இரச கிணறும்! விக்கிரமாதித்தன் பெருந்தன்மையும்! பாப்பா மலர்!

இரச கிணறும்! விக்கிரமாதித்தன் பெருந்தன்மையும்!


முந்தைய பகுதிகளை படிக்க



தான் வைத்த ஒவ்வொரு சோதனைகளிலும் ஆதித்தன் வெற்றிபெற்றுவிட்டதை எண்ணி வருந்திய மதுரேந்திரன் மதியூக மந்திரியிடம் மீண்டும் உபாயம் கேட்டான். மன்னா! ஆதித்தன் இத்தனை சோதனைகளையும் வென்றுவிட்டான் இனி சோதனை வைத்தாலும் நாம் ஜெயிப்போம் என்பது நிச்சயம் இல்லை! சீதைக்கு ஆசைப்பட்டு மோசம் போன இராவணன் போல நீங்களும் இரத்தின மாலைக்கு ஆசைப்பட்டு மோசம் போகாதீர்கள் என்று சொல்லிப்பார்த்தான் மந்திரி.
    ஆனால் அரசன் கேட்பதாய் இல்லை.  இது ஒன்றுதான் கடைசி உபாயம். இதில் ஆதித்தன் அழியாவிட்டால் அப்புறம் ஒன்றும் செய்ய முடியாது. ஆதித்த சேவகனை அழைத்து இரசக் கிணறு பார்க்க வேண்டும் என்று சொல்லி அவனையும் உடன் அழைத்துச் செல்லுங்கள். சட்டென்று உங்கள் கையில் உள்ள மோதிரத்தை கழற்றி கிணற்றில் போட்டுவிட்டு கூவி ஆதித்த சேவகனை அக்கிணற்றில் இறங்கி மோதிரத்தை எடுத்துவரச்சொல்லுங்கள். நீங்கள் திரும்பி பார்க்காமல் குதிரையில் வேகமாக வந்துவிடுங்கள். ஆதித்தன் இறங்கியவுடன் அந்த கிணறு மூடிக்கொள்ளும். அவன் இறந்து விடுவான் என்று சொன்னான் மந்திரி.
     மந்திரி சொன்ன படியே மதுரேந்திரனும் இரசக்கிணறு பார்க்க வேண்டும் என்று ஆதித்தனை அழைத்து சொன்னான். ஆதித்தனும் அரசே! என் இல்லம் வரை சென்று வந்துவிடுகிறேன். நீங்கள் தயாராக இருங்கள் என்று கூறிவிட்டு தன் இல்லத்திற்கு வந்து வேதாளத்தை அழைத்து விவரம் கூறினான். அது மன்னனின் சூழ்ச்சியை கூறியது. விக்கிரமாதித்தன் உடனே தவளையான சலந்திரனை அழைத்து நீ  இரசக் கிணற்றில் போய் ஒளிந்திரு! அரசன் மோதிரத்தை வீசியதும் பிடித்து என்னிடம் கொடுத்துவிடு! என்றான். சலந்திரனும் ஒத்துக் கொண்டான்.
   விக்கிரமாதித்தன் அரசனுடன் குதிரையில் சென்றான். கிணற்றருகில் சென்று பார்வையிடும்போது மதுரேந்திரன் மோதிரத்தை கிணற்றுள் போட்டுவிட்டு அடடே! மோதிரம் கிணற்றில் விழுந்துவிட்டதே! ஆதித்தா! எடுத்துவா! என்று சொல்லிவிட்டு திரும்பி பாராமல் பறந்தான்.
   கிணற்றினுள் இருந்த சலந்திரன் மோதிரம் மூழ்காவண்ணம் பிடித்து விக்கிரமனிடம் சேர்ப்பித்தது. அவனும் அரசனுடன் திரும்பிவிட்டான். மதுரேந்திரன்! என்ன அதற்குள் மோதிரம் எடுத்துவிட்டாயா? எங்கே? என்றான். இதோ! என்று மன்னனின் மோதிரத்தை அவனிடம் கொடுத்தான் விக்கிரமன். மன்னன் முகத்தில் ஈயாடவில்லை! திடுக்கிட்டுப் போனான். எல்லா சோதனையிலும் ஜெயிக்கும் இவன் திறமையானவனாக இருக்க வேண்டும் என்று வியந்து நின்றான். பின்னர் அரசவைக்கு சென்றனர் மதுரேந்திரனும் விக்கிரமனும். இரசக்கிணற்றில் விக்கிரமன் எப்படி மோதிரம் எடுத்தான் என்று கண்டுபிடிக்க முடியாமல் யோசனையில் ஆழ்ந்திருந்தான் மதுரேந்திரன்.
    அப்போது ஒரு வயதான வேதியர் அரசவைக்குள் வந்து ஆதித்தனை அழைத்தார். ஆதித்தனும் அனுமதி பெற்று அவருடன் சென்றான். மதுரேந்திரனும் அவனது மந்திரியும் விக்கிரமனை பின் தொடர்ந்தனர். ஊருக்கு வெளியே இருந்த ஒரு மண்டபத்திற்கு வந்தனர் ஆதித்தனும் வேதியரும்.

