வாய்சவடால் வானமலை! பாப்பாமலர்! சிறுவர்கதை!

 

வாய்சவடால் வானமலை!

     நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு.


முன்னொரு காலத்தில் கோணங்கிப் பட்டினம் என்றொரு தேசம் இருந்தது. அந்த தேசத்திலே இரண்டு வாலிபர்கள் வசித்து வந்தனர். முதலாமவன் வாய்சவடால் வானமலை. அவன் எல்லா காரியத்தையும் வாய்சவடால் அடித்தே சாதித்துவிடுவான். மற்றொருவன் அடிதடி அம்பலவாணன். அவன் பிறரை அடித்து பயம் காட்டியே காரியத்தை சாதித்துவிடுவான்.

     இந்த இரு வாலிபர்களும் அந்த தேசத்தில் உடன்பிறந்த அண்ணன் தம்பி போல ஒன்றாய் உலாவி தங்கள் காரியத்தை சாதித்து வந்தார்கள். ஒருநாள் அடிதடி அம்பலவாணன் வாய்சவடால் வானமலையிடம்.” நான் நாளைக்கு காளிக்கு ஓர் ஆட்டை பலி கொடுப்பதாக வேண்டிக்கொண்டுவிட்டேன். இன்று இரவு எங்காவது போய் ஓர் ஆட்டுக்கிடாவை தூக்கிவர வேண்டும். அதற்கு உன் உதவி தேவை!” என்று கேட்டான்.

   வாய்சவடால் வானமலை,”ஓ! அதற்கென்ன! பேஷாக ஓர் ஆட்டுக்கிடாவை இன்று கிளப்பி வந்துவிடலாம். அடுத்த கிராமத்தில் ஓர் ஆட்டுக்கிடை இருக்கிறது. இரவு அங்கே சென்றோமானால் ஓர் ஆட்டுக்கிடாவை தூக்கிவந்துவிடலாம்”. என்று சொன்னான்.

     அன்று இரவு இருவரும் சீக்கிரமாகவே உணவு அருந்திவிட்டு அங்கிருந்து புறப்பட்டு ஆட்டுக்கிடை இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தனர். ஆட்டுக் கிடையில் ஆட்டை மேய்ப்பவன் காவலுக்கு இருந்தான். இவர்கள் அங்கே சென்ற சமயம் அவன்  தன் கிடையை மூடிவிட்டு அதற்கு எதிரில் ஒரு ஆறடி உயரம் உடைய கொம்பு ஒன்றை நட்டுவிட்டு அதன் மீது கம்பளிப் போர்வை ஒன்றை போர்த்திவிட்டு  “ மகனே கவனமாக இருக்க வேண்டும். நான் வீட்டுக்குப் போய் சோறு சாப்பிட்டுவிட்டு வரை நீதான் கிடைக்கு காவல். நீ ஆடுகளை பத்திரமாகப் பார்த்துக் கொள்ளவேண்டும். திருடன் கிருடன், புலி கிலி  முனி கினி ஏதாவது வந்து ஆட்டை திருடிக்கொண்டு போகாமல் பார்த்துக் கொள். என்ன நான் சொல்வது காதில் விழுந்ததா?” என்று போர்வை தன் கோலினால் அசைத்தான். போர்வை அசைந்து  தலை அசைப்பது போல அசையவும். ”சரி! சரி! நான் போய் வருகிறேன்!” என்று அவன் கிளம்பிப் போய்விட்டான்.

   அங்கே அவன் மகனும்  இல்லை! ஒருவரும் இல்லை. கோல் மீது போர்த்திய கம்பளியை ஓர் உருவமாக நிலை நிறுத்திவிட்டு அவன் சென்றுவிட்டான்.

  அந்த கிடையின் அருகே வானமலையும், அம்பலவானனும் வந்தது போல ஒரு புலியும் ஒரு முனியும் வந்து இருந்தன. ஆடு மேய்ப்பவன் புலி கிலி என்று சொன்னது புலிக்கு பயத்தை உண்டாக்கிவிட்டது.  அது என்ன கிலி. அது நம்மைவிட பலசாலியாக இருந்து நம்மை அடித்து விழுங்கிவிட்டால் என்ன செய்வது என்று அதன் கால்கள் உதறல் எடுத்தது. ஆட்டை திருடும் எண்ணத்தை கைவிட்டு அங்கேயே பதுங்கிக் கொண்டது.

