கசப்பின் கனிகள் . படித்ததில் பிடித்தது!

 கசப்பின் கனிகள்



அம்மாவின் வாழ்க்கையை நேற்றிரவு லேசாகத் தொகுத்துக் கொள்ள முயற்சி செய்தேன். நான் அம்மாவுடன் மிக நெருக்கமாக இருந்தேன் என்று சொன்னால் அது ஒரு பொய்யாக இருக்கும். அம்மா இயல்பாகவே கசப்பு நிறைந்த ஒரு சிடுசிடுப்பான பெண். பொதுவாகவே நெல்லை பெண்கள் ரத்த சோகையினால் பீடிக்கப்பட்டவர்கள். அவர்களது சிடுசிடுப்புக்கு அது ஒரு காரணம். அம்மா திருநீற்றை, ஊறவைத்த அரிசியைத் தின்பதைப் பார்த்திருக்கிறேன். அவள் அடிக்கடி குடித்த காப்பியும் அவளை அவ்வாறு ஒரு எரிச்சல் நிறைந்த மனுஷியாக வைத்திருக்கலாம். இந்தக் காரணங்கள் தாண்டி அவளுக்கு அப்பாவின் குடும்பத்தாருடன் கடும் ஒவ்வாமை இருந்தது. ஜெயமோகன் எங்கோ இந்திய குடும்ப அமைப்புதான் ஆண் பெண்களிடையே குறைந்த அபாயம் கொண்ட ஒரு ஏற்பாடு என்று சொல்லியிருக்கிற நினைவு. ஆனால் எங்கள் அனுபவம் வேறு மாதிரி இருந்தது. அம்மா அப்பா ஒரு ஏமாளி என்று நினைத்தாள். இன்றும் கணவனை அப்படி நினைக்காத இந்தியப் பெண்கள் குறைவு. அப்பாவை அவள் வாழ் நாள் முழுக்கத் 'திருத்தி எடுக்க' முயன்று கொண்டிருந்தாள். இந்தியக் குடும்பங்களில் மட்டுமல்ல ருஷ்யக் குடும்பங்களிலும் அப்படித்தான் என்பது டால்ஸ்டாயின் டயரியைப் படிக்கையில் தெரிகிறது
இந்தியக் குடும்பங்களில் ஆண்தான் குடும்பத் தலைவன் எனப்படுகிறான். இது பெண்ணைக் கேட்டுக்கொண்டு செய்யப்பட்ட ஏற்பாடு அல்ல. இந்த கசப்பு எப்போதும் பெண்களிடம் இருக்கிறது. மிக இணக்கமானவை என்று நமக்கு தோன்றும் குடும்பங்களில் கூட இதைப் பார்த்திருக்கிறேன். இது இன்றைய ஆணைக் கேட்டுக்கொண்டு செய்யப்பட்ட ஏற்பாடும் அல்ல. அது அவன் மீதும் சுமத்தப்பட்ட ஒன்றுதான்.
விளைவாக இந்த குடும்பத் தலைவனான ஆணை யார் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது என்கிற போட்டி, குடும்பத்தில் அவனைச் சுற்றியிருக்கும் பெண்களிடையே நிகழ்கிறது. இந்தப் போர் கொண்டுவருகிற துயரங்களும் சிக்கல்களும் நம்ப முடியாத அளவு சிக்கலானவை. ஆண்கள் பெண்கள் குழந்தைகள் அனைவரது வாழ்க்கை முழுவதையுமே ஆக்கிரமித்து வீணாக்கிவிடக் கூடிய ஆற்றல் மிக்கவை. தமிழில் யூமா வாசுகியின் ரத்த உறவு, எம் கோபால கிருஷ்ணன் எழுதிய மனை மாட்சி போன்ற நாவல்கள் இந்த சிக்கலைப் பற்றிப் பேசியவை. தொலைக்காட்சியில் வரும் குடும்ப சீரியல்களின் பிரபல்யம் வெட்டவெளியிலிருந்து முளைத்ததல்ல. அம்மாவின் தலை முறையில் ஒருவர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இந்த கசப்பு நிறைந்த அதிகார விளையாட்டில் ஈடுபட்டே ஆகவேண்டிய சூழல் இருந்தது. இப்போதும் பெருமளவு அப்படித்தான் இருக்கிறது. நமது குடும்ப அமைப்பு சுதந்திரம் என்கிற கோட்பாட்டின் மீது கட்டப்பட்டதல்ல. அது அதிகாரத்தின் மீது கட்டப்பட்டது. அதில் ஏற்படும் அன்பு என்பது பெரும்பாலும் எதிர்பாராதது. இதில் அதிகாரம் என்பதில் ஒருவரது சமூகத் தளம், வர்க்கம், பாலுறவு உரிமை எல்லாம் அடக்கம். இந்தியக் குடும்பம் ஒரு முன் பதிவு செய்யப்படாத இரண்டாம் வகுப்பு பெட்டி. அதில் ஜன்னல் சீட் என்பது அதிர்ஷ்டம்.
