படித்ததில் பிடித்தது! முகநூல் பகிர்வு

 ரஜினியின் மாஸ்டர் பீஸ் ‘முள்ளும் மலரும்’... ஆனால், கமல்ஹாசன் இல்லையென்றால் இந்தப் படமே இல்லை... ஏன்?

சுரேஷ் கண்ணன்

தமிழ் திரையுலகில் தரமான சினிமாக்களைத் தர வேண்டும் என்கிற ஆர்வம் ஒருபுறம் இருந்தாலும், இன்னொரு புறம் தன்னை ஒரு கமர்ஷியல் ஹீரோவாகவும் நிலைநிறுத்திக் கொள்ள வேண்டிய நெருக்கடி கமலுக்கு இருந்தது. பொருளாதார ரீதியாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டால்தான் தான் விரும்பிய சினிமாக்களுக்கான நிதியை சேகரிக்க முடியும் என்கிற ஒரு காரணம் இருந்தாலும் இன்னொரு முக்கிய காரணம் ரஜினி.
ஆம், ரஜினியின் வணிக மதிப்பும் வெற்றியும் ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து கொண்டே இருந்தது. ரஜினி - கமல் ஆகிய இருவருக்கும் உள்ள நட்பு ஆழமானது என்றாலும் தன்னுடைய சம காலத்து போட்டியாளரான ரஜினிக்கு ஈடுகொடுக்கும் வகையில் வணிகத் திரைப்படங்களில் நடிக்க வேண்டிய கட்டாயம் கமலுக்கு இருந்தது.
‘’பைரவியோட வீடு இதானே?’' - என்று கேட்டைத் திறந்தபடி கேட்டுக் கொண்டே ரஜினி வருவதுதான் அவர் தமிழ் சினிமாவில் அறிமுகமான காட்சி. (‘அபூர்வ ராகங்கள்’). 'சுருதி பேதம்' என்கிற எதிர்மறையான பாத்திர அறிமுகத்துடன் வரும் அந்த நபர்தான் பின்னர் சூப்பர் ஸ்டார் ஆகி உச்சத்தை அடையப் போகிறார் என்பதை கமலோ, ரஜினியோ அறிந்திருந்திருக்க மாட்டார்கள். ஆச்சரியகரமாக ரஜினி தோன்றும் முதல் காட்சியே, கமல் - ரஜினி காம்பினேஷனாக அமைந்தது. அந்தக் காட்சியின் படி, தன்னுடைய இடத்துக்கு போட்டியாக வரும் ஆசாமியாக ரஜினியை கமல் நினைப்பார். எனவே அதற்காக ஆத்திரத்துடன் சண்டையிடுவார். ஆனால், பிறகு அந்த இடம் கமலுக்கு கிடைக்காமல் போகும். (நல்ல குறியீடுதான் இல்லையா!).
கமலும் ரஜினியும் தங்களை பரஸ்பரம் உள்ளுக்குள் போட்டியாக நினைத்துக் கொண்டார்களோ, இல்லையோ... ஆனால் இவ்வகையான ஆரோக்கியமான போட்டிதான் ஒரு துறையின் வளர்ச்சிக்கும் செழிப்பிற்கும் ஆதாரமாக அமையும். இந்த விஷயத்தை இந்த தொடரின் ஆரம்பத்திலேயே பார்த்தோம். 'ஒரு உறையில் இரண்டு கத்திகள் இருக்க முடியாது' என்பது நடைமுறை உண்மை. ஆனால் ஒரு துறையில் இரண்டு கத்திகள் இருந்தே ஆக வேண்டும். இந்த எதிரெதிர் போட்டி முனைகள்தான், அதன் நுகர்வோர்களுக்கு தொடர்ந்து ஆர்வத்தையும் விறுவிறுப்பையும் தரும். அப்போதுதான் அதன் வளர்ச்சியும் தொடர்ந்து இருக்கும்.
