ராஜாஜி என்ற ராஜரிஷி! தி இந்து கட்டுரை!



பழைய சேலம் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த ஓசூருக்கு அருகில் உள்ள தொரப்பள்ளி கிராமத்தில் ஐந்து ரூபாய் மாத ஊதியத்தில் குடும்பம் நடத்திய சக்கரவர்த்தி ஐயங்காருக்கு மகனாகப் பிறந்த ராஜாஜி, சுதந்திர இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக உயர்ந்தார். சேலத்தில் ஒரு வழக்குக்கு 1,000 ரூபாய் ஊதியம் பெறும் புகழ்பெற்ற வழக்கறிஞராக வலம்வந்த ராஜாஜி, காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டு வழக்கறிஞர் தொழிலிலிருந்து விடுபட்டார்: “ஒரு விலைமாது தன் உடலைப் பணத்துக்கு விற்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. அதை என்னால் மன்னிக்கவும் முடியும். ஆனால், தன் அறிவை விலைபேசும் ஒரு வழக்கறிஞரை என்னால் மன்னிக்க முடியாது. இத்தொழிலை விட்டு விலகும் நாளை நான் ஆவலுடன் எதிர்பார்த்தேன்என்றார்.

தொண்டூழியம்                                        
சின்னஞ்சிறு வயதிலேயே ஐந்து குழந்தைகளுக்குத் தாயான அலர்மேலு மங்கம்மாள் ராஜாஜியின் மடியில் மரணித்த போது, ராஜாஜிக்கு 37 வயது. மனைவியிடம் அளவற்ற அன்பைப் பொழிந்தவர் மறுமணம் செய்துகொள்ளாமல் தேசத்தொண்டில் முற்றாக மூழ்கினார். சேலம் நகரசபைத் தலைவராக 1917-ல் பொறுப்பேற்ற ராஜாஜி, தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஊழியரை அக்கிரகாரக் குழாய்களைக் கையாளும் பணியில் அமர்த்திச் சனாதனிகளின் எதிர்ப்பைப் பெற்றார். சகஜானந்தா என்ற தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த துறவிக்கு அளிக்கப்பட்ட விருந்தில் பங்கேற்றதால், அவரது குடும்பம்சாதி பிரஷ்டம்செய்யப்பட்டது.

நகரசபைத் தலைவராக இருந்த ராஜாஜி, ஊதியம் பெறாமல் ஒவ்வொரு நாளும் ஆறு மணி நேரம் நகரசபை அலுவலகத்தில் சமூகக் கடனாற்றினார். சென்னை மாகாணத்தின் பிரதமராக 1937-ல் பொறுப்பேற்றபோது அரசு நிர்ணயித்த ஆண்டு ஊதியம் 56 ஆயிரம் ரூபாயை ஏற்க மறுத்துவீட்டு வாடகை, போக்குவரத்துச் செலவு உட்பட ஒன்பதாயிரம் ரூபாயை மட்டுமே பெறுவதற்கு இசைந்த பெருமகன் ராஜாஜி.

சுதந்திர இந்தியாவில் தமிழகத்தின் முதல்வராக இருந்த ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் விடுதலை வேள்வியில் ஈடுபட்ட தியாகிகளுக்கு அரசு நிலத்தை இலவசமாக வழங்கியபோது, அதைக் கடுமையாக எதிர்த்த ராஜாஜி தனக்கு இலவச நிலம் வழங்கப்படலாகாது என்று மறுதலித்தார்.

முன்னோடி ஆசிரமம்

சென்னைக்குஇந்துகஸ்தூரிரங்க ஐயங்காரின் அழைப்பை ஏற்று வந்த காந்தி, ராஜாஜி வீட்டில் தங்கியிருந்தபோதுதான்ரௌலட்சட்டத்தை எதிர்த்துஹர்த்தால்நடத்த வேண்டும் என்ற எண்ணம் கண்ணயர்ந்த நிலையில் ஒரு கனவுபோல் உதித்தது. காந்தியின்மனச்சான்றுக் காவலர்ராஜாஜி, காந்தியத்தைத் தமிழ் மண்ணில் வளர்த்தெடுக்க சேலத்துக்கு அருகில் புதுப்பாளையம் என்ற எந்த வசதியுமற்ற கிராமத்தில் ஆசிரமம் அமைத்து, ஓலைக்கூரை வேய்ந்த குடிசையில் வாழ்ந்தபடி அரும்பணி ஆற்றினார். பல்வேறு சாதிகளைச் சேர்ந்த 17 பேர் கொண்ட அந்த ஆசிரமம் தீண்டாமை ஒழிப்பு, மதுவிலக்கு, கதர் உற்பத்தி ஆகியவற்றில் ஈடுபட்டது.