அம்மா எப்போதாவது கசப்பு இல்லாமல் இருந்திருக்கிறாளா என்று யோசித்திருக்கிறேன். தனது லவுகீகமான போராட்டங்கள், கவலைகள் தாண்டி வேறு விஷயங்களில் ஆர்வம் உள்ளவளாக..அவள் லக்‌ஷ்மி, தமிழ் வாணன் நாவல்கள் படிப்பவளாக இருந்திருக்கிறாள். ஆனால் அது கொஞ்ச காலம்தான். சினிமாதான் அவள் தன்னை மறக்கும் ஒரு இடமாக இருந்தது. அவளுக்கு மட்டுமல்ல ஒரு தலை முறைப் பெண்களுக்கே கலாப்ரியா எழுத்துகளில் பதிவு செய்வது போல தங்கள் தினசரி வாழ்வின் அழுத்தங்களை சலிப்பை கொஞ்ச நேரம் மறந்து கனவு காணும் இடமாக சினிமா தியேட்டர்கள்தான் இருந்தன. ஒரு கட்டத்தில் அம்மா ஒரு நாளைக்கு இரண்டு சினிமாக்கள் கூட பார்த்தாள். அதற்கென அவளுக்குக் கூட்டாளிகள் உண்டு. அவர்களுடன் மறு நாள் சினிமாவுக்குப் போகத் திட்டமிடுகையில்தான் அவளது முகத்தில் வழக்கமான கசப்பு மறைந்து ஒரு குழந்தைத்தனம் வருவதைப் பார்த்திருக்கிறேன். அவளுக்கு எல்லா நடிகர் நடிகைகளையும் பிடிக்கும். கே ஆர் விஜயாவை அவள் போல் இருப்பதாக சொல்லிவிட்டதால் சற்று கூடுதலாக. பத்ரகாளி படத்தில் வரும் கண்ணன் ஒரு கைக்குழந்தை பாட்டு ரொம்ப பிடிக்கும்.அந்தப் பாட்டில் கதா நாயகி அணிந்து வரும் சேலை போல் ஒன்றை வைத்திருந்தாள்.
நான் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும்போது அம்மாவுக்கு அப்பாவுக்கு ஏதோ வேறொரு பெண்ணின் தொடர்பு இருப்பதாக ஒரு பிரமை ஏற்பட்டது. ஏறக்குறைய இரண்டு வருடம் அவள் அந்த இல்லாத 'இன்னொரு பெண்ணுடன்'சண்டை இட்டாள். எங்கள் வாழ்க்கையை நரகமாக்கினாள். அது அவளது மெனோபாஸ் சமயம் என்பது இப்போது புரிகிறது. அது என் படிப்பை மிகவும் பாதித்தது. நான் என்ன ஆக முடியுமோ அதுவாக முடியாமல் தடுக்கப்பட்டேன். அந்த வெறுப்பு அவள் மீது எனக்கு நீண்ட நாட்கள் இருந்தது.
இப்போது யோசித்தால் இந்தக் கசப்பு அவள் தன் மீதே சுமத்திக்கொண்ட ஒன்று. ஆனால் அதன் அடிப்படை வாழ்வு குறித்த பயம். அதை மீறி அவளால் செல்ல முடியவில்லை. அவள் இவை எல்லாவற்றையும் எங்களுக்காகதான் செய்தாள் என்பது இன்னொரு முரண். அவளை வெளிப்படுத்திக்கொள்ளும் வெளிகள் வேறேதேனும் இருந்திருந்தால் எனில் அவள் இன்னும் சற்று மகிழ்ச்சியாக இருந்திருப்பாளா? ஜேன் ஆஸ்டினின் நாவலில் கதா நாயகி ஆனி இவ்விதம் சொல்கிறாள் "நாங்கள் வீட்டில் அடைபட்டுக் கிடக்கிறோம். எங்கள் உணர்ச்சிகள் எங்களை வேட்டையாடித் தின்கின்றன"
ஆனால் இது குறித்தும் எனக்கு ஐயமே உள்ளது. டீச்சர் வேலை பார்த்த எனது சித்தி அம்மாவை விட கசப்பு மிக்கவளாக ஆங்காரம் கொண்டவளாக இருந்தாள். ஆண் பெண் உறவில் இன்னும் தீர்க்கப்படாத புதிர்கள், கோணங்கள் உள்ளன என்றே நான் நினைக்கிறேன்.
