வசந்தமே வா! சிறுகதை

 வசந்தமே வா!

நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு

வசந்தி அந்த மலைப்பாதையில் தனியாக ஏறத்துவங்கியபோது கதிரவன் தன் கடமையை முடித்து ஓய்வெடுக்கத் துவங்கியிருந்தான். சிறு குற்றுப் புதர்களுனூடே ஒற்றையடிப் பாதையாக அந்தவழி அமைந்திருந்த்து. புதர்ச்செடிகளில் இருந்து வண்டுகளின் ரீங்காரம் கேட்டுக்கொண்டிருக்க கீரி ஒன்று குறுக்கே ஓடியது.

சிறிதும் அச்சப்படாமல் அதற்கு வழிவிட்ட வசந்தி மேலே முன்னேறத் துவங்கினாள். தூரத்தே அந்த மலையில் இருந்து விழும் அருவி ஒன்றில் இருந்து மெல்லிய கோடாய் நீர் வழிந்து கொண்டிருந்தது.இதுவே மழைக்காலம் என்றால் அங்கே நீர் கொட்டிக்கொண்டிருக்கும். இது கோடை வறட்சிக் காலம். நீர்வீழ்ச்சியிலும் வறட்சி நிலவியது.

வசந்தி புன்னகைத்துக் கொண்டாள். இயற்கையில் மட்டுமா வறட்சி! மனிதர்களிடம் கூட்த்தான் வறட்சி. அந்த வறட்சி பணத்திலோ நகையிலோ துணிமணிகளிலோ இல்லை உணவிலோ இருந்தால் கூடப் பரவாயில்லை! ஆனால் மனித மன்ங்கள் வறண்டு கிடக்கின்றனவே! ஒருவரிடமும் சிறிதும் இரக்கம் என்னும் ஈரம் இல்லாமல் போய்விட்டதே!

குளம் குட்டைகள் ஆறுகள் வற்றிப்போனால் பரவாயில்லை! மழை வந்தால் நிரம்பிவிடும். ஆனால் மனித மன்ங்களில் இருந்து ஈரம் வற்றிப் போனால் நிரம்புவது எப்போது? சமூகமே சீரழிந்து போய்விடுமே! அப்படி சீரழிந்துதான் கிடக்கிறது. இல்லாவிட்டால் என்னிடம் அப்படி ஒரு கேள்வியை இரக்கம் இல்லாமல் கேட்பானா அந்த முதலாளி.

தாய் தந்தையை இழந்த அனாதைப் பெண் என்பதாலேயேதானே இந்த தைரியம் அவனுக்கு வந்தது? கொஞ்சம் கூட அவன் மனதில் ஈவு இரக்கம் என்பதே இல்லையே! இத்தனைக்கும் அவளுடைய தந்தை அந்த நிறுவனத்தில் நாற்பது ஆண்டுகள் நாயாக உழைத்தார். சொற்ப சம்பளமே அவருக்கு வழங்கப்பட்டது. இறுதிக்காலத்தில் மனைவியின் வைத்திய செலவுகளுக்காக சில லட்சங்களை கடனாக வாங்கியிருந்தார். அந்த கடனும் மூழ்கி அவர் மனைவியும் இறந்து போக அந்த சோகத்திலேயே சில ஆண்டில் அவரும் இறந்து போனார்.

தந்தை வாங்கிய கடன் சில லட்சங்கள் வட்டியோடு சேர்த்து பல லட்சங்களாக வளர்ந்து நிற்கையில்தான் அவர் இறந்து போனது. தந்தையின் பிராவிடண்ட் பண்ட் பணங்கள் அவர் கடனுக்கு போதவில்லை!

வேறுவழியின்றி கொஞ்சம் கால அவகாசம் கேட்கத்தான் அந்த அலுவலகத்திற்கு போனாள் வசந்தி.
வரவேற்பறையில் விவரம் சொல்லி முதலாளி அறையினுள் நுழைந்தாள்.அங்கே அமர்ந்திருந்த நபரின் முகம் இவளைக் கண்டதுமே பிரகாசித்தது.

