சுகமான வாழ்வளிக்கும் சுக்கிரவாரப் பிரதோஷம்!


பிரதோஷம் என்றால் என்ன? 

      ஒவ்வொரு மாதத்திலும் வளர்பிறை திரயோதசி திதி, தேய் பிறை திரயோதசி திதிகளில் மாலை 4.30 மணி முதல் 6..00 மணி வரை சிவவழிபாடு மேற்கொள்ள உகந்த நாளாகும். இந்த நேரத்தில் சிவன் நந்தியின் இரு கொம்புகளுக்கு இடையே நர்த்தனம் ஆடுகின்றார். எனவே நந்திக்கு சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. இதுவே பிரதோஷகாலம் என்றும் சொல்லப்படுகிறது.

  பிரதோஷத்துக்கு 'ரஜனீ முகம்’ என்ற பெயர் உண்டு. சம்ஸ்கிருதத்தில் 'ரஜனீ’ என்றால் இரவு என்று பொருள். 'ரஜனீ முகம்’ என்பது இரவின் முன்பகுதியான சாயங்காலத்தைக் குறிக்கும்.
வளர்பிறை திரயோதசி திதி அன்றும், தேய்பிறை திரயோதசி திதி அன்றும் - மாலை 4.30 முதல் 6 மணி வரை உள்ள காலம் 'பிரதோஷ காலம்’ எனப்படுகிறது.
தேவர்களுக்கும் மற்றவர்களுக்கும் சிவபெருமான் அருள் புரிந்தது, ஒரு சனிக்கிழமையன்று என்பதால், சனிக்கிழமை அன்று வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பானதாகக் கருதப்படுகிறது

பிரதோஷத்தில் ஐந்து வகை உண்டு: நித்தியப் பிரதோஷம், பக்ஷப் பிரதோஷம், மாதப் பிரதோஷம், மகா பிரதோஷம், பிரளயப் பிரதோஷம் என்பவை அவை.

நித்தியப் பிரதோஷம்: ஒவ்வொரு நாளும் சூரியன் மறைவதற்கு முன்னால் இருக்கும் ஒன்றரை மணி நேரத்தில் இருந்து (சுமாராக மாலை 4.30 மணியில் இருந்து), நட்சத்திரங்கள் தோன்றக் கூடிய காலம் வரை உள்ள மாலை நேரம், நித்தியப் பிரதோஷம் எனப்படும்.
பக்ஷப் பிரதோஷம்: வளர்பிறை திரயோதசி திதியில் வரும் பிரதோஷம் 'பக்ஷப் பிரதோஷம்’ எனப்படும்.
மாதப் பிரதோஷம்: தேய்பிறை திரயோதசி திதியில் வரும் பிரதோஷம் 'மாதப் பிரதோஷம்’ எனப்படும்.
மகா பிரதோஷம்: சிவ பெருமான் விஷம் அருந்தி, துயர் தீர்த்த (பிரதோஷம்) காலம் ஒரு சனிக்கிழமையன்று என்பதால், சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் 'மகா பிரதோஷம்’ எனப்படும்.
பிரளய பிரதோஷம்: பிரளய காலத்தில் எல்லா ஜீவராசிகளும் சிவபெருமானிடம் ஐக்கியம் ஆகும். உலக முடிவில் உண்டாகும் அந்தக் காலமே பிரளய பிரதோஷம் என அழைக்கப்படுகிறது.

திவ்யப்பிரதோஷம் : 

பிரதோஷ தினத்தன்று துவாதசியும், திரயோதசியும் சேர்ந்து வந்தாலோ அல்லது திரயோதசியும், சதுர்த்தசியும் சேர்ந்து வந்தாலோ அது "திவ்யப் பிரதோஷம்'' ஆகும். இந்த நாளன்று மரகத லிங்கேஸ்வரருக்கு அபிஷேக ஆராதனை செய்தால் பூர்வஜென்ம வினை முழுவதும் நீங்கும். 
சுக்கிர பிரதோஷம்: வெள்ளிக்கிழமைகளில் வரும் பிரதோஷம் சுக்கிரப்பிரதோஷம் என்று வழங்கப்படுகிறது. சுக்கிரன் சுகமளிக்கும் கடவுள். போக காரகன். வெள்ளியன்று பிரதோஷ வழிபாடு செய்வதால் வாழ்வில் தீமைகள் குறைந்து நன்மைகள் பெருகி சுகம் அடையலாம்.
பொதுவாகவே பிரதோஷம் தேவர்களை சிவபெருமான் ஆலகால விஷத்தில் இருந்து காத்தருளிய நாள் ஆகும். பாற்கடலில் பொங்கிய விஷத்தை உண்டு தேவர்களுக்கு நன்மை அருளிய சிவபெருமான் நம்முடைய வாழ்க்கை பெருங்கடலில் பொங்கும் பல்வேறு துன்பங்களை விலக்கி நன்மைகளை தருவார். எனவே பிரதோஷ விரதம் இருந்து வழிபாடு செய்வது மிகவும் சிறப்பாகும்.

