புண்ணியங்கள் நல்கும் புரட்டாசி சனிக்கிழமை விரதம்!

  புண்ணியங்கள் நல்கும் புரட்டாசி சனிக்கிழமை விரதம்!


தமிழ் மாதங்களில் புரட்டாசி பெருமாளுக்கு உகந்த மாதம் ஆகும். பெருமாளுக்கு உகந்த கிழமை சனி. கிரகங்களில் ஒன்றான சனிபகவானும் புரட்டாசிமாதத்தில் அவதரித்ததாக கூறப்படுகிறது. புரட்டாசிமாதம் எமனின் கோரைப் பற்களுள் ஒன்று என்றும் சொல்லப்படுகிறது.

   புரட்டாசி சனிக்கிழமை விரதம் பெருமாளுக்கு உரியது. பாவங்களை போக்கி புண்ணியங்களை தரக்கூடியது. காக்கும் கடவுளாம் ஸ்ரீமன் நாராயணனுக்கு உகந்த கிழமையான சனிக்கிழமை விரதம் இருப்பதால் எமபயம் விலகி அல்லவைகள் நீங்கி நல்லவைகள் கூடும் என்று நம்பிக்கை. அதுமட்டும் அல்லாமல் சனிபகவானின் தீய பார்வை விலகி கெடுபலன்கள் குறையும்.

    புரட்டாசி சனிக்கிழமைகளில் நீராடி திருமண் என்று சொல்லப்படும் திருநாமம் அணிந்து உபவாசம் இருந்து விஷ்ணு ஆலயங்களுக்குச் சென்று நல்லெண்ணை தீபம் எற்றி துளசிமாலை சார்த்தி திருமாலின் அஷ்டாட்சர மந்திரம் ஆகிய  “ஓம் நமோ நாராயணா” என்று நூற்றெட்டு முறை ஜபித்து வந்தால் நம்மை பிடித்த துன்பங்கள் விலகும். நல்லவை நடக்கும். ஆழ்வார்கள் பாடியருளிய  திருப்பாவை, திருவாய்மொழி போன்ற பாசுரங்களையும் மனமுருக பாடி பெருமாளை சேவிக்கையில் நம் கவலைகள் எல்லாம் பறந்தோடிவிடும்.

  புரட்டாசி சனிக்கிழமைகளில் அனைத்துப் பெருமாள் கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெறும். 108 திவ்ய தேசங்களும் திருவிழாக்கோலம் பூண்டிருக்கும். திருப்பதி போன்ற முக்கிய தலங்களில் பிரம்மோற்சவமும் திருக்குடை சமர்ப்பிக்கும் வைபவமும் நடைபெறும். சிலர் புரட்டாசி மாதத்தில்தான் தங்கள் நேர்த்திக் கடன்களையும் குலதெய்வ வழிபாடுகளையும் நிறைவேற்றுவர்.
வீடுகளில் விரதம் இருப்பவர்கள் நெற்றியில் திருநாமம் இட்டு, மாவிளக்கேற்றி, வடை பாயசத்துடன் அமுது சமைத்துப் படையலிட்டுப் பூஜையை நிறைவேற்றுவர். சிலர் தங்கள் குடும்ப வழக்கப்படி தங்கள் பகுதியில் உள்ள வீடுகளில் மடியேந்தியோ, உண்டியல் குலுக்கியோ தானம் பெற்று அதில் கிடைக்கும் அரிசியில் பொங்கலிட்டு வழிபடுவர்.

இந்த சனிக்கிழமைகளில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மஞ்சள் ஆடை உடுத்துவது நல்லது. நெற்றியில் திருநாமம் இட்டுக்கொள்வது அவசியம். ""கரையாத நாமக் கட்டியும் புரட்டாசியில் கரைந்துவிடும்'' என்பார்கள். காலை முதல் மாலை வரை பெரியவர்கள் பழம், பால் சாப்பிட்டும், குழந்தைகள், நோயாளிகள் இட்லி முதலான எளிய உணவு வகைகளைச் சாப்பிட்டும் விரதமிருக்க வேண்டும். மாலை ஐந்து மணிக்கு, மஞ்சள் தடவிய ஒரு பித்தளைச் செம்பில் அரிசி எடுத்து, அதை பெருமாள் படம் முன் வைத்து பூஜை செய்ய வேண்டும். அந்த அரிசியை வெண் பொங்கல் அல்லது சர்க்கரைப் பொங்கலாக சமைத்து, பெருமாளுக்கு நைவேத்யம் செய்து வணங்க வேண்டும். அருகிலுள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று துளசிமாலை அணிவித்து வணங்கி வர வேண்டும். பின்பு, பெருமாளுக்கு படைத்த பொங்கலைச் சாப்பிட்டு விரதம் முடிக்க வேண்டும். அன்று முழுக்க மனதுக்குள் "கோவிந்தா ஹரி கோவிந்தா, கோகுல நந்தன கோவிந்தா' என்று சொல்லிக் கொண்டே நம் அன்றாடப்பணிகளைத் தொடர வேண்டும். மாலையில் கூட்டாக குடும்பத்துடன் அமர்ந்து "ஸ்ரீ வெங்கடேச சரணவ் சரணம் ப்ரபத்யே' என்ற மந்திரத்தை 108முறை ஜெபிக்கலாம். ""வெங்கடேசா! உன் திருவடிகளைச் சரண அடைகிறேன்'' என்பது இதன் பொருள்.

