புது வெள்ளம் பாயும் ஆடிப்பெருக்கு!

 

புது வெள்ளம் பாயும் ஆடிப்பெருக்கு!


  நாகரீகங்கள் ஆற்றங்கரைகளில் தோன்றியது என்று படித்திருக்கிறோம். ஏனெனில் மக்கள் சமூகம் சமூகமாக குடியேறி வாழ நீர் இன்றியமையாத ஒன்று. நீர்வளம் மிக்க பூமி மற்ற எல்லா வளங்களிலும் வளப்பமாக இருக்கும்.

  ஆறுகள் அக்காலம் தொட்டு இக்காலம் வரை மக்களின் நீர்த்தேவையைப் பூர்த்தி செய்து வருகின்றன. அதற்கடுத்ததாய் ஏரிகள். தமிழகத்தில் சித்திரைமாதம் முதல் ஆனி மாதம் ஆரம்பம் வரை கோடை வெயிலின் தாக்கம் கூடுதலாய் இருக்கும். ஆனிமாத கடைசிவாரத்தில் தென்மேற்கு பருவமழை துவங்கும்.

  தென்மேற்கு பருவமழை கொஞ்சம் தீவிரம் அடைந்து ஆடிமாதம் பாதியில் ஆறுகளில் வெள்ளம் பாய்ந்தோடும்.காய்ந்து வறண்டு கிடந்த நதிகளில் கானல்நீர் மறைந்து நன்னீர் பாய்ந்தோடும் காட்சி காண்பதற்கு அழகு என்பதோடு நம் வாழ்க்கைக்கும் அழகு சேர்க்கும் ஒன்றாகும்.

 இந்த புதுவெள்ளம் பாய்ந்தோடும் ஆடி பதினெட்டாம் நாளை தமிழக மக்கள் ஆறுகளுக்கு நன்றி சொல்லும் நாளாக ஆடி பதினெட்டாம் பெருக்காக காலம் காலமாக கொண்டாடி வருகின்றனர். கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலில் கூட ஆடிபதினெட்டாம் பெருக்கு அழகாக விவரிக்கப்பட்டு இருக்கும்.

   பொதுவாக தமிழக மக்கள் கொண்டாடும் பண்டிகைகள் திதி அல்லது நட்சத்திரம் அடிப்படையில் கொண்டாடப்படும். தைப்பொங்கல் மட்டும் விதிவிலக்காக தை முதல் தேதியில் கொண்டாடப்படுகின்றது. அதே போல் ஆடி மாதத்தில் தேதி அடிப்படையில் கொண்டாடப்படும் பண்டிகை ஆடிப்பதினெட்டாம் பெருக்கு ஆகும்.

 நம் வாழ்வில் வளம் சேர்த்து நீர் ஆதாரங்களாய் விளங்கும் நதிக்கு நன்றி செலுத்தும் வகையில் ஆடிபதினெட்டு அன்று நம் தமிழக மக்கள் நதிக்கரைகளிலும் ஏரிக்கரைகளிலும் கூடி பொங்கல்வைத்து ஆற்றிலும் ஏரியிலும் தீபங்கள் ஏற்றி பூத்தூவி கொண்டாடும் விழா ஆடிப்பெருக்கு.

ஆடிப்பட்டம் தேடி விதை என்றொரு பழமொழியும் இந்த பண்டிகையை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒன்று. ஆடி மாதத்தில் நெல் கரும்பு, சோளம் போன்றவைகளை விதைத்து தை மாதத்தில் அறுவடை செய்வார்கள்.

 


பெருக்கு என்ற சொல்லுக்கு பெருக்கிக் கொள்ளுதல், அதிகமாக்கி கொள்ளுதல் என்ற பொருளுண்டு. ஆடியில் புதுவெள்ளம் ஓடுகையில் நதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்படும். அதே போல் இப்பண்டிகையை கொண்டாடும் குடும்பங்களில் மகிழ்ச்சி பெருக்கெடுத்து ஓடும் என்ற நம்பிக்கை உண்டு. குறிப்பாக காவிரிக்கரையோர மக்கள் இப்பண்டிகையை வெகுசிறப்பாக கொண்டாடுவர்.

  நதிகளை பெண் தெய்வங்களாக வழிபடும் மரபும் தமிழருக்கு உண்டு. ஆடி பதினெட்டில் பெருக்கெடுத்துவரும் நதியை பெண் தெய்வமாக போற்றி வணங்கி காதோலை, கருகமணி, வளையல், பூச்சரங்கள் , மஞ்சள், குங்குமம், வெற்றிலைப்பாக்கு தாம்பூலம் கொடுத்து பொங்கல் வைத்து படையலிட்டு நதிகளில் இட்டு வணங்குவது வழக்கம்.

