Saturday, July 5, 2014

சுறுக்குக்கு ஏற்ற கழுத்து! பாப்பா மலர்!

சுறுக்குக்கு ஏற்ற கழுத்து! பாப்பா மலர்!


ரொம்ப காலத்துக்கு முன்னாடி பாண்டி நாட்டுல முட்டாள் ராஜா ஒருத்தர் ஆட்சி பண்ணிட்டு இருந்தார். ராஜாதான் முட்டாள்னா கூட இருந்து அறிவுரை வழங்குகிற மந்திரியும் மூடனாத்தான் இருந்தார். இவர்களுக்கு குறைவில்லாதவர்களாக அவையோர் இருக்க அந்த ஆட்சி சந்தி சிரிச்சு நடந்துகிட்டு இருந்தது.
  இப்படி முட்டாள் தனமான அரசாட்சியா இருந்தாலும்  இந்த ராஜா தினமும் தன் அவையை கூட்டி நீதி விசாரணை நடத்தி நீதி வழங்குவார். அந்த நீதி சரியா தப்பான்னு எல்லாம் கிடையாது. ஆனா யார் கேட்டாலும் நீதி கிடைக்கும். குற்றமே செய்யாத ஒருவன் தண்டிக்கப்படுவான். குற்றம் செய்தவன் வாழ்த்தப்படுவான் இப்படி நடந்துகிட்டு இருந்தது ராஜ பரிபாலனம்.
      இந்த அழகுல ஒரு நாள் ராஜா முன்னாடி ஒரு வழக்கு வந்தது. ஒருவன் முறிந்த காலுடன் நீதி சபைக்கு வந்து, நீதி வழுவாத நிர்மலமான மன்னா! உன் ஆட்சியில் இப்படி ஓர் குறை வரலாமா? கொடுமை நடக்கலாமா? நான் தெருவில் நடந்து வந்த சமயம் புதிதாக கட்டிக்கொண்டிருந்த ஓர் சுவர் இடிந்து விழுந்து என் கால் முறிந்துவிட்டது. இனி என்னால் நடக்க முடியாது. என் குடும்பம் பட்டினியால் வாடும். நீங்கள் தான் இதற்கு நல்ல நீதி வழங்க வேண்டும் என்றான்.
   புகழ்ச்சியில் மயங்கும் மன்னனுக்கு அவனது புகழுரை மயக்கத்தை தரவே, உடனே ஒரு சேவகனை அனுப்பி அந்த வீடுகட்டும் ஆளைப் பிடித்துவரச் சொன்னான்.
   வீட்டுக்கு சொந்தக்காரன் இன்று நம் உயிர் போனது! என்று நடுநடுங்கியபடி அவையில் வந்து நின்றான்.
   “நீர் தானே வீடு கட்டுவது?”
      ‘ஆம்”
    “ நீ எச்சரிக்கை இல்லாமல் வீட்டைக் கட்டியதால் அவ்வழியே சென்ற இந்த ஆளின் மீது சுவர் இடிந்துவிழுந்து கால் ஒடிந்துவிட்டது. இதற்கு நான் உனக்கு மரணதண்டனை விதிக்கிறேன்! நான் நீதி வழுவாதவன்! என்னிடமிருந்து யாரும் தப்ப முடியாது!” கொக்கரித்தான் அரசன்.
   உடனே, அந்த வீட்டுக்கு சொந்தக்காரன்,  “மாமன்னா! தாங்கள் நீதிவழுவாதவர்! அதை இந்த உலகம் அறியும்! நான் அறியேனா? நான் இந்த கட்டிடத்துக்கு சொந்தக்காரன் மட்டுமே! ஆனால் கட்டிடத்தை கட்டுவது கொத்தனார்தானே! அவர் எழுப்பிய சுவர் இடிந்து விழுந்தால் அதற்கு நான் எப்படி பொறுப்பாவேன்! என்னுடைய பணமும் அல்லவா நட்டமாகியது!  தயவு செய்து சிந்தித்து நியாயம் வழங்க வேண்டும்!” என்று மன்னரின் காலில் விழுந்தான்.
   உடனே அறைகுறை அரசன், உண்மைதான்! நீ சொல்வதில் நியாயம் இருக்கிறது! உன்மேல் குற்றம் இல்லை!  நீ போகலாம்! அந்த கொத்தனாரை இழுத்துவாருங்கள்! என்று உத்தரவிட்டான்.
    கொத்தனார் இழுத்துவரப்பட்டான். மன்னன் அவனிடம் ஏ, கொத்தனாரே! உன்னால் ஒருவருடைய கால் முறிந்துவிட்டது! எனவே உன்னை தூக்கில் இடுகிறேன்! என்று கர்ஜித்தான் அரசன்.
   கொத்தனார், உடனே நெடுஞ்சாண்கிடையாக மன்னன் காலில் விழுந்து, மன்னர் மன்னவா! என் மீது எந்த குற்றமும் இல்லை! நான் பல கொத்தர்களை வைத்து வேலை வாங்குகிறேன்! என் கீழே வேலைப்பார்த்த மேஸ்திரிதான் இந்த தவறை செய்தவன்! அவன் தான் இதற்கு பொறுப்பாளி! தயை கூர்ந்து என்னை விடுவிக்க வேண்டும் என்றான்.
  உடனே அரசன், கொத்தனாரை விட்டுவிட்டு மேஸ்திரியை அழைத்துவரச்சொன்னான். அந்த மேஸ்திரி அப்போது பாலம் ஒன்றை கட்டிக்கொண்டு இருந்தான். காவலர்கள் அவனிடம் விஷயம் ஏதும் கூறாமல் பிடித்து இழுத்து வந்து மன்னர் முன் நிறுத்தினார்கள்.
    மன்னன் ஆத்திரமாகி, மூடனே! ஓர் சுவற்றைக் கூட ஒழுங்காக கட்டத்தெரியாத நீ மேஸ்திரியா? உன்னால் ஒருவனுக்குக் கால் முறிந்துவிட்டது. உனக்கு மரணதண்டணை விதிக்கிறேன்! என்று முழங்கினான்.
   அரசனின் மூடத்தனத்தை மேஸ்திரி அறிவான். அவன் மிகவும் பணிந்து வணங்கி, அறநெறி தழுவாத அண்ணலே! அந்த சுவற்றை நாந்தான் கட்டினேன். ஆனால் குற்றம் என் மேல் இல்லை! எனக்கு சுண்ணாம்புக் கலவை கலந்து கொடுத்தவன் அதிக நீர் விட்டு கலந்து கொடுத்தான் அதனால் சுவர் உறுதிபடவில்லை! குற்றம் என்னுடையது இல்லை! சுண்ணாம்பு கலவை செய்துகொடுத்தவன் மேல்தான் என்றான்.
    அரசன் மேஸ்திரியை விடுவித்து சுண்ணாம்பு கலவை தயாரித்தவனை அழைத்துவரச் சொன்னான். அவன் ஒரு குடிகாரன். அரசன் அவனைப் பார்த்த மாத்திரத்தில் இவனை தூக்கில் போடுங்கள்! என்று உத்தரவிட அரசே! இந்த மேஸ்திரி எனக்கு ஐந்து ரூபாய் கூலி பாக்கி வைத்திருக்கிறார் அதைத் தரச்சொல்லுங்கள்! நான் தூக்குமேடை ஏறுகிறேன்! என்றான் அந்த கலவை தயாரித்தவன்.
   அடேய்! எந்த நேரத்தில் எதைக் கேட்கிறாய்? நீ தண்ணீர் அதிகம் கலந்து சுண்ணாம்புகலவை தயாரித்தமையால் சுவர் இடிந்து இந்த மனிதனின் கால் முறிந்துவிட்டது. போ தூக்கு மேடைக்கு என்று உத்தரவிட்டான் மன்னன்.
   மன்னா!மன்னா! அவசரப்படாதீர்கள்! எனக்கு கலவை தயாரிக்க நீர் ஊற்றுபவன் ஓர் வேடிக்கைக் காரன். அவன் நான் சொன்ன அளவில் நீர் ஊற்றவில்லை! நான் சொன்ன அளவை மாற்றி ஊற்றியது அவன் தப்பு! என் மீது குற்றம் இல்லை மன்னா!
     நீ சொல்வது சரி! கலவையில் நீர் ஊற்றியது யார்? தண்ணீர் விட்டது கருப்பன்!
  கருப்பனை இழுத்து வந்தார்கள்!  அவனோ என் மீது குற்றம் இல்லை மன்னா! நான் தண்ணீர் கொண்டுவரும்போது எதிர்வீட்டில் ஓர் நடனப்பெண் ஜன்னலில் நின்று இசை பாடிக்கொண்டிருந்தாள். இசைக்கு மயங்காத உயிரினம் எது? நான் நீர் முகர கொண்டு சென்ற தோல் பையும் ஓட்டை. அதனால் நீர் ஒழுகிவிட்டது. என் கவனம் சிதற பாடிய அந்த நடனப் பெண் தான் குற்றவாளி என்றான்.
  அந்த நடனப் பெண்ணை அழைத்துவர உத்தரவிட்டான் மன்னன். அந்த நடனப் பெண் ஓர் சிறுமி. ஒன்றும் அறியா இளம்பெண்.  அரசன் அவளிடம், நீ நடனமாடி பாடியதால் இவன் கவனம் சிதறி தண்ணீர் அதிகம் ஊற்றி கலவை ஈரமாகி சுவர் இடிந்து இவன் கால் முறிந்து போனது. உனக்கு மரணதண்டனை! என்று உத்தரவிட்டான்.
    அந்த பெண் “ஓ” வென்று வாய்விட்டு கதறினாள். காவலர்கள் அந்த பெண்ணை தூக்குமேடைக்கு இழுத்துச்சென்றார்கள். அவள் கழுத்தில் சுருக்கை மாட்டினார்கள். சுருக்கு பெரியதாகவும். அவள் மெல்லிய கழுத்து சிறிதாகவும் இருந்தது. மூடக் காவலர்கள் என்ன செய்வது என்று அறியாமல் முழித்தார்கள்.
   கழுத்தை எப்படி பெரிசு படுத்துவது? என்று யோசித்தார்கள். அமைச்சனிடம் போய் சொன்னார்கள். இந்த சின்ன விசயத்துக்கு கூட என்னை தொந்தரவு படுத்த வேண்டுமா? என்ற அமைச்சர் அரசனிடம் சென்று அரசே கயிறு சுறுக்கு பெரிதாக இருக்கிறது. கழுத்து சிறிதாக இருக்கிறது என்ன செய்யலாம்? என்று கேட்டான்.
    அடேய்! நீ எல்லாம் அமைச்சனா? எனக்கு நீதி தவறக் கூடாது! இன்று மரண தண்டனை நிறைவேற வேண்டும். கயிறுக்கேற்ற கழுத்து உள்ள யாரையாவது  பிடித்து தூக்கில் போடுங்கள் என்றான் மன்னன்.
    அந்த ஊரில் பருத்த ஆளை தேடி அலைந்த காவலர்கள் ஒர் மடாலயத்தில் நன்கு புடைக்க உண்டு கொழுத்த சீடனை பிடித்து இழுத்தார்கள். அவன் ஏன் என்னை இழுக்கிறீர்கள் என்று கேட்க, மன்னன் உத்தரவை தெரிவித்தார்கள். மன்னன் சொன்ன பெண்ணுக்கு தூக்குப் போட முடியவில்லை! சுருக்கு கயிறு பெரிதாக இருக்கிறது! அதனால் கயிறுக்கேற்ற ஆளை தூக்கில் போடச்சொன்னார். நீ சரியாக இருப்பாய்! வா போகலாம்! என்று இழுத்தனர்.
   அப்போது அங்கு அவனுடைய குரு வந்தார். சீடனுக்குப்பதில் தன்னை தூக்கில் போடுமாறு கூறினார்.
   தனக்காக குரு தூக்கில் போடப்படுவதை சீடன் மறுத்து தன்னையே போடும்படி கூறினான்.
   காவலர்கள் இருவரையும் அரசன் முன் நிறுத்தினர். அட சாவதற்கு யாராவது போட்டிப் போடுவார்களா? இவர்கள் மாற்றி மாற்றி தன்னை தூக்கில் போடச் சொல்லி கெஞ்சுகிறார்களே! இதில் ஏதோ விஷயம் இருக்கிறது! என்று நினைத்தான் மன்னன்.
    குருதேவா! ஏன் தூக்கில் தொங்குவதற்கு இருவரும் விரும்புகிறீர்கள்! சொல்லுங்கள்! என்றான்.
   அரசர் கோமானே! இந்த முகூர்த்தம் ஒரு சுப முகூர்த்தம்! இந்த நேரம் கிடைப்பது அரிது! இந்த வேளையில் தூக்கில் இட்டால் தூக்கிலிடப்பட்டவனுக்கு தேவேந்திரப்பதவி கிடைக்கும். அதனால் தான் இருவரும் போட்டி இடுகிறோம் என்றார் குரு.
  மூட அரசன், அப்படியா சேதி! அரசன் நான் தான் தேவேந்திரபதவிக்கு தகுதியானவன். என்னை முதலில் தூக்கில் போடுங்கள்! எனக்கு உதவியாக மந்திரியும் தேவை! எனவே அடுத்து மந்திரியை தூக்கில் போடுங்கள் என்றார்.
   அரசனின் உத்தரவு நிறைவேற்றப்பட்டது. மூட மன்னரும் முட்டாள் மந்திரியும் ஒழிந்ததை நினைத்து மக்கள் ஆறுதல் அடைந்தார்கள். குரு மக்களில் சிறந்தவனை அரசனாகவும் அறிவாளிகளை மந்திரிகளாகவும் நியமித்து நல்லாசி கூறினார்.
   அதுமுதல் நாடு சிறந்து விளங்கியது!

(செவிவழிக்கதை)

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!8 comments:

 1. அருமையான கதை நண்பரே... சிந்திக்க வைத்தது.
  அதுசரி நிகழ்காலத்தில் யாரை தூக்கில் போட சொல்கிறீர்கள் ?

  ReplyDelete
 2. நல்ல கதை.... கில்லர்ஜி கேள்வியே எனது மனதிலும்! :)

  ReplyDelete
 3. வணக்கம்
  ஐயா
  மனதில் பதியக்கூடிய கதை பகிர்வுக்கு நன்றி
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 4. நல்ல கதை. தற்போது இடிந்த கட்டிடத்தின் நினைவு வருகிறது. கில்லர்ஜியின் கேள்விதான் ....? எனக்கும் தோன்றியது. பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 5. சிந்திக்க வைத்த கதை. நன்றி.

  ReplyDelete
 6. நல்ல கதை. சிந்திக்கவும் தூண்டுகிறது.

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...