மதுவிலக்கே உயிர்க் கொள்கை

மதுவிலக்கு ஒன்றுதான் மூதறிஞர் ராஜாஜியின் உயிர்க் கொள்கையாக விளங்கியது. வெள்ளையர் ஆட்சியில் சென்னை மாகாணப் பிரதமராகப் பொறுப்பேற்று மூன்று மாதங்கள் முடிவதற்கு முன்பே, தன்னுடைய சொந்த மாவட்டமான சேலத்தில் மதுவிலக்கை நாட்டிலேயே முதன்முறையாக ராஜாஜி நடைமுறைப்படுத்தினார். நிலவரியும் கள்ளுக்கடை ஏலமும்தான் அன்று அரசின் முக்கிய வருவாய். மதுவிலக்கினால் ஏற்பட்ட இழப்பை ஈடுகட்ட, ஆசியாவிலேயே முதன்முதலாக 1939-ல் ராஜாஜி விற்பனை வரியை அறிமுகப்படுத்தினார். இன்று எல்லா மாநில அரசுகளுக்கும் கொழுத்த வருவாயை அவர் கண்டெடுத்த விற்பனை வரியே அள்ளிக் குவிக்கிறது. அதே நேரத்தில், மதுவின் விற்பனையும் கொடிகட்டிப் பறப்பதுதான் கொடுமையிலும் கொடுமை.

சூதாடிகளா நாடாளுநர்கள்?

அண்ணாவின் தி.மு.. 1967-ல் ஆட்சி பீடத்தில் அமர்வதற்கு ராஜாஜியின் பங்களிப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. அவரது கடுமையான காங்கிரஸ் எதிர்ப்பை அண்ணா அரசியல் சாதுரியத்துடன் பயன்படுத்திக்கொண்டார். 1967-ல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் எட்டு மாநிலங்களில் காங்கிரஸ் தோல்வியைத் தழுவியதும் தன்னுடைய சுதந்திரா கட்சி ஒடிசாவில் அதிகாரத்தைக் கைப்பற்றியதும் தந்த மகிழ்ச்சியைவிட, தமிழகத்தில் காங்கிரஸ் மண்ணைக் கவ்விய காட்சியே ராஜாஜிக்கு அளவற்ற மகிழ்ச்சியைத் தந்தது. ஆனால், அண்ணாவின் அரசு லாட்டரி விற்பனையில் ஈடுபட்டபோது அவருடைய இதயம் வலித்தது.

அரசு லாட்டரி விற்பனையை நடத்துவது அரசியலமைப்புச் சட்டத்துக்கு முரணானது. இது ஏழை மக்களிடமிருந்து பணத்தைத் திருடுவதற்கு ஒப்பானது. ஒரு மாநில அரசு வருவாயைக் கருதி லாட்டரியை நடத்துமானால், சூதாட்ட நிலையங்களை நடத்துவோரைத் தண்டிக்கும் தார்மீக உரிமை அதற்கு எப்படி இருக்க முடியும்?” என்று வேதனையை வெளிப்படுத்தினார் ராஜாஜி. கலைஞர் கருணாநிதி 1972-ல் மதுக்கடைகளைத் திறந்தபோது, சொல்லில் அடங்காத சோகத்தில் ஆழ்ந்தார் அந்த மூதறிஞர்.

ஆந்திரமும் தமிழகமும் ஒன்றுபட்டிருந்த சென்னை மாகாணத்தின் பிரதமர், வங்கத்தின் ஆளுநர், இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரல், மத்திய அரசின் உள்துறை அமைச்சர், மீண்டும் தமிழக முதல்வர், காந்தி-நேரு-படேல்-ஆசாத்-ராஜேந்திர பிரசாத் ஆகியோருக்கு இணையாக நாட்டு மக்களால் போற்றப்பட்டவர். 93 வயதான முதுபெரும் கிழவர் ராஜாஜி, கொட்டும் மழையில் தன் பெருமை பாராது கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டுக் கதவைத் தட்டினார். அவருடைய கரங்களைப் பற்றியபடிதமிழகத்தில் மதுவிலக்கு தொடர வேண்டும்என்று கெஞ்சினார். “நம்பிக்கையுடன் அல்ல, மனசஞ்சலத்துடன் வீடு திரும்பினேன்என்று மொழிந்த ராஜாஜி, அன்றுபோல் என்றும் தன் வாழ்வில் வருத்தமுற்று வேதனைப்பட்டதில்லை என்றார், அவருக்கு இறுதிவரை தொண்டூழியம் செய்தகல்கிசதாசிவம்.
நினைத்ததைச் சொன்னவர்

