யார் பார்க்க போகிறார்கள்? பாப்பா மலர்!
யார் பார்க்க போகிறார்கள்? பாப்பா மலர்!
பள்ளி மணி “டிங்க்
டிங்க்” என ஒலித்ததும் மாணவர்கள் இரைச்சலுடன் கூண்டை விட்டு வெளியேறும் பறவைகளாய் பறந்தனர்.
சைக்கிளை தள்ளிக் கொண்டு வந்த மணி உடன் வந்த நண்பன் பிரகாஷை கேரியரில் ஏற்றிக் கொண்டு
சைக்கிளை மிதிக்க ஆரம்பித்தான்.
அவர்கள் இருவரும் பக்கத்து கிராமத்தை சேர்ந்த
மாணவர்கள். சுமார் நான்கு கிலோமீட்டர் கடந்துவந்து இந்த பள்ளியில் படிக்கிறார்கள்.
பஸ் வசதியில்லாத கிராமம். அதனால் மிதிவண்டிப் பயணம். வழியில் மாந்தோப்புக்களும், கொய்யாத்
தோப்புக்களும் வாழைத்தோப்புக்களும் ஏராளம்.
குறுக்கிட்ட ஓர் தோப்பின் ஓரம் மிதிவண்டியை நிறுத்திய
மணி, “டேய்! யாராவது வராங்களா பாரு! உள்ளே
போய் வேட்டையை முடிச்சிடறேன்!” என்றான்.
பிரகாஷ் தலையில் அடித்துக் கொண்டான். “ மணி உனக்கென்னடா
குறை! தினமும் உங்கப்பா நீ கேக்கற காச கொடுக்கிறாரு! அப்புறமும் ஏண்டா இந்த பொழப்பு?”
“ டேய்! இப்படி திருடி சாப்பிடறதிலே இருக்கிற
த்ரில்லே தனிடா! அதுவும் இல்லாம இந்த நேரத்துக்கு தோப்புல யாரும் இருக்க மாட்டேங்கிறாங்க!
யாரும் பாக்காதப்ப கொஞ்சம் நாம பறிச்சுட்டா என்ன? அதுதான் தோப்பு நிறைய காய்ச்சு கிடக்குதே!”
“யாரும்
பார்க்கலைங்கிறதுக்காக திருடி தின்னறது எல்லாம் தப்புடா! நமக்கும் மேல கடவுள்னு ஒருத்தர்
இருக்கார். அவரு நம்ம தப்புங்களை கண்கொட்டாம பாத்து எழுதி வச்சிருப்பாரு! எங்க பாட்டி
சொன்னாங்க! தெரியாம செஞ்சா அதுக்கு மன்னிப்பு உண்டு. நீ தெரிஞ்சே தப்பு செய்யறே! அதுக்கு
நான் உடந்தையா இருக்க மாட்டேன்! வா போகலாம்!”
“ போடா! பயந்தாங்கொள்ளிப் பயலே! இப்ப நான் ரெண்டு
கொய்யா பழம் பறிக்கிறதை வீடியோ காமெரா எல்லாம் வச்சு கடவுள் பாத்துட்டிருக்காரா? போடா
போ! நாலு கிலோ மீட்டர் நடந்து போ! நான் கொய்யா பழம் தின்னுட்டு நிதானமா வாரேன்!”
“ சொன்னா
நீ திருந்தவா போறே! நான் கிளம்பறேன்! நீ உன் இஷ்டம் போல வா!” சொன்ன பிரகாஷ் கிளம்பி
விட்டான்.
மணி தோப்புக்குள் புகுந்து சில கொய்யா பழங்களை
பறித்து கால்சட்டையில் திணித்து கொண்டான். வேக வேகமாக வந்து மிதிவண்டியை மிதிக்க ஆரம்பித்தான்
அவன் எப்பவும் இப்படித்தான். யாரும் இல்லை என்றால் கை கொஞ்சம் நீளும்! சில கடைகளில்
கூட சில சமயம் கைவைத்து ஒன்றிரண்டு தின்பண்டங்களை எடுத்து உண்டிருக்கிறான். கேட்டால்
திறந்து போட்டு போனது கடைக்காரன் தப்பு என்பான். யாரும் பார்க்கவில்லை என்றால் அவனுக்கு
குஷிதான்.