தமிழ் சினிமாவில் ஆரோக்கியமான மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்கிற கனவுடன் இருந்த கமல், அப்படி நிகழ்ந்த மாற்றத்திற்கும் தடையாக அமைந்தார் என்கிற விசித்திரமும் நடந்தது. ஆம், எண்பதுகளின் தமிழ் சினிமாவில் ஓர் அற்புதமான மாற்றம் இயல்பாக நிகழத் தொடங்கியது. மேற்கு வங்கம், கேரளம் போன்ற மாநிலங்களில் மிகச் சிறந்த மாற்று முயற்சிகள் நிகழ்ந்து அவை தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் கவனம் பெறத் துவங்கியதால் அவ்வகையான திரைப்படங்களைப் பார்த்து தமிழிலும் அவ்வகையான முயற்சிகள் நிகழ வேண்டும் என்று சில இயக்குநர்கள் தூண்டுதல் அடைந்தார்கள்.
பாலுமகேந்திரா, மகேந்திரன், ருத்ரைய்யா போன்ற இயக்குநர்களின் உன்னதமான திரைப்படங்களால் பார்வையாளர்களிடமும் அந்த மாற்றம் மெல்ல நிகழ்ந்து கொண்டேயிருக்கும் போது, குருவிக் கூட்டிற்குள் வெடிகுண்டை வீசினாற் போல் 'சகலகலா வல்லவன்' என்கிற கமர்ஷியல் திரைப்படம் வெளியாகி பிரமாண்டமான வரவேற்பைப் பெற்றது. ரஜினியும் தன் பங்கிற்கு 'முரட்டுக்காளை' என்கிற இன்னொரு வெடிகுண்டை வீசினார்.
இதனால் தமிழ் சினிமாவில் நிகழ்ந்து கொண்டிருந்த அந்த இயல்பான மாற்றம் சீர்குலைந்து மீண்டும் கமர்ஷியல் திரைப்படங்களின் ஆதிக்கம் தலைதூக்கியது. தமிழ் சினிமாவின் வரலாற்றை நினைவுகூரும் எந்தவொரு சினிமா ஆர்வலரும், இந்தக் கசப்பான விபத்தை பெருமூச்சுடன் நினைவுகூராமல் கடந்து போக மாட்டார்கள். இந்த வகையில் கமலே இந்த கனவுக்கு முட்டுக்கட்டையாக இருந்தது ஒரு துயரமான முரண். ஆனால் தனக்குப் போட்டியாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் ரஜினிகாந்த்தை எதிர்கொள்ள அப்போது அவருக்கு வேறு வழியும் இருக்கவில்லை.
சரி, கமலுக்கு மட்டும்தான் தமிழில் நல்ல சினிமாக்களை தர வேண்டும் என்கிற கனவு இருந்ததா, ரஜினி வெறும் கமர்ஷியல் ஹீரோதானா, அவருக்கு அப்படியொரு கனவு இருக்கவில்லையா?
ரஜினி திரைப்படக் கல்லூரியில் பயின்றவர் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. உலகத்தின் மிகச்சிறந்த திரைப்படங்கள் அங்கு பாடமாக ஒளிபரப்பப்பட்டிருக்கும். சிறந்த இயக்குநர்களின் பரிச்சயம் மாணவர்களுக்கு அறிமுகமாகியிருக்கும். தமிழின் சிறந்த சினிமா ஆசிரியர்கள் அங்கு சென்று பாடம் எடுத்திருக்கிறார்கள். ஆக... ஒவ்வொரு திரைப்படக் கல்லூரி மாணவருக்கும் தமிழ் சினிமாவில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்பது இயல்பான கனவாக உருவாகியிருக்கும். ரஜினிக்கும் இப்படியொரு கனவு இருந்திருக்கிறது. அது இயக்குநர் மகேந்திரனின் வழியாக சிறிது சாத்தியப்பட்டிருக்கிறது.
