குள்ளநரியின் விவசாயம்! பாப்பா மலர்!

குள்ளநரியின் விவசாயம்!  பாப்பா மலர்!


  ரொம்ப காலத்துக்கு முன்னாலே ஒரு காட்டுல குள்ள நரி ஒண்ணு வாழ்ந்து வந்துச்சு. அதற்கு அறிவு ரொம்ப அதிகம். தன்னோட அறிவாற்றலை பயன்படுத்தி கஷ்டம் இல்லாம நிறைய லாபம் சம்பாதிச்சிட்டு இருந்தது. எல்லா விலங்குகளும் அந்த குள்ள நரியை பொறாமையா பார்த்தது.  பின்னே அந்த காட்டு ராஜாவுக்கே குள்ள நரி அமைச்சரா ஆயிருச்சே!

      அமைச்சரா ஆனா பின்னாலும் நரியாலே சும்மா இருக்க முடியலை!  இன்னும் எப்படி சம்பாதிச்சு வாழ்க்கையிலே முன்னேறலாம்னு யோசிச்சுது. அப்படி அது ஒருநாள் யோசிச்சுக்கிட்டே ஆத்தங்கரையோரமா வர்றப்ப அங்கே ஒரு முதலை கரையை விட்டு மேலேறி ஓய்வெடுத்துக்கிட்டு இருந்துச்சு.

   “ என்ன அமைச்சரே? இந்த பக்கம்?” அப்படின்னு கேட்டுது முதலை.

   “ என்னத்தை பெரிய அமைச்சர் வேலை! அரசவை கூடுவதே மாதத்தில் சில நாட்கள்தான்!  அதிலும் உருப்படியாக ஒன்றும் செய்ய வாய்ப்பில்லாமல் போகிறது? ஏன் தான் அமைச்சர் ஆனோம் என்று வருத்தமாக இருக்கிறது? ஓய்வு நேரத்தில் ஏதாவது உருப்படியாக செய்து சம்பாதிக்கலாம் என்று தோன்றுகிறது!” சலித்து கொண்டது நரி.

   “ அரசாங்க உத்தியோகத்தில் இருந்தும், அரசரின் நம்பிக்கையை பெற்ற மந்திரியாக இருந்தும் உங்களுக்கு உங்கள் தொழிலின் மீதே சலிப்பாக இருக்கிறது போலிருக்கிறதே! உங்கள் ஓய்வுப்பொழுதை கழிப்பதற்கு நான் ஒரு யோசனை சொல்லவா?”

    “ சொல்! சொல்!”

 “இதோ இந்த ஆற்றங்கரைச் சமவெளி சும்மாத்தான் இருக்கிறது! காட்டு விலங்குகள் இருக்கிறது என்று மனிதர்களும் வருவது இல்லை. இந்தப் பகுதியில்   விவசாயம் செய்தால் என்ன?”

   “ நல்ல யோசனையாகத்தான் இருக்கிறது! ஆனால்..!”
     “என்ன ஆனால்?”

 “நான் வேலைக்கு போய்விட்டால் யார் கழனியை கவனிப்பது?”
  “அதற்குத்தான் நான் இருக்கிறேனே! நாம் இருவரும் சேர்ந்து விவசாயம் செய்வோம்! ஒப்பந்தம் படி மகசூலை பகிர்ந்து கொள்வோம்! சரிதானே!” என்றது முதலை.

    இப்போதே நிலத்தை சமப்படுத்துவோம்!  உடனே களத்தில் இறங்கின. நிலத்தை செப்பனிட்டு விவசாயத்திற்கு ஏதுவாக மாற்றி அமைத்தனர்.

  “ நிலம் கிடைத்துவிட்டது! எதை விதைப்பது?

  ”உருளைக்கிழங்கு கிடைத்திருக்கிறது அதை விதைப்போம்” என்றது நரி.     “விதைப்பது சரி! மகசூல் எப்படி பங்கிடுவது? ”கேட்டது முதலை.

   “நிலத்தின்  மேலே விளைவது எல்லாம் உனக்கு! அடிப்பாகம் எனக்கு!” என்று புத்திசாலித்தனமாக சொன்னது நரி.

   அப்பாவி முதலை ஏற்றுக் கொண்டது. கண்ணும் கருத்துமாக காவல் காத்தது. அறுவடைக் காலம் வந்தது. நரி கிழங்குகளை மூட்டை மூட்டையாக அறுவடை செய்து எடுத்துச் செல்ல முதலைக்கு ஒன்றும் கிடைக்கவில்லை.

    “என்ன நரியாரே! இப்படி ஏமாற்றலாமா?”

    “நான் எங்கே ஏமாற்றினேன்? ஒப்பந்தப்படி நடந்து கொள்கிறேன்! நீ வேண்டுமானால் அரசரிடம் கூட புகார் சொல்லிக் கொள் என்றது நரி.

    சரி மீண்டும் பயிரிடுகையில் ஒப்பந்தம் மாற்றிக் கொள்வோம்! எனக்கு அடிப்பகுதி உனக்கு மேல் பகுதி! அப்படியானால் நான் பயிரிட உதவுகிறேன் என்றது முதலை
.
     “அப்படியே ஆகட்டும்! உன் கஷ்டம் எனக்கு வேண்டாம்! உன்னிஷ்டம் போல நீ அடிப்பாகத்தையே எடுத்துக் கொள்!” என்று பதவிசாகச் சொன்னது நரி.