பிரகாஷ் பல முறை சொல்லியும் திருந்தாத மணிக்கு
அன்று கொஞ்சம் பயமாக இருந்தது. கடவுள் பார்ப்பாராமே? எப்படி? இதுவரைக்கும் எத்தனை கொய்யா,
மாம்பழம் திருடியிருப்போம்? யாரும் பார்க்கவில்லை என்று தானே நினைத்துக் கொண்டிருந்தோம்
ஒரு வேளை பிரகாஷ் சொன்னது போல கடவுள் கண்காணித்து வைத்திருப்பாரோ? அன்று இரவு இப்படி
சில சிந்தனைகளுடன் தூங்கிப் போனான் மணி.
அதிகாலைப்பொழுதில் ஓர் பெரிய அழகான ரோஜா தோட்டம் வாசமுடன் மலர்ந்து
மணம் வீசிக் கொண்டிருக்க சைக்கிளை நிறுத்திய மணி, ஆஹா! சூப்பர் ரோஸ்! என்னா மணம் வீசூது! பார்க்கவே களை கட்டுதே! என்று
அதனழகை ரசித்தவன் சுற்றும் முற்றும் பார்த்தான்.
கண்ணுக்கெட்டிய தூரம் வரை யாரும் இல்லை! ஓக்கே! ஒரு ரெண்டு ரோஸ் பறிச்சிட வேண்டியதுதான்!
என்று மள மளவென்று பறிக்கவும் ஓர் கரம் அவனை தடுத்து நிறுத்தியது.
“ யார் தம்பி நீ! எதுக்கு பூவெல்லாம் பறிக்கிற?”
கையில் தடியோடு முறுக்கு மீசையோடு வாட்ட சாட்டமாய் அவரை பார்த்ததும் மணிக்கு கொஞ்சம்
உதறல்தான்.
” பள்ளிக் கூடத்துல காந்தி ஜெயந்தி கொண்டாடறாங்க!
அதான் காந்தி படத்துக்கு வைக்க ஒரு ரெண்டு ரோஸ் பறிச்சிக்கிட்டேன் அங்கிள்”
“ தம்பி காந்தி பேரை சொல்லி புளுகிறியே! இது உனக்கு
நியாயமா இருக்கா இன்னிக்கு தேதி மூணு நேத்து இல்லே காந்தி ஜெயந்தி! அதுவும் நேத்து
ஸ்கூல் லீவு! நான் படிக்காதவன்னு நினைச்சு ஏமாத்தறியா?”
“ இல்.. இல்ல..”
“ என்ன இல்ல? நீதான் பக்கத்து தோட்டத்துல மாங்கா
பறிச்சிட்டு போறது! பல தடவை நான் பார்த்திருக்கேன்!”
“ இல்லே அங்கிள்! ஒரே முறைதான் ஆசையா இருந்துச்சு! அதான்… பறிச்சு அதுவும் ஒண்ணே ஒண்ணு…
பறிச்சு… சாப்பிட்டேன்..”
“ பாத்தியா! திரும்பவும் பொய் பேசறியே! நான் தான்
தினமும் நீ செய்யறதை எல்லாம் பாத்துக்கிட்டே இருக்கேனே!’
“ அ… அப்ப.. நீ.. நீங்க கடவுளா அங்கிள்!”
“ அப்படித்தான் வச்சிக்கயேன்!”
“ நான் பண்ண தப்பெல்லாம் உங்க கிட்ட பதிவாகி இருக்குமா?”
நீ மட்டுமல்ல! யார் தப்பு பண்ணாலும் என் கண்ணுல மண்ணை
தூவ முடியாது! எல்லாம் இதுலே பதிவாகும்.
அவர் ஓர் லேப் டாப் போன்ற வஸ்துவை காட்ட அதில் தேதி
வாரியாக மணி செய்த தப்புக்கள் வீடியோவாக பதிவாகி இருந்தது.
“ அய்யோ அங்கிள்! நான் தெரியாம தப்பு பண்ணிட்டேன்!
இனிமே செய்ய மாட்டேன்! என்னை விட்டுருங்க!”
அதெப்படி! உன் ப்ரெண்ட் எவ்வளோவு எடுத்து சொன்னாலும்
திருடிறதுல ஒரு திரில் இருக்குண்ணு சொல்லி திருடினே இல்லே!”