”வாம்மா! வசந்தி எல்லாம் கேள்விப்பட்டேன்! உங்கப்பா சண்முகம் இந்த கம்பெனிக்கு நாற்பது வருஷகாலம் விசுவாசமா நடந்துகிட்டிருக்கார். அவர் வேலையிலோ நட்த்தையிலோ குறை சொல்ல முடியாது. தன்னோட ஓய்வு காலத்திலே அவர் சில லட்சங்களை கடனா கேட்டபோது அவ்வளவு தொகையை கொடுக்க கம்பெனி ரூல்ஸ் ஒத்துக்காத போதும் நான் பேவர் பண்ணி லோன் கொடுத்தேன்.”

”அவருடைய சம்பளத்திலேயும் லோனுக்காக பெரிய அளவில் பிடித்தம் செய்யலே! ஏன்னா உங்க குடும்ப நிலவரம் எனக்குத்தெரியும்.”
”இதுவரைக்கும் நீங்க செய்த்து மிகப்பெரிய உதவிசார். ஆனால் லோனை உடனே கட்டச்சொல்லி நோட்டீஸ் அனுப்பிச்சிருக்கீங்க! வட்டியோட சேர்த்து அது ஆறு லட்சமா வளர்ந்துட்டிருக்கு. இப்போதைய சூழ்நிலையிலே அவ்ளோ பணம் என்கிட்டே இல்லை சார்! கொஞ்சம் டைம் கொடுத்தீங்கன்னா…”

”ஸாரிம்மா! இந்த லோன் உங்கப்பா வாங்கி அஞ்சாறு வருஷம் ஆகிடுச்சு! அவர் ரிடையர் ஆகியும் லோன் கட்டி முடிக்கலை! பிராவிடண்ட் ப்ண்ட் அது இதுன்னு செட்டில்மெண்ட் தொகையை கழிச்சும் பாக்கி ஆறு லட்சம் இருக்குது. இன்னும் எத்தனை நாளுக்கு நான் சும்மா இருக்க முடியும்.இது மத்தவங்களா இருந்தா ரிட்டையர்மெண்ட் போதே நிக்க வைச்சு வாங்கியிருப்பேன். சண்முகம் நல்ல மனுஷர்தான்னு இத்தனை நாள் டைம் கொடுத்தேன். நீ பணத்தை கட்டித்தான் ஆக வேண்டும்.”

”வேறவழியே இல்லையா சார்?”


அவர் வசந்தியை மேலும் கீழும் பார்த்தார்.
”ஒரே வழிதான் இருக்கு!”..

வசந்தி ஆர்வமாய் முகம் மலர்ந்து ”என்ன சார் என்ன வழி?” என்றாள்.
”சொல்றேன் அவசரப்படாதே! இதனாலே உனக்கு ஒரு நஷ்டமும் இல்லே! கடனும் அடைஞ்சிடும். நிம்மதியா உன் லைஃபை ஓட்டிடலாம்.”

”அப்படி என்ன வழி சார்? ”

இன்னைக்கு சாயந்திரம் ஆறி மணிக்கு இந்த அட்ரஸுக்கு வந்துடு! எல்லாம் புரியும் அவர் விஷமமாய் சிரித்துக் கொண்டே சொல்லவும்
வசந்திக்கு கோபத்தில் கண்கள் சிவந்தது!

”சார்! என்ன சொல்றீங்க? நான் எதுக்கு அங்கே வரனும்?”

”வசந்தி நீ சின்ன பொண்ணு இல்லே! எல்லாம் உன் நல்லதுக்குத்தான் சொல்றேன்! இதை இங்கே பேச வேண்டாம்! ஆறு மணிக்கு மேலே நான் சொன்ன இடத்துக்கு வா! அங்கே வந்தா உனக்கு ஒரு உசந்த இடம் காத்திருக்கு!” பூடகமாய் மணிரத்னம் சொல்ல

”சார்! நீங்க என்னை தப்பா எடை போட்டிருக்கீங்க! நான் அந்த மாதிரி பொண்ணு இல்லே..!”

”அடப் போம்மா! உன்னைப் பத்தின எல்லா விவரமும் எனக்குத் தெரியும்! அந்த மாதிரி பொண்ணுன்னா நான் இப்படி உன்னை உக்கார வைச்சு பேசிக்கிட்டு இருப்பேனா! நீ நம்ம சண்முகம் பொண்ணுங்கிறதாலேதான் உனக்கு இத்தனை மரியாதை கொடுத்து பேசிக்கிட்டிருக்கேன்.”

