ஆனந்தவிகடன் தலையங்கமும் எனது கேள்வியும்!

ஆனந்தவிகடன் தலையங்கமும் எனது கேள்வியும்!


தமிழ்நாட்டை வெள்ளக்காடாக்கிய பெருமழை சிலநாட்களாக ஓய்ந்த நிலையில் இன்று ஆனந்தவிகடன் வார இதழை வாசிக்க நேர்ந்தது. முதல்வரைப் பற்றி ஒரு பெருங்கட்டுரை இந்த நாலரை ஆண்டு ஆட்சியின் அவலங்களை பட்டியலிடுகிறது ஓர் கட்டுரை. அனைத்தும் நிஜங்களாக சுடுகிறது. இவ்வளவு தைரியமாக விமரிசித்து எழுதிய நிருபர் குழுவினருக்கு முதலில் பாராட்டுக்கள். மற்றபடி விகடன் பழைய விகடன் வாசித்த எனக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை! இதழ் முழுக்க சினிமா செய்திகள், பேட்டிகள், துணுக்குகள்தான்.

   அஞ்ஞான சிறுகதை, பாரதிதம்பி கட்டுரை, பத்து செகண்ட் கதைகள் கொஞ்சம் கவர்கிறது. அதெல்லாம் இருக்கட்டும் நான் சொல்ல வந்தது விகடனின் இந்தவார தலையங்கம் பற்றி.

    வெள்ளக்காடான தமிழகத்தை மீட்க அரசு நடவடிக்கை அவசியமாக தேவைப்படும் நேரத்தில் தேவை மக்கள் நடவடிக்கை என்று தலைப்பில் தொடங்குகிறது தலையங்கம்.
பேரழிவை விளக்குகிறது முதல் பத்தி. அடுத்த பத்தி அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லாததை செல்லமாக கண்டிக்கிறது.

   அதற்கப்புறம் விகடன் சொல்லுவதைத்தான் என்னால் ஏற்க முடியவில்லை! அரசே செய்யவேண்டும் என்று காத்திராமல் மக்களே மழைநீர் சேகரிக்க வேண்டுமாம். மக்கள் மட்டும் இதைச் செய்திருந்தால் இத்தனை வெள்ளம் வந்திருக்காதாம்.

  சிமெண்ட் கொட்டி எங்கும் மூடுவது, ப்ளாஸ்டிக் கழிவுகள்கொட்டுவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும் என்று சொல்லுகிறது ஏற்றுக்கொள்ளலாம். ஒவ்வொரு வீதியிலும் மழைநீர் கழிவுநீர் கால்வாய் இருக்க வேண்டும் என்பது அரசு விதியாம். அவ்வாறு இருக்கிறதா என்று கல்லூரிமாணவர்களும் இளைஞர் அமைப்புக்களும் பரிசோதிக்க வேண்டுமாம். இல்லையென்றால் மீட்டெடுக்க போராட வேண்டுமாம்.

   கடைசியாக சொல்வது நீர்நிலை ஆக்ரமிப்பை யாரோ செய்ய வில்லை! நம் கண் முன்னேயேதான் அநீதிகள் நடக்கிறது. நம் ஊரில் ஓடும் வாய்க்காலை நம்மில் ஒருவர்தான் ஆக்ரமிப்பு செய்கிறார். அப்படி செய்யும்போதே தட்டிக் கேட்க வேண்டுமாம். எதிர்த்து போராட வேண்டுமாம். ஒதுங்கிச் செல்வதால்தான் அவர்களுக்கு பலம் அதிகரித்துவிடுகிறதாம். ஒதுங்கிச்செல்லாமல் எதிர்த்து நின்றால் அவர்கள் ஒதுங்கி போய்விடுவார்களாம். அத்தகைய மக்கள் நடவடிக்கை தேவை என்கிறது தலையங்கம்.

