யுவராஜ் சிங்! இந்திய கிரிக்கெட்டின் இளவரசன்! பகுதி 3

 

யுவராஜ் சிங்! இந்திய கிரிக்கெட்டின் இளவரசன்!

 


தமிழ் சினிமாக்களில்  ஹீரோ வில்லனிடம் அடிமேல் அடிவாங்கி சாகும் நிலைக்குப் போய்விடுவார். அப்புறம் ஆச்சர்யமாக ஒரு துளி மழைநீர் பட்டோ காதலியின் குரல் கேட்டோ சிலிர்த்தெழுவார். பின்னர் வில்லனை துவம்சம் செய்து வெற்றிக் கொடி நாட்டுவார். யுவராஜ் சிங்கும் அப்படித்தான்.

தன் கிரிக்கெட் வாழ்க்கையில் பலமுறை அதளபாதாளத்திற்கு சென்று மீண்டும் உயிர்த்தெழுந்து  இந்திய அணியை மீட்டிருக்கிறார். இந்திய அணியின் காப்பானாக ஜொலித்திருக்கிறார்.

யோக்ராஜ் சிங்கிற்கு தன் மகன் கிரிக்கெட்டில் இன்னும் நிபுணன் ஆக வேண்டும் என்ற ஆசை. புல்டாஸ் பந்துகளில் அவுட் ஆகிவிடுவதாக கூறி நவ்ஜோத் சித்துவை யுவராஜிற்கு பயிற்சி அளிக்கும்படி கூறினார். சித்துவும் யுவராஜிற்கு பயிற்சி அளித்தார். அவரது பயிற்சியும் நம்பிக்கை அளிக்கும் பேச்சும் யுவராஜிற்கு உத்வேகம் அளித்தது.

நாட்வெஸ்ட் டிராபி வென்றபிறகு சிலதொடர்களில் யுவராஜின் ஆட்டம் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. ஆனால் கேப்டன் கங்குலி யுவராஜின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார். விளையாடும் லெவனில் இருக்கும் வீர்ருக்கும் கேப்டனுக்குமான உறவு மிகவும் முக்கியம். ஒவ்வொரு வீர்ரின் தனித்திறமையை கேப்டன் உணர்ந்திருந்தால் அந்த வீர்ர் மட்டுமல்லாமல் அணியும் ஜொலிக்கும்.

இந்திய கேப்டன்களில் கங்குலி இந்தவிஷயத்தில் யுவராஜிற்கு மிகவும் உதவினார். இதையே யுவராஜும் ஒரு பேட்டியில் சொல்லி இருக்கிறார். கங்குலியுடன் விளையாடிய காலங்கள் மிகவும் பிடிக்கும்.அவர் எனக்கு உதவிகரமாக இருந்தார். என்று சொல்லியுள்ளார் யுவராஜ்.கங்குலி காலத்தில் ஆறாவது வீர்ராகத்தான் பெரும்பாலும் களம் இறங்குவார் யுவராஜ்.அந்த நிலையில் ஆடும்போது குறைந்த ஓவர்களைத்தான் பேஸ் செய்ய வேண்டியிருக்கும். குறைந்த பந்துகளில் நிறைய ரன்கள் எடுக்க வேண்டியிருக்கும். பந்தை தைரியமாக அடிக்கும் திறன் கொண்ட யுவராஜுக்கு இந்த இடம் சவுகர்யமாக அமைந்தது. இதை அமைத்துக்கொடுத்தவர் கங்குலி.

2007 ம்வருடம் இங்கிலாந்துஅயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது இந்திய அணி. ஏழு போட்டிகள் கொண்ட தொடர் ஒரு போட்டி ரத்தாகி 3-2 என்று இந்திய அணி பின் தங்கியிருந்தது. கடைசிப்போட்டியில் வென்றால் தொடரை சமன் செய்யலாம் என்ற நிலையில் அந்த போட்டியில் 300க்கும் அதிகமாக ரன்கள் குவித்த்து இங்கிலாந்து.

குறிப்பாக யுவராஜ் சிங்கின் ஓவரில் இங்கிலாந்தின் மஸ்காரென்ஸ் அதிரடியாக 5 சிக்சர்களை தொடர்ந்து அடித்தார். அதைப்பார்த்த இந்தியர்களின் இதயம் நொறுங்கிப் போனது. நல்லவேளையாக அந்த போட்டியில் டெண்டுல்கர் சிறப்பாக ஆடி இந்தியா வெற்றிபெற உதவினார். இது யுவராஜின் மனதில் வடுவாக பதிந்துவிட்டது.

2007ல் முதல் முறையாக டி 20 உலகக்கோப்பை போட்டி நடத்தப்பட்டது. இந்திய அணியில் சீனியர்கள் விலகிகொள்ள தோனி தலைமையில் இளமையான ஒரு இந்திய அணி உருவாக்கப்பட்டது. யுவராஜ் சிங் துணைக்கேப்டன் ஆனார்.