பிரதோஷ காலத்தில் நந்திக்கு காப்பரிசி நிவேதனம் செய்யப்படுகிறது. அது எதற்கு? ஆலகால விஷத்தை சிவன் உண்டதும் பதறிய பார்வதி சிவனின் கழுத்தை தடவினார். அது கழுத்தோடு நின்று சிவன் நீலகண்டன் ஆனார். அப்போது அங்கிருந்த நந்தி இந்த விஷம் கொல்லக் கூடிய அளவிற்கு கொடுமை உடையதா? என்று எள்ளி நகையாடினார். ஆணவத்தால் இவ்வாறு பேசிய நந்தியை திருத்த சிவன் முடிவு செய்து, நந்தியே என்னுடைய கையை முகர்ந்து பார் என்று விஷம் வைத்திருந்த கையை நீட்டினார். அதை முகர்ந்த நந்தி மூர்ச்சை அடைந்ததோடு பின்னர் தெளிந்த பின்னரும் பித்து பிடித்து பைத்தியம் போல் சிரித்துக்கொண்டும் பிதற்றிக் கொண்டிருந்தார்.
 பார்வதி தேவி நந்தியை மன்னிக்க வேண்டினார். அப்போது சிவன் அரிசிப்பொடியை வெல்லத்துடன் கலந்து கொடுத்தால் நந்தி குணம் அடைவார் என்று கூறினார். அப்படியே செய்தாள் பார்வதி. இதை நினைவு கூறும் விதமாகத்தான் பிரதோஷ காலத்தில் நந்திக்கு காப்பரிசி நிவேதனம் செய்யப்படுகின்றது.

சோமசூக்தப் பிரதட்சிணம் செய்யும் முறை: முதலில் நந்தியை வணங்கி, பிறகு அதன் பிரணவ வடிவமான கொம்புகளின் நடுவே சிவபெருமானை தரிசனம் செய்ய வேண்டும்.
அதன் பிறகு வழக்கமாக வலம் வருவதற்கு மாறாக, அப்பிரதட்சிணமாக (எதிர் வலமாக) சண்டிகேஸ்வரர் சந்நிதி வரை போய்த் திரும்ப வேண்டும். அபிஷேகத் தீர்த்தம் வரும் வழியைத் தாண்டக் கூடாது!
இதன்பின் போன வழியே திரும்ப வேண்டும். நந்தியை தரிசித்து, தினந்தோறும் செய்யும் வழக்கப்படி வலம் வர வேண்டும். அப்போதும், அபிஷேகத் தீர்த்தம் வரும் வழியைத் தாண்டாமல் அப்படியே திரும்பி, நந்தி வரை வர வேண்டும். இந்த முறைப்படி மூன்று தடவை செய்ய வேண்டும். இதுவே 'சோமசூக்தப் பிரதட்சிணம்’.
ஆலகால விஷம் வெளிப்பட்டபோது, பயத்துடன் அனைவரும் கயிலையை நோக்கி ஓடினர். அப்போது விஷம் அப்பிரதட்சிணமாக - அவர்களுக்கு எதிராக வந்து விரட்டியது. எனவே, அவர்கள் வந்த வழியே திரும்பி ஓடினர். அங்கும் அவர்களுக்கு எதிராக விஷம் வந்து துன்புறுத்தியது. இப்படி இட-வலமாக அவர்கள் வலம் வந்த முறைதான் 'சோமசூக்தப் பிரதட்சிணம்’ என்று கடைப்பிடிக்கப்படுகிறது.

பிரதோஷமும் வழிபாட்டுப் பலன்களும்!
lஞாயிற்றுக்கிழமை பிரதோஷ தரிசனம் - நல்ல மங்களங்களைத் தரும்.
lதிங்கட்கிழமை பிரதோஷ தரிசனம் - நல்ல சிந்தனைகள் உண்டாகும். அஸ்வமேத யாகங்கள் செய்யக்கூடிய பலன்கள் கிட்டும்.
lசெவ்வாய்க் கிழமை பிரதோஷ தரிசனம் - பஞ்சமும், பட்டினியும் விலகிப் போகும்.
lபுதன் கிழமை பிரதோஷ தரிசனம் - புத்திரப் பேறு கிட்டும். கல்வி, கேள்விகளில் திறமை உண்டாகும்.
lவியாழக்கிழமை பிரதோஷ தரிசனம் - குருவருளோடு திருவருளும் கைகூடும். வெள்ளிக்கிழமை பிரதோஷ தரிசனம் – எதிர்ப்புகள் நீங்கும்
lசனிக்கிழமை பிரதோஷ தரிசனம் – அஷ்டலட்சுமிகளின் ஆசீர்வாதம் கிடைக்கும். எல்லா பிரதோஷங்களிலும் சனிப் பிரதோஷம் உயர்ந்தது. அதனால் மஹாபிரதோஷம் என்கிறார்கள்.

இன்று துவாதசியோடு கூடிய திரயோதசி நாள். திவ்யப் பிரதோஷம் என்று வழங்கப்படுகின்றது. அத்துடன் சுக்கிரவாரமும் கலந்து வருவது மிகச்சிறப்பாகும். துன்பங்களை போக்கி இன்பங்களை தரும் ஈசனை இந்த திவ்யப் பிரதோஷ நாளில் வழிபாடு செய்து வாழ்வில் வளம் பெறுவோமாக!

(படித்ததில் தொகுத்தது)

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. நம்பிக்கை தானே வாழ்க்கை. நம்புவோம். தங்கள் தொகுப்பு அருமை. நன்றி.

    ReplyDelete
  2. அருமையான விளக்கம்... நன்றி...

    ReplyDelete
  3. சுரேஷ் அண்ணா, இந்தப் பதிவு-லும், கடவுளைத் தரிசிக்க வரும் பக்தர்களை அதாவது பாமர எளிய பக்தர்களைக் கிண்டல் கேலி செய்து உங்கள் பகுத்தறிவை நிலை நாட்டி தொலைக்கப் போகிறீர்களோ என்று பயத்துடனே படித்துக் கொண்டிருந்தேன். நல்ல வேளை அப்படி செய்யவில்லை , அதற்கு நன்றி அண்ணா.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!