மீட்பன்!

 

மீட்பன்!

 


அந்த மலைப்பாதையில் தன்னந்தனியாக மலையேறிக்கொண்டிருந்தாள்.வாசவி. கொனே பால்ஸ் என்று அழைக்கப்படும் அருவி அது அங்கே ஓர் சிவாலயம். சிவாலயத்தின் எதிரே உச்சியில் இருந்து ஜில்லென்று சலசலவென்று இரைச்சலுடன் நீர் வீழ்ந்து ஓடிக்கொண்டிருந்தது.

 பலமுறை இந்த அருவிக்கு வந்து நீராடி சென்றிருக்கிறாள் வாசவி. அவளுக்கு இன்னுமொரு ஆசை. அந்த அருவி கொட்டும் மலையின் உச்சிவரை சென்று திரும்பவேண்டும் என்று நெடுநாள் ஆசை.

 அவள் சின்ன வயதில் தந்தையோடு வரும்போதெல்லாம் இந்த அருவியில் கூட்டமிருக்காது. சுற்றிலும் முட்புதர் காடு.  மலை அடிவாரத்தில் ஒரு சிவலிங்கம் மட்டும்  கவனிப்பாரற்று இருக்கும். இன்று இந்த அருவி ஒரு சுற்றுலாத் தலமாகிவிட்டது. நுழைவுக்கட்டணம் வசூலிக்கிறார்கள். நுழைவாயிலில் இருந்து அருவிக்கு செல்லும் வரை நிறைய நடைபாதைக் கடைகள். சாக்ஸ், ஜட்டி, அசைவ உணவுகள், பொம்மைக் கடைகள் என்று இருபுறமும் வியாபாரிகள் தொல்லை.

 முன்பெல்லாம் இந்த அருவிக்கு வந்து குளித்துச் செல்கையில் ஒரு நிறைவு கிடைக்கும். உடல் அலுப்பு தீர்ந்து ஓர் புத்துணர்ச்சிக் கிடைக்கும். ஏகாந்தமான சூழல். மாசில்லாத காற்று. மூலிகை நீர் கொட்டும் அருவி என ஓர் சிலிர்ப்பான அனுபவம் கிடைக்கும். அந்த சூழல் மாறி இந்த அருவியும் ஓர் வியாபார ஸ்தலமாகிப் போனது வாசவிக்கு வருத்தமாகத்தான் இருந்தது.

சிறு வயது முதல் அங்கே சென்று வருவதால் அருவி வரும் மலைக்கு ஏற ஓர் குறுக்குப்பாதை இருப்பதை அவள் அறிவாள். அந்தவழியாக மலை உச்சிக்கு செல்ல யாருக்கும் அனுமதி கிடையாது. காட்டில் விறகு பொறுக்கும் பழங்குடி இனமக்கள் சிலர் அந்த வழியாக விறகு பொறுக்கச் செல்வது உண்டு. அங்கே ஒரு வாட்ச்மேன் உண்டு. அந்த வயதான நபர் யாரையும் அந்தவழியாக செல்ல அனுமதிப்பது இல்லை. வாசவிக்கு அந்த நபர் நல்ல பழக்கம் ஆதலால். அவரை தாஜா செய்து அந்த வழியே சென்று பார்க்க அனுமதி வாங்கி விட்டாள்.

 இதோ தன்னந்தனியாக எந்த ஒரு துணையுமின்றி தட்டுத் தடுமாறி மலையின் உச்சிக்கு வந்து விட்டாள். இங்கிருந்து பார்க்கையில் கீழே மனிதர்கள் சிறு உருவங்களாக தெரிய தூரத்தே இருந்த நகரின் கட்டிடங்கள் பெட்டிபெட்டியாக காட்சியளிக்க இதமான காற்று வீச கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறிக் கொண்டிருந்தாள். இன்னும் சில அடிகள் எடுத்து வைத்தால் அதல பாதாளம்தான் என்ற நிலையில் அங்கே நின்று ஒரு செல்பி எடுத்துக் கொள்வோமா என்று அவள் யோசித்துக் கொண்டிருக்கையிலேயே ஒரு சூறாவளிக் காற்று சுழற்றி அடித்து அவளை நிலைத் தடுமாறச்செய்தது.

 ஹா ஐயோ..! “ என்று அலறிக் கீழே விழப் போனவளை ஒரு கரம் பற்றி இழுத்தது.

