கிரீடம்!

 

கிரீடம்!

          நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு.

 


பாலாம்பாள் மெட்ரிகுலேஷன் பள்ளி பரபரப்பாய் இருந்தது. இன்று அந்த பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களை பெற்று வெற்றிபெறுவதற்கான சிறந்த ஆலோசனைகளை வழங்குவதற்காக இந்தியாவின் மிகப்பெரிய கல்வி ஆலோசகர் கருணாகரன் வழங்க உள்ளார்.

 பள்ளியின் தாளாளர் பார்த்தசாரதியும் பிரின்ஸ்பல் நரசிம்மனும் நுழைவாயிலில் மாலையோடு கருணாகரனின் வரவுக்காக காத்திருந்தனர். கருணாகரனின் அப்பாயிண்ட்மெண்ட் கிடைப்பது மிகவும் அரிது. அவரது ஆலோசனைகளை கேட்பதற்காக பெரிய கல்லூரிகள் ..டிக்கள் கூட வருடக் கணக்காக காத்துக்கிடக்கின்றன.

பாலாம்பாள் பள்ளி தற்போது தமிழ்நாட்டில் குறிப்பிட்டு சொல்லும்படியான வளர்ச்சியை பெற்றுவருகிறது. அதன் மாணவர்கள் பல்வேறுதுறைகளில் பெரிய சாதனைகளை பெற்றுவருகின்றனர். அந்த பள்ளியில் பிள்ளைகளை சேர்ப்பதற்கு பெற்றோர்கள் தவமிருக்கின்றனர். பள்ளியின் கட்டணம் அதிகம்தான் என்றாலும் அங்கே தன் பிள்ளை படித்தால் நல்ல நிலைமைக்கு வந்துவிடுவான் என்று அங்கே பிள்ளைகளை சேர்த்துவிட ஆசைப்பட்டார்கள். தமிழ்நாடு முழுவதும் பாலாம்பாள் பள்ளி கிளை பரப்பி விருட்சமாக வளர்ந்து நிற்கிறது.

  அதன் பெருமைதான் இன்று கல்விநல ஆலோசகர் கருணாகரனை இப்பள்ளிக்கு வர ஒத்துக்கொள்ளச்செய்திருக்கிறது. மிகவும் கஷ்டப்பட்டு இந்த அப்பாயிண்ட்மெண்டை வாங்கியிருந்தார் பிரின்ஸ்பால் நரசிம்மன். இந்த மீட்டிங்கிற்கு வரவேண்டும் என்றால் ஒரே ஒரு கோரிக்கை மட்டும் வைத்திருந்தார் கருணாகரன். அது அந்தப் பள்ளியின் தாளாளர் பார்த்தசாரதி அந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருணாகரனை வரவேற்க வேண்டும் என்பதுதான்.

 இது என்னய்யா வித்தியாசமா இருக்கு! அந்த கருணாகரனை நான் வரவேற்கிறதா இருந்தா வருவாராமா?

  ஆமாங்க! அவர் இந்த மாதிரி ஈவெண்ட்டுக்கு எல்லாம் பல லட்சங்கள் வாங்கிறார். நம்ம பள்ளிக்கு அவர் சில லட்சங்களை வாங்கிட்டு வர ஒத்துகிட்டார். ஆனா நீங்க அவரை வரவேற்கணும்னு மட்டும் கண்டீஷன் போட்டிருக்கார்.”

  அவ்வளோ பெரிய ஆள்! என்னை பெரிய மனுஷனா நினைச்சு நான் வரவேற்றாத்தான் வருவார்னு சொல்லியிருக்கிறதை நான் பெரிய கவுரவமா நினைச்சிக்கிறேன். கண்டிப்பா இந்த ஈவெண்ட்ல நான் கலந்துக்கிறேன். அவரை வரவேற்றுப் பேசறேன்!” பார்த்தசாரதி சொன்ன மாதிரியே இன்று பள்ளிக்கு வந்துவிட்டார்.

   தமிழகம் முழுவதும் பாலாம்பாள் பள்ளிகள் இருந்தாலும் இன்று ஈவெண்ட் நடப்பது சென்னையில் உள்ள பாலாம்பாள் பள்ளியில்தான்! பார்த்தசாரதிக்கு இந்த பள்ளியில் இருந்துதான் வருமானம் அதிகம். பெரிய இடத்து பிள்ளைகள் எல்லாம் இங்கேதான் படிக்கின்றன. எனவே எந்த முக்கிய நிகழ்வென்றாலும் இங்கேதான் நடத்துவார்.

  நுழைவாயிலில் கருணாகரனின் கார் வந்து நிற்க, டிரைவர் இறங்கி கார்க் கதவை திறந்து விட கோட் சூட்டில் கண்களில் கூலிங் கிளாசோடு நிதானமாக இறங்குகிறார் கருணாகரன்.