  எல்லாம் சரிதான்! ஒத்துக் கொள்கிறேன்! எதிர்த்து போராட எதிரிகள் என்ன குப்பன் சுப்பன்களாகவா இருக்கிறார்கள்? பெரும் பண முதலைகளும் அரசியல்வாதிகளும்தானே ஆக்ரமிப்பில் இறங்குகிறார்கள். சாதாரண ஒருவிவசாயியோ இல்லை ஒரு குடிமகனோவா பெரிய கல்லூரிகளையும் வணிக வளாகங்களையும் கட்டுகிறார்கள். பெரும் வணிகர்களும் அரசியல் தலைகளும் கட்டுகிறார்கள். அவர்களை எதிர்க்க சாமான்ய மக்களால் முடியுமா? சரி! அப்படியே முடியும் என்றாலும் முளையிலே கிள்ளி எறிய சொல்கிறீர்கள். ஆனால் சென்னையில் நடந்திருப்பது முடிந்து போன ஆக்ரமிப்பு. தாம்பரம், முடிச்சூர், அம்பத்தூர், கொரட்டூர், அண்ணாநகர், கோயம்பேடு, என அனைத்து நகரங்களில் ஆக்ரமிப்புகள் சூழ்ந்துவிட்டன. நீர் செல்ல தடையாக இருப்பது குடியிருப்புகள் கூடத்தான்.

    இதற்கெல்லாம் அனுமதி வழங்கியது யார்? அரசாங்கங்கள்தானே! அவர்கள்தானே இப்போது ஆக்ரமிப்புக்களை அகற்றவேண்டும்? வேண்டுமானால் இந்த இடம் ஆக்ரமிக்கப்பட்டுள்ளது என்று சுட்டிக்காட்டலாம். அப்படி காட்டுபவரின் உயிர் மறுநாள் இருக்குமா? என்று சந்தேகமாக இருக்கிறது. இங்கு சாமான்யர்களின் உயிரைப் பற்றி அரசு கண்டு கொள்வதே கிடையாது.

    அடுத்தவரின் ஆக்ரமிப்பை தடுக்கும் முன் தன்னுடைய நிலையை ஒவ்வொருத்தனும் எண்ணிப்பார்க்க வேண்டும் இல்லையா? இன்று சென்னையில் புறநகர்களில் இருக்கும் குடியிருப்புக்களில் பெரும்பாலும் நீர்நிலைக் கால்வாய்களை ஆக்ரமித்து கட்டப்பட்டவைதான்!
   ஏன்? அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட தியாகராயநகரும், அண்ணாநகரும் கூட ஏரிகளை அழித்து உருவாக்கப்பட்டவைதான்!  தானே குற்றவாளியாக இருக்கும் ஒருவன் அடுத்தவனை குற்றம் சாட்ட முடியுமா?

  ப்ளாஸ்டிக் பொருட்களை வாங்காதீர் என்று கூவுகிறது அரசு! வாங்காமல் இருக்கிறார்களா மக்கள்? விற்றுக்கொண்டு இருக்கிறார்கள் வாங்குகிறார்கள்? உற்பத்தி இருக்கும் வரை விற்பனை இருக்கும். முதலில் உற்பத்தியை அல்லவா தடை செய்யவேண்டும். இதை செய்ய வேண்டியது அரசா மக்களா?

வெள்ளம் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டியதும், முறையான வடிகால் வசதிகளை அமைத்து கொடுத்து ஏரி குளங்களை தூர்வார வேண்டியது மக்களா அரசா?

 மக்கள் உழைக்கிறார்கள் வரிசெலுத்துகிறார்கள் உண்ணும் இட்லி போண்டாக்களுக்கு கூட சேவை வரி கொடுக்கிறார்கள். அரசு விரித்த மாயவலையில் விழுந்து டாஸ்மாக்கின் வியாபாரத்தை உயர்த்தி நிறுத்துகிறார்கள்  இப்படிப்பட்ட  அப்பாவி மக்கள் இன்னும் என்னத்தான் செய்வார்கள்?

   வெள்ளம் வந்தாலும் ஏற்றுக் கொண்டு அரசு கொடுக்கும் நிவாரணங்களை வாங்கிக்கொண்டு ரொட்டி தின்று போர்வை போர்த்தி கொசுக்கடியில் சுகாதாரமில்லா குடிநீர் குடித்து இன்னும் ஜனநாயகத்தின் மேல் நம்பிக்கை வைத்துக்கொண்டிருக்கும் மக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டியதெல்லாம் தேர்தல் நேரத்தில் மட்டுமே!

  அப்போது அவர்கள் எடுக்கும் நடவடிக்கையை அடுத்து வரும் அரசும் உணர்ந்துகொள்ளாமல் அவர்களோடு விளையாடுவதுதான் இன்னும் பரிதாபமான விஷயம்.

