சுபிட்சம் அளிக்கும் அன்னாபிஷேக தரிசனம்!

சுபிட்சம் அளிக்கும் அன்னாபிஷேக தரிசனம்!


ஐப்பசி மாத பவுர்ணமி அன்று சந்திரன் பூர்ண சந்திரனாய் தனது பதினாறு கலைகளும் ஜொலிக்க ஒளிர்கின்றான். அன்று சந்திரன் அமிர்த கலையாக ஜொலிக்கின்றான்.அஸ்வினி நட்சத்திரத்துடன் கூடிய பவுர்ணமி தினம் சிவனுக்கு அன்னாபிஷேக தினமாகும். சிவன் பிம்ப ஸ்வரூபி. சிவன் பிம்பரூபி, அவரது மெய்யன்பர்கள் பிரதி பிம்ப ரூபிகள். பிம்பம் திருப்தி அடைந்தால் பிரதி பிம்பம் திருப்தி பெறும்அன்னம் லிங்க ஸ்வரூபம். ஒவ்வொரு அரிசியும் ஒரு லிங்க வடிவம்.

வேதத்தில் அஹமன்னம், அஹமன்னம் அஹமன்னதோ என்று கூறப்பட்டுள்ளது. எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள் அன்னத்தின் வடிவில் இருப்பதாக கூறப்பட்டுள்ளதுஅன்னம்தான் உலகில் வாழும் அனைத்து ஜீவராசிகளுக்கும் உயிர்நாடி. உலக வாழ்கைக்கு அச்சாணி. அன்னம் பிரம்ம, விஷ்ணு, சிவ சொரூபம்.

தில்லையிலே அனுதினமும் காலை பதினோறு மணியளவில் ஸ்படிக லிங்கத்துக்கு அன்னாபிஷேகம் நடைபெற்று அந்த அன்னம் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்படுகின்றது. எனவேதான் இத்தலத்தை அப்பர் பெருமான் அன்னம் பாலிக்கும் தில்லை சிற்றம்பலம் என்று சிறப்பித்துப் பாடினார். இந்த அன்னாபிஷேகத்தை தரிசித்து பிரசாதத்தை ஏற்றுக் கொண்டவர்களுக்கு என்றுமே அன்ன ஆகாரத்திற்கு கவலையே இல்லை.

சிவன் அபிஷேகப் பிரியர். மொத்தம் எழுபது வகை திரவியங்கள் அபிஷேகத்திற்கு சொல்லப்பட்டுள்ளன. அவற்றுள் அன்னமும் ஒன்று. ஒவ்வொரு அன்னமும் ஒருலிங்கம் என்பதால் அன்னாபிஷேகத் தினத்தில் சிவனை தரிசித்தால் கோடிலிங்க பலன் கிடைக்கும்.
சோறு கண்ட இடம் சொர்கம் என்ற சொலவடை உண்டு. அது டேரா போட்டு தங்கும் உறவினர்களை குறிப்பதன்று. ஐப்பசி அன்னாபிஷெக தரிசனத்தை கண்டவருக்கு சொர்கத்தில் இடம் உண்டு என்பது ஆகும்.
ஐப்பசி பௌர்ணமி நாளன்று அனைத்து சிவாலயங்களிலும்  அன்னாபிஷேகம்  எனப்படும் சிறப்பு வழிபாடு லிங்க மூர்த்திக்கு நடத்தப்படுகிறது.

அனைத்து உயிர்களுக்கும் அன்னமான உணவை அளித்துப் பாதுகாக்கும் சிவபெருமானுக்கு சுத்த அன்னத்தைக் கொண்டு முழுக்காட்டுவது இந்த நாளின் சிறப்பாகும். இனிப்பு, காய்கறி மற்றும் பழங்களுடன் செய்யப்படும் சுத்த அன்னாபிஷேகக் காட்சி, ஆலயத்துக்கு வழிபட வரும் பக்தர்களை பரவசத்துக்குள்ளாக்குகிறது. இந்த அன்னாபிஷேக நாளன்று சிவாலயங்களில் கருவறையிலுள்ள சிவபெருமானுக்கு அபிஷேக ஆராதனை முடிந்த பின்னர், சமைத்த சுத்த அன்னத்தைக் கொண்டு திருமுழுக்காட்டப்படுகிறது. லிங்கத் திருமேனி மறையுமளவுக்கு அன்னம் குவிக்கப்பட்டு, இனிப்புகள், பழங்கள் நிவேதனதுக்கு வைக்கப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் நடைபெறுகின்றன. இந்த அன்னாபிஷேக நாளன்று இறைவனைத் தரிசித்து பிரசாதத்தை உட்கொள்வதை பெரும்பேறாக பக்தர்கள் கருதுவதுடன், வரும்காலங்களில் வாழ்வில் பஞ்சமே இராது என்றும் நம்புகின்றனர். அத்துடன்  அபிஷேக அன்னத்தை எறும்பு, கால்நடை, பறவை உள்ளிட்ட எல்லா உயிர்களுக்கும் அளிப்பர்.