 சீனியர் வீர்ரான யுவராஜிற்கு நியாயப்படி கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் முன்கோபம் ப்ளேபாய் என்ற இமேஜ் சரிவுகள் யுவராஜின் கேப்டன்ஷிப் வாய்ப்பை தவிர்க்க வைத்தது.மேலும் டெண்டுல்கரின் சிபாரிசு தோனிக்கு சென்றதால் தோனி கேப்டன் ஆனார்.

முதல் போட்டியில் பாகிஸ்தானுடன் பவுல் அவுட்டில் வென்றுவிட்டது.இந்தியா. இரண்டாவது போட்டி நியுசிலாந்திடம் தோல்வி கண்டது. இங்கிலாந்தை வென்றே ஆகவேண்டிய சூழலில் களம் கண்டது. இந்தியா பேட்டிங் செய்கையில் முக்கிய விக்கெட்களை இழந்து தடுமாறிக் கொண்டு இருந்தது.பிளிண்ட் ஆப் வேறு இந்திய வீர்ர்களை சீண்டிக் கொண்டு இருந்தார். அப்போதுதான் களம் புகுந்தார் யுவராஜ். ஸ்டுவர்ட் ப்ராட் வீசுவதற்கு முந்தைய ஓவரை வீசிய ப்ளிண்ட் ஆப் யுவராஜை சீண்டினார். ஆடு பார்க்கலாம் என்று வெறுப்பேற்றினார்.

 வெறுப்பேற்றினால் வீறு கொண்டு எழுவதில் யுவராஜ் சிங்கம். சிங்கத்தை சீண்டிய இங்கிலாந்து சிதறிப் போனது.

ஸ்டுவர்ட் ப்ராட் வீசிய அந்த ஓவரின் அனைத்து பந்துகளும் மைதானத்தை தாண்டி வெளியே விழ அரங்கம் அதிர்ந்தது. ஒன்று இரண்டல்ல, ஆறு பந்துகளிலும் ஆறு சிக்சர்கள். ஓர் உலக சாதனை சத்தமில்லாமல் நிகழ்ந்தேறியது. அரங்கம் கரகோஷத்தில் மிதக்க இந்திய அணியின் ஸ்கோர் இருநூறை தாண்ட இங்கிலாந்தின் பி.பி எகிற அதன் பின்னர் அவர்களால் மீண்டுவரவே முடியவில்லை. இது குறித்து யுவராஜ் கூறுகையில்

ஆறு சிக்சர்கள் அடித்த ஓவருக்கு முந்தைய ஓவரில் பிளிண்டாப் என்னிடம் சில வார்த்தைகளை உதிர்த்தார். நானும் சில வார்த்தைகளை உதிர்த்தேன். அந்த வார்த்தைகள் ஒரு உத்வேகத்தை என்னுள் எழுப்பின. அடுத்த ஓவரில் ஆறு சிக்சர்கள் பறக்கவிட்டு அசத்தினேன். அப்புறம் நான் முதலில் பார்த்தது பிளிண்ட் ஆஃபை, அப்புறம் மஸ்காரென்ஸை, அவர் என்னைப்பார்த்து சிரித்தார்.

போட்டி முடிந்த்தும் ஸ்டூவர்ட் பிராடின் தந்தையும் அம்பயருமான கிறிஸ் ப்ராட் என்னை பார்த்தார். “நீ ஏறக்குறைய என் மகனின் கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துவைத்துவிட்டாய்!” என்றார். இப்போது நீ அவனுக்கு உன் பனியனில் கையெழுத்திட்டு தருவாயா? என்று கேட்டார்.

அந்த பனியனில் எனது பந்தில் ஐந்து சிக்சர்கள் அடிக்கப்பட்டிருக்கிறது. எனவே அந்த வேதனை எனக்குத் தெரியும்.இங்கிலாந்து கிரிக்கெட்டில் உனக்கு சிறப்பான எதிர்காலம் அமைய வாழ்த்துகள் என்று எழுதி கையெழுத்திட்டேன் என்றார்.

 யுவராஜின் வாக்கு பொய்க்க வில்லை! ஸ்டூவர்ட் ப்ராட் இன்று இங்கிலாந்தின் சிறந்த பவுலர்களில் ஒருவராக திகழ்கின்றார். இளமைப்பட்டாளம் இறுதிப் போட்டியில் மீண்டும் பாகிஸ்தானை வென்று உலக கோப்பையை வென்று வந்துவிட்டது. யுவராஜின் சிக்சர்கள் தான் உலகம் முழுவதும் பேசப்பட்டது. உலகமே கொண்டாடித் தீர்த்தது. ஆனாலும் யுவராஜுக்கு இன்னும் ஓர் கனவு இருந்தது.

 அது?   அடுத்தப் பதிவில்.

 

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2