யுவராஜ் சிங்! இந்திய கிரிக்கெட்டின் இளவரசன். நிறைவுப்பகுதி

 


யுவராஜ் சிங்!  இந்திய கிரிக்கெட்டின் இளவரசன்.

``அது ஓர் அழகான கதை. ஆனால் தற்போது அது முடிவுக்கு வந்துள்ளது... போராடுவது, வீழ்வது அந்த வீழ்ச்சியிலிருந்து எழுந்து மீண்டும் முன்னேறி நடப்பது எப்படி என்பதை இந்த விளையாட்டு எனக்குக் கற்றுத்தந்துள்ளது''. ஓய்வு முடிவை அறிவித்த யுவராஜ் உதிர்த்த வார்த்தைகள் இவை. 

 

 ஆம் யுவராஜ் சிங்கின் வாழ்க்கை ஓர் போர்க்களம் போலத்தான் இருந்தது.  கிரிக்கெட் வாழ்வின் உச்சத்திற்கு சென்ற அவர் விடைபெறுகையில் அதள பாதாளத்திற்கு சென்றிருந்தார்.

 

உலக கோப்பை முடிந்தவுடன் ஒரு செய்தி அடிபடத்துவங்கியது. யுவராஜ் சிங் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதுதான் அது. இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் முதலில் இதை நம்பத் தயாராக இல்லை. ஆனால் உண்மை அதுதான். யுவராஜ் சிங் புற்றுநோயால் தாக்கப்பட்டார். இது இந்திய ரசிகர்களுக்கு நெஞ்சை உலுக்கும் சம்பவமாக அமைந்தது.   இதுவரை எத்தனையோ பவுலர்களின் பந்துகளை தாக்கிய அவரது தன்னம்பிக்கை இப்போதும் புற்றுநோயை எதிர்த்து தாக்க ஆரம்பித்தது. இது குறித்து யுவராஜ் கூறுகையில்

 

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட காலகட்டம் என் வாழ்நாளில் இருண்ட நாள்கள் என்றார். இதுகுறித்து ஒரு முறை மனம் திறந்த யுவராஜ், ``ஒரு விளையாட்டு வீரனாக இதை ஏற்றுக்கொள்வதற்குக் கடினமாக இருந்தது. தினமும் 6- 8 மணி நேரம் விளையாடிக்கொண்டிருக்கும் போது நீங்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்றால் நம்ப முடியுமா. நான் இதிலிருந்து தப்பித்து மீண்டும் கிரிக்கெட் விளையாடவே விரும்பினேன். ஆனால் மருத்துவர்கள் என்னை எச்சரித்தனர்     .   நீங்கள் இதை       அலட்சியமாக எடுத்துக்கொண்டால் நீங்கள் பிழைப்பதே கடினம் என்றனர்.

வேறு வழியின்றி சிகிச்சைக்குத் தயார் ஆனார் யுவராஜ் சிங்.   

 


 இதற்காக அமெரிக்காவுக்கு சென்று சில சிகிச்சைகளை எடுத்துக்கொண்டு மன தைரியத்துடன் போராடி   புற்றுநோயில் இருந்து விடுபட்டார். இதன் காரணமாக இவர் கிரிக்கெட்டை விட்டு ஓராண்டு காலம் விலகி இருந்தார். பின்னர் புற்று நோயால் பாதிக்கபட்ட மக்களுக்கு உதவ விரும்பி, ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனமான யூ வி கேன் ” (YOU WE CAN) - ஐ நிறுவினார்.

 

 ஓராண்டு காலம் கிரிக்கெட்டை விட்டு விலகியிருந்த யுவராஜ் மீண்டும் பயிற்சியில் ஈடுபட்டார். 2012ல் நியுசிலாந்துக்கு எதிரான தொடரில் மீண்டும் களம் இறங்கினார். ஆனால் சூழ்நிலை அவருக்கு சாதகமாக அமையவில்லை. அணி முற்றிலும் மாறி இருந்தது. அவர் உட்கொண்டிருந்த மருந்துகள் அவர் உடலை பருமனாக ஆக்கியிருந்தது. முன்பு போல துடிப்பாக பீல்டிங் செய்ய இயலவில்லை. பேட்டிங்கிலும் தடுமாறினார். அணியிலும் அவரது இடம் தடுமாற்றத்துக்கு உள்ளானது.

 

ஆஸ்திரேலியா- மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் இந்தியா தோல்வியடையவே தோனியின் கேப்டன்சியும் விமர்சனத்துக்கு உள்ளானது. அவர் டெஸ்ட் கேப்டன்ஷிப்பை துறந்தார். அணியில் இரு கேப்டன்கள் உருவானார்கள். இதுவும் யுவராஜுக்கு பாதகமாகிப் போனது.