  வெல்கம் சார்!” என்று அவரது கழுத்தில் மாலையை போட்டு கை கொடுத்து அவர் ஸ்கூல் ஸ்டூடண்ட்ஸ் ஈகர்லி வெயிட்டிங் பார் யுவர் அட்ரெஸ்…” என்று முகத்தில் புன் சிரிப்போடு வரவேற்றார் பார்த்த சாரதி.

   சிறு புன் முறுவலோடு, ”தேங்க்யூ! போகலாமா?” என்று உள்ளே நடந்தார் கருணாகரன்.

அவரின் வேக நடைக்கு ஈடுகொடுக்க முடியாமல் பின்னாலேயே ஓடினர் நரசிம்மனும் பார்த்தசாரதியும்.

விழாப் பந்தலில் மேடையில் பரஸ்பர அறிமுகங்களுக்குப் பின் உரையாற்றினார் கருணாகரன். ஒருமணி நேரம் மாணவர்கள் அனைவரும் அவரது உரையை மிகக் கவனமாக கேட்டு ரசித்துக் குறிப்பெடுத்துக் கொண்டனர்.

   இறுதியாக ஒன்று சொல்ல விரும்புகின்றேன்!”. என்று கருணாகரன் தாளாளர் பார்த்தசாரதியை பார்த்தார்.

அவர் என்ன சொல்லப் போகிறாரோ? என்று ஆர்வமாக பார்த்த சாரதியும் மாணவர்களும் கூர்ந்து கவனித்தனர்.

   மாணவர்களே! உங்கள்மீது நம்பிக்கை வையுங்கள்! நமக்கு இதுவரவில்லை! நாம் அவ்வளவுதான் தோற்றுவிடுவோம்! என்று ஒரு போதும் எண்ணாதீர்கள். நான் முப்பது வருடங்கள் முன்பு இதோ இந்த பள்ளியால் உருப்பட மாட்டேன் என்று வெளியேற்றப் பட்ட மாணவன். இன்று அதே ஸ்கூலில் நீங்கள் உருப்பட வேண்டும் என்று உங்களுக்கு வகுப்பெடுத்துக் கொண்டு இருக்கிறேன். அன்று என்னை வெளியேற்றியவர் இன்று என்னை வரவேற்ற உங்கள் தாளாளர் பார்த்தசாரதி ஐயாதான்கருணாகரன் சொல்ல அரங்கம் மட்டுமல்ல பார்த்தசாரதியும் அதிர்ந்து போனார்.

வெறும் மதிப்பெண்கள் மட்டும் வாழ்க்கை இல்லை! எண்கள் நம் வாழ்வின் ஓர் அங்கம் அவ்வளவே! நீ மேல்நிலைத்தேர்வில் உருப்போட்டு நிறைய மதிப்பெண்களை எடுத்தால் மட்டுமே கொண்டாடப்படுகின்றாய்! முதலில் இந்த கோட்பாட்டை உடைத்தெரிய வேண்டும். உன் கல்வியின் அளவு மதிப்பெண்களில் இல்லை. நீ இந்த உலகில் கற்றுக் கொண்டதை எண்களில் அளந்துவிட முடியாது. அன்று நூற்றுக்கு நூறு ரிசல்ட் வேண்டும் என்று என்னை வெளியேற்றியது இந்த பள்ளி. ஆனால் நான் தோற்றுப் போய்விடவில்லை!”

 எனக்கு ஓர் அரசுப்பள்ளி இடம் கொடுத்தது. படித்தேன். தேர்வில் வெற்றி பெற்றேன். அன்று ஓர் வைராக்கியம் எடுத்தேன். என்னை வெளியேற்றியவரே என்னை ஒருநாள் வரவேற்கவேண்டும் என்பதுதான் அது. உழைத்தேன். உயர்ந்தேன்.வெறும் ஏட்டுப்படிப்பு மட்டும் வாழ்க்கைக்கு உதவாது. அனுபவங்களே சிறந்த படிப்பினையை வழங்கும். என் அனுபவங்களை உங்களுக்கு வழங்குகிறேன்.

மதிப்பெண் எடுக்கும் இயந்திரமாக மட்டும் இருந்துவிடாதீர்கள். உலகத்தோடு பழகுங்கள்! அவை உங்களுக்கு ஓராயிரம் பாடங்களைக் கற்றுத் தரும். இப்போது கிடைக்கும் மதிப்பெண்கள் உங்களுக்கு கிரீடம் கிடையாது.

வருங்காலத்தில் நீ எப்படி உருவாகப் போகிறாய்! என்பதில்தான் இருக்கிறது உன் கிரீடம்.”

இதோ! என்னை வெளியேற்றியவரே இன்று என்னை வரவேற்று கிரீடம் சூட்டிவிட்டார்.! இது போன்ற ஓர் கிரீட்த்தை அடைய வாழ்த்துகள்!” என்று கருணாகரன் சொல்லி முடிக்கையில் அரங்கமே அதிர்ந்தது.

பார்த்த சாரதியும் நெகிழ்ந்து போய் கைதட்டிக் கொண்டிருந்தார்.

Comments

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2