சிவன் பரம்பொருள், அவனது பிரதிபிம்பமே அனைத்து ஜீவராசிகளும், இரண்டும் வேறல்ல. அபிஷேக அன்னப்போர்வையால் ஐயன் அகமும் புறமும் குளிரும் போது எல்லா ஜீவராசிகளும் அவனது பேரருட்கருணையினால் குளிர்வது இயற்கைதானே.
ஆகாயத்தில் பிறந்த காற்றின் துணையுடன் தீ எரிகின்றது. நிலத்தில் விளைந்த நெல் அரிசியாகின்றது. அரிசி நீரில் மூழ்கி, தீயில் வெந்து அன்னமாகின்றது. எனவே அன்னமும் பஞ்ச பூதங்களின் சேர்க்கை. இந்த அன்னம் அபிஷேக நிலையில் ஆண்டவன் மேனி முழுவதும் தழுவி அவனை அகப்ப்டுத்தி அடைக்கலமாகின்றது. அதன் மூலம் ஐம்பூதங்களும் அவனுள் அடக்கமென்பது புலனாகின்றது.எனவே அவனே பரம்பொருள் என்பது தெள்ளத் தெளிவாக தெரிகின்றது.
அன்னாபிஷேகம் செய்த சாதத்தை குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் உண்டால் பலன் நிச்சயம் உண்டு என்பது ஐதீகம்.
சிவபுராணத்தில் உள்ள ஒரு கதை உணவின் முக்கியத்துவத்தைக் கூறுகிறது. இவ்வுலகில் உள்ளோர் எல்லோரும் உணவு உண்டார்களா தெரியவில்லையே எனச் சந்தேகம் எழுப்பினாராம் பார்வதி தேவி சிவபிரானிடம். அனைவரும் இன்றைய பொழுதில் உணவு உண்டாகிவிட்டது என்று பதில் கூறினாராம் சிவன்.

இங்கே, கைலாயத்தில் என்னுடனேயே தங்கி இருக்கும்போது, இது தங்களுக்கு எப்படித் தெரியும் என்று தேவி கேட்க, யாம் அனைத்தையும் அறிவோம் என்கிறார் சிவன். இதனைச் சோதிக்கப் பார்வதி தேவி முடிவு செய்கிறார். மறுநாள் சிறிய தங்கச் சம்படத்தில் எறும்பு ஒன்றைப் போட்டு அடைத்துவைத்தாள் தேவி. பின்னர் மதிய உணவு வேளையின்பொழுது, அனைவருக்கும் உணவு கிடைத்ததா என்று தேவி கேட்க, என்ன இது தினமும் கேட்க ஆரம்பித்துவிட்டாய், அனைவரும் உண்டார்கள் என்று பதிலிறுத்தார் சிவன்.

தன் புடவைத் தலைப்பில் சம்படத்தை முடிந்து வைத்திருந்த தேவி, அதனை எடுத்துத் திறந்தபடியே, இதில் இருக்கும் எறும்பும் சாப்பிட்டதா என்று கூறியபடியே அப்பாத்திரத்தினுள் பார்க்க, அதில் இருந்த அரிசியை எறும்பு உண்டுகொண்டிருந்தது. திகைத்தாள் பார்வதி.