 அதைவிடுத்து ஆக்ரமிப்புகளை அகற்ற மக்கள் நடவடிக்கை அவசியம் என்பதெல்லாம் சும்மா…! ஆனந்தவிகடன் தலையங்கம் என்னைப் பொறுத்தவரையில் அரசுக்கு கொடுக்கும் உம்மா!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!




Comments

  1. விரிவாக அலசி எழுதி இருக்கின்றீர்கள் நண்பரே உண்மைதானே பணமுதலைகளை யார் எதிர்க்க முடியும்.

    ReplyDelete
  2. சுரேஷ் பொளந்துகட்டிவிட்டீர்க்ள்! பாராட்டுகள். தலையங்கம் ஜால்ரா போல உள்ளதே! ஒரு சில விஷயங்கள் மட்டும்தான் மக்கள் கையில். மற்றவை எல்லாம் அரசின் கையில்தானே! போராடணுமா? அஹ்ஹஹஹ் போராடினால் என்ன நடக்கும் என்பதை நாம் கண்கூடாகக் கண்டுகொண்டிருக்கின்றோம் தானே...

    அடையார்,, கூவம், பக்கிங்க்ஹாம் கனால் கரைகள் எல்லாம் ஆக்ரமிக்க்ப்பட்டுள்ளதே இவை எல்லாம் அவர்களின் ஓட்டுவங்கிகள்.

    பிளாஸ்டிக் எல்லா கடைகளிலும் விற்கப்படுகின்றதே. விற்கப்படட்டும் தவிர்க்கமுடியாது. ஆனால் குப்பைகள் அள்ளும் போது ரீசைக்கிளிங்க் ப்ளாஸ்டிக், பேப்பர், ரீசைக்கிள் செய்ய முடியாதவை, மக்கும் குப்பைகள், உடைவன என்றுத் தனித் தனியாக மேலை நாடுகளில் பிரித்து தொட்டிகள் ஒவ்வொரு அபார்ட்மெண்டிலும், ஒவ்வொரு வீட்டிலும் செய்யப்படுவது போல இங்கும் செய்தால் ப்ளாஸ்டிக் எப்படி அடைக்கும்? மட்டுமல்ல இஅவர்கள் அள்ளும்குப்பைகளைக் கொட்டுவதோ திறந்த வெளி மைதானத்தில்தான்.
    கால்வாய்கள் இல்லை, மழைனீர் வடியும் கால்வாய்கள் இல்லை, சாக்கடைகள் இல்லை...இதை எல்லாம் மக்களா கட்ட முடியும்....ஹஹஹ் நல்ல தலையங்கம்....தலையங்கம் எழுதியவர்கள் நடவடிக்கை முதலில் எடுக்கட்டும்...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஜால்ரா எனும் வார்த்தையை வன்மையாகக் கண்டிக்கிறேன் அம்மணி! இதே நாள் ஆனந்த விகடனில் செயலலிதா பற்றி கேபினெட் காமிரா என்கிற தொடரின் கீழ் அலசல் கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டிருக்கிறது. படித்துப் பார்த்து விட்டுச் சொல்லுங்கள்! ஜால்ரா அடிப்பவர்கள் இப்படியெல்லாம் எழுதுவார்களா?

      விகடன் செயலலிதாவைக் கண்டித்தால் கருணாநிதி அந்நிறுவனத்தை வாங்கி விட்டார் என்கிறார்கள். அரசு மக்களைக் கண்டு கொள்ளாவிட்டால் நம்மை நாம்தான் காத்துக் கொள்ள வேண்டும் என எழுதினால் ஜால்ரா என்கிறார்கள். என்னைப் பொறுத்த வரை, விகடன், அந்தந்தக் கட்சி ஆட்சியில் இருக்கும்பொழுது அவர்களைக் கொஞ்சம் கூடுதலாகவே கண்டிக்கிறது, அவ்வளவுதான். எனக்குத் தெரிந்து இதுதான் ஊடக அறம்!

