பாட்டி சுட்ட ரொட்டி! பாப்பாமலர்!

பாட்டி சுட்ட ரொட்டி! பாப்பாமலர்!


ரொம்ப வருசத்துக்கு முன்னாடி வங்காள கிராமத்துல பாட்டி ஒருத்தங்க வசிச்சு வந்தாங்க. அவங்க ரொம்ப ஏழை! ஏதோ தன்னால முடிஞ்ச வேலைகளை செஞ்சு அதுல வருகிற வருமானத்துல  பிழைச்சு வந்தாங்க.

  ஒரு நாளு அந்த பாட்டி வேலை செஞ்சதுக்கு கூலியா கொஞ்சம் கோதுமை மாவு கிடைச்சுது. பாட்டி அதை பிசைஞ்சு ஒரு ரொட்டி செஞ்சாங்க. அதை ஒரு தட்டில் வைச்சுட்டு ஏதோ வேலையா  திரும்பினாங்க. அப்ப ஒரு காக்கா உள்ளே நுழைஞ்சு அந்த ரொட்டியை தூக்கிக்கிட்டு பறந்துருச்சு! பறந்து போய் பக்கத்தில இருந்த மரத்தில இருந்த கூட்டுல வைச்சுருச்சு.

    ரொட்டியைக் காக்கா தூக்கிப் போனதை பாட்டி பார்த்துட்டாங்க! ”காக்கா! காக்கா! என்னோட ரொட்டியைத் திருப்பிக் கொடுத்திடு!” அப்படின்னு பாட்டி கேட்டாங்க.

     “ தரமுடியாது! நான் சாப்பிடப்போறேன்!” அப்படின்னு சொல்லிருச்சு காக்கா.

  பாட்டி பாவம், பசியோட இருந்தாங்க, திரும்பவும் வேற ரொட்டி செய்ய மாவும் இல்லை! நேரமும் இல்லை. அதனால் காக்கா உக்காந்திருந்த மரத்துக்கிட்டே  “மரமே! மரமே! நான் ரொம்ப பசியாய் இருக்கேன்! காக்கா என்னோட ரொட்டியை தூக்கி வந்து கூட்டுல வைச்சிருக்கு! உன் கிளைகளை அசைச்சு ரொட்டியை கீழ விழ வைச்சு உதவுன்னு!” கேட்டாங்க.

     மரம் மிகவும் அதிகாரமா சொல்லுச்சு! “ நான் ஏன் கிளைகளை அசைக்கணும்! கூட்டை கலைக்கணும்! காக்கா என்னோட பிரெண்டு! நான் கிளைகளை அசைக்கமாட்டேன்!”

   அப்ப அந்த பக்கமா ஒரு மரவெட்டி வந்தாரு. பாட்டி அவருகிட்ட போயி, விறகு வெட்டி! விறகுவெட்டி! என்னோட ரொட்டியை காக்கா தூக்கி வந்துருச்சு! இந்த மரம் கிளைகளை அசைச்சு உதவ மறுக்குது! நீ இந்த மரத்தை வெட்டி அந்த ரொட்டியை கீழே விழ செய்யேன்!” அப்படின்னு கேட்டாங்க.

    விறகு வெட்டி அமைதியா சொன்னாரு. “ நான் எதுக்கு மரத்தை வெட்டனும் இந்த மரம் எனக்கு தீங்கு எதுவும் செய்யலையே?”

   பாட்டிக்கு பசி அதிகமாயிருச்சு! யாரும் உதவலை! அப்ப அந்த மரப்பொந்துதுல இருந்து ஒரு எலி வந்துச்சு! பாட்டி அதுக்கிட்ட போய் , காக்கா என்னோட ரொட்டியை தூக்கி வந்துருச்சு! மரம் கிளையை அசைக்க மறுக்குது! இந்த விறகு வெட்டியும் மரத்தை வெட்டி உதவ மறுக்கிறாரு! நீ அவரோட கோடரிக் காம்பை கடிச்சுப் போட்டுரு!  அப்படின்னு கேட்டாங்க.

   எலி கொஞ்ச நேரம் யோசிச்சுது! அப்புறமா சொல்லுச்சு. இந்த விறகு வெட்டி எனக்கு எந்த தீங்கும் செய்யலை! நான் ஏன் அவர் கோடறியை கடிச்சி பாழாக்கணும்! முடியாது. அப்படின்னு தீர்மானமா சொல்லிருச்சு.

   அந்த சமயம் பார்த்து பூனை ஒண்ணு அந்த பக்கமா வந்துச்சு! பாட்டி பூனைக்கிட்ட போய், பூனையாரே! பூனையாரே ஒரு உதவி செய்யுங்க! என்னோட ரொட்டியை காக்கா தூக்கிண்டு போயி மரத்துல வைச்சுருக்கு மரம் கிளையை அசைக்க மறுக்குது! விறகு வெட்டி மரத்தை வெட்ட மறுக்கிறாரு எலியும் கோடரியை கடிக்கமாட்டேன்னு சொல்லிருச்சு! எலியை நீங்க பிடிச்சிக்குங்க! அப்படின்னு சொன்னாங்க.

    “ நீ சொல்றதுல நியாயம் இருக்குது! ஆனா எலி என்கிட்ட எந்த விஷமும் செய்யலையே! அதை நான் எப்படி கொல்வேன்?” அப்படின்னு சொன்ன பூனை ஓடிருச்சு!