பெருமாளுக்கு மண்சட்டியில் நிவேதனம்

பெருமாள் கோயில்களில் சிறப்பு மிக்கதாகக் கருதப்படுவது திருப்பதி தலம். அத்திருத்தலத்துக்கு அருகில் முன்னொரு காலத்தில் பீமன் என்னும் குயவர் வாழ்ந்துவந்தார். அவர் பெருமாள் பக்தர். ஒவ்வொரு சனியும் விரதம் இருப்பதாகச் சங்கல்பம் எடுத்துக் கொண்டார். தொடர்ச்சியான வேலைகளால் விரதம் இருக்க முடியவில்லை. கோயிலுக்குச் சென்றாலும் நின்று நிதானித்து வழிபட மாட்டார். சம்பிரதாய முறைப்படி வழிபடுவதும் அவருக்குத் தெரியாது. ‘பெருமாளே நீயே எல்லாம்’ என்பதை மட்டும் மந்திரம் போல உச்சரித்துவிட்டு வந்துவிடுவார்.

நாட்கள் செல்லச் செல்ல கோயிலுக்கும் தொடர்ந்து செல்ல முடியாத நிலை. அதனால் பெருமாளை வீட்டுக்கே அழைத்து வழிபடுவது என்று பீமன் முடிவு செய்தார். அவர் குயவர் என்பதால் களிமண்ணால் பெருமாள் சிலையை வடித்தார். பெருமாளுக்கு அலங்காரம் செய்யவோ, ஆபரணங்கள் வாங்கவோ அவரிடம் பொருள் இல்லை. அதனால் களிமண்ணையே சிறு சிறு உருண்டைகளாக்கி அவற்றை மாலைபோல் தொடுத்துப் பெருமாளுக்கு அணிவித்து மகிழ்ந்தார்.
அந்த ஊரின் அரசன் தொண்டைமானும் பெருமாள் பக்தர். ஒவ்வொரு சனிக்கிழமையும் அவர் விரதமிருந்து பெருமாளுக்குத் தங்க மாலை அணிவித்து வழிபடுவார். ஒருநாள் காலை அவர் கோயிலுக்குச் சென்றபோது தங்க மாலை மறைந்து, மண் மாலை இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். என்ன தவறு நிகழ்ந்திருக்கும் என்ற யோசனையுடனேயே உறங்கினார். கனவில் தோன்றிய பெருமாள், பீமன் குறித்தும் அவருடைய பக்தியைக் குறித்தும் அரசனுக்கு அறிவித்தார்.

பீமனின் பக்தியைப் பெருமாள் வாயாலேயே கேட்டறிந்த மன்னன், பீமனின் குடிசைக்குச் சென்றார். அவருக்குப் பொன்னும் பொருளும் வாரிவழங்கினார். ஆனால் அந்தப் பொருட்களில் எல்லாம் மயங்காமல் இறுதிவரை பெருமாளையே துதித்து, முடிவில் வைகுண்டப் பதவி அடைந்தார். பீமன் என்னும் அந்தக் குயவனின் பக்தியைப் பறைசாற்றும் வகையில் இன்றுவரை பெருமாளுக்கு மண்சட்டியில்தான் திருவமுது படைக்கப்படுகிறது.

பாவ வினைகளால் உண்டான பிணி, தடை, தோஷம், கண் திருஷ்டி போன்றவை விலகவும் கர்ம வினைகள் தொடராமல் இருக்கவும் ஆயுள், ஆரோக்கியம், புத்திர சம்பத்து, மாங்கல்ய பலம், சவுபாக்கியம் கிடைக்கவும் விரத முறைகள் காலம் காலமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றனர். உணவு கட்டுப்பாட்டுடன் தெய்வத்தை மனதில் நிறுத்தி இருக்கும் விரதங்கள் உடலுக்கும், உள்ளத்துக்கும், ஆன்மாவுக்கும் அருமருந்து. அந்த வகையில் புரட்டாசி சனிக்கிழமை விரத வழிபாடு மிகவும் பழமை வாய்ந்ததும், மகத்துவம் மிகுந்ததும் ஆகும்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த புரட்டாசி சனிக்கிழமை விரதத்தை கடைபிடித்து பகவான் ஸ்ரீமன் நாராயணனின் அருளினை பெற்றுய்வோமாக!

(இணைய தளங்களில் படித்து தொகுத்தது)

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


Comments

  1. அரிய விடயங்கள் அறியத்தந்தமைக்கு நன்றி நண்பரே,,

    ReplyDelete
  2. வணக்கம்
    ஐயா.

    புரட்டாதி சனிக்கிழமை விரதம் பற்றி விரிவான விளக்கம் கண்டு மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. அறியாத செய்திகள் அறிந்தேன்
    நன்றி நண்பரே

    ReplyDelete
  4. இத்தனை சிறப்புகள் உண்டென இன்றுதான் அறிந்தேன் சகோதரரே!

    பயன் தரும் நல்ல பதிவு!
    பகிர்விற்கு நன்றியுடன் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. புரட்டாசி மாதத்து பலன் கிடைத்து விட்டதுநண்பரே!
    தங்களது பதிவை படித்ததன் மூலம்,
    திருப்பாவை பாசுரம் பாடிய இன்பத்தை பெற்று விட்டோம்!
    ஆன்மிக தத்துவத்தை ஆணவம் அழிக்க வல்ல அமிர்தத்தை
    அள்ளித் தந்தமைக்கு நன்றி நண்பரே!
    தளீர் அவர்களே தளியல் செய்தாகி விட்தது!
    நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  6. நல்லதோர் தொகுப்பு. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி சுரேஷ்.

    ReplyDelete
  7. புரட்டாசி சனிக்கிழமையைப் பற்றி பல அரிய தகவல்களைத் தொகுத்து வழங்கியமைக்கு நன்றி. பல புதிய செய்திகளைத் தெரிந்துகொண்டோம்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2