தித்திக்கும் தமிழ்! பகுதி 23 நால்வாய்க்கு உணவெங்கே தேடுவேன்?
தித்திக்கும் தமிழ்! பகுதி
23
இந்த பகுதி எழுதி சில வாரங்கள்
ஆகிவிட்டது. வாசிப்பு சற்று குறைந்ததே காரணம். உடல்நலம் சரியில்லாமல் போனது வேளைப்பளுவும்
கூட. இன்று ஓர் பாடலை தனிப்பாடல் திரட்டில் வாசித்தேன். மழை, மின்சாரம் தடைபட்டு போனதால்
வாசிப்புக்கு கொஞ்சம் நேரம் கிடைத்தது.
அந்தகக் கவி வீரராகவர் எழுதிய பாடல் அது.
புலவர்கள் தானம் கேட்டுச் செல்வதும் புரவலர்கள்
பரிசில்கள் அளிப்பதும் மரபு. ஆனால் தகையறிந்து பரிசில் தரும் வள்ளல்கள் சிலரே! அறிமடமும்
சான்றோர்க்கு அணி என்பது போல சில வள்ளல்கள் முல்லைக்குத் தேரிந்த பாரி போல நடந்துகொள்வது
உண்டு.
தகையறிதல் என்பதில் இரண்டுவகை உண்டு. ஒன்று புலவரின்
அறிவுத்திறம், சொல்லாடல் முதலியவற்றை கொண்டு மதிப்பிடுவது. இன்னொன்று புலவரின் செல்வச்
சிறப்பை அறிதல்.
பசியோடு வருபவனுக்கு ஒருபிடி சோறுதான் மகிழ்ச்சி
தருமே தவிர ஓராயிரம் பொற்காசுகள் மகிழ்ச்சி தராது. கிழிந்த ஆடை அணிந்தவனுக்கு நல்ல
புத்தாடைகள் தந்தால் மகிழ்வான். ஆடைகள் நிறைய உள்ளவனுக்கு மேலும் ஆடைகள் வழங்குவது
மேலும் சுமையே!
இன்றைக்கு பரிசு என்பது நிறைய மாறிவிட்டது. ஷாம்புவில்
இருந்து ஆப்பம் சுற்றுலா, தங்கக் காசு, மின்சாதனங்கள் என்று எத்தனையோ வழங்குகின்றார்கள்.
நமது அரசாங்கம் கூட விலையில்லை என்று சொல்லி மின்சாதனங்களை வழங்குகின்றது. அது உண்மையில்
பலருக்கு பயனளிப்பது இல்லை! பல மலையோர கிராமங்களில் மின்வசதியே கிடையாது. அவர்களுக்கு
இந்த மின்சாதனங்களால் என்ன பயன்?
பரிசு ஒருவருக்கு பயனளிப்பதாய் இருக்கவேண்டும்.
பரிசு ஒருவருக்கு மனமகிழ்ச்சியை தருவதாக இருக்க வேண்டும். பரிசு ஒருவருக்கு நிறைவைத்
தரவேண்டும். அப்படிப்பட்ட பரிசுகளே என்றும் நினைவில் நிற்கும்.
இதோ இந்த பாட்டில் புலவர் படும் வேதனையைப் பாருங்கள்!
‘இல்’ எனுஞ்சொல் அறியாத சீகையில்வாழ்
தானனைப்போய் யாழ்ப்பா ணன்யான்,
பல்லைவிரித்து இரந்தக்கால், வெண்சோறும்
பழம்தூசும் பாலி யாமல்
கொல்லநினைந் தேதனது நால்வாயைப்
பரிசென்று கொடுத்தான்; பார்க்குள்
தொல்லைஎனது ஒருவாய்க்கும் நால்வாய்க்கும்
இரையெங்கே துரப்பு வேனே?
என்ன கொடுமை பாருங்கள் புலவருக்கு.
அவரது ஒருவாய்க்கே உணவில்லை! இந்த நிலையில் நால்வாய்க்கு உணவு தேடும் நிலைக்கு அந்த
தானன் செய்துவிட்டார்.
இல்லை என்ற சொல்லை சொல்லாத தானன் ஒருவனிடம் பாணனாகிய
புலவர் ஒருவர் சென்று பல்லைக் காட்டி இரந்தாராம்.
அந்த தானன், வெண்சோறும் துணிகளும்
தருவார் என்று புலவர் எதிர்பார்க்கையில், அவரோ தன் நால்வாயைத் தந்து அனுப்பினாராம்.
நால்வாய் என்பது யானையாயிற்றே!
இது என்னை கொல்ல நினைக்கும் செயலன்றோ! தானம் தராமல் மறுத்திருந்தால் கூட பரவாயில்லை!
இப்படியொரு தானத்தை தந்து என்னை சங்கடத்தில் ஆழ்த்திவிட்டாரே! என்னுடைய ஒருவாய்க்கே
உணவைத் தேட முடியாத நிலையில் நான்கு வாய்களுக்கு எங்கே போய் உணவைத் தேடுவேன் என்கிறார்
புலவர்.
நால்வாய் = நான்கு வாய், தொங்கும்வாயை உடைய யானை.
ஏழைப்புலவரால் யானையைக் கட்டி
தீனி போட முடியுமா? பாவம் புலவர் என்று தோன்றுகிறது அல்லவா?
அதே சமயம் வள்ளலையும் ஒருவகையில்
வஞ்சப் புகழ்ச்சியாக பாராட்டுகின்றார். இல்லை எனாது கொடுக்கும் வள்ளல் சிறு புலவருக்கும்
யானையளவு பரிசில் தருகிறார் என்பது பெருமை அல்லவா?
மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தில்
நல்லதொரு பாடலுடன் சந்திப்போம்!
உங்கள் கருத்துக்களை பின்னூட்டத்தில்
தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
பரிசு பயனளிப்பதாய்... மனமகிழ்ச்சியை தருவதாய்... திருப்தியாய்...
ReplyDeleteஅருமை...
பாத்திரம் அறியாமல் பிச்சையிடுவதுதான் அந்த நாளில் புரவலர்களின் வழக்கமாய் இருந்தது போலும்... - இராய செல்லப்பா
ReplyDeleteதீபாவளி நல் வாழ்த்துக்கள் நண்பரே
ReplyDeleteஅருமையான பாடல்...விளக்கம் சுரேஷ்...
ReplyDeleteதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் மனமார்ந்த தீபாவளி வாழ்த்துகள்..
வணக்கம்
ReplyDeleteஐயா
அற்புதமான விளக்கம் படித்து மகிழ்ந்தேன்
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நல்லதொரு பாடல். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
ReplyDeleteஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்.
அருமையான பதிவு
ReplyDelete