இரண்டு ரூபாய்க்கு இட்லி விற்கும் பாட்டி! படித்ததும் பிடித்ததும் முகநூல் பகிர்வு
எத்தன இட்லினு சாப்பிட்டவங்கதான் கணக்கு சொல்வாங்க! நெகிழவைக்கும் 2 ரூபாய் இட்லிக்கடை பாட்டி!!
புதுக்கோட்டை, காந்தி நகரில் இருக்கிறது தனம் பாட்டியின் குடிசை வீடு. 2 அடி குனிந்து உள்ளே சென்றால், சிறிய குடிசைக்குள்ளே விறகு அடுப்பில் சுடச்சுட இட்லி தயாராகிக் கொண்டிருக்கிறது.
ஒரு இட்லி ரூ.10க்கு விற்கும் இன்றைய காலகட்டத்தில், ஒரு இட்லி ரூ.2க்கு விற்பனை செய்து கொண்டிருக்கிறார் தனம் பாட்டி. 10 ரூபாயிலேயே பலருக்கும் வயிறு நிறைந்து போகிறது. மாவு அரைப்பது, சட்னி, சாம்பார், சுண்டல் வைப்பது, இட்லி அவிப்பது வரையிலும் எல்லாமும் தனம் பாட்டி தான்.
84 வயதிலும் சுறுசுறுப்புடன் பம்பரமாகச் சுழன்று வேலை செய்து கொண்டிருந்த பாட்டியிடம் பேச்சுக் கொடுத்தோம்.
நான் பொறந்து, வளர்ந்தது எல்லாம் அறந்தாங்கி பக்கத்துல இருக்க சிதம்பரவிடுதிங்கிற சின்ன கிராமம். வீட்டுக்காரருக்கு ஊரு பட்டுக்கோட்டை. அவரு புதுக்கோட்டையில சின்னதா ஒரு டீக்கடை வச்சிருந்தாரு. 1960-ல எங்களுக்குக் கல்யாணம் நடந்துச்சு. கல்யாணம் முடிச்ச கையோட புதுக்கோட்டைக்கு கூட்டிக்கிட்டு வந்திட்டாரு.
டீக்கடையை வச்சி பிழைப்பு ஓட்டிக்கிட்டு இருந்தோம். சமாளிக்க முடியலை. கொஞ்ச வருஷம் கழிச்சி இட்லிக்கடை ஆரம்பிச்சோம். கடை ஆரம்பிச்சப்ப இட்லி ரூ.10 காசு. மத்த கடைகளைவிட எப்பவும் நம்ம கடையில விலை கொஞ்சம் குறைவாத்தான் இருக்கும்.
நாம போதும்னு சொல்ற ஒரே விஷயம். சாப்பாடுதான். எவ்ளோ நல்ல சாப்பாடா இருந்தாலும், யாரா இருந்தாலும், வயிறு நிறைஞ்சதுக்கு அப்புறம் சாப்பிட முடியாதே. பணத்தை விட, நம்மள தேடி வர்றவங்களோட பசியை போக்குறது தான் முக்கியம்னு நினைச்சோம். அதனாலயே என்னவோ எங்களைத் தேடி நிறைய பிள்ளைங்க வருவாங்க. பலர் உங்களுக்கு எப்படி கட்டுப்பிடியாகுது?னு கேட்பாங்க. குறைஞ்ச லாபம் கிடைச்சா போதும்னு நினைக்கிறதாலதான் சமாளிக்க முடிஞ்சது. இப்பவும் முடியுது.
டீ, இட்லி வியாபாரம் செஞ்சே தான் பிள்ளைங்க மூணு பேரையும் வளர்த்தோம். மூணு பேரும் கல்யாணம் முடிஞ்சு நல்லாயிருக்காங்க. கொஞ்ச வருஷத்துக்கு முன்னால, வீட்டுக்காரருக்கு கண்ணு ஆபரேசன் செஞ்சோம். அப்புறம் அவருக்கு கிட்னியில பிரச்னை வந்ததால டீக்கடையை நிறுத்திட்டோம்.
