யுவராஜ் சிங். இந்திய கிரிக்கெட்டின் இளவரசன்!

 

யுவராஜ் சிங். இந்திய கிரிக்கெட்டின் இளவரசன்!

 






சிறுவயதில் பள்ளியில் ரன்னிங் ரேஸில் வென்று கையில் ட்ராபியுடன் வீட்டுக்கு வந்து ஆவலாக தந்தை யோக்ராஜ் சிங்கிடம் காட்டினார் யுவராஜ். பாராட்டுவார் என்று பார்த்தால் அடிதான் கிடைத்தது.யுவராஜுக்கு!

கிரிக்கெட்டில் தான் விட்டதை மகன் பிடித்து சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் யோக்ராஜ் சிங்கிற்கு. யோக்ராஜ் சிங் வேகப்பந்துவீச்சாளர். கபில்தேவுடன் கிரிக்கெட் ஆடியவர். சிறந்த வீரரான இவருக்கு கொஞ்சம் முன்கோபம் அதிகம். அப்போதைய கிரிக்கெட் அரசியலில் பலிகடா ஆக்கப்பட்டு காணாமல் போனார்.  தன் மகனை இந்திய கிரிக்கெட் அணியில் சேர்த்துவிடவேண்டும் அவனை சிறந்த கிரிக்கெட் வீரராக   காணவேண்டும் என்று விரும்பினார் யோக்ராஜ்.

  விளையாட்டுத்தனமாக இருந்த யுவராஜை கிரிக்கெட் என்ற ஒரே முனைப்பில் செலுத்தினார். அது நல்லவிதமாக சென்று இந்திய அணியில் 19 வயதிலேயே இடம்பிடித்தார் யுவராஜ். முதல் தொடரில் நன்றாக விளையாடினாலும் அதற்கடுத்த ஆஸ்திரேலியா மற்றும் ஜிம்பாப்வே தொடர்களில் யுவராஜ் சரியாக விளையாட வில்லை. சொல்லப்போனால் இந்திய மிடில் ஆர்டர் அப்போது மிகவும் பலவீனமாக இருந்தது. அதனால் கங்குலி பல்வேறு சோதனைகளை செய்து பார்த்தார். யுவராஜ் இந்த இரு தொடர்களில் சாதிக்காமல் போனதால் அவரது இடம் கேள்விக்குறி ஆனது. அடுத்த தொடரில் அவர் சேர்க்கப்படவில்லை.

யுவராஜ் சோர்ந்துபோகவில்லை! மீண்டும் கடுமையான பயிற்சிகள் மேற்கொண்டார். உள்நாட்டு தொடர்களில் கவனம் செலுத்தி இழந்த பார்மை மீட்டெடுத்தார். 2002ல் ஜிம்பாப்வே தொடரில் கடைசி இருபோட்டிகளில் இரு அரைசதங்கள் விளாசியதன் மூலம் இங்கிலாந்தில் நடைபெற்ற நாட்-வெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்குத் தேர்வானார். இதுதான் அவரது வாழ்க்கையில் ஒரு மைல் கல்லாக அமைந்தது.

 

சிலரை  உசுப்பேற்றி கோபம் வரவைத்துவிட்டால் அவ்வளவுதான். இப்போதைய இந்தியகேப்டன் கோஹ்லியும் ஆக்ரோஷமாக ஆடக்கூடியவர். இதேபோல்தான் யுவராஜும். அப்போதைய கேப்டன் கங்குலியும் களத்தில் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்துவதில் சிறந்தவர்கள். அப்போதெல்லாம்ஆஸ்திரேலிய அணி களத்தில் வீர்ர்களை சீண்டி கோபப்படுத்தி விக்கெட்களை எடுக்க முயலும். பதிலுக்கு இந்திய அணி எந்த பதிலடியும் தராமல் இருக்கும். நல்லப்பிள்ளைகளாக ஆடிவிட்டுப் போவார்கள் இந்திய வீரர்கள். கங்குலி இந்திய கேப்டன் ஆனபோது இந்த நிலை மாறியது. இந்தியர்களும் பதிலுக்கு ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்த ஆரம்பித்தார்கள்.

2002ல் இந்தியா வந்த இங்கிலாந்து ஆறு ஒருநாள் ஆட்டங்களில் ஆடியது. முதல் 4 ஆட்டங்கள் முடிவில் இந்தியா 3-1 என்ற முன்னிலையில் இருந்த்து. கடைசி இரு ஆட்டங்களில் இங்கிலாந்து வென்று தொடரை சமன் செய்தது. அப்போது ஆண்ட்ரு ப்ளிண்ட் ஆப் தன் சட்டையை கழற்றி சுழற்றி ஆரவாரம் செய்தார். அது அப்போதைய கேப்டன் கங்குலிக்கு மிகவும் அவமானத்தை தந்திருக்க வேண்டும். ஒருவித வெறியோடுதான் இங்கிலாந்திற்கு பயணப்பட்டார்.

 நாட்வெஸ்ட் டிராபியின் லீக் ஆட்டங்களில் இந்தியாவில் இரண்டு புதிய வீர்ர்கள் அடையாளம் காணப்பட்டார்கள். மிடில் ஆர்டரில் இந்த கூட்டணி பல போட்டிகளை வென்று கொடுத்தது. பீல்டிங்கிலும் இந்தக் கூட்டணி ரன்களை கட்டுப்படுத்தியது. அவ்விருவர் யுவராஜ்சிங், மற்றும் முகமது கைப்.