      Delete
  3. நம்மூருக்கு மிக மிக முக்கியமான ஒன்று இல்லாமல் இருப்பது பல சீர்கேடுகளுக்கும் வித்திடுகின்றது. லா என்ஃபோர்ஸ்மென்ட் இல்லாதது. இருப்பது ஊழல்

    ReplyDelete
  4. அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் கூட மக்களாட்சி தான், ஆனால் வாழ்க்கைத் தரம், தனி மனித சுதந்திரம் எப்படி இருக்கிறது, எந்த வகையில் அவர்கள் மாறு பட்டவர்கள்?

    பக்கத்து மாநிலம் கேரளாவில், ஆற்று மணல் அள்ளுவதற்கு தடை இருக்கிறது, மது கடைகள் எண்ணிக்கையை குறைக்க அம்மாநில முதல்வர் நடவடிக்கை எடுக்கிறார். அவர்களுக்கும் நமக்கும் என்ன வேறுபாடு? யோசியுங்கள் பதில் இருக்கிறது.

    ReplyDelete
  5. வணக்கம்
    ஐயா
    விரிவான விளக்கம் படித்து மகிழ்ந்தேன்
    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: தொடர்பதிவில் நானும் சிக்கிவிட்டேன்...:
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  6. மழை நீர் சேமிப்பு ஒன்றுதான் நம் கையில் உள்ளது. மற்றதெல்லாம் நடக்காத ஒன்று. நல்லதோர் அலசல்.

    ReplyDelete
  7. பணமுதலைகளை யார் எதிர்ப்பது...?
    மழை நீர் சேகரிப்பு... நம்ம ஏரியாவில் இருக்கும் சாக்கடை கால்வாய்களை சுத்தமாக வைத்துக் கொள்ளுதல் மட்டுமே நம் செயல்பாடுகள்... மற்றதெல்லாம்...?

    ReplyDelete
  8. உங்களிடமிருந்து ஒரு வித்தியாசமான பதிவைக் கண்ட நிறைவு. ஒவ்வொரு நிலையிலும் ஒருவரையொருவர் குறைகூறிக்கொண்டு நடப்பது என்பது நம்நாட்டு அரசியல். நம்மால் ஆனதைச் செய்வோம்.

    ReplyDelete
  9. வணக்கம் நண்பரே! தங்கள் கருத்துக்கள் அருமை!

    கிராமப்புறங்களில் வயல் அடிக்கும்போது எங்கும் தண்ணீர் சமமாக இருக்க சமன்செய்வார்கள்
    குறைந்த விலைக்கு வீடுகள் கிடைக்கிறது என்பதற்காக வாங்கிவிடுகிறார்கள்! அந்த இடம் எப்படி பட்டது மழை வடியுமா இல்லையா என்பதை போல பல விசயங்களை யாரும் கவனிப்பதில்லை ஆற்றையோ குளத்தையோ தான் குறைந்த விலைக்கு தரமுடியும் என்பதை எதிர்த்து அரசுக்கு எதிராக யார் போராடினார்கள்? இல்லையோ! பிளாஸ்டி விற்பதினால்தான் வாங்குகிறோம்! இல்லை என கூறமுடியாது! கண்ட கண்ட இடங்களில் வீசுவதும் நாம்தானே மழைகாலத்தில் அடைக்காமல் என்ன செய்யும்! பூச்சி மருந்து கூடத்தான் விற்கிறார்கள்! அதை வாங்கி நாம குடிக்க ஆசைபடுவமா? அரசு என்பது நம்மை நிர்வாகிக்கும்! அவ்வளவுதான்! மாற்றம் என்பது முதலில் நம்மிடமிருந்து தொடங்க வேண்டும்! அப்பத்தான் அரசையும் மாற்றமுடியும் எல்லாவற்றையும் மாற்றமுடியும்!

    இது எனக்கு தெரிந்த கருத்துதான்
    உடன்பாடு இல்லையெனில் மன்னிக்கவும் நண்பரே!

    ReplyDelete
    Replies
    1. நன்றாகச் சொன்னீர்கள் பூபகீதன்!