இட்லி கடையை மட்டும் நிறுத்தவே இல்லை. காலையில 5 மணிக்கெல்லாம் வேலைய ஆரம்பிச்சிடுவேன். ஸ்கூல் பிள்ளைங்க, ஆபிஸ்ல வேலை பார்க்கிறவங்க, கூலிக்கு வேலை பார்க்கிறவங்கன்னு தினசரி வாடிக்கையாளர்கள் பலர் வருவாங்க. அதிகபட்சமா ஒருநாளைக்கு 200 ரூபாய் கிடைக்கும். ஒரு சிலநாள் வியாபாரம் பெருசா இருக்காது. அடுத்த நாள் உளுந்து, அரிசி வாங்கிறதுக்குக் கொஞ்சம் சிரமமா இருக்கும். ஆனாலும், எல்லாத்தையும் சமாளிச்சிடுவேன்.
விறகு அடுப்புக்கு, சாயந்தர நேரத்துல காடு, கரைக்கு போய் விறகு எடுத்துக்கிட்டு வந்துடுவேன். மாவுக்கல்லு இருக்கு. இப்போ பையன் கிரைண்டரும் வாங்கிக் கொடுத்திருக்கான். பெரும்பாலும், மாவுக் கல்லுலயே மாவு ஆட்டிக்கிடுவேன்.
நாலு பேருக்கு தினமும் இட்லி கொடுத்துப் பழகிட்டேன். அவங்களும் சாப்பிட்டுப் பழகிட்டாங்க. நான் சாப்பிடுற பிள்ளைங்ககிட்ட கணக்கு கேட்கிறதேயில்லை. வேணுங்கிற இட்லியை எடுத்து வச்சிக்குவாங்க. சாப்பிட்டுட்டு சரியா கணக்குப் போட்டு கொடுத்துட்டு போயிடுவாங்க
ரொம்ப வருஷமா ஒரு ரூபாய்க்குத்தான் இட்லி கொடுத்துக்கிட்டு இருந்தேன். விலைவாசி உயர்ந்துகிட்டே இருந்தாலும் நான் மட்டும் விலையை ஏத்தாம தான் இருந்தேன். இப்போ ரெண்டு வருஷமாதான் ரெண்டு ரூபாய்க்குக் கொடுக்குறேன். அதுகூட, தினமும் இங்க சாப்பிட வர்ற பிள்ளைங்கதான், உன் உழைப்புக்காகவது இன்னும் ஒரு ரூபாய் சேர்த்துக் கொடுக்கணும்னு சொல்லி, அவங்களா விலையை ஏத்தி கொடுத்துட்டுப் போக ஆரம்பிச்சாங்க. அது அப்படியே மாறிருச்சு.
சாப்பிட வர்ற பிள்ளைங்க பலர், `உன் குடிசையை எடுத்துக் கட்டித் தர்றேன்'னு சொல்லுவாங்க. அதெல்லாம் வேண்டாம் ராசா, இந்த கிழவிக்கு இதுவே போதும்னு சொல்லிடுவேன். முடியாம இருந்த வீட்டுக்காரரை இட்லி வேலை செஞ்சே பார்த்துக்கிட்டேன். ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி, அவரு என்னை மட்டும் தனியா விட்டுட்டுப் போயிட்டாரு. இப்ப கூட என் பிள்ளைங்க, எங்களோட வந்து ஓய்வு எடுங்கம்மான்னு சொல்லிக் கூப்பிடுறாங்க. ஆனா, இட்லி கடையையும், கடைக்கு வர்ற இந்த பிள்ளைகளையும் விட்டுப்போக மனசில்ல. இந்த கிழவியோட உயிரும் இட்லி கடையிலயே போகட்டும் ராசான்னு சொல்லி அவங்களை அனுப்பிடுவேன். வெந்த இட்லிகளை தட்டுக்கு மாற்றுகிறார் தனம் பாட்டி.
சிலரது வாழ்க்கை இப்படித்தான் அழகாகிக் கிடக்கிறது உழைப்பாலும் அன்பாலும்.
Comments
Post a Comment