சாரி! அங்கிள்! இனிமே சொல்ல மாட்டேன்! எனக்கு தண்டணை
கொடுக்காதீங்க அங்கிள்!
உனக்கு எப்படி திருடுறது திரில்லோ அது மாதிரி
எனக்கு இப்படி தப்பு பண்றவங்களை பிடிச்சு தண்டணை கொடுக்கிறதுல ஓர் திரில் இருக்கு தம்பி!”
“ வே… வேணாம் அங்கிள்!”
“நோ நோ! இப்படி அழக்கூடாது! உனக்கு என்ன தண்டணைன்னு
நீ தெரிஞ்சிக்கணும் இல்லையா?
அதோ அந்த கொப்பறைக்குள்ளே…!
அய்யோ கொதிக்கிற எண்ணெயிலே போட போறீங்களா?
இல்ல! அந்த கொப்பறைக்குள்ள நீ செஞ்ச ஓவ்வொரு தப்பும்
ஒரு புழுவா வளர்ந்து இருக்கு! அப்படியே எட்டிப் பாரேன்!
மணி எட்டிப் பார்க்க! ஆயிரக்கணக்கான புழுக்கள்
நெளிய மணியால் அதை சகிக்கவே முடியவில்லை!
நீ பண்ண தப்புக்களே உன்னை சாப்பிட போவுது! உன்னை
இந்த கொப்பறைக்குள்ளே தள்ள போறேன்!
வேண்டாம்! வேண்டாம்! கட்டிலில் இருந்து புரண்டு
விழுந்தான் மணி! அவன் உடலெல்லாம் வியர்த்து போய் இருக்க அவன் அலறல் கேட்டு பக்கத்தில் படுத்திருந்தவர்கள்
எழுந்து வர
“ டேய் மணி என்னடா ஆச்சு?”
அப்பா கேட்க, எல்லாம் கனவா? ஆனால் அது ஒரு பாடம்
என்று புரிந்தவனாய், கெட்ட கனவுப்பா! ஆனா எனக்கு புத்தி வந்திருச்சு! என்று சொன்னவனை
புரியாமல் பார்த்தனர் பெற்றோர்.
டிஸ்கி} மிக நீண்ட நாட்களுக்கு பிறகு ஓர் சிறுவர்கதை முயற்சி!
தொடர்ந்து செவிவழிக்கதை பகிர்ந்து கொண்டிருப்பது ஓர் அலுப்பினை ஏற்படுத்தியதால் இந்த
முயற்சி! உங்கள் கருத்துக்களை அறிய ஆவலாக உள்ளேன்! நன்றி!
முதல் நாள் ராத்திரி பையன் அந்நியன் படம் பார்த்த மாதிரி இருக்கே :)
ReplyDeleteஅன்னியன் எஃபெக்ட் வருதேன்னு கொஞ்சம் மாத்தலாம்னு யோசிச்சாலும் ஒண்ணும் சட்டுன்னு தோணலை! ஹிஹி!
Deleteசிறுவர்க்கான சிறப்பான கதை
ReplyDeleteநன்றி ஐயா!
Deleteசிறுவர்களுக்கு ஏற்ற அருமையான கதை.
ReplyDeleteசிறுவர்களுக்கு ஏற்ற அருமையான கதை.
ReplyDeleteஅருமையான கதை நண்பரே
ReplyDeleteநன்றி
சிறுவனானேன்.
ReplyDeleteசிறப்பான சிறுவர் சிறுகதை!
Deleteசிறப்பு வாழ்த்துகள் நண்பரே!
நட்புடன்,
புதுவை வேலு
சிறுவர் கதை சொல்ல தங்களுக்கு நிகர் தங்களே நண்பரே..
ReplyDeleteசிறுவர்களுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் எனக் கூறுமளவு உள்ளது கதை. அருமை. நன்றி.
ReplyDeleteகுழந்தைகளுக்கான இலக்கியம் தமிழில் வெற்றிடமாகவே உள்ளது. வெகு அரிதாகத்தான் குழந்தைகளுக்காக எழுதப்படுகிறது. அந்த அரிதானவர்களில் தாங்களும் ஒருவர் என்பது மகிழ்ச்சி தருகிறது. தொடர்ந்து எழுதுங்கள்!
ReplyDelete