 

இதற்கிடையில் யோக்ராஜ் சிங் தோனிதான் தனது மகனின் கிரிக்கெட் வாழ்க்கையை குலைத்துவிட்டார் என்று பகிரங்கமாகத் தெரிவித்தார். ஆனால் இது பற்றி கூறிய யுவராஜ் இது ஒரு தந்தையின் ஆதங்கத்தின் வெளிப்பாடு என்றார். மீண்டும் தோனியுடன் இணைந்து விளையாட காத்திருக்கிறேன் என்றார்.

 

    2013ல் ஒரு டி 20 போட்டியில் ஆஸ்திரேலியா இந்தியாவுக்கு 202 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது. மூன்றுவிக்கெட்களை இழந்து இந்தியா தத்தளித்தபோது களம்புகுந்த யுவராஜ் ஆஸ்திரேலிய பந்துவீச்சை தூசாக்கினார். 35 பந்துகளில்   77 ரன்கள் குவித்து இந்தியா வெற்றிபெற உதவினார்.  ஆனாலும் அவரால் முன்பு போல தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை. 2014ல் வங்கதேசத்தில் நடைபெற்ற டி 20 உலக்கோப்பை போட்டிகளில் இடம்பெற்ற அவர் இறுதி போட்டியை வாழ்வின் கசப்பான இன்னிங்ஸாக  கருதுகின்றார். அந்த போட்டியில் 21 பந்துகளை சந்தித்த அவர் ஒரு  பவுண்டரி கூட அடிக்காமல் 11 ரன்கள் மட்டுமே எடுத்தார். இலங்கையின் பந்துவீச்சை ஆடமுடியாமல் தடுமாற அவரது கிரிக்கெட் கேரியரில் பெரும் சரிவு தொடங்கியது. இந்தியா அந்த உலக கோப்பையை இலங்கையிடம் இழந்தது.

 

மீடியாக்கள் கடும் விமர்சனம் செய்தன. யுவராஜ்சிங் அணியிலிருந்து நீக்கப்பட்டார். ஆனாலும் அவருக்கு நம்பிக்கை இருந்தது. இன்னும் கொஞ்சநாள் ஆடலாம் என்று நினைத்தார். கடுமையான பயிற்சிகள் மேற்கொண்டார்.மீண்டும் அணியில் இடம் கிடைத்தது.2017ல்

 

   இங்கிலாந்துக்கு எதிரான ஒரு போட்டியில் தோனியுடன் இணைந்து ஒரு சதம் அடித்தார்.256 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்.  பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு போட்டியில் அரைசதம் அடித்தார். ஆனாலும் அடுத்தடுத்த போட்டிகளில் ரன்கள் எடுக்கத் தவறினார். அதே சமயம் இளைஞர்கள் இந்திய அணியின் வாய்ப்பை ஐ.பி.எல் மூலம் தட்டத் துவங்கினர். யுவராஜுக்கு அணியில் இடம் மறுக்கப்பட்டது.

 

யுவராஜ் சிங் இதுவரை பைக் ஓட்டியது இல்லையாம். அவரது தாய் ஷப்னம் சிங்கிற்கு பைக் என்றால் பயமாம். அதனால் யுவராஜிடம் பைக் ஓட்டக் கூடாது என்று சத்தியம் வாங்கிக் கொண்டாராம். அதனால் இதுவரை பைக் ஓட்டியது இல்லையாம். ஆனால் விதவிதமான கார்களை வாங்கி நிறுத்தியுள்ளார். தாய் சொல்லை தட்டாத தனயனான யுவராஜ் ஒரு ப்ளே பாயாகத்தான் மீடியாக்களால் சித்தரிக்கப் பட்டார். பாலிவுட் நடிகைகள் மாடல்கள் பலரோடும் அவர் இணைத்து கிசுகிசுக்கப்பட்டார். கிம்ஷர்மா, தீபிகா படுகோனே, ரியாசென்,ப்ரீத்தி ஜிந்தா, லீபாக்ஷி போன்றோருடன் அவர் இருக்கும் படங்கள் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. ஆனாலும் அதுகுறித்து வெளிப்படையாக யுவராஜ் கருத்து ஏதும் தெரிவித்தது இல்லை.

இறுதியில் ஹசீல் கீச் என்ற மாடலும் நடிகையுமானவரை மணம்புரிந்துகொண்டார். குழந்தைகள் இல்லை.

