மன்னனின் கருணை! பாப்பா மலர்!

மன்னனின் கருணை! பாப்பா மலர்!


முன்னொரு காலத்திலே அமராபுரி என்ற நாட்டை மகாரதன் என்ற மன்னன் ஆண்டுவந்தான். நீதி நெறி தவறாது குடிமக்களின் கஷ்டம் அறிந்து சிறப்பாக ஆண்டுவந்த அவன் நாட்டிலே மாதம் மும்மாரி பொழிந்து நன்கு விளைந்து செழிப்பாக இருந்தது.

    மக்களும் மன்னனுக்கு செலுத்த வேண்டிய வரிகளை நிலுவையின்றி செலுத்தினர். மன்னனும் மக்களுக்கு வேண்டிய உதவிகளை செய்துவந்தான். காட்சிக்கு எளியவனாக விளங்கிய அவனிடம் கருணை உள்ளம் பெருகியது. பல நாடுகளில் இருந்து புலவர்களும் இன்னும் பலரும் அவரை புகழ்ந்து பாடி பரிசில்கள் பெற்று மகிழ்ந்தனர். மன்னனுடைய அமைச்சர்களும் நீதிநெறியோடு மன்னனுக்கு கட்டுப்பட்டு மக்கள் குறை அறிந்து நிவர்த்தி செய்தனர்.

   இத்தகைய செழிப்பான நாட்டில் மன்னன் மகாரதன் ஒருநாள் தன்னுடைய அரண்மனைத் தோட்டத்தில் தன் மனைவி மக்களுடன் அமர்ந்து பொழுது போக்கிக் கொண்டிருந்தான். அந்த தோட்டத்தில் உயர்ந்து செழித்து வளர்ந்திருந்த மாமரங்களில் பூ பூத்து காய்த்திருந்தது. அந்த தோட்டத்தின் மதிலுக்கு வெளியே வறுமையால் வாடிய வழிப்போக்கன் ஒருவன் சென்று கொண்டிருந்தான்.

    கொடிது கொடிது வறுமை கொடியது என்று அவ்வையார் சொல்லியிருக்கிறார் அல்லவா? வறுமையின் கொடுமையால் வாடிய அவன் நீண்ட நாட்களாக உணவின்றி நீண்ட தொலைவில் இருந்து நடந்து வந்த களைப்பில் இருந்தான். அவனுடைய கண்களில் செழித்து வளர்ந்த மாமரங்களும் அதில் காய்த்திருந்த மாங்காய்களும் தென்பட்டன. பசியால் தவித்த அவனுக்கு அவை அமிர்தமாய் தோன்றியது. அது யாருடையது? எவருடையது? என்றெல்லாம் யோசிக்காமல் கீழே கிடந்த கற்கள் சிலதை எடுத்து மரங்களை நோக்கி விட்டெறிந்தான்.

    பசியின் கொடுமை அவனை இவ்வாறு செய்யத் தூண்டியது. மாமரத்திற்கும் அவன் பசி தெரிந்திருக்கும் போல ஒன்றிரண்டு மாங்காய்கள் கீழே தெறித்து விழுந்தன. ஆனால் அவனது துரதிருஷ்டம் அவன் வீசிய கல் ஒன்று மன்னன் மகாரதன் நெற்றியினை தாக்கியது. உடனே ரத்தம் பீறிட்டது.  ‘ஆ’ என்று வலியால் அலறிய மன்னனை  அவன் மனைவி தன் சீலையை கிழித்து ரத்தம் வராமல் கட்டுப்போட்டாள்.
  மன்னன் வலியால் துடிக்க பதறிய வீரர்கள் நாலாபுறமும் ஓடி மதிலின் வெளியே நின்று கொண்டிருந்த வழிப்போக்கனை கையும் களவுமாக பிடித்துவந்தனர்.

   அது மன்னரின் தோட்டம் என்றும், அதில் திருடியது தவறு, அதிலும் தான் வீசிய கல் மன்னரை தாக்கிவிட்டது என்று அறிந்த வழிப்போக்கன் தன் வாழ்வு இன்றோடு முடிந்தது என்று முடிவு செய்துவிட்டான்.

