யுவராஜ் சிங்! இந்திய கிரிக்கெட்டின் இளவரசன்!

 

யுவராஜ் சிங்! இந்திய கிரிக்கெட்டின் இளவரசன்!

 




ஓவ்வொருவருக்கும் ஒரு கனவு இருக்கும். வெற்றி பெறும்வரை அந்த கனவைத் துரத்திக் கொண்டிருக்க வேண்டும். யுவராஜ் சிங்கிற்கும் ஒரு கனவு இருந்தது. இந்திய டெஸ்ட் அணியில் நிரந்தர இடம் என்பதுதான் அது. ஆனால் அது நிறைவேறாத கனவாகவே போய்விட்டது.

 யுவராஜ் சிங் அறிமுகம் ஆனபோது இந்திய டெஸ்ட் அணியில் டெண்டுல்கர், லஷ்மண், டிராவிட், கங்குலி என்ற நால்வர் அணி வலுவானதாக இருந்தது. எனவே மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் யுவராஜிற்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. அதற்கேற்பவே அவரது ஆட்ட ஸ்டைலும் இருந்தது. அவுட்ஸ்விங் பந்துகள் முரளிதரனின் பந்துகளில் திணறி இருப்பதாக அவரே ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். டெஸ்ட் போட்டியில் நிலைத்து ஆடும் தன்மை யுவராஜுக்கு இல்லை என்றே தேர்வாளர்கள் கருதினார்கள்.

2000 ஆண்டில் ஒருநாள் போட்டியில் அறிமுகம் ஆனாலும் 2003ல் நியுசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில்தான் முதல் டெஸ்ட் ஆட்டத்தை ஆடினார். மொத்தம் 40 டெஸ்ட் போட்டிகள் ஆடிய யுவராஜ் டெஸ்ட் போட்டியில் பெரிதாக சாதிக்க வில்லை. மூன்று சதங்கள்   பாகிஸ்தானுக்கு எதிராக எடுத்துள்ளார். ஆனாலும் டெஸ்ட் போட்டிகளில் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்பட்டது. அதற்கு முக்கிய காரணம் நீண்ட நேரம் நிலைத்து ஆடும் தன்மை அவரது பேட்டிங் ஸ்டைலில் இல்லை என்பதுதான். கங்குலி, லக்ஷ்மண், டிராவிட் ஓய்வு பெற்ற போதும்  புஜாரா, ரஹானே போன்ற வீர்ர்கள் அந்த இடத்தைப் பற்றிக் கொண்டனர். எனவே யுவராஜிற்கு போதிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை.  ஆனாலும் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான சென்னைப் போட்டி அவரது மறக்க முடியாத ஒன்றாகும்.

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற 387 ரன்கள் இலக்கை இங்கிலாந்து நிர்ணயித்து இருந்தது. 4வது நாள் ஆட்டத்தின் போது வீரேந்தர் சேவாக் அதிரடி காட்ட இந்தியா 29 ஓவரில் 131 ரன்களை ஒருவிக்கெட்டை இழந்து எடுத்து இருந்தது.  இந்த போட்டி டிரா அல்லது இந்தியா தோற்கும் என்று எண்ணியிருந்தோரை சேவாக்கின் இந்த அதிரடி ஆட்டம் மாற்றி வைத்தது.

அடுத்த நாள் ஆட்ட்த்தை தொடர்ந்த இந்தியா ராகுல்டிராவிட் லக்ஷ்மண் விக்கெட்டை விரைவில் இழந்தாலும் டெண்டுல்கர் பொறுமையாக ஆடிக்கொண்டிருந்தார். அவருடன் இணைந்து சிறப்பாக ஆடிய யுவராஜ் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 85 ரன்கள் எடுத்தார். இது அவரது வாழ்வில் மறக்க முடியாதஒரு ஆட்டமாக அமைந்தது. நான்காவது இன்னிங்சில் இத்தனை பெரிய இலக்கை சேஸ் செய்து சாதனை படைத்தது இந்தியா.

