கோட்டை புரத்து வீடு! கொக்கி போட்டு இழுக்குது!



எழுத்தாளர் இந்திரா சவுந்திரராஜன் கதைகள் என்றாலே எனக்கு அலாதிப் பிரியம்தான். அவரது அனைத்து நாவல்களையும் வாசித்தது கிடையாது எனினும் அவ்வப்போது மாதநாவல்கள், வார இதழ்களில் அவர் எழுதும் தொடர்கதைகளை வாசித்து மகிழ்ந்து இருக்கிறேன். மர்மங்கள் அதை தேடப்போய் மேலும் மர்மம் என்று விரிந்து இறுதியில் ஒவ்வொன்றாய் அவர் அவிழ்க்கும் விதமே சிறப்பு.

 கோட்டைப்புரத்துவீடு! இது ஆனந்தவிகடனில் ஒரு இருபத்தைந்து வருடங்கள் முன் வெளிவந்த தொடர் என்று நினைக்கிறேன். இது வெளிவரும்போது நான் எட்டாவதோ ஒன்பதாவதோ படித்துக் கொண்டிருந்தேன். அப்போதே நாவல்களை வாசிப்பேன். அதுவும் மர்ம நாவல்கள் என்றால் ஓர் குஷி. இந்த தொடர் என்னை அப்போதே வசியம் செய்த ஒன்று.

     காலப்போக்கில் இந்தகதை என் மனதில் மறைந்துவிட்டாலும் அந்த பெயர் அப்படியே பசுமரத்தாணி போல பதிந்து கிடந்தது. போனவருடம் புத்தகச்சந்தையில் இந்த நாவலை பார்த்ததும் வாங்கினேன். உடனே படிக்க மனது தூண்டினாலும் முடியவில்லை! இன்னும் நிறைய நூல்கள் கிடப்பில் இருக்கின்றன. இன்று காலை முதல் இடைவிடாத மழை! மதியம் உணவு உண்டபின் முதல் வேலையாய் நாவலை எடுத்துவந்து படிக்க ஆரம்பித்தேன். ஒரு மூன்று மணி நேரம் இடைவிடாது வாசித்து முடித்து நிமிர்ந்த போது மணி 4.30 ஆகிவிட்டது. மழை விட்ட பாடில்லை. இணையம் பக்கம் வரவில்லையே என்று கூட அப்புறம்தான் தோன்றியது அவ்வளவு சுவாரஸ்யம்.

       மதுரை பக்கம் ஜமின் கோட்டை புரம். அந்த ஜமீன் வாரிசுகள் 30 வயது நிறைவில் மர்மமாக இறக்கிறார்கள். அதன் கடைசி வாரிசு விசு. அவனது காதலி அர்ச்சனா. இந்த மர்மத்தை தோண்டுகிறார்கள். மர்மத்தை கண்டுபிடித்தார்களா? என்பதுதான் கதை.

   முதல் அத்தியாயத்தில் இருந்தே முடிச்சுக்கள் பின்னப்படுகின்றன. ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒருவர் மீது சந்தேகக் குறி ஏற்படுகிறது. இவராக இருப்பாரோ? என்று எண்ணுகையில் அவர் இல்லை என்று புலனாகிறது. வஞ்சியம்மாள் என்ற பெண்ணின் சாபம் என்று ஒரு கட்டுக்கதை பின்னி சாதுர்யமாக ஜமீன் வாரிசுகளை பிஞ்சுக்குழந்தைகளை கூட கொன்று குவிக்கிறான் ஒருவன். அவனது வன்மத்திற்கு காரணம்.

      ஜமீன் பிரசாதம் என்ற பெயரில் அடிமைப் பெண்களை ஜமிந்தார்கள் சீரழிப்பதும் பெண்களை இழிவுபடுத்துவதும் நினைத்த பெண்களை பெண்ணாள்வதும் மட்டுமல்லாமல் நூறு குடும்பங்களை மிகவும் கீழ்த்தரமாக அடிமைகளாக நடத்துவது. ஆங்கிலேய துரைகளுடன் சேர்ந்து கொட்டம் அடிப்பது இதுவே காரணம்.