தமிழ் சினிமாவிலுள்ள அபத்தங்களை தனது மாணவப் பருவத்திலேயே எள்ளி நகையாடியவர் இயக்குநர் மகேந்திரன். கல்லூரியில் நிகழ்ந்த பேச்சுப் போட்டி ஒன்றில் தமிழ் சினிமாவின் அபத்தங்களைப் பட்டியலிட்டு அவர் நார் நாராக கிழித்து தனது உரையை ஆற்றிக் கொண்டிருந்தார். மாணவர்களின் உற்சாகக் குரல்கள் அந்த இடத்தை அதிர வைத்தன.
அப்போது அந்த மேடையில் சிறப்பு விருந்தினராக அமர்ந்திருந்தவர் எம்.ஜி.ஆர். மகேந்திரனின் பேச்சில் எம்.ஜி.ஆரின் மீதான மறைமுக தாக்குதலும் இருந்தது. எம்.ஜி.ஆரின் கோபம் உலகப் பிரசித்தம். 'என்ன செய்வது?' என்று கல்லூரி நிர்வாகிகள் கையைப் பிசைந்து கொண்டிருக்கும் போது 'நிறுத்திடாத... இன்னமும் நல்லாப் பேசு' என்று ஒருவர் மகேந்திரனை நோக்கி உற்சாகத்துடன் சைகை செய்தார். அவர் வேறு யாருமல்ல.. எம்.ஜி.ஆரேதான்.
எனவே தரப்பட்டிருக்கும் நேரத்திற்கு அதிகமாக பேசி முடித்த மகேந்திரனை எம்.ஜி.ஆர் மனம் உவந்து பாராட்டினார். பிறகு சென்னையில் தங்குவதற்கு இடம் இல்லாமல் அலைந்து கொண்டிருந்த மகேந்திரனை தன் அலுவலகத்திலேயே தங்க வைத்து 'பொன்னியின் செல்வன்' நாவலுக்கு திரைக்கதை எழுத வைத்தார். ஆனால், அந்தத் திட்டம் பின்னர் நிறைவேறாமல் போனது.
பின்னர் 'தங்கப்பதக்கம்' உள்ளிட்ட சில வணிகத் திரைப்படங்களுக்கு கதை - வசனம் எழுத வேண்டிய நிலைக்கு ஆளானார் மகேந்திரன். அவை பெரும்பாலும் வெற்றி பெற்றன என்றாலும் மகேந்திரன் உடைந்து போனார். 'எந்த தமிழ் சினிமாவின் அபத்தங்களை நாம் முன்னர் பட்டியல் இட்டோமோ அதே போக்கிற்கு நாமும் உடன்பட வேண்டியிருக்கிறதே' என்று மனம் கசந்த மகேந்திரன், சினிமாவை விட்டு விலக முடிவு செய்த போது காலம் அவரை கைப்பிடித்து இன்னொரு திசைக்கு அழைத்துச் சென்றது. 'முள்ளும் மலரும்' என்கிற அற்புதமான சினிமாவை இயக்கியதன் மூலம் தன் அசலான பயணத்தை தொடங்கினார் மகேந்திரன்.
மகேந்திரன் வசனம் எழுதிய 'ஆடு புலி ஆட்டம்' போன்ற திரைப்படங்களின் வழியாக மகேந்திரனுக்கு ரஜினி பரிச்சயமானார். தமிழில் சிறந்த திரைப்படங்களை பார்க்கும் ஆசை ரஜினிக்குள் இருந்ததை அப்போதுதான் மகேந்திரன் கண்டுகொண்டார். இருவரும் நெருக்கமான நண்பர்களாக மாறினார்கள். மகேந்திரன் தன் முதல் திரைப்படமான 'முள்ளும் மலரும்' படத்தில் ரஜினிதான் கதாநாயகன் என்பதில் உறுதியாக இருந்தார். 'காளி' என்கிற தன்னுடைய கற்பனை பாத்திரத்திற்கு ரஜினிதான் சரியாக உயிர் தர முடியும் என்கிற அசைக்க முடியாத நம்பிக்கையுடன் இருந்தார். ஏன் இதற்கான திரைக்கதையை எழுதும் போது கூட மகேந்திரனின் கற்பனையில் ரஜினிதான் அடிக்கடி வந்து போனாராம்.