      நடுங்கியபடியே மன்னர் முன் நின்ற அவனை நோக்கி மன்னர் கேட்டார். என் மீது கல்லெறிந்தாயா?

      மன்னா! பசியின் கொடுமையால் மாமரத்தின் மீது கல்லெறிந்து மாங்காய் பறிக்க முயற்சித்தேன். அதில் ஒன்று தவறி தங்கள் மீது பட்டுவிட்டது! நடுக்கமுடன் சொன்னான் வழிப்போக்கன்.

    மன்னா! உங்களின் தோட்டத்தில் திருட முற்பட்டது மட்டுமில்லாமல் தங்களையும் காயப்படுத்தி உள்ளான். இவனுக்கு தக்க தண்டணை விதிக்க வேண்டும்.

     என்ன தண்டணை அளிக்கலாம் மந்திரியாரே?

மாமன்னரே அதை நீங்களே முடிவு செய்யுங்கள்!

    மந்திரியாரே! இந்த மரங்களுக்கு எத்தனை அறிவு?

   ஓர் அறிவு!

  மனிதனான அதிலும் மன்னரான எனக்கு எத்தனை அறிவு?

   ஆறறிவு மன்னா!

ஓர் அறிவு கொண்ட இந்த மரங்களே கல்லெறிந்தவனுக்கு கனிகளை பரிசாகத் தருகின்றது என்றால் ஆறறிவு படைத்த நான் தண்டணை தரலாமா?

வறுமை கொடியது! அதனால் இவன் பழம் பறிக்க கல்லெறிந்தான். அது தவறுதலாக என் மீது பட்டுவிட்டது. அதற்காக இவனுக்கு தண்டணை தரலாமா? முதலில் இவரின் பசியினை போக்குங்கள்! இவரின் வறுமையைப் போக்க நமது அரண்மணையில் இவருக்கு ஏற்ற வேலையினை வழங்குங்கள்! அல்லது உழைத்து பிழைக்க சிறிது நிலம் தானமாக வழங்குங்கள்! என்றார் மகாரதன்.

   மன்னரின் கருணையை எண்ணி மகிழ்ந்து காலில் விழுந்து வணங்கினான் வழிப்போக்கன்.

(வாரியார் சொற்பொழிவில் சொன்ன கதையை என் பாணியில் தந்துள்ளேன்)


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. நல்ல கதை! நல்ல நீதி! நல்ல மன்னன்! எல்லாம் முன்னொருகாலத்தில்தான்! ஆனால் இன்று .??????நன்றி நண்பரே!

    ReplyDelete
  2. ஓர் அறிவு கொண்ட இந்த மரங்களே கல்லெறிந்தவனுக்கு கனிகளை பரிசாகத் தருகின்றது என்றால் ஆறறிவு படைத்த நான் தண்டணை தரலாமா?

    அருமை... அருமையான கதை....

    ReplyDelete

  3. "ஓர் அறிவு கொண்ட இந்த மரங்களே கல்லெறிந்தவனுக்கு கனிகளை பரிசாகத் தருகின்றது என்றால் ஆறறிவு படைத்த நான் தண்டணை தரலாமா?" என நன்றே சிந்திக்க வைக்கிறியள்
    தொடருங்கள்
    http://www.ypvnpubs.com/

    ReplyDelete
  4. அருமையான நன்னெறிக் கதை சுரேஷ் சகோ.

    மன்னன் சிறந்துவிட்டான். :)

    ReplyDelete
  5. அருமையான கதை. இன்றைக்கு கல்லெறிந்தால் அவனுக்கு இப்படி நல்லது நடந்திருக்காது. மாறாக அவனை ஒரு வழி செய்திருப்பார்கள்......

    ReplyDelete
  6. மிக மிக அருமையான கதை! ம்ம் வாரியார் கதைகள் என்றால் அப்படித்தானே இருக்கும்!!பகிர்வுக்கு மிக்க நன்றி சுரேஷ்!

    ReplyDelete
  7. உணர்ச்சிகளுக்கு அடிமை ஆகாமல், காரணங்களை யோசிக்கும் ஆட்சியாளர்கள் இருந்த காலம் அது!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2