   அதே சமயம் அங்கிருந்த முனியும்  அந்த ஆடுமேய்ப்பவன் சொன்ன முனி கினி என்ற வார்த்தையைக் கேட்டு கொஞ்சம் பதட்டம் அடைந்துவிட்டது. ”அது என்ன கினி.அது நம்மைப் போல சடாமுடி தரித்திருக்குமா? கையில் உடுக்கை வைத்திருக்குமா? நம்மைவிட பலசாலியாக இருக்குமா? என்னவென்று தெரியவில்லையே!” ஒரு வேளை அது நம்மை அடித்துவிட்டால் என்ன செய்வது?”என்று பயந்து அந்த முனி ஓர் ஆட்டுக்கிடா உருவம் எடுத்து அந்த கிடைக்குள் பதுங்கிக் கொண்டது.

 

இங்கே புலியும் முனியும்  கிலிக்கு கினிக்கும் பயந்த்து போல அங்கே அடிதடி அம்பல வானனும் ஒரு விஷயத்துக்கு பயந்தான். திருடன் தெரியும். அதென்ன கிருடன்? அவன் நம்மை விட வலிமையானவனாக இருந்தால் அவன் நம்மை வீழ்த்தி ஆட்டுக்கிடாவை தூக்கிப் போய்விட்டால் என்ன செய்வது. நாளைக்கு காளிக்கு பலி கொடுக்க வேண்டுமே? என்று அச்சப்பட்டான். ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் ”வானமலை! வா! கிடைக்குள் புகுந்து ஆட்டை அபகரிப்போம்!” என்று அடிமேல் அடி வைத்து  கம்பளி போர்த்தியிருந்த கோலுக்கு பின்புறம் சென்று தடியால் ஓங்கி அடித்தான் அம்பலவாணன்.  அந்த அடியில் அந்தகோல் இரண்டாக உடைந்து கம்பளி கீழே சரிந்தது.

   ”அடேய்! அம்பலவானா! உன் வீரத்தை போயும் போயும் ஒரு கொம்பிடம் காட்டியிருக்கிறாயே! ”என்று இடி இடியென சிரித்தான் வானமலை.

   அம்பலவாணனுக்கு வெட்கமாகப் போய்விட்டது. ஆட்டிடையன் நல்ல ஏமாற்றுக்காரன்! நம்மை நன்றாக ஏமாற்றிவிட்டான். ”சரிவா! ஆக வேண்டியதைப் பார்ப்போம் உள்ளே போய் நன்றாக கொழுத்த கிடாவாக தூக்கிக்கொண்டு புறப்படுவோம்!” என்று உள்ளே நுழைந்தான்.

    வாய்சவடால் வானமலையும் ”புலிகிலியோ முனி கினியோ இல்லை நம்மைப்போல் திருடன் கிருடனோ எவன் இருந்தாலும் எனக்கு பயமில்லை! எனக்கு எல்லோரையும் அடக்கவும் தெரியும் விரட்டவும் தெரியும் நீ பயப்படாமல் என்னோடு வா!” என்று அம்பலவாணனை அழைத்துக்கொண்டு கிடைக்குள் நுழைந்தான்.

கிடைக்குள் நல்ல கொழுத்த கிடாவாக ஒர் ஆட்டைப் பார்த்தனர். ”இதுதான் நல்ல ஆடாக இருக்கிறது. இதைத் தூக்கிக் கொள்வோம்” என்று ஆடு ஒன்றைத் தூக்கிக்கொண்டான் அம்பலவாணன். அது ஆடு உருவத்தில் இருந்த முனி.

