சாமர்த்தியம்!

சாமர்த்தியம்!


“ அந்த மேஸ்திரி கூட வேலைக்கு போனா ரொம்ப கஷ்டமா இருக்கும் சாயந்திரம் ஆறு மணிவரைக்கும் வேலை வாங்குவாரு!”

ஆமாம்! ஆமாம்! நான் கூட போன வாரம் ஒருநாள் வேலைக்கு போனேன்! ஆறரை மணி வரைக்கும் பிழிஞ்சு எடுத்திட்டாரு!”

”நீங்க சொல்றது சரிதான்! காலையிலே ஒன்பது மணிக்கு போனா சாயந்திரம் அஞ்சு மணியாச்சுன்னா டான்!னு அனுப்பிடுவார் எங்க மேஸ்திரி! கூலியும் கரெக்டா தந்திருவாரு!

கட்டிட வேலை செய்யும் கொத்தனார்களும் சித்தாள்களும் கூடிப் பேசிக்கொண்டிருந்தார்கள். கேட்டுக்கொண்டிருந்த பரமசிவம் எந்த மேஸ்திரியைப்பா சொல்றீங்க? என்று கேட்க நினைத்தார். ஆனால் அவர்கள் சம்பாஷணையில் குறுக்கிட்டு பேச சங்கோஜமாக தயங்கி நின்றார். அப்போது அவரின் குறையை தீர்ப்பது போல ஒரு சித்தாள் பேசத் துவங்கினான்.

   நீங்க ஆயிரம்தான் சொல்லுங்க நம்ம மணி மேஸ்திரி மாதிரி யாரும் வர மாட்டாங்க! அவர் ஆறு மணிவரைக்கும் வேலை வாங்கத்தான் செய்யறாரு ஆனா நம்ம வேலை நேரம் எட்டு மணி நேரத்தை தாண்ட விடமாட்டாரு! கூலியும் கரெக்டா கொடுத்திருவாரு! கமிஷன் கூட எடுக்கிறது இல்லை! நான் அவர் கூடத்தான் வேலைக்கு போயிகிட்டு இருக்கேன் எனக்கு ஒரு கஷ்டமும் இல்லை!” என்றான் ஒருவன்.

  பரமசிவத்துக்கு “பக்”கென்று இருந்தது. அவர் இந்த சம்பாஷணையை செவிமடுக்க காரணமே அவரது மருமகன் ஒரு கட்டிட மேஸ்திரி. அதனால்தான் ஆர்வமாய் கேட்டுக் கொண்டிருந்தார். அவர்கள் பேசிக்கொண்டிருந்தது தனது மருமகன் மணியை பற்றித்தான் என்றதும் பதறிப் போனார். இப்படி கொத்தனார்கள் வேலைக்கு வராமல் போனால் மருமகன் பாடு திண்டாட்டமாய் போய்விடுமே? இன்று போனதுமே மருமகனிடம் விஷயத்தை கூறிவிடவேண்டும் என்று ஆளாய் பறந்தார்.

  வீட்டுக்கு கூட செல்லாமல் மருமகன் வீட்டுக்கு சென்றார். “ என்ன மாமா! திடீர்னு விளக்கு வெச்சப்புறம் புறப்பட்டு வந்திருக்கீங்க? என்றான் அப்போதுதான் வேலையை விட்டு வந்து கை கால் கழுவிக்கொண்டிருந்த மணி.

   ”மாப்ளே! கொஞ்சம் வர்றீங்களா? அப்படியே கொஞ்சம் காலாற நடந்துட்டு வருவோம்!”
    “என்ன விஷயம் மாமா?”

  வாங்க சொல்றேன்!”  என்று அழைத்து சென்றவர் கொத்தனார்கள் பேசியதை எல்லாம் சொல்லி ஏன் மாப்பிள்ளே இப்படி இருக்கீங்க? நீங்க வீட்டுக்காரங்க கிட்ட நல்ல பேர் எடுக்கணும்னு தொழிலாளிங்க கிட்ட கெட்ட பேர் எடுத்துட்டு இருக்கீங்க? இப்படியே போனா உங்களுக்கு வேலைக்கு யாரும் வரமாட்டாங்க! என்றார்.

   அதைக் கேட்டு சிரித்தான் மணி.

  ”என்ன மாப்ளே சிரிக்கறீங்க? நான் என்ன ஜோக்கா சொல்லிட்டு இருக்கேன்?”

 “மாமா உங்க கவலை நியாயம்தான்!” என்னை புரிஞ்சுகிட்டவங்க என் கூட ரெகுலரா வேலை செய்யறவங்க என்னை தப்பு சொல்ல மாட்டாங்க! இதுஎன் தொழில் ரகசியம் மாமா!”

   ஆமா! ஒருத்தன் மட்டும் உங்க கூடத்தான் வேலை செய்வேன்னு சொன்னான்.”

 அங்க தான் என் ட்ரிக் இருக்கு!” எல்லா மேஸ்திரிகளும் காலையில் ஒன்பது மணிக்கு ஆட்களை  கரெக்டா வரச்சொல்லுவாங்க! நான் முன்னே பின்னே வந்தாலும் கண்டுக்க மாட்டேன். இடையிலே டீ குடிக்க பாத்ரூம்னு பத்து பதினைஞ்சு நிமிஷம் ரெஸ்ட் எடுத்துப்பாங்க மத்தியானம் சாப்பிட்டதுக்கு அப்புறமா ரெண்டு மணிக்கு ஆரம்பிக்கிற வேலையை ரெண்டே காலுக்கு ஆரம்பிப்பாங்க இப்படி காலையிலே ஒரு மணி நேரம் வேலை செய்யாம  அப்பப்ப ரெஸ்ட் எடுத்துக்குவாங்க அதை ஈடுகட்ட அஞ்சரை ஆறு மணிவரைக்கும் வேலை செய்வாங்க

   முதலாளிகளுக்கு நாங்க ஆறு மணிவரைக்கும் வேலை செய்யறோம் கூடுதலா செய்யறோம்னு ஒரு நல்ல நம்பிக்கை வந்துடும். ஆனா இடையிலே ரெஸ்ட் எடுக்கிறது அவருக்குத் தெரியாது. ஆட்கள் கிட்டேயும் அப்பப்ப ரெஸ்ட் எடுத்து வேலை வாங்கறதினாலே எனக்கு நல்ல பேர். என் கிட்ட ரெகுலரா வர்றவங்க என்னை தப்பு சொல்ல மாட்டாங்க! நீங்க கவலையே படாதீங்க என் தொழிலுக்கு எந்த பாதிப்பும் வராது மாமா என்றான் மணி.

  மாப்பிள்ளையின் சாமர்த்தியத்தை மெச்சிக்கொண்டார் பரமசிவம்.

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை
பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


Comments

  1. நல்லதொரு கருத்துதான் நண்பரே

    ReplyDelete
  2. உளவியலை புரிந்து கொண்ட நல்ல கதை.

    ReplyDelete
  3. தொழில் ரகசியங்கள் மாறும் படும் நம்பிக்கையூட்டும் கதை!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!