இளையராஜா, பஞ்சு அருணாச்சலம், மகேந்திரன்
ஆனால், தயாரிப்பாளருக்கு ஒரே தயக்கம். "என்னப்பா... முதன் முறை இயக்குநராகப் போறே... ஒரு அழகான முகத்தை ஹீரோவா போட்டு எடுக்கக்கூடாதா." என்று தன் அச்சத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆனால் மகேந்திரன் எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை. '’ரஜினி ஹீரோவா இருந்தா.. இந்தப் படத்தை எடுக்கறேன். இல்லைன்னா என்னை விட்டுடுங்க'’ என்று உறுதியாக நின்றிருக்கிறார். தயாரிப்பாளர் அரைமனதாக சம்மதிக்க ஒருவழியாக படப்பிடிப்பு பெரும்பாலும் முடிந்தது. படத்தின் ரஷ்ஷை பார்த்த தயாரிப்பாளர் 'குய்யோ முறையோ...' என்று அலறி 'என்னய்யா படம் எடுத்து வெச்சிருக்கே... வசனம் பேச வேண்டிய இடத்துல எல்லாம் ஒண்ணுமே இல்ல' என்று கதற 'இல்லைங்க... ரீரிகார்டிங் முடிஞ்சப்புறம் பாருங்க' என்று மகேந்திரன் ஆறுதல் படுத்தினாலும் தயாரிப்பாளர் கேட்பதாயில்லை.
ஆனால் 'முள்ளும் மலரும்' வெளியாகி, பார்வையாளர்களின் ஆரம்பக் கட்ட தயக்கங்களுக்குப் பிறகு அட்டகாசமான வெற்றியைப் பெற்றது. 'பாசமலர்' திரைப்படத்திற்குப் பின்னால் அண்ணன் - தங்கை பாசத்தை மிகச் சிறப்பாக வெளிப்படுத்திய திரைப்படமாக மக்கள் இதைக் கொண்டாடித் தீர்த்தார்கள். காளியையும் வள்ளியையும் அண்ணன் - தங்கையாகவே பார்த்தார்கள். இளையராஜாவின் பாடல்களும் அற்புதமான பின்னணி இசையும் இந்தப் படத்தின் தரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றிருந்தது. படம் பிரமாண்ட வெற்றியை அடைந்தவுடன் மகேந்திரனிடம் ஓடி வந்த தயாரிப்பாளர், ஒரு பிளாங்க் செக்கை கொடுத்து ‘’நீ எவ்ளோ வேணா ஃபில் பண்ணிக்கோ… உன்னை தப்பா நினைச்சிட்டேன்'’ என்று கலங்கியபடி சொல்ல, அதை அன்போடு திருப்பிக் கொடுத்திருக்கிறார் மகேந்திரன்.
"ரெண்டு கையும் காலும் போனா கூட இந்தக் காளின்றவன் பிழைச்சுக்குவான் சார்... கெட்ட பய சார் அவன்" என்று சரத்பாபுவிடம் ரஜினி பேசும் காட்சியை இன்று பார்த்தால் கூட புல்லரிக்கும். அப்படியொரு சிறப்பான, இயல்பான நடிப்பை அநாயசமாக தந்திருப்பார் ரஜினி. அவர் பேசுவது சவடலாக இருந்தாலும் கூடவே கழிவிரக்கமும் சுயபச்சாதாபமும் கலந்திருக்கும். அப்படியொரு அட்டகாசமான கலவையுடன் கூடிய முகபாவத்தைத் தந்திருப்பார். இப்படியாக ரஜினி எனும் மிகச் சிறந்த நடிகன் தன்னை பல இடங்களில் நிரூபித்த திரைப்படம் 'முள்ளும் மலரும்'.