இந்த ஆங்காரம் என்பதற்கு இணையான ஆங்கில வார்த்தை என்ன?அம்மாவுக்கு கோபம் வருகின்ற சமயங்களில் அச்சம் தருகிறவளாக ஆங்காரம் கொண்டவளாக மாறிவிடுவாள்.
சில நாட்களுக்கு முன்பு காரில் இரவில் நண்பர்களுடன் திரும்பிக் கொண்டிருந்த போது நள்ளிரவில் ஆள் அரவமேயற்ற ஒரு காட்டுப் பகுதியில் கொட்டும் மழையில் ஒரு இளம் பெண் தனியாகப் போய்க்கொண்டிருப்பதைப் பார்த்தோம். எல்லோரும் பேய் என்றோ யக்‌ஷி என்றோ நினைத்து பீதி அடைந்து விட்டோம். இருக்கலாம். அல்லது மன நலம் தவறிய ஒரு பெண்ணாக இருக்கலாம். அல்லது அம்மாவைப் போல எதன் மீதோ கடும் கசப்பு கொண்டு மனிதர்களை விட்டு விலகிப் போகிற ஒரு மனுஷியாகக் கூட இருக்கலாம் என்று தோன்றியது. என் தோழிகளில் ஒருவரே தான் அப்படி செய்திருப்பதாகச் சொன்னார். அம்மாவுக்கு இசக்கி என்கிற இன்னொரு பெயரும் உண்டு.
அப்பா இறந்த போது அம்மா பெரிதாக பாதிக்கப் பட்டது போல் காட்டிக் கொள்ளவில்லை. ஆனால் அப்பா இறந்த பிறகுதான் அம்மாவுக்கு வாதம் வந்தது. ஆயுர்வேதம் வாதம் உடலில் கசப்பு கூடுவதன் விளைவாக வருவது என்கிறது. அம்மாவின் கசப்பு தன் குறியை இழந்ததும் தன் மேலேயே திரும்பி விட்டது என்று தோன்றுகிறது. அப்பாவின் திடீர் மரணத்துக்குப் பிறகு எங்கள் வாழ்க்கையில் எதுவுமே சரியாக நடைபெறவில்லை. நாங்கள் ஒரு துக்க சுழலிலிருந்து இன்னொரு துக்க சுழலுக்குள் போய்க்கொண்டிருந்தோம்.
அம்மா மெல்ல தன் கசப்பை உணர ஆரம்பித்தாள் என்றே நினைக்கிறேன். ஆனால் கசப்பு மிக முற்றும்போது இனிப்பாகும் என்று ஒரு சொல்லுண்டு. இனிப்பு மிகும்போது கசப்பாவது போலவே.
தன் கடைசிக் காலங்களில் இளமையில் அம்மா எங்களுக்குத் தர மறந்ததை எல்லாம் திருப்பித் தர முயன்றாள். இப்படிப்பட்டவள் தனது வாழ்வின் முற்பகுதியில் ஏன் அப்படி இருந்தாள்?விடையில்லை. தனது கடைசி நாட்களில் தனது அத்துனை வலியின் நடுவிலும் இயலாமையின் நடுவிலும் அவள் எரிச்சலடையவே இல்லை என்று என் தங்கை சொன்னபோது நான் கண்ணீர் விட்டு அழுதேன்.
அம்மாவுக்கு வேப்பம்பழங்கள் ரொம்பவும் பிடிக்கும்.
வேப்பம்பழங்களின் இனிப்புக்கு இணை வேறெதுவும் இல்லை என்றும் அவள் சொல்வதுண்டு.
உண்மைதான் அம்மா.
- போகன் சங்கர்

(முகநூல் பகிர்வு)

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2