   இருவரும் நடக்க ஆரம்பித்தனர். முனி அம்பலவாணனை அழுத்த ஆரம்பித்தது. அம்பலவாணனால் நடக்க முடியவில்லை!” வானமலை! காப்பாற்றுடா! நான் சுமந்து கொண்டிருப்பது ஆடில்லை போலிருக்கிறது. இருக்க இருக்க கனக்கிறது. என் நெஞ்சை அடைக்கிறது. ஒரு வேளை இது முனியாக இருக்குமோ என்னவோ தெரியலையே!” என்று கத்தினான் அம்பலவாணன்.

    வானமலைக்கும் உள்ளூர பயம்தான்! ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், ”அடேய் நீ பேருக்குக்குத்தான் பலவாணன். நிஜத்தில் புஸ்வாணன் தான்! இப்படி பயப்படுகிறாயே! நீ சுமப்பது ஆடுதான்! அது முனியில்லை! அப்படி அது முனியாக இருந்தாலும்  கினியாக இருந்தாலும் நீ பயப்பட வேண்டாம். ஆட்டை கீழே இறக்கு! என்னிடம் இருக்கும் பட்டாக் கத்தியால் ஒரே போடு! அதை அறுத்து எடுத்துச்செல்வோம்!” என்றான்.

   இதைக்கேட்டதும் ஆடுவடிவத்தில் இருந்த முனி வெலவெலத்துப் போய்விட்டது.இவர்களிடம் மாட்டினால் ”நம் கதி அதோ கதி”தான் இனி இங்கு இருக்க வேண்டாம் என்று அம்பலவாணனிடமிருந்து பிடியை உருவிக்கொண்டு பறந்து ஓடிவிட்டது.

     வானமலையும் அம்பலவாணனும் திகைத்துப் போனாலும். ”போனால் போகட்டும்! காளிக்கு இந்த ஆட்டை பலிவாங்கிக்கொள்ள விருப்பம் இல்லை போல! பிழைத்துப்போகட்டும்! நாளை வேறு ஆட்டை ஆட்டைப் போடுவோம்! இப்போ வீட்டுக்குப் போவோம்!” என்று வீட்டுக்குச்சென்றுவிட்டனர்.

 அவர்களிடம் இருந்து தப்பி பிழைத்த முனி தன் இனத்தாரிடம்  சென்று நின்றது.  ”என்னடா இப்படி ஓடிவருகிறாய்? நம்மைப் பார்த்துதான் எல்லோரும் ஓடிச்செல்வார்கள். நீ யாரைப் பார்த்து ஓடி வருகிறாய்?” என்று அங்கிருந்த முனிகள் கேட்டன.

  ”கோணங்கி தேசத்தில் இரண்டு வாலிபர்கள் இருக்கிறார்கள்.  அவர்களிடம் அகப்பட்டுக் கொண்டேன். தப்பி வருவதற்குள் பெரும்பாடு ஆகிவிட்டது. ஒரு கணம் நான் ஏமாந்திருந்தால் என்னை வெட்டிப்போட்டு இருப்பார்கள். நான் மறுபிறவி எடுத்து வந்தது போல் இருக்கிறது.” என்று பெருமூச்சுவிட்டது முனி.

   ”போடா! போ! கேவலம் மனிதர்களிடம் அகப்பட்டுக்கொண்டு மிரண்டு வந்திருக்கிறாயே நீயெல்லாம் ஒரு முனியா? உனக்கு வெட்கமாய் இல்லையா?” என்று மற்ற முனிகள் இந்த முனியை கேலி பேசின.

  ”நீங்கள் கேலி பேசுவது இருக்கட்டும்! முடிந்தால் நீங்கள் அனைவரும் சென்று அந்த இளைஞர்களை ஜெயித்துவிடுங்கள் பார்க்கலாம். நான் என் தோல்வியை ஒப்புக்கொள்கிறேன்!” என்று சவால் விட்டது ஓடிவந்த முனி.

   ”சரி! நாங்கள் சவாலை ஏற்றுக்கொள்கிறோம்! நாளை இரவு நாங்கள் கோணங்கி தேசத்திற்கு சென்று அந்த இளைஞர்களை வென்று வருகிறோம்!” என்றன முனிகள்.