      Delete
    2. உங்கள் கருத்தை சொன்னதற்கு நன்றி நண்பரே! இதில் மன்னிப்பு என்பதெல்லாம் பெரிய வார்த்தைகள். தேவையில்லை! இப்படி குறைந்த விலைக்கு வரும் நிலங்களை சில நடுத்தர குடும்ப மக்கள் ஆசைப்பட்டு வாங்குவது உண்டுதான். ஆனால் இப்படிப்பட்ட மனைகளுக்கு அனுமதி அளிப்பது யார்? உள்ளூர் பஞ்சாயத்து! அரசாங்கம்தானே! விலைநிலங்களை வீட்டுமனைகளாக மாற்ற எப்படி அரசாங்கம் ஒத்துப் போகிறது? அப்புறம் எப்படி விவசாயம் தழைக்கும்? விற்க நினைப்பவன் பொதுமனிதன் என்றாலும் அவனுக்கு அனுமதி கிடைப்பதால்தானே விற்கிறான்? ப்ளாஸ்டிக் பற்றியும் இதே அணுகுமுறைதான்! தீமையான ஒன்றை ஏன் தயாரிக்க வேண்டும்? தடை செய்ய வேண்டும்தானே! ஆனால் தயாரிக்கிறார்கள் கமிஷன் பெறுகிறார்கள். கள்ளசாராயத்தை கைவிட நல்ல சாராயம் விற்பதுதான் நமது அரசு. பூச்சிமருந்துகள் வாங்கி பயிர்களில் தெளித்து இயற்கை பயிர் முறையை அழித்து இன்று நோயாளிகளாக மாறி வருகிறோம்! தடை செய்யப்பட்ட பல பூச்சிக்கொல்லிகள் இந்தியாவில் தாரளமாக கிடைக்கிறது. இவைகளையும் தடை செய்ய வேண்டும். வாங்கினால் விற்கிறோம் என்று சொல்லுவது சினிமாக்காரர்கள் சொல்லுவது போல விரும்புகிறார்கள் ஆபாச காட்சிகளை எடுக்கிறோம் என்று சொல்லுவது போல் இருக்கிறது. உங்கள் வீட்டில் குழந்தைகள் ஆபாச புத்தகங்கள் காட்சிகள் பார்க்க கூடாது என்றால் அதை வீட்டில் வாங்காமல் பார்க்காமல் தவிர்ப்பீர்கள் அல்லவா? இல்லை இது பிள்ளைகள் பார்க்க கூடாத புத்தகம் என்று எழுதி விட்டு நீங்கள் பயன்படுத்துவீர்களா? இப்படித்தான் இருக்கிறது இன்றைய அரசாங்கத்தின் நிலை! கருத்துக்கு மிக்க நன்றி!

      Delete
  10. அருமையான அலசல் அரசு இயந்திரம் எப்போதும் சமூக நலன் பற்றி சிந்திப்பதில்லை அடுத்த இலாபம் அடுத்த தேர்தல் வெற்றி பற்றியே சிந்திக்கும் நிலையில் எதுவும் நடக்கப்போவதில்லை.விகடன் எல்லாம் வாசிப்பதை நிறுத்தி ஆண்டுகள் பல ))))

    ReplyDelete
  11. எனக்கென்னவோ நீங்கள் கூறுவது சரி எனத் தோன்றவில்லை நண்பரே! இந்த வார ஆனந்த விகடன் தலையங்கத்தைப் படித்துவிட்டுத்தான் நானும் இதை எழுதுகிறேன்.