   அந்த சமயம் பாட்டி வளர்த்த நாய் அங்க வந்துச்சு! பாட்டி அதோட முதுகுல தடவிக் கொடுத்து என்னருமை நாய்க் குட்டியே! நீ இந்த பூனையை கொன்னு போட்டுருன்னு சொன்னாங்க!

   உடனே நாய் விறைப்பா தன் வாலை நிமிர்த்துக் கிட்டு  பூனையை துரத்தி போச்சு! நாய் பூனையை நெருங்கவும், பூனை என்னை விட்டுரு! நான் எலியை பிடிச்சிடறேன்ன்னு எலிமேல தாவுச்சு!

   பூனையாரே! என்னை விட்டுடு! நான் கோடரியை கடிச்சு போட்டுடறேன்னு  எலி கோடரியை கடிக்க ஆரம்பிக்க, விறகு வெட்டி, வேணாம் வேணாம்! நான் மரத்தை வெட்டிடறேன்னு சொன்னாரு விறகுவெட்டி.
     ஐயையோ! என்னை வெட்டிறாதே! நான் கிளையை அசைச்சு கூண்டை கலைச்சுடறேன்னு சொல்லுச்சு மரம்.

   மரமே மரமே! அப்படி செய்யாதே! என்னோட கூண்டுல என் குஞ்சுகள் இருக்கு! நானே ரொட்டியை கீழே போட்டுடறேன்னு சொல்லிட்டு ரொட்டியை கீழே போட்டது காகம்.

   பாட்டி அப்பத்தான் கூட்டில சில குட்டி காகங்கள் இருப்பதை பார்த்தாங்க! அதுக்காகத்தான் காக்கா ரொட்டியை எடுத்துப் போயிருக்குன்னு தெரிஞ்சதும் மனசுக்கு கஷ்டமாயிருச்சு!

     காக்கா வருத்தபடாதே! இந்த ரொட்டியை நான் எடுத்துக்கறேன்! உனக்கு என்னோட வீட்டுல இருக்கிற சில தானியங்களை தரேன்னு சொல்லிட்டு வீட்டுக்குள்ளே இருந்து சில தானியங்களை வெளியே போட்டாங்க.
    காகமும் மகிழ்ச்சியா அந்த தானியங்களை பொறுக்கி குஞ்சுகளுக்கு கொடுத்து தானும் தின்னு மகிழ்ச்சியா இருந்தது. பாட்டிக்கும் பசி அடங்கி ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு!

(நேஷனல் புக் டிரஸ்ட் வெளியிட்ட ஓர் ஆங்கில கதையை என் பாணியில் மாற்றி இறுதியில் சில மாற்றங்களுடன் தந்துள்ளேன். புத்தகத்தில் காப்பிரைட் குறித்து போட்டிருந்தாலும் இந்த கதை மிகவும் கவர்ந்ததால் என் குழந்தைக்கு ரொம்பவும் பிடிச்சதால் என் தளம் வாசிக்கும் குழந்தைகளுக்காக இந்த பதிவு)
 நன்றி: நேஷனல் புக் டிரஸ்ட்

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


Comments

  1. அருமை, நண்பரே! எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் இந்த காக்கா கதை பாரசீகத்தில் இருந்து வந்தது என்றும் ஒவ்வொரு நாட்டையும் கடக்கும்போது காக்கையின் உணவும் மாறும் என்றும் கூறினார். தங்களின் கதை அருமை. குழந்தைகளுக்கு இப்படியெல்லாம் கதைகள் சொல்லவேண்டும் ஆனால் யார் சொல்கிறார்கள். தமிழில் வெற்றிடமாக இருக்கும் குழந்தை இலக்கியத்திற்கு தாங்கள் ஆற்றும் பணி அரியது. பாராட்டுக்கள் நண்பரே!

    ReplyDelete
  2. ஒரு காகத்தை வைத்து இவ்வளவு நீளமாக கதை சொல்லலாம் என்பது புரிந்தது நண்பரே அருமை.

    ReplyDelete
  3. உங்கள் தளம் வாசிக்கும் குழந்தைகளுக்கு மட்டுமல்ல, பெரியவர்களுக்கும் நல்ல கதை. நன்றி.

    ReplyDelete
  4. வணக்கம்
    ஐயா
    சிந்தனைக்கு அறிவான கதை மிகநன்று வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete

  5. சிறுவர்களுக்கென அருமையாகச் சொல்லிய
    சிறப்பான கதை

    ReplyDelete
  6. தேவையிலும் தேவை எது என்றால்
    தேடும் நீதிஅது என்பார்
    நல்ல நீதி நதியாக நடை போடும் வரிகள் வெகு சிறப்பு
    நன்றி நண்பரே!
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  7. அடி உதவற மாதிரி......!!

    ReplyDelete
  8. நல்லதோரு நீதிக்கதை. NBT புத்தகங்களில் நல்ல கதைகள் படிக்க கிடைக்கும்.... எனக்கும் பிடித்த புத்தகங்கள் அங்கே வாங்கி இருக்கிறேன்.

    ReplyDelete
  9. அருமையான கதை! புது மாதிரியான கதையும் கூட!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!