     மொத்த காரணம் இதுவென்றால் குறிப்பிட்ட ஒருவனுக்கு மட்டும் கோபம் ஏன்? அவன் தனிப்பட்ட முறையில் எப்படி பாதிக்கப் படுகிறான்? எப்படி சாதுர்யமாக ஜமீன் குடும்பத்தை வேர் அறுக்கிறான் என்பதை அத்தியாயத்திற்கு அத்தியாயம் விறுவிறுப்பாக கொண்டு செல்கின்றார் ஆசிரியர்.

 அந்தக்கால அடிமை முறை, சவ அடக்கம், ஜமீன்களின் நடைமுறை இதையும் நாவலை படிக்கையில் அறிந்துகொள்ள உதவுகின்றது.  விசுவநாத ரூபசேகர கோட்டைப்புரத்தான் என்ற விசு கதையின் நாயகன் என்றாலும் மாடர்ன் கேர்ளாக வரும் அர்ச்சனாதான் கதையின் உண்மையான ஹீரோ! பல வருடங்களுக்கு முன்பே இப்படிஓர் துணிச்சலான கதாப்பாத்திரத்தை படைத்த ஆசிரியருக்கு பாராட்டுக்கள்!
கார்வாராக வரும் கருணாகர மூர்த்தி, இருசன், தேவர்,பெரிய ராணி பாண்டியம்மாள், இளைய ராணி திவ்யமங்களம், தில்லைநாயகம், வீரநாட்டார், நண்டுவடாகன், விஷ்ணுசித்தன், வஞ்சியம்மா ராணி ரத்னாவதி, வளையாம்பிகை , விருச்சிக மணி என்ற கதாப்பாத்திரங்களின் பெயர்களே நம்மை கதைக்குள் இன்னும் மூழ்கடித்து சுண்டி இழுக்கின்றன.

   கதை நடக்கும் காலத்திற்கும் இந்த காலத்திற்கும் நம்மை சில அத்தியாயங்களில் மாறி மாறி அழைத்துச்சென்று ஓர் காலச்சக்கரத்தில் பயணித்த உணர்வை வரவழைக்கிறார் ஆசிரியர்.

    கோட்டைப்புரத்து ஜமின் சொத்தும் கடைசியில் கிடைத்துவிடுகின்றது. யாரும் திறக்கக் கூடாது. ஜமீன் குடும்பத்து பெண் வாரிசு வந்து திறக்கவேண்டும் என்று சொல்லப்படுகின்ற மூங்கில் கூடை கதையில் முக்கிய அங்கம் வகித்து இறுதியில் திறக்கப்படுகிறது. அதன் பின்னரும் சாபம் துரத்த நம்மை திகில் துரத்துகின்றது.

    கடைசி அத்தியாயம்வரை கொலைக்காரன் அருகில் இருந்தும் அறியாமல் இருக்க கடைசிப் பத்தியில் அவன் பெயரை அவன் வாயாலேயே சொல்லவைத்து கதையை வித்தியாசமாக முடிக்கிறார் அவருக்கே உரிய பாணியில் இந்திரா சவுந்திர ராஜன்.

   அப்போது நமக்குள்ளே எழும் அதிர்ச்சிகளே இந்த நாவலின் வெற்றிக்கு காரணம்.


கோட்டைப்புரத்துவீடு மர்மங்கள் நிறைந்தது. மனதை கவர்ந்தது! மர்மங்களின் நாயகன் கதையின் வில்லன் யார்? இன்றே வாங்கிப் படியுங்கள்! உங்கள் கண் முன்னே கோட்டைபுரம் காட்சியளிக்கும் அதன் கதாப்பாத்திரங்களோடு நீங்களும் உரையாடுவீர்கள்.

சிறப்பான நாவலை வானதி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. அட்டைப்படம் மணியம் செல்வன் கைவண்ணத்தில் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஐந்து பதிப்புக்களை கடந்துள்ள இந்த நாவல் 328 பக்கங்கள் கொண்டது. நூலின் விலை 110 ரூபாய்.