    பொதுவாகவே, அரசு செய்ய வேண்டிய கடமைகளையெல்லாம் மக்கள் தலையில் கட்டுவதை ஏற்றுக் கொள்ளாதவன் நான். ஆனால், இந்த விதயம் அப்படியில்லை. நடந்திருக்கும் இந்தப் பேரழிவில் மக்களாகிய நமக்கும் பெரும்பங்கு உண்டு. பிளாச்டிக்கை விற்பதனால்தான் மக்கள் வாங்குகிறார்கள் என்கிறீர்களே? பிளாச்டிக்கை எரிக்காதீர்கள் என அரசும் சமூக ஆர்வலர்களும் எத்தனையாயிரம் முறை கூவுகிறார்கள்? கேட்கிறார்களா நம் மக்கள்? மட்கும் குப்பை - மட்காத குப்பை என இரண்டாகப் பிரித்துக் கொடுங்கள் எனத் தலைப்பாடாக அடித்துக் கொள்கிறது அரசு. ஆனால், எத்தனை பேர் அதைக் கடைப்பிடிக்கிறார்கள்? பண முதலைகளை எதிர்த்துப் பொது மக்களால் ஏதும் செய்ய முடியாது என்கிற கதையை நாம் இன்னும் எத்தனை காலத்துக்குச் சொல்லிக் கொண்டிருக்கப் போகிறோம்? அணு உலைக்கு எதிரான இடிந்தகரை மக்கள் போராட்டம், தமிழீழத்துக்கு எதிரான அரசின் போக்கைக் கண்டிக்கும் மாணவர் போராட்டம், நியூட்ரினோ திட்ட எதிர்ப்புப் போராட்டம், மீத்தேன் திட்டத்துக்கு எதிரான போராட்டம் என நாட்டுப்புறங்களில் தொடர்ந்து மக்கள் அரசுக்கு எதிராகவும், பெரும் பண முதலைகளுக்கு எதிராகவும் போராட்டங்களை நடத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். இதோ, நியூட்ரினோ திட்டத்துக்கு எதிராக வை.கோ அவர்கள் தடை வாங்கி விட்டார், மக்கள் போராட்டத்தைப் பார்த்து மீத்தேன் திட்டத்துக்கு மாநில அரசு தடை போட்டு விட்டது. ஆக, மக்கள் போராடினால் எப்பேர்ப்பட்ட அதிகாரத்தையும் எதிர்த்து வெல்லலாம் என்பதற்குக் கண்முன் சான்றுகளாக நடமாடுகிறார்கள் நம் நாட்டுப்புறத் தமிழ் மக்கள். ஆனால், பெருநகரர்களான நமக்கு அன்றாட வாழ்க்கையில் எந்த விதமான இடையூறும் ஏற்படக்கூடாது, நகத்தில் அழுக்குப் படக் கூடாது, கழுத்துப்ட்டையில் வியர்வைக் கறை படியக்கூடாது. அதனால்தான் இந்தப் போராட்டமெல்லாம் நமக்கு வேலைக்காகாது என நாம் ஒதுங்கி, மூக்கைப் பொத்திக் கொண்டு போய்க் கொண்டே இருக்கிறோம். அதன் விளைவுதான் இன்று மூக்கை மூடினாலும் சகிக்க முடியாத அளவுக்குச் சாக்கடை வந்து நம் வீட்டு நடுக்கூடத்தில் தேங்கி நிற்கிறது. அதைத்தான் கொஞ்சம் மாற்றிக் கொள்ளச் சொல்கிறது அந்தத் தலையங்கம்! இதில் தவறு என்ன?

    ReplyDelete
    Replies
    1. மக்கள் போராட்டங்களையும் அதன் வலிமையையும் அறிவேன் ஐயா! அதை குறை கூறவில்லை. அதே சமயம் மிக முக்கியமான இந்த வெள்ள பாதிப்பு நிவாரணங்களில் அரசு முழுமையாகவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. எந்த ஒரு போராட்டமும் சீக்கிரம் வெற்றிபெறுவது இல்லை! வடிகால்களை அடைத்து எழுப்பும் கட்டடங்களுக்கு எதிராகவும் போராடலாம்தான். ஆனால் நாம் போராடும் முன் அரசு அனுமதி பெற்றுதானே கட்டுகிறார்கள். எப்படி அனுமதி பெறுகிறார்கள். அரசியல் செல்வாக்கு, பணபலம் மூலம்தானே பெறுகிறார்கள். இப்படி ஒவ்வொன்றிற்கும் மக்கள் தம் திறனை செலவழித்து போராடித்தான் பெற வேண்டும் என்றால் அப்புறம் அரசு எதற்கு? ஏன் மக்கள் நல அரசு என்று சொல்லிக் கொள்ள வேண்டும். பிளாஸ்டிக் பயன்பாட்டில் வேண்டுமானால் வாங்காமல் தவிர்க்கலாம்தான். ஆனால் ஏன் விற்கிறார்கள் என்பதே என் கேள்வி? ஒரு பொருள் தீமை தருகிறது என்றால் ஏன் அதை உற்பத்தி செய்யவேண்டும்? விற்பனைக்கு கொண்டுவர வேண்டும்? மேலைநாடுகளில் தடை செய்யப்பட்ட எத்தனையோ பூச்சிக்கொல்லிகள் இங்கே விவசாயத்தில் பயன் படுத்தப்பட்டு மண்ணின் உயிர்த்தன்மையை அழித்துக் கொண்டு இருக்கிறார்கள். விவசாயிகளும் லாப நோக்கில் உண்மை அறியாது வாங்கி பயன் படுத்துகின்றனர். ஒவ்வொருவரும் தன்னிடத்தே இருந்து மாற்றத்தை கொண்டுவர வேண்டும் என்பது உண்மைதான். ஏற்றுக் கொள்ளக் கூடியதுதான்! ஆனால் அது முற்றிலும் சமூக மாறுதல் ஏற்படுகையில்தான் சாத்தியம். புரையோடிப்போன சமுதாயத்தில் அந்த விழிப்புணர்வு ஏற்பட அரசின் கடுமையான நடவடிக்கைகளும் தீவிரமும் தேவை என்பது என் தாழ்மையான கருத்து. விரிவான சிறப்பான கருத்துரைக்கு நன்றி ஐயா!