ரஜினி 'சூப்பர் ஸ்டார்' அந்தஸ்தை எல்லாம் அடைந்த நீண்ட காலத்திற்குப் பிறகு, இயக்குநர் பாலசந்தர், ஒரு விழா மேடையில் ரஜினியை பேட்டி எடுக்கும் ஒரு ருசிகரமான சம்பவம் நடந்தது. அதில் "நீ நடித்ததிலேயே உனக்குப் பிடித்த படம் என்ன?" என்று பாலசந்தர் கேட்க, கொஞ்சம் கூட தயங்காமல் 'முள்ளும் மலரும்' என்று பளிச்சென்று பதில் அளித்தார் ரஜினிகாந்த். அவர் நினைத்திருந்தால் தன் குருநாதரை மகிழ்விக்க, பாலசந்தர் இயக்கிய படத்திலிருந்தே ஒன்றைச் சொல்லியிருக்கலாம். ஆனால் தன்னுடைய மனதில் உள்ளதை ஒளிக்காமல் அப்படியே வெளியே சொல்லும் பழக்கம் ரஜினிக்கு இருந்தது.
'முள்ளும் மலரும்' திரைப்படம் முழுமையாக வெளியானதற்கு கமல் ஒரு முக்கியமான காரணமாக இருந்தார் என்கிற தகவல் பலருக்குத் தெரியாது. படத்தின் 'ரஷ்' பிரின்ட்டைப் பார்த்து நொந்து போன தயாரிப்பாளர், ‘’போதும்... இனிமே இந்தப் படத்துக்கு காசு தர மாட்டேன். எப்படியும் வீணாத்தான் போகப் போகுது'’ என்று எரிச்சலுடன் மறுத்து விட்டார். படத்தின் பெரும்பகுதி முடிந்து விட்டாலும் சரத்பாபு, ஷோபாவை முதன் முதலில் சந்திப்பதும், அதற்குப் பிறகு தொடரும் இனிமையான பாடலான 'செந்தாழம் பூவில்' பாடலை படமாக்குவதும் மட்டும்தான் பாக்கி. இந்தக் காட்சிக் கோர்வை இல்லா விட்டால் படம் முழுமையடையாது என்று மகேந்திரனுக்கு அழுத்தமாகத் தோன்றியது.
படப்பிடிப்புக்கு தயாரிப்பாளர் பணம் தர மறுத்து விட்டதால் பரிதவித்தார் மகேந்திரன். இந்தத் தகவல் கமலின் காதுகளுக்குச் செல்ல அவரும் மகேந்திரனின் சார்பில் தயாரிப்பாளரிடம் பேசிப் பார்த்தார். ம்ஹூம். எதுவும் நடக்கவில்லை. ‘'சரி விடுங்க... நான் பணம் தர்றேன்.. நீங்க படப்பிடிப்பு நடத்தும் ஏற்பாடுகளைக் கவனியுங்க" என்று மகேந்திரனுக்கு தைரியமூட்டிய கமல், ஒளிப்பதிவாளரான தனது நண்பர் பாலுமகேந்திராவிடமும் பேசி ஷூட்டிங் நடப்பதற்கான அத்தனை விஷயங்களையும் முடித்துக் கொடுத்திருக்கிறார்.
நல்ல சினிமாவை தமிழில் உருவாக்க வேண்டும் என்கிற ஒரே ஆர்வம், மகேந்திரனையும் கமலையும் நெருங்கிய நண்பர்களாக்கியது. மகேந்திரனின் கனவுகளைப் பற்றி கமல் நன்கு அறிவார். எனவேதான் 'முள்ளும் மலரும்' படம் வெளிவருவதற்கான உதவியைச் செய்தார். ஆனால் கமலும் மகேந்திரனும் இணைந்து பணிபுரியும் சந்தர்ப்பம் அமையவேயில்லை. ரஜினியை நாயகனாக வைத்துதான் மகேந்திரன் சில படங்களை உருவாக்கினார் என்பது ஓர் ஆச்சரியமான விஷயம்.
நன்றி: விகடன்

( திரு கந்தசாமி அவர்களின் முகநூல் பதிவில் இருந்து எடுத்து பகிர்வு)

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2