நொடியில் படிக்க ரெடியா? நொடிக்கதைகள் பகுதி 3

நொடியில் படிக்க ரெடியா? நொடிக்கதைகள் பகுதி 3


வலைக்காதல்!

வாட்சப் குருப்பில் ஆரம்பித்து முகநூல் சாட்டிங்கில் வளர்ந்து இன்ஸ்டாகிராமில் வதனத்தை பதிவு செய்து இதயத்தை ஷேரிட் செய்ததில் ட்விட்டரில் மோதலாகி கோபத்தில் ஹேங்க் அவுட்  ஆனதும் ஒ.எல்.எக்ஸில்  எக்ஸேஞ்ச் செய்து  மேட்ரிமோனியில் அவசரத்தில் மூழ்கி மெசெஞ்சரில் முடிந்து போனது வலைக்காதல்.

  குடிஅரசு!

     மக்களால் மக்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசே குடியரசாகும் பள்ளியில் பிள்ளைகளுக்கு குடியரசு தின உரையாற்றிக்கொண்டிருந்தார்
ஓட்டுக்களை விலைக்கு வாங்கி ஜெயித்த எம்.எல். ஏ.

முக்கியஸ்தர்!

      காலையில் கடை திறந்து இன்னும் சொல்லிக்கொள்ளும்படி வியாபாரம் ஆகவில்லை! இன்னும் அரைமணியில் கூட்டம் அள்ளும். அதற்குள் அந்த முக்கியஸ்தர் வந்துவிட்டால் போதும் சமாளித்துவிடலாம். இல்லையென்றால் இன்று திண்டாட்டம்தான். தினம் தினம் ஏழரைக்கெல்லாம் வந்துவிடுவார். அவர் வந்து போனபின்னரே வியாபாரம் சூடுபிடிக்கும் இன்னும் காணவில்லையே!  கண்கள் அவரையே தேடிக்கொண்டிருக்க அவர் வந்தார். மூட்டை ஒன்றை அவிழ்த்து கொட்ட சில்லறை நாணயங்கள் சிதறின. மடமடவென எண்ணி  முன்னூறு இருக்கு! இந்தா என்று நோட்டை தந்துவிட்டு  சில்லறைகளை கல்லாவில் கொட்டினேன். சில்லறை இல்லேன்னா வியாபாரம் படுத்துடும் இல்லே!

பிரபலம்!

     மரியாதை இல்லாத இடத்துக்கு நான் வரமாட்டேன்! வேற எதுவும் முக்கியமில்ல மனுஷனுக்கு மரியாதைதான் முக்கியம்! என்று எப்போதும் மரியாதைக்கு முக்கியத்துவம் தரும் அந்த பிரபலர் மரணித்துவிட்டார். ப்ளக்ஸ்பேனர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்த மாலைகள் குவியத்துவங்க ஒரே அல்லோகலம்! அனைவரும் கலைய  பொணத்தை பாடையிலே கட்டுங்க சீக்கிரம் சுடுகாட்டுக்கு கொண்டுபோகனும் . இறுதியாத்திரையில் அவர் மரியாதை மறைந்து போனது.

சிக்கனம்!

    வண்டியை ஆடவிட்டுக்கிட்டே பேசிக்கிட்டிருக்கியே? நிறைய பணம் வைச்சிருக்கியா பெட்ரோல் போட! .. “ஆஃப் பண்ணிட்டு பேசுப்பா! என்று சொன்ன நண்பன் ,வீட்டு வாட்டர் டேங்க் ஓவர் ப்ளோ ஆகி வீணாக ஓடிக்கொண்டிருந்ததை சட்டை செய்ய வில்லை

எல்லாம் ஒரே சீரீஸ்!

       எப்ப பாரு சீரியல்தான்! காலையிலே பதினோறு மணிக்கு ஆரம்பிச்சா ராத்திரி பதினோறு மணி வரைக்கும் ஒரு சீரியல் விடறதில்லை! ஒரே அழுகை பழிவாங்கல் வில்லிகள் சுத்த போர்! எப்படித்தான் பாக்கறாங்களோ? தெரியலை மனைவியை பற்றி நண்பரிடம் சொல்லிக்கொண்டிருந்த அதே வேலையில், சதா பேஸ்புக்குன்னு ஒன்னை கட்டிண்டு அழறார்? பல்லுக்கூட விலக்காம போனை எடுத்து மேய்ஞ்சுகிட்டு அப்படி என்னதான் பார்ப்பாரோ தெரியலைடி!  கணவரை கலாய்த்துக்கொண்டிருந்தாள் அந்த மனைவி.

