வளைகாப்பு நாயகி குங்குமவல்லி!

வளைகாப்பு நாயகி குங்குமவல்லி!



ஆலயங்கள் தோறும் அருள்பாலிக்கும் அம்மனை விதவிதமான அலங்காரங்களால் அலங்கரித்து அழகு பார்த்து கொண்டாடுவது பக்தர்களின் பரம விருப்பம். மலர் அலங்காரம், பழ அலங்காரம், காய்கனி அலங்காரம், நகை அலங்காரம், சந்தன காப்பு, விபூதி, மஞ்சள், குங்கும காப்பு அலங்காரங்கள் என்று பலவகையில் அம்மனை அழகுபடுத்தி பார்த்து அவள் கருணை பெற்றுய்வது பக்தர்களின் விருப்பம்.
    அந்த வகையில் திருச்சி உறையூர் தான் தோன்றீஸ்வரர் ஆலயத்தில் அருள்பாலிக்கும் குங்குமவல்லி அம்மனுக்கு வலையல்களால் அலங்காரம் செய்து அழகு பார்ப்பது கண்கொள்ளா காட்சியாகும். பெண்கள் என்றாலே மஞ்சள், குங்குமம், வளையல் முக்கிய பங்கு வகிக்கும். வளை சூடா பெண்கள் இல்லை. அந்த வகையில் இந்த குங்குமவல்லித் தாயாருக்கு வலையல்களால் அலங்கரித்து அகம் மகிழ்கிறார்கள் பக்தர்கள்.
   அது போலவே பொதுவாக கோயில்களில் குங்குமம், விபூதி பிரசாதம் கிடைக்கும். இங்கு அம்மனுக்கு வளையல் சார்த்தி அதுவே பிரசாதமாக வழங்கப்படுகிறது. தை மாத  மூன்றாம் வெள்ளியில் நடைபெறும் வளைகாப்பு வைபவம் இங்கு மிகச்சிறப்பாக கொண்டாடப்படும். கர்ப்பிணி பெண்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அம்மனுக்கு வளைகாப்பு நடத்தி தங்கள் பிரசவம் சுகமாக அமைய வேண்டுகின்றனர்.

   சுமார் ஐநூறு முதல் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயம் சோழர்களால் கட்டப்பட்டது. இறைவன் தான் தோன்றீஸ்வரர் சுயம்பு மூர்த்தியாகும். இந்த கோயிலின் இன்னொரு தனிச்சிறப்பு நவகிரகங்கள் தங்கள் நாயகியருடன் தம்பதி சமேதராக வீற்றிருப்பது ஆகும். இந்த கோலத்தை வேறு எங்கும் காண்பது அரிதான் ஒன்றாகும்.


   இக்கோயிலின் தெற்கு பிரகாரத்தில் தில்லைக் காளி மிக கம்பீரமாக எழுந்தருளி உள்ளார். இவருக்கு பவுர்ணமி, அமாவாசை தினங்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றது. நிகும்பலா யாகம் எனப்படும் மிளகாய் வற்றல் கொண்டு செய்யப்படும் யாகமும் இங்கு செய்விக்கப்படுகிறது. இந்த யாகத்தில் கலந்து கொண்டு எலுமிச்சை மாலை சாற்றி வழிபட்டால் சகல தோஷங்கள் விலகி துன்பங்கள் அகலும் என்பது நம்பிக்கை.


  இங்கு அருள்பாலிக்கும் குங்குமவல்லி அம்பிக்கைக்கு வருடந்தோறும் தை மாதம் மூன்றாவது வெள்ளி, சனி, ஞாயிறுகளில் வளைகாப்பு உற்சவம் நடைபெறுகிறது. இவ்விழாவில் கர்ப்பிணிகளும், குழந்தை பாக்கியம், மணப்பேறு வேண்டுபவர்களும் கலந்து கொண்டு பயன் பெறுகின்றனர். அச்சமயம் அம்மனை ஆயிரக்கணக்கான வளையல்களைக் கொண்டு அலங்காரம் செய்வார்கள். அந்த வளையல்களை அங்கு வரும் பெண்களை அம்மனாக பாவித்து அவர்களுக்கும் அணிவிப்பர். வெள்ளிக் கிழமையன்று கர்ப்பிணிப் பெண்களுக்கு வளையல் அணிவிப்பதால், அவர்கள் சுகப் பிரசவத்தில் குழந்தை பெறுவார்கள் என்ற நம்பிக்கை நிலவுகிறது. சனிக்கிழமையன்று குழந்தை இல்லாத பெண்களுக்கு வளையல் அணிவிக்க, அவர்களுக்கு குழந்தை பாக்கியம் விரைவில் கிடைக்கும். ஞாயிறன்று மணமாகாத பெண்கள் வளையல் அணிந்து கொள்ள, அவர்களுக்கு விரைவாக திருமணம் நடந்தேறும் என்பது இங்குள்ள பக்தர்களின் நம்பிக்கை.