 நதிக்கரைகளில் கூடும் திருமணமான பெண்கள் இத்தகைய படையலை நதிக்கு நிவேதனம் செய்து தாலிச்சரடு மாற்றிக் கொள்வார்கள். திருமணமாகாத பெண்கள் தாங்கள் விரும்பும் மணமகன் கிடைக்கப் பிரார்த்தனை செய்து கொள்வார்கள்.

 புதிதாக திருமணமான பெண்கள் ஆடிமாதத்தில் தாய்வீட்டுக்கு அழைத்துச்செல்லப்படுவார்கள். ஆடி பதினெட்டில் மருமகனை அழைத்து  ஆடிச்சீர் செய்து அனுப்புவார்கள்.மருமகனுக்கு புதுத்துணி, எடுத்துக்கொடுப்பார்கள்.  பெண்கள் முளைப்பாரியை தயார்செய்து ஆடிப்பெருக்கில் காவிரியில் கரைப்பதும் வழக்கம்.

அன்னை பார்வதி சிவனை இந்த தினத்தில் தியானித்து வழிபட்டதாகவும். சிவபெருமான் சங்கர நாராயணராக இந்தநாளில் அவதரித்த்தாகவும் புராணங்கள் சொல்கின்றன.

நல்ல நீர்வளத்தையும் செழிப்பான அறுவடையையும் வளமான பொருளாதாரத்தையும் வேண்டி நதிகளுக்கு பூஜை செய்து நன்றிக்கடன் செலுத்துகின்றனர் உழவர்கள்.


திருவரங்கம் ரங்கநாதப் பெருமாளின் தங்கையாக கருதப்படுகின்றார் சமயபுரம் மாரியம்மன். ஆடி பதினெட்டாம் நாளில் தங்கைக்கு சீர்கொடுக்க திருச்சி அம்மாமண்டபம் படித்துறைக்கு எழுந்தருள்வார் ஸ்ரீ ரங்கநாதர். அன்று காலை காவிரிநீரூற்றி ரங்கநாதருக்குத் திருமஞ்சனம் நடைபெறும். அன்று மாலைவரை அங்கே வீற்றிருக்கும் ரங்கநாதர். தங்கை சமயபுரத்தாளுக்கு சீர் கொடுக்கும்பொருட்டு பட்டுப்புடவை, தாலிப்பொட்டு, மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட மங்களப் பொருட்களை காவிரியில் மிதக்கவிடுவர்.

  ரங்க நாதரே சீர் கொடுக்கையில் மனிதப்பிறவிகள் நாம் எம்மாத்திரம். காவிரிக்கரையோர மக்கள் அன்று தன் உடன் பிறந்தாளுக்கு சீர் வழங்கி ஆடிப்பெருக்கினை விசேஷமாகக் கொண்டாடுவர்.

 அசுர்ர்களை வதம் செய்த ராமபிரான் தன் தோஷங்கள் நீங்கும் பொருட்டு வசிஷ்ட முனிவரின் அறிவுரைப்படி தட்சிண கங்கை எனப்படும் காவிரியில் ஸ்நானம் செய்தநாள் ஆடிப்பதினெட்டு என்று புராணங்கள் கூறுகின்றன. 

  பவானி கூடுதுறை தென்னிந்தியாவின் திரிவேணி என்று அழைக்கப்படும் அழகியத் தலமாகும். இங்கே ஆடிப்பெருக்கன்று ஆயிரக்கணக்கான மக்கள் கூடி  கூடு துறையில் நீராடி சரடு மாற்றிக்கொண்டு. நதியில் மங்கலப் பொருட்களை விட்டு வழிபடுவது சிறப்பாகும். அன்று பூஜையில் வைத்த மங்கலச் சரடை பெண்கள் வலது கையிலும் ஆண்கள் இடது கையிலும் கட்டிக் கொள்வார்கள். இதனால் வீட்டில் சுபகாரியங்கள் விரைந்து நடக்கும் என்பது அங்குள்ள மக்களின் நம்பிக்கையாகும்.

ஆடி பதினெட்டில் இன்னொரு சிறப்பான அம்சம்  .  நதிக்கரைகளில் கூடும் மக்கள் விதவிதமாய் கலவைசாதம் செய்து  கூடி உண்டு மகிழ்வது அலாதியானது. எலுமிச்சை சாதம்,தேங்காய் சாதம், புளியோதரை, சர்க்கரைப்பொங்கல், வடை பாயசம் என செய்து சுற்றங்களுக்கும் கொடுத்து தாமும் உண்டு கூடிக்களிப்பது சிறப்பான ஒன்றாகும்.

 

ஆடிப்பதினெட்டில் நாமும் நதிக்கரையோரம் சென்று நதிகளை வழிபட்டு வளம் பெறுவோமாக!

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2