யார் பெரியவன்? சிறுவர் கதை
யார் பெரியவன்?
ஆதியூரில் இரண்டு புலவர்கள் வசித்துவந்தனர். ஒருவர் வேலப்பகவி மற்றவர் சந்திரகவி. இருவரிடமும் போட்டியும் பொறாமையும் குடிகொண்டிருந்தது. புலவர்களிடம் போட்டி இருக்கலாம். ஆனால் பொறாமை இருக்கலாமா? கூடாதல்லவா? இது அவர்களுக்குத் தெரியவில்லை.ஒருவருக்கொருவர் சளைக்காமல் சண்டையிட்டுக் கொள்வர்.
ஒருநாள் வேலப்பர் வெளியில் கிளம்பினார். அதை அறிந்த சந்திரரும் வேலப்பன் எங்கோ செல்கிறானே எதற்காகவோ என்று அவரை பின் தொடர்ந்தார். சந்திரகவி தன்னை பின் தொடர்வதை அறிந்த வேலப்பரும் நடையை விரைவாக்கினார். ஆனாலும் சந்திரகவி விடுவதாய் இல்லை.பொழுதோ சாய்ந்துவிட்டது. அச்சமயம் எதிரே ஒரு சத்திரம் காணப்பட்டது.
சத்திரம் என்பது ஒரு தங்குமிடம். இது அக்காலத்தில் வழியிடங்களில் வழிப்போக்கர்கள் தங்கி பசியாறி களைப்பு நீங்கி செல்ல உதவும். இங்கு இலவசமாக உணவும் வசதிகளும் செய்து கொடுக்கப்படும். இச்சத்திரங்களை அரசர்களும் செல்வந்தர்களும் கட்டிவைத்து பராமரித்து வந்தனர். அத்தகைய ஒரு சத்திரத்தில் தங்க வேலப்பர் முடிவெடுத்தார். சத்திரத்தின் உள்ளே நுழைந்தார். அவரை தொடர்ந்து சந்திரரும் நுழைந்தார்.
இவர்கள் இருவரைப் பற்றி ஓரளவுக்கு கேள்விப் பட்டிருந்த சத்திரத்து பராமரிப்பாளர் இருவரையும் வரவேற்று உபசரித்தான். ”வாருங்கள் புலவர்களே! வாருங்கள்! உங்கள் வருகையால் இச்சத்திரம் புகழ் அடைந்தது அமருங்கள்!” என்று ஆசனம் கொண்டு வந்து தந்தான்.
” பலே! புலவர்களே என்று அழைத்தாயே இங்கு நான் ஒருவன் தானே புலவன்! வேறு எவனை அப்படி அழைத்தாய்? ”என்று வேலப்பர் கேட்க சத்திரக் காரன் விழித்தான்.
அப்போது சந்திர கவி ”உம்மை நீரே புலவன் என்று பெருமை பீற்றி கொள்ளாதீர் அவன் என்னைத் தான் புலவர்களே என்று அழைத்தான்.என்னுடன் வந்தமையால் உங்களையும் புலவன் என்று தவறாக எண்ணிக் கொண்டு விட்டான் போலும்!” என்று ஏளனமாக சிரித்தபடி ஆசனத்தில் அமர்ந்தார்.
”அடேய்! உனக்கு அறிவிருக்கிறதா! நீ புலவனா!நான் உன்னை விட வயதில் மூத்தவன் நான் நின்றிருக்க நீ என் முன் அமர்வதா? இது நியாயமா இவனுக்கு போய் ஆசனம் அளித்தீரே!” என்று குறைபட்டுக் கொண்டார் வேலப்பர்.
”வயது முதுமையால் அறியப்படுவது அல்ல! அறிவினால் அறியப்பட வேண்டும். அப்படி பார்த்தால் நான் உன்னைவிட அறிவில் பெரியவன்! இதை அறியாமல் உளரும் நீயும் புலவனா?” என்றார் சந்திரகவி.
”யாரைப் பார்த்து அப்படி கூறுகிறாய்? நான் உன்னைவிட வயதில் மட்டுமல்ல அறிவிலும் அனுபவத்திலும் மூத்தவன். வயதை முதுமையை கொண்டுதான் கணிப்பார்கள் அறிவை கொண்டு அல்ல. இதுகூட அறியாத அறிவில்லாதவன் நீ!” என்று சரமாரியாக தாக்கினார் வேலப்பரே!
”வேலப்பரே நீரே ஒத்துக் கொண்டு விட்டீர் நான் அறிவில் ஆதவன் என்று நன்றி நன்றி!” என்றார் சந்திரகவி.
”வேலப்பரே வீணாக எதற்கு என்னை ஏசுகிறீர்கள்? நான் மதியிருப்பதால்தான் உங்களிடம் பணிவாக பேசிக் கொண்டு இருக்கிறேன் பிறரை ஏசுவதுதான் பெரியோருக்கு அழகா அனுபவத்தில் பெரியவரான தங்களுக்கு அது கைவரப் பெற்றிருக்கிறதோ? இனியும் என்னை திட்டுவதை விட்டு வேலையை பாருங்கள்!” என்றார் சந்திரகவி.
”என் வேலையை பார்க்க எனக்குத் தெரியும். நீ ஏன் என்னை தொடர்ந்து வந்தாய்? அதை சொல்?”
” என் கால் என் வலி நான் வந்தேன் இது ஒன்றும் உங்கள் சொத்து அல்லவே? அபகரிக்க!” என்றார் சந்திரகவி.
பொறுமையிழந்தான் சத்திரக்காரன்.
“ஐயா கவிஞர்களே கொஞ்சம் உங்கள் சண்டையை நிறுத்துகிறிர்களா?” என்று குரல் கொடுத்தான்.
”என்ன? ”என்று இருவரும் அவனை நோக்கினர்
”ஐயா புலவர்களே உங்களுக்குள் யார் பெரியவன் என்ற தகறாருக்கே இடமில்லை! பெரியோருக்கு அழகு அடக்கமாயிருத்தல்! தான் தான் பெரியவன் என்று அவர்கள் பறை சாற்றிக் கொள்ள மாட்டார்கள். நீங்கள் பறைசாற்றிக் கொள்கிறீர்கள் அத்துடன் உங்களிடம் அடக்கமும் இல்லை அகந்தைதான் உள்ளது ஆகவே நீங்கள் இருவரும் சிறியவர்கள்தான்! உங்கள் சண்டையை நிறுத்திவிட்டு ஓய்வெடுங்கள்!”என்றான்.
சத்திரக்காரன் பேசியதைக் கேட்டு புலவர்கள் இருவரும் வெட்கினர். தங்கள் சண்டையை நிறுத்திவிட்டு மவுனமாயினர்.
(திருத்திய மீள் பதிவு)
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துகளை பகிர்ந்து செல்லலாமே!
ஒரே போடு... கதை முடித்தது...!
ReplyDelete