   அங்கு தனது சுய உருவம் அடைந்த சனிபகவான், விக்கிரமாதித்தா! உன் வீர தீர பராக்கிரமங்களை உணராது உனது அருமை தெரியாது உன்னை கஷ்டப்படுத்திய மதுரேந்திரனை பிடித்து ஆட்டிவைக்கிறேன்! என்று சொன்னார்.
   விக்கிரமாதித்தன், அவரை சாந்தப்படுத்தி, சனீஸ்வர பகவானே! அவர் இந்த நாட்டின் மன்னர், எல்லோரையும் காக்கவேண்டும்! அவரை துன்புறுத்தவேண்டாம். அவரிடம் நான் தினமும் கூலிக்குத்தான் உழைத்தேன். அவரிடம் செய்த சேவகத்தில் எனக்கு லாபமே! நஷ்டமில்லை! என்றான்.
   ஒளிந்திருந்து இதைக்கேட்ட மதுரேந்திரன், தன்னிடம் சேவகம் பார்த்தது விக்கிரமாதித்த சக்ரவர்த்தி என்று அறிந்து தான் தவறு செய்துவிட்டதை நினைத்து அவரது காலில் விழுந்தான். விக்கிரமாதித்தன் பெருந்தன்மையாக அவரை தடுத்து சனியின் கட்டளைப்பட்டி தங்களிடம் பணிபுரிந்தேன். நீங்களும் மன்னர்! நானும் மன்னன். ஒருவர் காலில் ஒருவர் விழுவது கூடாது. இனி நீர் நல்ல முறையில் இந்த நாட்டை அரசாண்டு வருவாயாக என்று கூறினான். மதுரேந்திரனின் மந்திரியையும் புகழ்ந்து பேசி பரிசுகள் பல கொடுத்துவிட்டு தன்னுடைய பட்டணமான உஜ்ஜைனியை வந்தடைந்தான்.
    இந்திரனின் சேவகியான இரத்தின மாலை இந்திரன் கட்டளைப்படி தேவலோகம் சென்றுவிடவே விக்கிரமாதித்தன் அவளைத்தேடி இந்திரலோகம் சென்றான். அங்கு இரத்தினமாலையை இருளறையில் ஒளித்துவைத்திருந்தான் இந்திரன். முடிந்தால் கண்டுபிடித்து கூட்டிச்செல் என்றான். விக்கிரமாதித்தனும் வேதாளத்தின் உதவியுடன் ஆயிரம் இருளறைகளில் தேடி இரத்தினமாலையை கண்டு பிடித்து அழைத்துவந்தான்.
   விக்கிரமாதித்தனை பாராட்டிய இந்திரன் இரத்தினமாலையை அவனுடன் அனுப்பிவைத்தான். உஜ்ஜைனி வந்து காளிதேவியை வணங்கிய விக்கிரமாதித்தன் பல்லாண்டுகாலம் நல்லமுறையில் ஆட்சி செய்தான்.


          (முற்றும்)

மேலும் தொடர்புடைய இடுகைகள்!

Comments

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!