 

யுவராஜ் சிங்கின் லக்கி நம்பர் 12 அவர் தனது கையில் ரோமன் எழுத்தாலான 12 என்பதை டாட்டூவாக வரைந்து கொண்டுள்ளார். 12 வருடங்கள் .பி.எல் களத்தில் ஆடியுள்ளார்.

 

2008ல் ஐபிஎல் போட்டிகள் துவக்கப்பட்டபோது ஐகான் வீர்ர்களாக ஐவர் இருந்தனர். மும்பைக்கு சச்சின், பெங்களூருவுக்கு டிராவிட், கொல்கத்தாவிற்கு கங்குலி பஞ்சாபிற்கு யுவராஜ். அப்போது தோனி கூட ஐகான் வீர்ர் அல்ல. யுவராஜ் ஐகான் வீர்ராக இருந்தார்.

 

 . அதில் பெங்களூர் மற்றும் டெக்கான் சார்ஜர் அணிக்கு எதிராக ஒரு ஹாட்ரிக் சாதனையும் எடுத்தார். ஆனால் பஞ்சாப் அணி இறுதிப்போட்டிக்குச்செல்லவில்லை. துவக்கத்தில் யுவராஜ் ஐபிஎல்லில் சிறப்பாக விளையாடினாலும் அணி முன்னேற்றம் காணவில்லை. அதனால் அணித்தலைவர் பொறுப்பிலிருந்தும் அணியிலிருந்தும் விலக்கப்பட்டார்.

 

2014ல்ஐபிஎல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 14 கோடி ரூபாய்க்கு இவரை ஏலத்தில் எடுத்தது. ஆனால் அது யுவராஜ் கேன்சரில் இருந்து மீண்டுவந்த காலம். முன்பு போல அவரால் விளையாட முடியவில்லை. தொடர்ச்சியாக ரன் குவிக்க முடியாமல் அவர் திணறினார்.. அடுத்த வருடம் டெல்லி டேர்டெவில்ஸ் அணியால் 16 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டார். அப்போதும் அவரால் சிறப்பாக விளையாட முடியவில்லை  2016ல் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடினார். ஏழு கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது அந்த அணி அந்த வருடம் அந்த அணி டைட்டில் வென்றது ஆனால் அடுத்த வருடம் யுவராஜை கழட்டிவிட்டது.. 2018ல் பஞ்சாப் அணி அவரை அடிப்படை விலை 2 கோடி ரூபாய்க்கு எடுத்த்து. அந்த தொடரிலும் மோசமாக ஆட  2019ல் எந்த அணியும் அவரை எடுக்கவில்லை. பின்னர் மும்பை அணி 1 கோடி ரூபாய் அடிப்படை விலையில் அவரை எடுத்தது. அந்த தொடரில் சென்னை அணி யுவராஜை ஏலத்தில் எடுக்கும் என்று சொல்லியிருந்த்து. ஆனால் எடுக்கவில்லை. ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். அந்த ஐ.பி.எல் தொடரிலும் யுவராஜ் சரியாக ஆடவில்லை.  .பி. எல் லில் அவரது ஆட்டம் முடிவுக்கு வந்தது.

 

 2019 உலக கோப்பை போட்டியில் வாய்ப்பு கிடைக்கும் என்று நினைத்திருந்தார். ஆனால் இந்தியா ஒரு வித்தியாசமான அணியை தேர்வு செய்தது. கோஹ்லியின் முட்டாள்தனமான கணிப்புகளால் தொடர்ந்து சிறப்பாக ஆடிவந்த அம்பதி ராயுடு, ரஹானே போன்றவர்கள் வாய்ப்பிழந்தனர். அப்படியிருக்கையில் ஆடாமல் இருந்த யுவராஜுக்கு வாய்ப்பு கிடைக்குமா? வாய்ப்பு கிடைக்கவில்லை. இறுதியில் அவர் 2019;ல் தனது ஓய்வை அறிவித்தார்.

 

வீழ்ச்சிகளை சந்திக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் யுவராஜின் கிரிக்கெட் வாழ்க்கை ஒர் பாடம். ஒரு கிரிக்கெட் வீரனின் பிள்ளையாக இந்திய அணியில் நுழையவில்லை. போராடி நுழைந்து இடம் இழந்து மீண்டும் இடம் பிடித்து சாதனைகள் படைத்து இந்தியாவின் கனவான உலக்கோப்பையை பெற்றுத் தந்த யுவராஜ் சிங்கிற்கு இந்திய கிரிக்கெட் பெரிதாக கவுரவம் எதுவும் செய்துவிடவில்லை. அவரை அணியில் இருந்து நீக்கப்போகிறோம் என்று கூட சொல்லவில்லை.

