது மனச்சலனம் வெளிப்படும் எனக் கதையமைப்பு நீளும் என நினைத்தேன்.
ஆனாலும்,
“தோற்கறதுக்கு சான்ஸே இல்லை! எந்த ஆணும் தன்னை ஹீரோவா அண்ணாவா நினைக்கற பொண்ணுகிட்டே வம்பு பண்ண மாட்டான். அவங்களை காப்பாத்த முயற்சிப்பானே தவிர தப்பு பண்ண மாட்டான்““““
என்பது மிகைமதிப்பீடே ஒழிய யதார்த்தமாய் இருக்க முடியாது என்றே எனக்குப் படுகிறது.
நன்றி.