செல்வவளம் தரும் மகாலட்சுமி சன்னதிக்கு நேராக வில்வதளம் இருப்பது குறிப்பிடத்தக்கது. மகாலட்சுமியின் அம்சமே வில்வம் என்பதால், இத்தகைய அமைப்பு இயற்கையாகவே ஏற்பட்டுள்ளது போலும். இது மிகவும் விசேஷமான அமைப்பு.


சூரவாதித்த சோழ மன்னன் ஒருமுறை நாகலோகம் சென்றான். அங்கிருந்த காந்திமதி என்ற நாககன்னிகையின் மீது அவனுக்கு காதல் ஏற்பட்டது. அவள் சிவபக்தை. தினமும் திருச்சிராப்பள்ளி மலையில் வீற்றிருக்கும் தாயுமான சுவாமியை வணங்க வரும் வழக்கம் உடையவள்.

நாகலோகத் தலைவரான ஆதிசேஷனின் அனுமதி பெற்று காந்திமதியை சூரவாதித்தன் மணந்து கொண்டான். திருமணத்துக்கு பிறகும் மலையிலுள்ள சிவனை வணங்க காந்திமதி தவறவில்லை.

இந்நிலையில் அவள் கர்ப்பவதியானாள். அவளுக்கு மலையேற மிகவும் சிரமமாக இருந்தது. இந்த கஷ்டத்தையும் பொருட்படுத்தாமல், அவள் மலையேறத் தவறவில்லை. ஏற்கனவே, காவிரிக்கரையில் ஒரு பெண்ணுக்கு பிரசவம் பார்த்து, "தாயும் ஆனவன்' என பெயர் பெற்ற சிவபெருமான், தன் பக்தையான காந்திமதியின் மீது இரக்கம் கொண்டார்.

ஒருநாள் காந்திமதியால் நடக்க முடியவில்லை. வயிற்றுப் பாரத்தையும் சுமந்து கொண்டு மலையில் எப்படி ஏறுவது என தவித்தாள். அவள் மீது இரக்கம் கொண்ட சிவன், தானே அங்கு தோன்றினார்.

""
மகளே! காந்திமதி, கலங்காதே, இனி உனக்கு பிரசவம் ஆகும் வரை, நீ மலைக்கு வந்து என்னை தரிசிக்க வேண்டாம். இங்கேயே உனக்காக நான் லிங்கவடிவில் அமர்வேன். நீ இவ்விடத்திலேயே என்னை வணங்கி திரும்பலாம்.

தானாக உன் முன் தோன்றிய எனக்கு "தான் தோன்றீஸ்வரர்' என்ற திருநாமம் ஏற்படும். என் மனைவி பார்வதிதேவி, உன் போன்ற பெண்களுக்கு தாயாய் இருந்து பிரசவம் பார்ப்பாள். குங்குமம் காப்பாள். அவளுக்கு "குங்குமவல்லி' என்ற திருநாமம் ஏற்படும்,'' என்றார்.

காந்திமதி மகிழ்ச்சியடைந்து பிரசவ காலம் வரை அங்கு வந்து இறைவனை வணங்கி, அழகிய குழந்தையைப் பெற்றெடுத்தாள்.

இருப்பிடம் :

திருச்சி ஜங்ஷன் பஸ்ஸ்டாண்டில் இருந்து சத்திரம் பஸ் ஸ்டாண்ட் செல்லும் வழியில், ருக்மணி தியேட்டர் ஸ்டாப்பில் இறங்கி கோயிலைச் சென்றடையலாம். உறையூர் ரோட்டில் கோயில் அமைந்துள்ளது. 


வளங்கள் வர்ஷிக்கும் வரலஷ்மி விரதமும், சகல நன்மைகள் தரும் பிரதோஷ விரதமும் கூடி வரும் இந்த நாளில் சுயம்புவாய் தோன்றிய தான் தோன்றீஸ்வரரையும் வளைகாப்பு நாயகி குங்குமவல்லியையும் தரிசிப்பது சிறப்பான ஒன்றாகும்.

 படங்கள் உதவி: கூகுள் இமேஜஸ்

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்!

Comments

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!