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. நானும் இவரது நாவல் படித்து இருக்கிறேன் நண்பரே மதுரை பதிவர் விழாவில் கடந்த வருடம் இவரை சந்தித்தேன் நல்ல பேச்சாளரும் கூட விமர்சனம் நன்று

    ReplyDelete
  2. வணக்கம் நண்பரே!

    நீண்ட இடைவெளிக்குப் பொறுத்தாற்றுங்கள்.

    எழுத்தாளர் இந்திரா சவுந்திரராஜனின் கதைகளைப் படித்திருக்கிறேன்.

    காமிக்ஸிலிருந்து, மாயாஜாலக் கதைகளுக்கும், அதிலிருந்து சாண்டில்யன் கல்கி போன்றோரின் சரித்திரக் கதைகளுக்கும் அடுத்து ராஜேஷ் குமார் , சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர் கிரைம் கதைகளுக்கும் அடுத்ததாய் இவரது கதைகளுக்கும் வாசிப்பின் நகர்விருந்த காலம் பசுமையாய் நெஞ்சிலாடுகிறது.

    நூல் விமர்சனத்திற்கு நன்றி.

    ReplyDelete
  3. நல்லதொரு நூல் பற்றிய வாசிப்பனுபவம். இவரது சில கதைகள் படித்திருக்கிறேன். ஒவ்வொன்றும் ரசிக்கும்படியான புத்தகம். கோட்டைப் புரத்து வீடு படித்த நினைவில்லை. விரைவில் படிக்கிறேன்.

    ReplyDelete
  4. கடந்த வலைப்பதிவர் சந்திப்பின்போது இவரைப் பேச்சாளராகக் கண்டோம். அவரது நூல் அறிமுகத்திற்கு நன்றி.

    ReplyDelete
  5. அருமையானதொரு நூலினை அறிமுகம் செய்துள்ளீர்கள் நண்பரே
    நன்றி

    ReplyDelete
  6. ரொம்பப் பிடிக்கும் சுரேஷ். சரித்திரக் கதைகளுக்கு கல்கி, சாண்டிலியன். க்ரைம் கதைகளுக்கு ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டைப் பிரபாகர், மர்மக் கதைகள் என்றால் இந்திரா சௌந்தர்ராஜந்தான்.....தொலைக்காட்சியில் தொடராகவும் வந்ததே விடாது கறுப்பு, ருத்ரவீணை..இதைத்தான் இப்போது சமீபத்தில் நாகா படமாக எடுத்தாரோ....வாசிக்க வேண்டும்...

    ReplyDelete
  7. ரொம்பப் பிடிக்கும் சுரேஷ். சரித்திரக் கதைகளுக்கு கல்கி, சாண்டிலியன். க்ரைம் கதைகளுக்கு ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டைப் பிரபாகர், மர்மக் கதைகள் என்றால் இந்திரா சௌந்தர்ராஜந்தான்.....தொலைக்காட்சியில் தொடராகவும் வந்ததே விடாது கறுப்பு, ருத்ரவீணை..இதைத்தான் இப்போது சமீபத்தில் நாகா படமாக எடுத்தாரோ....வாசிக்க வேண்டும்...

    ReplyDelete
  8. வணக்கம்
    ஐயா
    நூல் பற்றி அற்புதாமக எழுதியுள்ளீர்கள் படிக்க வேண்டும் என்ற ஆசை...
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  9. எழுத்தாளர் இந்திரா சவுந்திரராஜனின் கதைகளைப் படித்திருக்கிறேன்.மர்ம்மக்கதைகளை ஆரம்ப முதல் கடைசி வரை திகிலோடு கொண்டு செல்வதோடு மந்திர, தந்திர மாயா ஜாலங்களையும் விஞ்ஞான ரிதியில் அதன் சாத்தியங்களையும் மிக அருமையாக விளக்கி எழுதி இருப்பார். அவருடையை பெரும்பாலான கதைகள் படித்து விட்டேன். கோட்டையபுரத்து வீட்டை நினைவில் மீட்டி தேடிக்கொண்டிருக்கின்றேன்.

    உங்கள் விமர்சனம் அருமை சார்.

    ReplyDelete
  10. நல்லதொரு நூல் பற்றிய அழகான விமர்சனத்திற்கு நன்றி நண்பரே...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2