      Delete
  12. அரசாங்கம் செய்யணும், செய்யட்டும் என எதிர்பார்ப்பு க்குறைந்து இது என் நாடு இந்நாட்டின் வளர்ச்சியும், வீழ்ச்சியும் என்னையும் சார்ந்தது என ஒவ்வொரு குடிமகனும் நினைக்க வேண்டும்.

    யாரோ யாருக்கோ எனும் மேம்போக்கு இருக்கும் வரை யார் என்ன பேசினாலும் அவை செவிடன் காதில் ஊதப்பட்ட சங்கு தான்.

    ஒரு இடத்தில் கட்டடமோ தொழிற்சாலையோ, வணிக வளாகமோ, குடியிருப்போ எது கட்டுவதாக இருந்தாலும் முதலில் அச்சூழலை சூழ்ந்திருப்போரிடம் அதாவது பொதுமக்களிடம் ஒட்டெடுப்பு நடத்தி அதன் பின் அனுமதி அளிப்போ மறுப்போ கொடுக்க வேண்டும் எனும் சட்டம் கொண்டு வந்தால் எப்போர்ப்பட்ட பண முதலைகளாலும் எதுவும் செய்ய முடியாதே!

    எல்லாமே அரசாங்கம் தான் செய்ய வேண்டும் எனும் எதிர்பார்ப்பு நம்முள் இருக்கும் வரை அரசும் இப்படித்தான் இருக்கும்.


    ReplyDelete
  13. நல்லதோர் அலசல். யார் காரணம் - அரசு, பொதுமக்கள் என அனைவருக்கும் பங்குண்டு சுரேஷ். தவறுகள் இரு பக்கமும் இருக்க, சரி செய்யவும் இரண்டு பக்கமும் முன் வர வேண்டும்.

    ReplyDelete
  14. தவறு இரு பக்கமும் உள்ளது. இருவருமே சரி செய்து கொள்ள முயற்சிக்க வேண்டும். பொதுவாக அரசு இலவசங்களைக் கொடுத்துக் கெடுத்து வைத்திருக்கிறது மக்களை. ஏடிஎம்மில் பணம் எடுத்தாலே அங்கே இருக்கும் காவலாலர் டீ குடிக்கக் காசு கேட்கிறார். இப்படிப் பழக்கி வைத்திருப்பது யார்? நாமும் அரசும் தானே! தீபாவளி இனாம் என்பது இப்போதெல்லாம் குறைந்த பட்சமாக 50 ரூபாய் கொடுக்க வேண்டி இருக்கிறது. அதிலும் பார்த்தாலே கையை நீட்டும் வழக்கம் அதிகரித்து வருகிறது! :( இலவசங்கள் கொடுத்து மக்களை இப்படிப் பழக்கி இருப்பது அரசு எனில், அதை வேண்டாம் என எதிர்க்காமல் அதற்காகக் கூட்டத்தில் இடிபட்டு, மிதிபட்டு, நசுங்கிச் செத்து அதை வாங்கி அதுவும் எதுக்கும் பிரயோஜனம் இல்லாமல் கடைசியில் தூக்கிப் போட வேண்டி இருக்கும் பொருளுக்காக இத்தனை போராட்டம்! மொத்தமாக அனைவரும் மாற வேண்டும்.

    ReplyDelete
  15. தளிர்,

    அருமையான - துணிச்சலான பார்வை.

    வாழ்த்துக்கள்.

    கோ

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2