  அதிர்ச்சியில் அவளுக்குப் பேச்சே வரவில்லை!.. அப்படியே மயங்கியவளை அந்த இளைஞன் தாங்கிப் பிடித்தான்.  ஹலோ! மேடம்! பயப்படாதீங்க! கண்ணை முழிச்சு பாருங்க! உங்களுக்கு ஒண்ணும் ஆகலை! நீங்க விழறதுக்கு முன்னே நான் தாங்கிப் பிடிச்சுட்டேன்! ஒண்ணும் ஆகலை! ஜஸ்ட் ரிலாக்ஸ்!” என்று அவன் கையில் கொண்டு வந்திருந்த வாட்டர் பாட்டிலில் இருந்து கொஞ்சம் தண்ணீர் எடுத்து தெளிக்க மயக்கம் தெளிந்தாள்  வாசவி.

  நீ.. நீங்க எப்படி இங்கே வந்தீங்க! நான் வரும்போது இங்கே  யாரும் இல்லையே!”

 நான் அந்த பாறைக்கு பின்னாடி இருந்தேன். எனக்கும் இப்படி ஏகாந்தமா இயற்கையை  ரசிப்பது பிடிக்கும். பத்து பதினைந்து நாளுக்கு ஒருமுறை இப்படி இங்கே வந்து சுத்திட்டு போவேன். அந்த வாட்ச்மேன் தாத்தா ரொம்ப நல்லவர். அவர் உதவியில்லாம இங்கே தனியா வரமுடியாது! உங்களுக்கும் அவர் பழக்கமா?” என்றான்.

 ஆமாம்! சின்னவயசிலே இருந்து அவரை எனக்குத் தெரியும் என்னோட 5 வயசுலேர்ந்து இந்த அருவிக்கு நான் வந்துட்டு போயிட்டிருக்கேன். ரொம்பத் தேங்க்ஸ்! ஒரு நிமிஷம் அவ்வளவுதான் நான்..னு நினைச்சுப் பயந்துட்டேன்.”

  இந்த மாதிரி இட்த்துக்கு தனியா வரக்கூடாது!  இங்கே திடீர்னு பேய்க்காத்து அடிக்கும். ஆளையே அப்படியே புரட்டிப் போட்டுடும். அதனாலே மலை உச்சிக்கு வந்தாலும் நுனி வரைக்கும் போகக் கூடாது.”

 உங்களுக்கு நல்ல அனுபவம் போலிருக்கு! நான் இப்போதான் முதல் முறையா இந்த மலை உச்சிக்கு வரேன். ரொம்பநாள் ஆசை! வீட்டுலே சொன்னா விடமாட்டாங்க! சொல்லாம கொள்ளாம கிளம்பி வந்துட்டேன். அருவிக்கே இப்பல்லாம் அனுப்பறது இல்லே! இங்கே முன்னே மாதிரி பாதுகாப்பு இல்லே! நிறைய பேர் குடிச்சுட்டு கும்மாளம் போட்டு லேடிஸ்களை கிண்டல் பண்ணிக்கிட்டு இருக்காங்க! அதனாலே வீட்டுலே அனுப்ப மாட்டேங்கறாங்க!”

அனுபவப் பட்டதாலேத்தான் சொல்றேன்! இதுவரைக்கும் உங்களைத்தவிர இன்னும் சிலரையும் நான் இங்கே மீட்டுக்கிட்டு இருக்கேன். எவ்ளோ சொன்னாலும் கேட்க மாட்டேங்கிறாங்க! ஒரு மீட்பனா என்னோட வேலையை செஞ்சுகிட்டு இருக்கேன். நீங்க சொல்றதும் உண்மைதான்! இந்த அருவி அவ்வளோ பாதுகாப்பு இல்லே! லேடீஸ் குளிச்சா துணி மாத்திக்க இடம் எதுவும் இல்லே! சுத்தி இருக்கிற கிராமத்து இளைஞர்களோட  சென்னையில் இருந்தும் நிறைய பேர் வராங்க! இப்பத்தான் நுழைவுக்கட்டணம் வாங்க ஆரம்பிச்சிருக்காங்க!  இன்னும் கொஞ்ச நாள்ல எல்லாம் சரியாயிரும்னு நினைக்கிறேன்! பொழுது சாயப்போவுது இனியும் இங்கே இருக்கிறது நல்லது இல்லே! வாங்க இறங்கிடலாம்.!’

   ஆமாம்! இறங்கிடலாம்! தனியா கீழே இறங்கனுமேன்னு நினைச்சேன்! துணைக்கு நீங்க கிடைச்சீங்க! தேங்க்ஸ்! மிஸ்டர்…”

  ஐயம்! சிவா, சிவராமன் முழுப்பேரு..!”

 தேங்க்யு சிவா! ஐயம் வாசவி! ஆமாம் நீங்க பக்கத்துலேதான் இருக்கீங்களா?”

 ஆமாம்! நாராயண வனத்திலே இருக்கேன்! பெருமாள் கோயில் தெருவிலே மூணாவது வீடுதான். தினமும் பெருமாள் பார்வை எங்க வீட்டுமேலே பட்டுகிட்டிருக்கும். நீங்க எங்கிருந்து வர்றீங்க!”