    இந்த முறை  நெல்லைப் பயிரிட்டது நரி. விளைச்சல் நன்றாக வந்தது. அறுவடையில் போது முதலைக்கு வெறும் தாள்தான் மிஞ்சியது. நரியோ மூட்டை மூட்டையாக நெல்லை அள்ளிச் சென்றது.

   முதலைக்கு கோபமாக வந்தது. “ இந்த முறையும் என்னை ஏமாற்றிவிட்டாய்?” என்றது.

   ஒப்பந்தப்படி நீ கேட்டது கிடைத்தது. நான் எங்கே ஏமாற்றினேன் என்றது நரி.
     அடுத்த போகம் பயிரிட நரி வந்த போது. முதலை சொன்னது. இந்த முறை நான் விதை போடுகிறேன். என்றது.

    நரி உஷார் ஆனது!   “ சரி நீயே விதைத்துக் கொள்! ஆனால் ஒப்பந்தம் போட்டுக் கொள்வோம்.”

    “என்ன ஒப்பந்தம்?”

   “விளைச்சலில் மேல் பகுதியும்  கீழ்ப் பகுதியும் எனக்கே வேண்டும். நடுப்பகுதியை நீ வைத்துக் கொள்!”

     முதலை கரும்பை விதைத்தது. அறுவடை காலம் வந்தது. மேல் கரும்பும் அடிக்கரும்பும் ஒப்பந்தப்படி நரிக்கு போக தண்டுக் கரும்புகள் முதலைக்கு கிடைத்தது.

       நரிக்கு ஆச்சர்யம்!  “முதலையாரே! இந்த முறை நீங்கள் ஜெயித்துவிட்டீர்கள்! ஆனால்… இதை நீங்களே யோசித்து செய்ததாக தெரியவில்லையே! “

      ”ஆமாம்…! நானாக யோசிக்கவில்லை! இந்த பக்கமாக வந்த மனிதன் ஒருவன் தான் இந்த யோசனையை சொன்னான்.”

      “அதானே பார்த்தேன்! ஆனால் நாம் மோசம் போனோம்! முதலையாரே! இதுவரை இங்கே மனித தடமே இல்லை! நாம் சந்தோஷமாக இருந்தோம். இன்று இந்த இடத்தை மனிதனுக்கு காட்டிக் கொடுத்துவிட்டீர்கள் நம்மை அவன் சந்தோஷமாக இருக்க விடமாட்டான். அவன் தொல்லை தர ஆரம்பித்துவிடுவான். இந்த இடம் மட்டுமல்ல கானகத்தையே அவன் அழிக்க ஆரம்பிக்க போகிறான். ஒருவிதத்தில் என் பேராசையும் இதற்கு காரணம் ஆகிவிட்டது நான் மட்டும் உங்களுக்கு சரிபாதி விளைச்சலை தந்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது! நானே குற்றவாளி!” என்றது வருத்தமாய்.

      முதலை சொல்வதறியாமல் முழிக்க ஒரு மனிதக் கூட்டம் அங்கே வந்து நரியையும் முதலையையும் விரட்டி விட்டு கரும்புகளை அள்ள ஆரம்பித்தது.  
     காடுகள் இப்படித்தான் கொஞ்சம் கொஞ்சமாக கொள்ளை போக ஆரம்பித்தது. அதற்கு காரணமான நரி இன்னும் வயல்வெளிகளில் இரவுப் பொழுதில் ஊளையிட்டு அழுது கொண்டிருக்கிறது.

 (செவிவழிக்கதை என்பாணியில் கொஞ்சம் மாற்றிக் கொடுத்துள்ளேன்)

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

   

Comments

  1. இக்கதை முன்னரே கேள்விப்பட்ட கதை. சற்று மாற்றத்துடன் உங்களது பதிவில் கண்டதில் மகிழ்ச்சி. நன்றி.

    ReplyDelete
  2. கதை நல்ல சுவாரஸ்யமுடன் சென்றது...

    ReplyDelete
  3. வணக்கம்
    ஐயா
    சிந்தனைக்குஅறிவான கதை... மிக அற்புதமாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. கதை அருமை...
    பேராசையால் பெருநஷ்டம்தானே....

    ReplyDelete
  5. ஆசைக்கு அளவு அலாதியானது அல்ல!
    அல்லலை அள்ளித் தருவது ஆகும்!
    அருமை நண்பரே!
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  6. அருமையான கதை நண்பரே
    நன்றி

    ReplyDelete
  7. பேராசை பெரு நஷ்டம். நல்ல கதை. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி சுரேஷ்.

    ReplyDelete
  8. குழந்தைகளுக்கு ஏற்ற கதை!

    ReplyDelete
  9. அருமையானகதை1 நல புத்தி புகட்டும் கதையாகவும் இருக்கின்றது. பாராட்டுகள். இன்னும் இம்மாதிரி கதைகளை எழுதுங்கள்.

    ReplyDelete
  10. நல்ல கதை சுரேஷ்! கேட்ட கதைதான் ஆனால் நடுவில் உங்களின் மாற்றம் நன்று. மனிதன் புகுந்ததால் காடு அழிவதைச் சொல்லியது சிறப்பு. குழந்தைகளுக்கு இது நல்ல எண்ண விதையை ஊன்றும்...அருமை

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2