என் வாழ்க்கை சுத்தமானது. வாழ்நாள் முழுவதும் உண்மையாக நடந்துகொண்டி ருக்கிறேன். எனக்கு எது சத்தியம், நியாயம் என்று தோன்றியதோ, அதை மட்டுமே பேசியிருக்கிறேன்என்று வாக்குமூலம் வழங்கிய ராஜாஜி, தான் நெஞ்சில் வைத்துப் போற்றிய மகாத்மா காந்தியிடம் மனம் வேறுபட்டபோது, எந்தத் தயக்கமுமின்றி அவரை எதிர்த்தார். காந்தியின் கண் முன்னரே காங்கிரஸிலிருந்து விலகினார். தன்னை இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராக்க முயன்றவர், கவர்னர் ஜெனரலாகப் பதவியேற்க வற்புறுத்தியவர், உள்துறை அமைச்சராக்கி மகிழ்ந்தவர், பதவி விலக விரும்பியபோதெல்லாம் ஏற்க மறுத்தவர் நேரு என்பதை நெஞ்சில் நிறுத்தி, நன்றி செலுத்திய ராஜாஜி, நேருவின் நிர்வாகத் தவறுகளை விமர்சிக்காமல் விட்டுவிடவில்லை.
ஜமீன்தாரி ஒழிப்புச் சட்டம், தாழ்த்தப் பட்டோர் ஆலயப் பிரவேசச் சட்டம், ஊழலற்ற தூய்மையான நிர்வாகம், ஆட்சிக்கும் கட்சிக்கும் இடையில் கட்டிக் காத்தஇலக்குவன் கோடுபோன்றவை ராஜாஜிக்குப் பெருமை சேர்ப்பவை. மேலவை உறுப்பினராகி முதல்வரானது, பெரும்பான்மை இல்லாத காங்கிரஸ் 1952-ல் தமிழகத்தில் ஆட்சியமைக்க மாணிக்க வேலருக்கு மந்திரி பதவியளித்து ஆறு எம்.எல்.-க்கள் கொண்ட அவரதுகாமன்வீல்கட்சியை காங்கிரஸில் இணைத்தது, குலக் கல்வியை அறிமுகப்படுத்த முயன்றது இன்றளவும் விமர்சனத்துக்கு உரியவை.
அன்புக்குரிய எதிரிகள்
இன்றைய அரசியல் தலைவர்கள் ராஜாஜியிடம் கற்க வேண்டிய மிக முக்கியமான பண்பு நலன் ஒன்று உண்டு. ஒருவருடைய செயல்முறைகளை மிகக் கடுமையாக விமர்சித்தபோதும், அவரிடம் பகைமை பாராட்டும் தவறான போக்கு ராஜாஜியிடம் இறுதிவரை இருந்ததில்லை. தன்னை எல்லை மீறி விமர்சனம் செய்த பெரியாரை அவர் எப்போதும்அன்பார்ந்த எதிரியாகவே பாவித்தார்.
பர்மிட்-லைசென்ஸ்-கோட்டா ஆட்சியின் மூலம் காங்கிரஸ் ஊழலை வளர்த்ததை மிகத் தெளிவாக வெளிப்படுத்திய ராஜாஜி, இந்திரா காந்தியின் யதேச்சதிகாரப் போக்கை விமர்சித்தபோது, “இந்திரா சில மாயத் தோற்றங்களால் ஈர்க்கப்படுகிறார். அவற்றிலிருந்து அவர் தம்மை விடுவித்துக் கொள்ள வேண்டும். மற்றவர்களைவிடத் தாம்தான் சாமர்த்தியசாலி என்று எண்ணு கிறார். தன்னம்பிக்கையை நான் தவறென்று சொல்லவில்லை. ஆனால், அடக்கம் என்ற உன்னதமான குணத்தைப் பெற்றிருப்பதே நல்லது.

தாம் ஒருத்தி மட்டுமே நவீன சிந்தனை உடையவள் என்று அவர் எண்ணக் கூடாது. இந்தியாவில் உள்ள ஏழைகளைத் தாம் நேசிப்பதாக இந்திரா அடிக்கடி கூறுகிறார். ஏதோ நாம் ஒருவர்தாம் இத்தகைய உணர்வுகளைக் கொண்டிருப்பது போலவும் வேறு யாருக்குமே ஏழைகளிடம் அக்கறை இல்லை என்பது போன்றும் அவர் பேசுவது ஒருவகை அகம்பாவமே” (‘சுயராஜ்யா’ 18.10.1969) என்று குறிப்பிட்டார். இன்றும் இந்த வாசகங்கள் யாருக்கோ பொருந்துவதுபோன்று தோன்றவில்லையா? அறிந்தவர் அறிவாராக!
- தமிழருவி மணியன், காந்தியச் சிந்தனையாளர், எழுத்தாளர்.


டிஸ்கி}  தமிழ் இந்துவில் படித்த இந்த கட்டுரை ராஜாஜி பற்றிய சில அறிந்திராத தகவல்களை அறிய உதவியது. இத்தகைய தலைவர்கள் இன்று இல்லாது போய்விட்டார்களே என்ற ஏக்கத்தையும் தந்தது. பொதுவாக தளிரில் இந்த மாதிரி பகிர்வுகளை பகிர்வதை நிறுத்தி இருந்தாலும் கட்டுரையின் சுவாரஸ்யம் பகிர வைக்க தோன்றியது.

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. ராஜாஜி போற்றப்பட வேண்டியவர்

    ReplyDelete
  2. அருமையான கட்டுரை.....

    பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!