பாகிஸ்தானுக்கு எதிராகவே தனது மூன்று டெஸ்ட் சதங்களையும் எடுத்தார் யுவராஜ் சிங்.. டெஸ்ட் ஆவ்ரேஜ் ஒன்றும் மோசமானது அல்ல. ஆனாலும் அவர் வருவதும் போவதுமாகவே டெஸ்ட் அணியில் இருந்தார். ஓய்வு பெற்றதும் ஒரு பேட்டியில்  ரோகித் சர்மாவுக்கு இந்திய டெஸ்ட் அணியில் தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்படுவதில்லை என்று சொல்லியிருந்தார். ஒரு வீர்ருக்கு தொடர்ச்சியான வாய்ப்புகள் வழங்கப்பட்டால்தான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும் என்று தன் ஆதங்கத்தை பகிர்ந்து கொண்டார்  

2011ல் இந்தியாவில் உலக கோப்பை போட்டிகள் நடைபெற்றது. இந்திய பிட்ச்களில் யுவராஜ் சிங் ஸ்லோ பவுலிங் எடுபடும் என்று கேப்டன் தோனி கணித்தார். அது வீண் போகவில்லை. உலக கோப்பை நாயகனாக ஜொலித்தார் யுவராஜ் சிங்.

 லீக் போட்டிகளில் இரு அரைசதங்கள் விளாசிய நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான காலிறுதியில் இந்தியா 143 ரன்களுக்கு மூன்று விக்கெட்களை இழந்து தவித்துக்கொண்டிருந்த போது சுரேஷ் ரெய்னாவுடன் இணைந்து ஒரு சூப்பர் பார்ட்னர்ஷிப் அமைத்தார். இந்த கூட்டணி இந்தியாவை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றது. 65 பந்துகளில் 57 ரன்கள் எடுக்க இந்தியா அரையிறுதிக்கு பாகிஸ்தானுடன் மோத ரெடியானது. அரையிறுதியில் பேட்டிங்கில் சாதிக்காவிட்டாலும் தன் பந்துவீச்சில் மூன்றுவிக்கெட்கள் அதிலும் அபாய யூனுஸ்கான் விக்கெட் வீழ்த்தி இந்தியா வெற்றி பெற காரணமாக இருந்தார். இறுதிப்போட்டியில் இந்தியா இலங்கையை வென்று உலக கோப்பையை கைப்பற்றியது. இந்தப் போட்டியில் யுவராஜுக்கு முன்னதாக தோனி களமிறங்கியது விமர்சனத்துக்கு உள்ளானது. அதைப்பற்றி தோனி கூறுகையில் முரளிதரன் பந்துகளை ஆடுவதில் தனக்கு சிரமம் இருப்பதாக யுவராஜ் சொல்லியிருந்தார். எனவே அந்த நேரத்தில் தான் களமிறங்கியதாக கூறினார்.

போட்டி முடிந்த்தும் இந்தியவீர்ர்கள் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்தனர். ஒருவருக்கொருவர் கட்டிப்பிடித்து அழுதனர். யுவராஜ் சிங் கண்களிலும் கண்ணீர் வழிந்தது. அது 2003ல் தவறவிட்ட வெற்றியை  மீண்டும் திரும்பப் பெற்றதற்கான ஆனந்தக் கண்ணீர்.

அந்த தொடரில்  4 அரைசதங்கள் ஒரு சதம் உட்பட 362 ரன்களும் 15 விக்கெட்டுகளும் எடுத்த யுவராஜ் சிங்தொடர் நாயகன் விருதை தட்டிச்சென்றார். இது ஒரு உலக சாதனையாகும்.

எந்த ஒரு ஆல்ரவுண்டரும் உலக கோப்பை தொடரில் 300 ரன்களும் 15 விக்கெட்களும் எடுத்தது இல்லை..

2011 உலககோப்பையின் பொது    ஒரு போட்டியில் யுவராஜ் பேட்டிங் செய்யும்போது ரத்த வாந்தியும் எடுக்க நேரிட்டது. அதன் காரணம் தெரிந்தபோது யுவராஜுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் கலங்கிப் போயினர்.  அதுஅடுத்த பகுதியில்

 

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2