நீலம் பிரிந்த வானம்!
நீலம் பிரிந்த வானம்!
இவ்வளவு சீக்கிரம் கோமதி தன்னைவிட்டுப்போவாள் என்றும் சிறிதும் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை ஜம்புலிங்கம் ஐம்பது வருட தாம்பத்யம்.கொரானாவின் கொடிய தாக்கம் அவர்களை பிரித்துவிடக் கூடும் என்று கனவிலும் நினைக்கவில்லை!
ஒரேநாள்தான்! காய்ச்சல் என்றதும் மருத்துவரைப் போய் பார்த்தனர். சி.டி ஸ்கேனில் கொரானா உறுதியாக அட்மிட் செய்தார். சிகிச்சை தொடர்ந்து கொண்டிருக்கும் போதே மூச்சுத்திணறல் அதிகமாக ஆக்ஸிஜன் பெட் கிடைக்கவில்லை! ஏற்பாடு செய்வதற்குள் எல்லோரையும் ஏமாற்றிச் சென்றுவிட்டாள் கோமதி.
ஒரே மகன், திருமணத்திற்கு பின் வெளிநாட்டுவாசி ஆகிவிட்டான். நியுஜெர்சியில் சாப்ட்வேர் துறையில் பணி புரிகின்றான். தகவல் சென்றதும் பறந்தோடி வந்தான்.
ஆனால் இறுதிச் சடங்குகள் கூட அவர்கள் இஷ்டத்திற்கு செய்யவிடவில்லை கொரானா. கார்பரேஷனில் எடுத்துச் சென்று அடக்கம் செய்துவிட பதினாறாம் நாள் காரியம் முடிந்ததும் அவரது மகன் அரவிந்த் மெல்ல ஆரம்பித்தான்.
”அப்பா! இனிமே நீங்க இங்கே தனியா இருக்கணுமா?”
”அப்போ நீ அமெரிக்காவை விட்டு இங்கே வந்திடேங்கிறியா?”ஜம்புலிங்கம் கேட்க,
”அப்பா புரியாம பேசாதீங்க! நான் எப்படி வர முடியும்? அஞ்சு வருஷ காண்ட்ராக்ட் இருக்கு! முறிச்சிட்டு வரணும்னா ஏகப்பட்ட நஷ்டம் ஆகும்!”
”என்னை கூட்டிக்கிட்டு போகப்போறியா? எனக்கு அந்த நாடெல்லாம் வசதிப் படாது! பாஸ்போர்ட் விசான்னு ஏகப்பட்ட சிக்கல் இருக்கே!”
”ரைட்தாம்பா! அதுக்குத்தான் ஒரு ஏற்பாடு செஞ்சிருக்கேன்!”
” என்ன? என்னை ஏதாவது ஹோம் லே சேர்த்து விடலாம்னுதானே முடிவு பண்ணியிருக்கே!”
”நீங்களே சொல்லி என் வேலையை ஈஸி ஆக்கிட்டீங்க! அடையாறுலே ஒரு சூப்பர் ஓல்ட் ஏஜ் ஹோம் இருக்கு! சார்ஜஸும் கம்மிதான்! ஆனா நல்லா பார்த்துக்கிறாங்க! நெட்ல சர்ச் பண்ணி பார்த்து விசாரிச்சிட்டும் வந்துட்டேன்! உங்களை அங்கே கொண்டுபோய் சேர்த்துடறேன்! அம்மாவை பிரிஞ்ச சோகம் அங்கே இருக்க்றவங்களோட பேசிப் பழகப் பழக மறைஞ்சு போயிரும். ஹேப்பியா இருப்பீங்க! ஒரு ஆறுமாசம் இல்லே ஒரு வருஷம் முடியட்டும் இந்த வீட்டை வித்துடலாம்!”
” நிறுத்தறியா?”
“அப்பா….!”
”இந்த வீட்டை விக்கிறதுக்கு நீ யார்னு கேட்கறேன்! இது என் சொந்த சம்பாதியத்துலே கட்டின வீடு! இந்த வீட்டின் ஒவ்வொரு அணுவிலும் என்னோட கோமதி இருக்கிறா?”
”அப்பா இது செண்டிமெண்ட் பேச நேரம் இல்லை!”
”இது செட்டில்மெண்ட் காலமாயிருச்சுங்கிறியா? அப்படியே வச்சுப்பொம்! உன்னை பெத்த கடமைக்கு உன்னை நல்லா படிக்க வைச்சு! வேலையும் தேடிக்கொடுத்து நல்லா பொண்ணா பார்த்து கட்டிக் கொடுத்து எல்லாம் கடமையும் நான் முடிச்சுட்டேன்!”
”அப்பனுக்கு புள்ளையா கடைசி காலத்துலே கஞ்சி ஊத்த வேண்டியது உன் கடமை! அதை நீ தட்டிக் கழிக்கிறே? ஹோம்லே சேர்க்கறேன்னு எவ்வளவு ஈஸியாச் சொல்லிட்டே!”
”எல்லாம் உங்க நல்லதுக்குத்தான் சொல்றேன்?”
”எதுடா நல்லது? இதுவரைக்கும் சொல்லாதிருந்த ரகசியத்தை சொல்றேன்! நீ என்னோட சொந்த பிள்ளை இல்லை! தத்துப் பிள்ளை! கல்யாணமாகி ரொம்ப நாள் குழந்தை இல்லாம இருந்த நாங்க உன்னை ஒரு ஹோம்ல இருந்துதத்து எடுத்து வளர்த்தோம் குழந்தை இல்லாம பித்து பிடிச்சாப்போல இருந்த கோமதி நீ வந்ததும்தான் தெளிஞ்சா! ஹோம்லே வளர்ந்த உன்னை கஷ்டமில்லாம வளர்க்கணும்னு நானும் கோமதியும் பார்த்துப் பார்த்து கட்டின வீடு இது.. நானும் கோமதியும் வானமும் நீலமும் போல! நாங்க வாழ்ந்த வீடும் அதுபோலத்தான்! ”
”கோமதி என்னைவிட்டுப் போனாலும் இந்த வீட்டுலே அரூபமா வாழறதா நான் நம்பறேன்! இந்த வீட்டுலே நானும் அவ நினைவோட வாழ்க்கையை கழிக்கப் போறேன். அதோட உன்னைப் போல பெத்தவங்களை ஹோம்ல சேர்க்கற பிள்ளைகளை பெத்தவங்களுக்காக ஒரு ”ஓல்ட் ஏஜ்” ஹோம் ஆரம்பிக்க போறேன். அவங்களோட என் வாழ்க்கையை சந்தோஷமா கழிக்கப் போறேன். அம்மாவுக்கு உன் கடமையா வந்து கொள்ளிப் போட்டது போதும் அதுக்கு என் நன்றிகள். உன்னோட ப்ளைட் டிக்கெட்டுக்கு காசு இதுலே இருக்கு!” என்று ஒரு கவரை அவன் கையில் ஜம்புலிங்கம் திணிக்க அரவிந்த் முகம் வெளிறிப் போனது..
சங்கப்பலகை முகநூல் குழுவில் நீலம் பிரிந்த வானம் என்ற தலைப்பிற்காக எழுதிய சிறுகதை.
நல்லதொரு சிறுகதை. பல வீடுகளில் சொந்த மகனாகவே இருந்தாலும் பெற்றவர்களை முதியோர் இல்லத்தில் விடுவதைப் பார்க்க முடிகிறது. பலருக்கு இந்த முதியோர் இல்லம் நல்ல வியாபாரமாகவும் மாறி விட்டது என்பது வேதனையான உண்மை.
ReplyDelete