  நானும் பக்கம்தான்! நாகலா புரம்.”

அழகான ஊராச்சே அது! அங்கே இருக்கிற  பெருமாள் மச்சாவதார மூர்த்தியாச்சே!”

ஆமாம்! எங்க ஊரைப் பத்தியும் நல்லாத் தெரிஞ்சு வச்சிருக்கீங்க! எங்க ஊருக்கு வந்தா கண்டிப்பா என் வீட்டுக்கு நீங்க வரணும். அங்கே வந்து ஹைஸ்கூல் ஹெட்மாஸ்டர் வீடுன்னு கேட்டா சொல்லுவாங்க!”

 கண்டிப்பா வரேன். நீங்களும் ஒரு முறை எங்க வீட்டுக்கு வாங்க! எங்க அப்பா ரிடையர்ட் முன்சீப். இப்போ நிறைய சோஷியல் சர்வீஸ்ஸ் பண்ணிக்கிட்டு இருக்காரு நீங்க வந்தா ரொம்ப சந்தோஷப் படுவாரு.”

 அவனுடன் பேசிக்கொண்டு வருகையில் ஓர் அன்னியோன்யம் ஏற்பட்ட்து போல தோன்றியது வாசவிக்கு. இதற்குள் அடிவாரம் வந்தது. ”ஓக்கே வாசவி! நீங்க கிளம்புங்க! ஜஸ்ட் ஒரு பைவ் மினிட்ஸ் ஒரு வேலை இருக்கு! முடிச்சுட்டு வந்துடறேன்.!” அவன் நுழைவாயிலுக்கு முன்பே ஒரு மரத்தின் பின் செல்ல..

   சிரித்துக்கொண்டே  அந்த வாட்ச்மேன் தாத்தாவிடம் வந்தாள் வாசவி. ”என்னம்மா சிரிச்சுக்கிட்டே வரே! நீ பாட்டுக்கு தனியா பேசிட்டு வந்தா மாதிரி இருந்துச்சு! ”வாட்ச்மேன் கேட்க

 ஐயோ! தாத்தா! உங்களுக்கு வயசாயிருச்சு! கண்பார்வை மங்கலா போயிருச்சு! நான் ஒருத்தர் கூட பேசிட்டு வந்தேன். அவர்கூட உங்களுக்குத் தெரிஞ்சவர்தான்.”

    எனக்குத்தெரிஞ்சவரா? யார் அது?”

  அவர் பேரு சிவா, சிவராமன்ன்னு சொன்னார்! உங்களை நல்லாத் தெரியும்னு சொன்னார்.”

  என்னம்மா சொல்றே? சிவாத் தம்பியா உன்னோட வந்துது? என்னாலே நம்ப முடியலையே!”

 ஏன் தாத்தா?”

சிவாத் தம்பியை எனக்கு நல்லாத் தெரியும்? எல்லோருக்கும் உதவி பண்ற நல்ல குணம் அதுங்கிட்டே இருக்கு! உன்னை மாதிரிதான் அடிக்கடி இப்படி மலை உச்சிக்கு ஏறிப் போய் தனியா கொஞ்ச நேரம் இருந்துட்டு வரும். ஆனா.. இப்ப..”

  இப்பவும் அவர் இன்னிக்கு மலை உச்சிக்கு வந்திருக்கார். நான் மலை உச்சியிலே தடுமாறி கீழே விழப்போனப்ப என்னை காப்பாத்தினார். அவர் கூட பேசிட்டுத்தான் நான் கீழே இறங்கி வந்தேன்.”

 அந்த தாத்தா மேலும் கீழும் பார்த்தார்.. “அம்மா! உனக்கும் ஒண்ணும் ஆகலையே..! என்றார்.

  ஒண்ணும் ஆகாம அந்த சிவாதான் காப்பாத்தினார்!”

 அதைத்தான் என்னால நம்ப முடியலை!”

 அதுதான் ஏன்னு கேட்கறேன் தாத்தா?”

சிவா இந்த மலை உச்சிலே இருந்து ஒரு மாசம் முன்னே தவறி விழுந்து இறந்துட்டாம்மா!”

   அதிர்ச்சியில் உறைந்து மலைப்பாதையை நோக்கினாள் வாசவி. அங்கே மரங்களின் மேலே புன்னகையுடன் கை அசைத்து காற்றோடு காற்றாய் கரைந்து கொண்டிருந்தான் சிவா.

 

Comments

  1. கதை நல்லா இருக்கு. பாராட்டுகள்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

என்னைக் கவர்ந்த நேரு! குழந்தைகள் தின ஸ்பெஷல்!

சிரிக்க வைத்த சிரிப்புக்கள்! பகுதி 6

வெற்றி உன் பக்கம்! கவிதை!