யார் பெரியவன்? சிறுவர் கதை
யார் பெரியவன்? ஆதியூரில் இரண்டு புலவர்கள் வசித்துவந்தனர். ஒருவர் வேலப்பகவி மற்றவர் சந்திரகவி. இருவரிடமும் போட்டியும் பொறாமையும் குடிகொண்டிருந்தது. புலவர்களிடம் போட்டி இருக்கலாம். ஆனால் பொறாமை இருக்கலாமா? கூடாதல்லவா? இது அவர்களுக்குத் தெரியவில்லை.ஒருவருக்கொருவர் சளைக்காமல் சண்டையிட்டுக் கொள்வர். ஒருநாள் வேலப்பர் வெளியில் கிளம்பினார். அதை அறிந்த சந்திரரும் வேலப்பன் எங்கோ செல்கிறானே எதற்காகவோ என்று அவரை பின் தொடர்ந்தார். சந்திரகவி தன்னை பின் தொடர்வதை அறிந்த வேலப்பரும் நடையை விரைவாக்கினார். ஆனாலும் சந்திரகவி விடுவதாய் இல்லை.பொழுதோ சாய்ந்துவிட்டது. அச்சமயம் எதிரே ஒரு சத்திரம் காணப்பட்டது. சத்திரம் என்பது ஒரு தங்குமிடம். இது அக்காலத்தில் வழியிடங்களில் வழிப்போக்கர்கள் தங்கி பசியாறி களைப்பு நீங்கி செல்ல உதவும். இங்கு இலவசமாக உணவும் வசதிகளும் செய்து கொடுக்கப்படும். இச்சத்திரங்களை அரசர்களும் செல்வந்தர்களும் கட்டிவைத்து பராமரித்து வந்தனர். அத்தகைய ஒரு சத்திரத்தில் தங்க வேலப்பர் முடிவெடுத்தார். சத்திரத்தின் உள்ளே நுழைந்தார். அவரை தொடர்ந்து சந்திரரும் நுழைந்தார். ...