  மறுநாள் இரவு. கொணங்கி தேசம் சென்ற முனிகள். வானமலையின் வீட்டுக்குச் சென்றன. அங்கே வீட்டினுள் மனைவி பிள்ளைகளுடன் படுத்திருந்தான் வானமலை. வெளியே திண்ணையில் படுத்திருந்தான். அம்பலவாணன்.

 வீட்டு வாசல் புறம் நான்கு முனிகளும் கொல்லைப்புறம் நான்கு முனிகளும் சென்று உள்ளே செல்வதற்கு தயாராக காத்திருந்தன. வாசலில் படுத்திருந்த அம்பலவாணன் முனிகளின் நடமாட்டைத்தை கவனித்துவிட்டான்.


  ஓசைப்படாமல் சென்று கதவை மெல்லத் தட்டினான். வானமலை ”என்னடா அம்பலவாணா?” என்றான்.

      ”சத்தம்போடாமல் மெல்லக் கதவைத் திறந்து பார்!” என்றான் அம்பலவாணன்.

   கதவைக் கொஞ்சமாகத் திறந்து வெளியே பார்த்தான் வானமலை. அங்கே மரத்தின் பின்னே முனிகள் ஒளிந்திருப்பதைக் கண்டான். ”ஓ! இதுதான் விஷயமா?  அம்பலவாணா!  ஓசைப்போடாமல் தகவல் சொன்னதற்கு நன்றிடா!”

    ”இன்னைக்கு காலையிலேதான் மூணு முனிகளை பிடிச்சு! என் பொண்டாட்டிக்கும் பிள்ளைக்கும் கொடுத்தேன்! என் பையன் பசி ஆறலை! இன்னும் ரெண்டு முனிங்க வேணும்னு என் பையன் கேட்டான். நானும் காலையிலே இருந்து சாப்பிடலை! வெளியே நல்ல கொழுத்த முனிகளா இருக்கே! பிடிச்சு அடிச்சோம்னா இன்னைக்கும் நாளைக்கும் பசியில்லாம இருக்கலாம்!  நீ அந்த மந்திரத் தடியை எடு! நான் மந்திர கயிறை எடுத்தாரேன்!” என்று உள்ளே நுழைந்து ஒரு தாம்புக்கயிறை எடுத்து வந்தான்.

   ”இவன் பையனும் பொண்டாட்டியும் மூணு முனிகளை தின்னும் பசி ஆறலையாமே! இவன் எத்தனை முனிகளைத் தின்னுவானோ தெரியலையே!  திண்ணை மேல படுத்திருக்கிறவன் வேற மாமிச மலையாட்டும் இருக்கான். அவன் எத்தனை பேரை திண்ணுவானோ தெரியலையே! இங்க இருந்தா நமக்குத்தான் ஆபத்து வாங்க ஓடிரலாம்! ”என்று முனிங்க  எல்லாம் பக்கத்து தேசத்துக்கு ஓடிருச்சு!

  ”அடேய்!வானமலை! புத்திமான் பலவான்ற பழமொழியை நிருபிச்சிட்டேடா! உடம்புலே பலம் இருந்தா போதாது! புத்தியும் இருக்கணும்! உன் அறிவுக்கூர்மையாலே வாய்ச்சவடால் பேசியே முனிகளை ஓட்டிட்டியே நீதான் உண்மையிலே பலசாலி!” என்று வானமலையைத் தழுவிக்கொண்டான் அம்பலவாணன்.

 (செவிவழிக்கதை)

தங்கள் வருகைக்கு நன்றி! கதையைவாசித்தபின் கருத்திட்டுச் செல்லலாமே! நன்றி!

 

Comments

  1. கதை வேடிக்கையாகவும் சுவாரஷ்யமாகவும் இருந்தது. பாராட்டுகள்.
    -சின்னஞ்சிறுகோபு.

    ReplyDelete
  2. சிறுவர்களுக்கான கதையை ரசித்து வாசித்து குழந்தையாகிவிட்டேன், சுரேஷ்!!

    கீதா

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2