கடன்!


    ஐம்பதும் நூறும் அடிக்கடி கடன் வாங்கும் நண்பனை அந்த பெட்டி கடையில் முதலாளியாய் பார்த்ததும் சந்தோஷம். எப்படியோ உருப்பட்டால் சரி! வாழ்த்துக்கள் சொல்லி ஆமாம்… எப்படிடா திடீர்னு பெட்டிக்கடை வைக்க பணம்? என்று கேட்டபோது   எல்லாம் பேங்க் லோன் தான் என்றான்.

பேனா!

    வங்கியில் நல்ல கூட்டம்! உள்ளே நிறைய பேர் பார்ம் பில்லப் செய்து கொண்டிருக்க “ சார் கொஞ்சம் பேனா தர்றீங்களா? என்று அந்த இளைஞனிடம் கேட்டேன். இது உங்க பேனாவா? தேங்க்ஸ் என்று கொடுக்க ஒரு மணி நேரமாய் வங்கி முழுக்க சுற்றி வந்த பேனாவை பையில் பத்திரப்படுத்தியபடி வெளியே வந்தேன்.

கிரிக்கெட்!

     இவனுங்க எல்லாம் என்னத்தை ஆடி என்னத்தை கிழிக்கப் போறானுவ! எல்லாம் பணம்? பிக்ஸிங்! இவங்க ஆட்டத்தை பாக்கிறது வேஸ்ட்! தோற்றுப் போன டீமை விமரிசித்த வாய் மறுநாள் ஜெயிக்கையில் மச்சி! மேட்ச் பார்த்தியா! அட்டகாசமா இருந்துச்சு என்கிறது.

இலவசம்!

    இலவசமாய் பொருட்கள் கொடுத்தே நாட்டை அரசியல் கட்சிகள்  கெடுத்து குட்டிச்சுவராய் ஆக்கிவிட்டதாய் தலையங்கத்தில் காட்டமாய் விமரிசித்து எழுதியிருந்த அந்த வார இதழுடன் இலவசமாய் ஒரு ஷாம்பு சாஷே கொடுத்து இருந்தார்கள்.


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!  

Comments

  1. அனைத்தும் அருமை நண்பரே கடைசி இலவசம் ஸூப்பர்

    ReplyDelete
  2. அன்பு நண்பரே! பாராமுகமாய் இருந்தாலும் கிருஷ்ணாலயா ரவிக்கிருஷ்ணா தங்கள் பதிவுகளை தொடர்ந்து வாசித்து வருகின்றேன்.
    குடியரசு தின வாழ்த்துக்கள்!
    http://www.friendshipworld2016.com

    ReplyDelete
    Replies
    1. பாராமுகம் ஏதும் இல்லை நண்பரே! உங்களின் வலைப்பூ என் டேஷ் போர்டில் வருவது இல்லை! புது முகவரி மாறி விட்டீர்கள் போல! வருகிறேன் நண்பரே! நேரம் கிடைக்கையில் என்னால் இயன்றவரை அனைத்து பதிவுகளையும் வாசிப்பவன் நான். தவறாக எண்ண வேண்டாம். நன்றி!

      Delete
  3. எல்லாம் ஒரே சீரீஸ்!...பதிவர்கள் நமக்கும் இது பொருந்தும் :)

    ReplyDelete

  4. வங்கியில் நல்ல கூட்டம்! உள்ளே நிறைய பேர் பார்ம் பில்லப் செய்து கொண்டிருக்க “ சார் கொஞ்சம் பேனா தர்றீங்களா? என்று அந்த இளைஞனிடம் கேட்டேன். இது உங்க பேனாவா? தேங்க்ஸ் என்று கொடுக்க ஒரு மணி நேரமாய் வங்கி முழுக்க சுற்றி வந்த பேனாவை பையில் பத்திரப்படுத்தியபடி வெளியே வந்தேன்./// அற்புதம்

    ReplyDelete
  5. அனைத்தும் அருமை. பாராட்டுகள் சுரேஷ்.

    ReplyDelete
  6. படித்தேன். ரசித்தேன்.

    ReplyDelete
  7. அருமை...
    பாராட்டுக்கள் நண்பரே...

    ReplyDelete
  8. \\அந்த வார இதழுடன் இலவசமாய் ஒரு ஷாம்பு சாஷே கொடுத்து இருந்தார்கள்.\\வார இதழுக்கு பணம் கொடுத்தால் மட்டுமே "அந்த ஷாம்பு சாஷே" கிடைக்கும், எனவே அது இலவசம் அல்ல.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!