தித்திக்கும் தமிழ்! பகுதி 22 மாதஞ்சி திரைகடலை வைதது ஏன்?


தித்திக்கும் தமிழ்! பகுதி 22.

இன்றைய சினிமாக்களில் பல பூக்கள் ஊர்கள், மாத வார இதழ்களை சேர்த்து ஓர் பாட்டு அமைத்து அதற்கேற்ப இசை சேர்த்து  பாடலை பிரபலம் செய்கின்றனர். இது இன்று நேற்றாய் நடக்கிறது என்று நாம் நினைத்துவிடக் கூடாது அல்லவா?


   தனிப்பாடல் திரட்டு என்ற நூலை வாசித்து வருகையில் ஓர் பாடல் கண்ணிலே பட்டது. அந்த பாடலில் தமிழ் மாதங்கள் பன்னிரண்டும் அணிவகுத்து நிற்கிறது.


   மாதங்களை கோர்த்துவிட்டால் கவிதையாகிவிடுமா? அதில் ஓர் அர்த்தம் இருக்கவேண்டாமா? மிகச்சிறப்பாக மாது ஒருவளின் பசலை நோயை அழகாக காட்சிப்படுத்தி அசத்துகின்றார் புலவர்.


  யார் அந்தப் புலவர்? அவர் திருவாரூர் சொக்கலிங்க கவிராயர் 
மிகத் திறமை வாய்ந்த புலவர் என்பது இந்த பாடலை படித்தபின் உங்களுக்கு புரியும்.

  
     மாதஞ்சித் திரைகடலைவை தனள்; நீ அன்பு
        வை, கா, சி னம்சிறியாளை யானிபெருக்கும்
    போது அம்பன் போராடினானையா வணியாய்ப்
    புரட்டாதி ன்கலம் வெறுத்தாள்; ஐப்பசிஇல் என்றே    
    சாதனைசெய் தேசினந்தாள்; கார்த்திகைக்கும் கொடைவேந்
    தா, சகிமார் கழியார்; கோதையும் மாசிலாமல்
    காதலுடன் சேர்வள்நல்ல திட்டம் உன்பங்கு னிப்பார்
    கந்தன் எனும் கலியாண சுந்தரமா  முகிலே!

  புலவர் கலியாண சுந்தரம் என்ற கொடைவள்ளலை புகழ்கின்றார். அப்படி புகழும்போதுதான் இந்த பன்னிரண்டு மாதங்களையும் பாட்டில் படிக்கின்றார்.


   பொருள் ஏதாவது புரிகிறதா?
 
  கந்தவேள் என்று முருகப்பெருமானுக்கு பெயர் அந்த முருகன் கேட்பவருக்கு கொடுப்பவன், அத்தகைய குணம் கொண்ட மேகம் போன்ற குணத்தையுடைய கல்யாண சுந்தர வள்ளலே!


    உன்னுடைய தலைவி ஆனவள் அஞ்சிப்போய் மன்மதனின் முரசாகிய திரைகடலை பழித்துரைத்தாள். இளமையுடைய அவள் மீது மன்மதனாகியவன் மலர் அம்புகளை தொடுத்து துன்பம் செய்தனன். அதனாலே அவள் பாம்பு போல புரண்டு படுத்து உண்ணும் கலத்தினை வெறுத்து பசி இல்லை என்று மிகுந்த சினத்துடன் கூறுகின்றாள். அவளது பிடிவாதத்தை தகர்க்க அவளிடத்து நீ அன்பு செலுத்து! உன் தோழியர் உன்னை ஒதுக்க மாட்டார்கள். உன் தலைவி குறைவில்லாத காதலுடன் உன்னை சேர்வாள். இதனால் உனக்கு நல்ல இன்பமே கிடைக்கும். இதை எண்ணிப் பார்ப்பாயாக! மாதின் பசலை போக்குவாயாக! என்கிறார் புலவர்.


பொதுவாக சங்க இலக்கியங்களில் வினை முற்றி சென்ற தலைவன் திரும்பாது தலைவி வருந்துவார். அதுபோல இந்த வள்ளலும் திரைகடலோடி திரவியம் ஈட்டச் சென்று வீடு திரும்பாத காரணத்தால் தலைவியானவர் வருந்தி கடலை பழித்துரைத்திருப்பாளோ என்ற ஓர் எண்ணம் எழுந்தது.


    எப்படியோ தலைவியின் ஏக்கம் ஓர் அருமையான தமிழ்ப்பாடலைத்  தந்துவிட்டது அல்லவா?



மீண்டும் ஓர் நல்ல பாடலுடன் அடுத்த பகுதியில் சந்திக்கிறேன்! உங்கள் கருத்துக்களை பின்னூட்டத்தில் நிரப்பி ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. படிக்கப் படிக்க இனிக்கிறது நண்பரே
    நன்றி

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2