 

கேன்சரில் இருந்து நான் மீண்டு வந்த பின்னர், மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். உள்ளூர் தொடர்களில் சரியாக ரன்களைக் குவிக்க முடியாமல் இரண்டு வருடங்களாகத் தடுமாறினேன். அந்தச் சூழலில் கடுமையாக உழைத்தேன். அதன் பலனாக மீண்டும் இந்திய அணிக்குத் திரும்பினேன். இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில், எனது அதிகபட்ச ரன்களைக் குவித்தேன். அது மிகப்பெரிய சாதனை. ஆனால், அதன் மறுபக்கம் மிகவும் வேதனையானது. நிர்வாகத்திடம் இருந்தோ அல்லது அதைச் சுற்றியிருந்த மக்களிடம் இருந்தோ எந்த ஆதரவும் இல்லை. எனக்கு அந்த ஆதரவு கிடைத்திருந்தால் உலகக் கோப்பையில் ஆடியிருப்பேன்.

  அந்தக் காலத்தில், திடீரென யோ-யோ டெஸ்ட் இந்திய அணியில் அறிமுகமானது. என்னுடைய தேர்விலும் அது ஒரு திருப்புமுனையாக மாறியது. 36 வயதில் யோ-யோ டெஸ்ட்டுக்காகக் கடுமையாக உழைத்தேன். என்னால் அதில் தேர்ச்சிபெற முடியாது என்றே நினைத்தார்கள். யோ-யோ டெஸ்ட்டில் தேர்ச்சியடைந்தேன். மீண்டும் உள்ளூர் தொடர்களில் விளையாட அறிவுறுத்தப்பட்டேன். ஏற்கெனவே, அதைத்தான் செய்துகொண்டிருந்தேன். யோ-யோ டெஸ்ட்டில் தேர்வாக மாட்டேன் என்றுதான் அவர்கள் நினைத்திருந்தார்கள். ஏனெனில், அது சற்று கடினமானதாக இருந்தது. அதுமட்டுமல்லாமல், நான் அதில் தேர்ச்சிபெறவில்லை என்றால், என்னிடம் எளிதாகத் தெரிவித்துவிடலாம் என நினைத்திருக்கலாம். சர்வதேச கிரிக்கெட்டில் 15 முதல் 17 வருடங்கள் விளையாடிய ஒரு வீரரை எதற்காக ஒதுக்குகிறீர்கள் எனக் கூற வேண்டும். நீங்கள் அவருடன் அமர்ந்து காரணத்தை விளக்க வேண்டும். யாரும் என்னிடம் எதுவும் தெரிவிக்கவில்லை.  இப்படி ஒரு பேட்டியில் யுவராஜ் கூறியிருப்பது இந்திய கிரிக்கெட்டின் நிலையை தோலுரித்து காட்டுவதாக அமைந்துள்ளது.

 


  யார்க்‌ஷையர் அணிக்காக டெண்டுல்கருக்கு அடுத்து ஒப்பந்தம் செய்யப்பட்ட ஒரே வீரர் யுவராஜ் சிங்.

 

 உலக்கோப்பை  டி 20 யில் ஒரு போட்டியில்  ஆறு சிக்சர்களை ஒரே ஓவரில் அடித்த வீர்ர்.

 

அண்டர் 19  மற்றும் டி-20- மற்றும் 50 ஓவர் உலக கோப்பை போட்டிகளின் தொடர் நாயகன்.

 

உலகின் தலைச்சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவர்.

 

உலகின் தலைச்சிறந்த மேட்ச்வின்னர்களில் ஒருவர்

 

இப்படி ஒரு சாதனையாளர். இதையெல்லாம் மீறி  கேன்சர் என்னும் கொடிய நோயிலிருந்து வெற்றிகரமாக மீண்டு வந்து  கெத்து காட்டியவர். இப்படி பல சாதனைகளை  செய்த மனிதரை  ஒரு விளக்கம் கூட கொடுக்காமல்  ஓரங்கட்டி அனுப்பி வைத்ததுதான் இந்திய கிரிக்கெட்  அவருக்கு செய்த  வெகுமதி.

 

ஆனால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமல்ல உலக கிரிக்கெட் ரசிகர்களும் தங்கள் மனதில் யுவராஜுக்கு என்று ஒரு தனிப்பட்ட இடத்தை  என்றும் வைத்திருப்பார்கள். கிரிக்கெட் உள்ளவரை யுவராஜ் சிங்கின் புகழ் இருக்கும். இந்திய கிரிக்கெட்டில் என்றுமே அவர் இளவரசன் தான்!

முற்றும்.

 

 

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2