கல்லுக்குள் தேரைக்கும், கருப்பை உயிற்கும் உள்ளுணர்வே தரும் தயாபரன் சிவன். அந்த லிங்கத் திருமேனிக்கு ஐப்பசி மாதம் பெளர்ணமி அன்று ஆண்டுதோறும் அன்னாபிஷேகம் உலகமெங்கும் நடைபெறும். 
உணவு. உணவின்றி உயிரில்லை. உயிரின்றி உலகில்லை.
அன்னம் எனும் உணவேஅனைத்திற்கும் ஆதாரம்.வேதங்கள் அன்னத்தை மிகவும் போற்றுகின்றன. தைத்ரீயஉபநிஷதம், சாம வேதம் போன்ற ஸ்ம்ருதிகள் அன்னத்தின் புகழைப் பறைசாற்றுகின்றன. 

சோறு நம் பசிப்பிணியினை போக்கவல்லது! வயிற்றுத்தீயை அணைக்கவல்லது! யாவர்க்குமாம் உண்ணும் போது ஒரு கைப்பிடி என்றார் திருமூலர்! அத்தகைய சிறப்பு வாய்ந்த அன்னத்தை இறைவனுக்கு அபிஷேகம் செய்து அதை பிரசாதமாக பெறுவது என்பது நம் பாக்கியம் ஆகும். இன்று அன்னாபிஷேக நன்னாள். 

பொதுவாக அபிஷேகம் செய்யப்பட்ட அன்னத்தை ஓடும் நீரில் கரைத்து விடுவது வழக்கம். குறிப்பாக லிங்கத்தின் மீது இருக்கும் அன்னத்தின் விடுத்து மற்ற இடங்களில் உள்ள அன்னத்தை எடுத்து தயிர் கலந்து பிரசாதமாக கொடுக்கின்றனர். மீதமான அன்னம் திருக்குளத்திலோ அல்லது கடலிலோ கரைக்கப் படுகின்றது. எம்பெருமானின் அருட்பிரசாதம் நீர்வாழ் உயிரினங்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதால் இவ்விதம் செய்யப்படுகின்றது.

அன்னமே தெய்வம்! எனப்படுகிறது. இந்த காலத்தில் எப்படி எப்படியோ உணவுகள் வீணாக்கப்படுகிறது. ஒரு பருக்கை சாதம் சாக்கடையில் வீசினாலும் அடுத்த ஜென்மத்தில் புழுவாக பிறக்கவேண்டும் என்கிறது சாஸ்திரங்கள்! இரவில்  விளக்கு வெளிச்சம் இன்றி உணவை அருந்தக் கூடாது என்றும் சொல்லப்படுகிறது.

 ஐப்பசிமாதப் பவுர்ணமிக்கு ஒரு சிறப்பு உண்டு. அன்றுதான் சந்திரன் தனது சாபம்முழுமையாகத் தீர்ந்து பதினாறு கலைகளுடன் முழுப் பொலிவுடன் திகழ்கிறான்.அது என்ன சாபம்? தெரிந்த கதைதான். 

சந்திரன், அஸ்வினி, முதல் ரேவதிவரையான தனது நட்சத்திர மனைவியரு ரோகிணியிடம் மட்டும் தனி அன்புசெலுத்தி மற்றவர்களிடம் பாரபட்சம் காட்டியதால், மாமனார் தட்சனால் உடல்தேயட்டும் என்று பெற்ற சாபம். 
சந்திரனுக்கு ஒவ்வொரு கலையாக தேயஆரம்பித்ததுஅவன் மிகவும் 
வருந்திக் கெஞ்சவே, திங்களூரில் சிவனை பூஜித்தால்சாப விமோசனம்கிடைக்கும்என்றார், தட்சன். உடனே அவன் திங்களூர் வந்துசிவனை நோக்கி தவம் செய்யத் துவங்கினான். அவன் மேனியின் ஒளி நாளுக்கு நாள்மங்கத் துவங்கியது. மூன்றே மூன்று கலைகள் மிச்சமிருக்கும் போது சிவனார்,அவன்பால் மனமிரங்கி அந்தப் பிறையைத் தனது தலையில் அணிந்து கொண்டார்.கொடுத்த வாக்கை மீறிய அவனுக்கு பதினாறு கலைகளும் கிடைக்கப் பெற்றாலும்முழுப்பொலிவும் வருடத்தின் ஒரு நாள் அதாவது ஐப்பசி பவுர்ணமி அன்று மட்டுமேகிடைக்கும். அது மட்டுமல்ல அவனது ