பிட் அடிக்காதே! பாப்பா மலர்
பிட் அடிக்காதே!
ஒன்பதாம் வகுப்பிற்கான ஆண்டிறுதித் தேர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.குமார் ஆசிரியர் தன்னை பார்க்கிறாரா? என்று பார்த்தான் அவர் பார்வை வேறுபக்கம் இருக்கவே தன் பேண்ட் பாக்கெட்டில் இருந்து சிறு தாள் ஒன்றினை எடுத்து விடைத்தாளின் அடியில் வைத்து எழுத ஆரம்பித்தான்.
அவன் நெஞ்சம் படபடத்தது. கை நடுங்கியது. இது அவனுக்கு புதுப்பழக்கம். நன்றாக படிக்க கூடியவன் தான் குமார். ஆங்கிலம் தான் சரியாக வராது. அதிலும் அடித்து பிடித்து பாஸாகிவிடுவான். எல்லாவற்றிலும் எண்பது மதிப்பெண் எடுத்தால் இதில் மட்டும் நாற்பது எடுப்பான்.
ஆசிரியர்களும் கொஞ்சம் முயற்சி எடுத்து படித்தால் நல்ல மதிப்பெண்களை எடுத்துவிடலாம் குமார் வருந்தாதே என்று அவனை ஊக்கப் படுத்துவார்கள். ஆனால் ஆங்கிலத்தில் மதிப்பெண் எடுக்க முடியாமல் திணறினான். அப்போதுதான் எப்போதும் கடைசி பெஞ்சில் அமர்ந்து கிண்டல் பண்ணிக் கொண்டு ஆசிரியர்களிடம் அடி வாங்கிக் கொண்டிருக்கும் மணி அவனுக்கு ஒரு யோசனை சொன்னான்.
”குமாரு! ஆங்கிலம் அன்னிய மொழிடா! அதெல்லாம் நமக்கு சரிபட்டு வராது எதுக்கு அதுங்கூட போராடுறே? ஈஸியா மார்க் எடுக்க நான் வழி சொல்றேன் வா!” என்று அழைத்து சென்று இந்த பிட் அடிக்கும் யோசனையை கூறினான்.
குமார் முதலில் பயந்தான்.” இப்படி பயந்தா எப்படி மார்க் எடுப்ப? அதெல்லாம் ஒண்ணும் ஆகாது. நான் எத்தனை முறை பிட் அடிச்சிருக்கேன் தெரியுமா? களவும் கற்று மறன்னு வாத்தியார் தானே சொல்லிக் கொடுத்தாரு சும்மா தைரியமா அடி!” என்று சில உத்திகளை சொல்லிக் கொடுத்து அனுப்பி வைத்தான்.
ஆங்கிலத்தில் அதிக மார்க் எடுக்கும் ஆசை குமாரை பிட் அடிக்க வைத்தது.ஆனால் இந்த விசயத்தை அவனது பதட்டமே காட்டிக் கொடுத்தது.அவனுடைய வகுப்பாசிரியர் அவனருகே வந்தார்.
“ என்ன குமார் ஏன் இப்படி வியர்த்து வழியறே? ஏன் உடம்பெல்லாம் நடுங்குது? உடம்பு எதுவும் சரியில்லையா?” என்று பரிவுடன் கேட்டார்.
குமாருக்கு கண்கள் கலங்கின. இவ்வளவு அன்பு வைத்திருப்பவரையா நாம் ஏமாற்றுகிறோம் என்று அழுகையாக வந்துவிட்டது அழ ஆரம்பித்தான். ”ஏன் அழுவுறே குமார்? என்ன ஆச்சு விசயத்தை சொல்லு!” என்றார் வகுப்பாசிரியர்.
”சார் சார்! என்னை மன்னிச்சிடுங்க!” என்று அழுதபடி பேப்பரின் அடியில் இருந்த பிட்டை எடுத்து நீட்டிய குமார், “சார் நான் தெரியாம் இப்படி நடந்துகிட்டேன். இதிலிருந்து இன்னமும் எதுவும் எழுதவில்லை என்னை பெயில் பண்ணிடாதீங்க சார்! அதிக மார்க் வாங்கணும்கற ஆசையில் செஞ்சிட்டேன் சார் ஆனா தப்பு செய்யறோம்னு எனக்கு கை கால்லாம் நடுங்க ஆரம்பிடுச்சு சார்! என்னை மன்னிப்பீங்களா சார்!” என்று திக்கி திக்கி கேட்டான்.
”குமார் என்ன இது? நீயே இப்படி செய்யலாமா? போகட்டும் விடு! இந்த வருடம் நான் உன்னை மன்னித்துவிடலாம். ஆனால் அடுத்த வருடம் இந்த பழக்கம் அடுத்த வருடம் தொடர்ந்தால் உன் எதிர்காலம் என்னாவது? மூன்று வருடங்கள் தேர்வு எழுத முடியாது அத்துடன் உன் மீது கரும்புள்ளி அல்லவா படியும்?” என்றார் ஆசிரியர்.
தலைகுனிந்தான் குமார். “சார்! ஆங்கிலத்தில் அதிக மார்க் எடுக்கனும்கற ஆசையில் தவறு செய்து விட்டேன் சார்! என்னுடைய தவறை உணர்ந்து விட்டேன் சார் இனி ஒருபோதும் இப்படி ஒழுங்கீனமாக நடக்கமாட்டேன் சார்! என்னை மன்னியுங்கள்!” என்று வகுப்பாசிரியரின் காலில் விழுந்தான் குமார்.
“எழுந்திரு குமார்! அதிக மார்க் எடுக்க நினைக்கும் உன் ஆசை தவறானதில்லை! அதற்காக நீ எடுத்த முயற்சிதான் தவறு! தேர்வு என்பது என்ன? நீ என்ன படித்தாய் என்பதை அரிய உதவும் ஒரு டெஸ்ட். இதற்கு போய் காப்பி அடிக்கலாமா? நன்கு முயன்றால் உன்னால் ஆங்கிலத்திலும் நல்ல மதிப்பெண் எடுக்க முடியும். தண்டனையைவிட மன்னிப்பதில் தான் ஒருவன் தன் தவறை உணர்வான். சரி இந்த ஒரு முறை உன்னை மன்னித்தேன். உனக்கு தெரிந்ததை எழுது கட்டாயம் வெற்றி பெறுவாய்!” என்று அவனை எழுப்பினார் ஆசிரியர்.
தெளிந்த மனதுடன் தேர்வெழுத ஆரம்பித்தான் குமார்.
(மீள்பதிவு)
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துகளை பகிர்ந்து செல்லலாமே! நன்றி
நல்லதொரு பகிர்வு. பாராட்டுகள்.
ReplyDelete