நாட்வெஸ்ட் டிராபி பைனலுக்கு இந்தியா முன்னேறியது. இங்கிலாந்து 326 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது. இந்தியா இதை எட்டுமா? கோப்பையை கைப்பற்றுமா என்ற சந்தேகம் அனைவருக்குமே இருந்தது. அதற்கேற்பத்தான் இந்திய அணியின் ஆட்டமும் இருந்தது.146 ரன்கள் எடுத்து ஐந்து முக்கிய விக்கெட்களை இழந்து இருந்தது இந்தியா. அவ்வளவுதான்! வழக்கம் போல மற்றுமொரு தோல்வி. பைனல் பீவர் வந்துவிட்டது என்று ரசிகர்கள் எழுந்து போக ஆரம்பித்துவிட்டனர். பலர் டீவியை ஆப் செய்துவிட்டு உறங்கச் சென்றுவிட்டனர்.

 ஆனால் அன்று இந்திய கிரிக்கெட்டின் சரித்திரத்தை மாற்றி அமைத்தது யுவராஜ்சிங் முகமது கைப் கூட்டணி. யுவராஜ் உள்ளே இருக்க நுழைந்தார் முகமது கைப். அவர் யுவராஜிடம் கூறினார் ஆடுவோம் போட்டி இன்னும் முடியவில்லை! அவ்வளவுதான் ஆரம்பித்தது ருத்ர தாண்டவம். முதலில் நிதானமாக ஆடி பந்துகளை கணித்து பின்னர் அடிப்பதெல்லாம் யுவராஜுக்கு பிடிக்காது. அதற்கு நேரெதிர் குணம் கொண்டவர் முகமது கைப். இருவரும் அன்று இணைந்தனர். இங்கிலாந்தின் எல்லா பந்துவீச்சாளர்களும் அன்று யுவராஜால் தண்டிக்கப் பட்டனர். எப்படி போட்டாலும் பந்து பறந்தது. யுவராஜின் வேகம் கைஃபையும் தொற்றிக் கொள்ள இந்திய அணியின் ஸ்கோர் சீராக உயர இங்கிலாந்தின் பி.பி எகிறத் தொடங்கி தவறு செய்ய ஆரம்பித்தார்கள்.

அது மேலும் இந்தியாவுக்கு சாதகம் ஆனது. இவர்கள் இணை 121 ரன்களை எடுக்க இந்தியா அபாயகட்டத்தை தாண்டியது. அப்போது 69 ரன்களில் யுவராஜ் ஆட்டம் இழந்தார். ஆனால் இங்கிலாந்தும் ஆட்டத்தை இழந்துவிட்டது. முகமது கைப் சதமடித்துக் கொடுக்க  இறுதிப்போட்டியில் இந்தியா வென்றது.

 சவுரவ் கங்குலி  மைதானத்தில் சட்டை கழற்றி பறக்க விட்டார். ப்ளிண்ட் ஆப் செய்த செயலுக்கு பழிக்குப்பழி. உள்ளே யுவராஜும் தன் சட்டையை கழற்றி பறக்கவிட்டாராம். ஆனால் அதை யாரும் கண்டுகொள்ளவில்லையாம்.

அன்றுமுதல் யுவராஜ் இந்திய அணியின் அசைக்க முடியாத வீர்ராக உருவெடுத்தார். இந்திய அணியின் பினிஷராக மாறி புதிய அவதாரம் எடுத்தார்.  இந்திய கிரிக்கெட் கண்டெடுத்த சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவர். லெப்ட் ஆர்ம் சுழல்பந்தும் மின்னல் வேக பீல்டிங்கும் அதிரடி ஆட்டமும் பந்தை கண்டு நடுங்காது தைரியமாக அடித்தாடும் திறனும் யுவராஜுக்கு கைவந்த கலையாக  ஆயிற்று.   கேப்டன் கங்குலியின் செல்லப் பிள்ளையாக வலம் வந்தார் யுவராஜ். பல போட்டிகளில் சிறப்பாக ஆடி வெற்றியை தேடிக்கொடுக்க துணைக் கேப்டனாகவும் ஆனார்.

2003 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்றது  அப்போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய யுவராஜ் பாகிஸ்தான் உடனான போட்டியில் டெண்டுல்கர் அமைத்த அடித்தளத்தை பயன்படுத்தி பாகிஸ்தானை வென்று கொடுத்தார். ஆனாலும் இறுதிப் போட்டியில் ஒரு பதட்ட சூழலில் இந்தியா படு தோல்வியை சந்தித்தது. ஆனாலும் அந்த உலக கோப்பைத்தொடரில் யுவராஜின் ஆட்டம் சிறப்பாகவே இருந்தது. இதையடுத்து  2007 டி20 உலக கோப்பை போட்டிக்கு இந்திய அணி ஒரு இளமையான அணியை உருவாக்கியது. இந்த போட்டியின் தொடர் நாயகனாக ஜொலித்தார் யுவராஜ். அதை நாளை பார்ப்போம்!

 

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2