”சார்! இதுவா நீங்க பொண்ணுங்களுக்கு கொடுக்கிற மரியாதை?”

”சாயங்காலம் ஏழுமணிக்கு நான் சொன்ன இடத்துக்கு வா! அங்கே உனக்கு தனி மரியாதையே கிடைக்கும்.!”

பொறுமை இழந்தாள் வசந்தா.

”அனாதைப் பொண்ணுன்னு தெரிஞ்சு இப்படி பேசறீங்களா? நான் உங்க வழிக்கு வரமாட்டேன்! என்னை உங்க இஷ்ட்த்துக்கு வளைக்க முடியாது! உங்களை என்ன பண்றேன் பார்!”

”அப்புறம் உன் இஷ்டம்! இப்போ நீ கிளம்பு”

மணிரத்னம் தீர்க்கமாய் சொல்ல வீட்டுக்கு வந்தவள் அழுது தீர்த்தாள்.
”ச்சே என்ன மனிதர்கள்? தன் அப்பா போல மதிக்கும் அந்த முதலாளி என்ன தைரியம் இருந்தாள் தனியாக தன் பங்களாவிற்கு கூப்பிடுவான். பெண் என்றால் இவங்களுக்கு கிள்ளுக்கீரையாகிவிட்டது! தாயும் இல்லை! தந்தையும் இல்லை! இனி வாழ்ந்து என்ன ஆகப்போகிறது!” செத்துவிடுவோம் ஒரு நொடியில் முடிவெடுத்தாள்.
தூக்கு மாட்டிக் கொள்வோமா? விஷம் அருந்தலாமா? இல்லை கையை கிழித்துக் கொள்ளலாமா?

சேச்சே! இவை எதுவும் வேண்டாம்! நம் பிணம் கூட இவர்கள் கைகளுக்கு கிடைக்க்க் கூடாது. பேசாமல் மலை உச்சியில் இருந்து குதித்து ,மாண்டு போகலாம். நாம் காணாப் பிணமாக போவதுதான் சரி!

மறுநிமிடம் வீட்டைப் பூட்டிக்கொண்டு ஓர் ஆட்டோ பிடித்து மலையடிவாரம் வந்து சேர்ந்தாள். ஆட்டோக் காரன் கூட கேட்டான். ”ஏம்மா இவ்வளவு பொழுது சாய்ஞ்சு இந்த பக்கம் வர்றீங்க! பூச்சி பொட்டு இருக்கும்! சீக்கிரம் திரும்பிடுங்க நான் வேணும்னா வெயிட் பண்ணட்டுமா?”

வசந்திக்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்த்து. பரவாயில்லை இந்த ஆட்டோக்காரனுக்காவது கொஞ்சம் மனசு இருக்கிறது! அதில் ஈரம் இருக்கிறது! ஆனால் அந்த முதலாளி… அவன் கூப்பிட்டால் நான் போய் விடுவேனா?

” வேண்டாம்பா! நான் உடனே வர முடியாது! நீ கிளம்பு நான் பார்த்துக்கிறேன்! என் ப்ரெண்ட் இன்னும் கொஞ்ச நேரத்துலே வந்துருவார் பயம் ஒண்ணும் இல்லே நீ போ!” என்று திருப்பி அனுப்பி விட்டு நடந்தவள் இதோ இப்போது மலை உச்சிக்கு வந்து விட்டாள்.

இதோ இன்னும் சில அடிகள் குதித்து விடலாம்! அப்புறம் இந்த கடனிலிருந்து விடுதலை! அந்த முதலாளியிடம் இருந்து விடுதலை! அப்புறம் இந்த உலகிலிருந்தே விடுதலை! நிம்மதிதான் அப்புறம்? சிந்தித்துக் கொண்டே குதிக்க எத்தனித்தவளை பாய்ந்து இழுத்த்து பின்னாலிருந்து ஒரு கரம்.

அதிர்ந்து போய்,” யார் யார் நீங்க? எதுக்கு என்னை காப்பாத்தறீங்க? விடுங்க நான் சாகனும்! இந்த உலகத்துலே வாழ எனக்குப் பிடிக்கலை! ப்ளீஸ் என்னை சாக விடுங்க!” விசும்பினாள் வசந்தி

” சரி செத்துபோங்க! ”அவன் திரும்பி நடக்க ஆரம்பித்தான்
.
மெல்ல இரண்டு அடி வைத்து மலையின் உச்சியிலிருந்து அதள பாதாளத்தை பார்த்தவள் அப்படியே பயந்து பின் வாங்க தூரத்தே நின்று அவன் சிரித்தான் ”ஹாஹாஹா!”

வசந்திக்கு கோபமாக வந்தது! ”ஏன் சிரிக்கறீங்க? நீங்க வரலைன்னா நான் செத்துருப்பேன்! இப்போ இந்த பாழாப்போன உலகத்திலே தனியா வாழனும்!”

”நான் தடுக்கலையே! நீங்க தாரளமா கீழே குதிக்கலாம்! என்க்கு ஒரு ஆட்சேபனையும் இல்லே!” என்றான் அவன் நக்கலாக.

”இல்லே! நீங்க இப்போ தடுக்கலை! ஆனா நான் பர்ஸ்ட் அட்டெம்ப்ட் பண்ணும் போது தடுத்திட்டீங்க! அப்ப விட்டிருந்தா குதிச்சிருப்பேன். இப்போ குதிக்க பயமா இருக்குது!”

”இதாங்க மனசு! தற்கொலை எண்ணம் அந்த ஒரு செகெண்ட் வரும்! அந்த கணத்தை தாண்டிட்டோம்னா அந்த முட்டாள்தனத்தை மீண்டும் செய்ய மாட்டோம்!”

இப்போது வசந்தி அழுதாள். ஆம்! நான் முட்டாள்தான்! ஆறு லட்சம் கடனுக்காக இந்த உயிரை இழக்கலாமா? தன்னிடம் உறுதி எங்கே போனது? ச்சே! நல்ல வேளை இந்த மனுஷர் வந்து காப்பாத்தினார்.

”ஓ…! நான் தப்பு பண்ணிட்டேன்! நல்ல வேளை கடவுளா வந்து காப்பாத்தினீங்க! தேங்க்ஸ் மிஸ்டர்….”

” ப்ரதீப்.! ”என்று முடித்தான் அவன்.

”நீங்க எதுக்கு தற்கொலை பண்ணிக்க இங்க வந்தீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா? உங்களுக்கு இஷ்டம் இல்லேன்னா வேண்டாம்!”

”என்னை காப்பாத்தி இருக்கீங்க! உங்க கிட்டே சொல்றதுக்கு என்ன? ” என்ற வசந்தி ஆறுலட்சம் கடனையும் முதலாளி தனியாக அழைத்ததையும் சொல்லி முடித்தாள்.

”சே.. அவ்வளவு மோசமானவனா அந்த ஆளு…! கவலைப் படாதீங்க! எப்படியாவது அந்த பணத்தை கட்டிடலாம்.. இப்போ கிளம்புங்க!” என்று அடிவாரத்திற்கு அழைத்து வந்தவன்.

”சரி எப்படி வீட்டுக்கு போவீங்க! வாங்க நானே என் காரில் ட்ராப் பண்ணிடறேன்!” என்று கார் கதவைத் திறந்து விட்டான்.

நேரம் ஏழைக் கடந்திருக்க அந்த பங்களா முன் கார் சென்று நிற்கவும் அதிர்ந்தாள் வசந்தி.

”ப்ரதீப்! என்ன இது? இது முதலாளி சொன்ன இடமாச்சே! இங்கே ஏன் கூட்டி வந்தீங்க?”
”பயப்படாதீங்க! நான் இருக்கேன்! அந்த மனுஷனை நல்லா நாக்கைப் பிடுங்கிக்கிறா மாதிரி நாலு கேள்வி கேட்க வேணாம் நீங்க! துணைக்கு நான் இருக்கேன். உள்ளே போங்க!” என்றான் ப்ரதீப்

”வே.. வேணாம் ப்ரதீப்.!”.

”நீங்க பயப்படாதீங்க! நான் எதுக்கு இருக்கேன்! உங்களை யாரும் ஒண்ணும் செய்ய முடியாது நீங்க உள்ளே போங்க!” என்று அவளை இழுக்காத குறையாக உள்ளே ப்ரதீப் கூட்டி வர

சோபாவில் அமர்ந்திருந்த மணிரத்னம், ”அட ப்ரதீப்… நீயே கூட்டி வந்திட்டியா சபாஷ்!” என்று சொல்லவும் அதிர்ந்தாள் மிரண்டாள்.

நம்மை காப்பாற்றுவதாகச் சொல்லி இவனே கொன்றுவிட்டானே என்று கண்களில் நீர் வழிய.. ”ப்ரதீப் இப்படி நீ என்னை ஏமாத்திட்டியே.. உங்க திட்டம் எதுவும் பலிக்காது,, நான் உங்களுக்கு கிடைக்க மாட்டேன்!”. என்று அழவும்

”போதும்பா! இன்னும் எதுக்கு விளையாட்டு ? வசந்தி ரொம்பவே பயந்து போயிருக்கா! நீங்க பண்ண கூத்துலே இவ தற்கொலை பண்ணிக்க போயிட்டா! ஒரு அஞ்சு நிமிஷம் லேட்டா போயிருந்தாலும் இவளை காப்பாத்தியிருக்க முடியாது தெரியுமா?”

“ அப்படியா மருமகளே! ஏன் இப்படி பைத்தியக்காரத்தனமா நடந்துக்கிறே!

சா.. சார்..

நான் இனிமே உனக்கு சார் இல்லே! மாமனார்! இவன் தான் என் ஒரே பையன் ப்ரதீப்! இவனுக்கு உன்னைப் பிடிச்சுப் போச்சு! உன்னை ஆறு மாசமா பாலோ பண்றான் உன்னைத்தான் கட்டிப்பேன்னு ஒரே அடம்!

சண்முகம் நல்லவன்! தெரியும்! அவன் பொண்ணு நீயும் நல்லவளாத்தான் இருப்பே! என் குடும்பத்துக்கு விளக்கேத்த நீ சரியா இருப்பேன்னுதான் உன்னை விளக்கேற்ற சாயந்திரமா வீட்டுக்கு கூப்பிட்டேன். ஆனா ஒரு சஸ்பென்ஸ் வைப்போம்னுதான் பூடகமா பேசினேன். என்ன பொண்ணும்மா நீ! இப்படி பண்ணிட்டியே..

, ”அப்பா உன்கிட்டே பேசினப்ப நான் உள்ளே மறைஞ்சிருஞ்சு கேட்டுகிட்டுதான் இருந்தேன். நீ கோபமா வெளியே போனதும் அப்பாவும் என்கிட்டே அந்த பொண்ணு கோபிச்சுட்டு போகுது நீ போய் என்ன ஏதுன்னு பாருன்னு சொன்னாரு! வீட்டுக்கு வந்த நீ கொஞ்ச நேரம் கழிச்சு ஆட்டோவிலே புறப்பட்டதும் உனக்குத்தெரியாம பாலோ பண்ணி வந்தேன். அது நல்லதா போச்சு! உன்னை காப்பாத்த முடிஞ்சுது! இல்லேன்னா வருங்கால மனைவியை சாகடிச்ச பாவம் எனக்கு வந்து சேர்ந்திருக்கும் !” ப்ரதீப் குறும்பாய் சிரித்துக் கொண்டே கூற

”சார்! நீங்க பேசினது நடந்துகிட்ட்து எல்லாம் எனக்குத் தப்பாவே தெரிஞ்சுது! சாரி சார்!’

”டீவி சீரியல் அதிகமா பார்க்கிறேன்னு நினைக்கிறேன்! அதை விட்டுடும்மா! இந்த உலகத்துலே நல்லவங்களும் இருக்காங்க! அதை புரிஞ்சுக்கோ! ஒரு விஷயம் நல்லது கெட்டதுங்கிறது நம்ம பார்வையிலேதான் இருக்குது! சரி சரி நல்ல நேரம் முடியப் போகுது சீக்கிரம் போய் முகம் கழுவிட்டு சாமி ரூம்லே போய் விளக்கேத்து! கூடிய சீக்கிரமே உனக்கும் என் பையனுக்கும் கல்யாணம்! அதுக்கு நான் கொடுக்கிற சீர்தான் அந்த ஆறு லட்சம்!” என்றார் மணி ரத்னம்.

ப்ரதீப் கண்ணடிக்க வெட்கத்தில் முகம் சிவந்தாள் வசந்தி

(கணேஷ்பாலா சங்கப்பலகை குழுவில் வைத்த ஓவியக் கதைப் போட்டிக்கு எழுதியது.)

Comments

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!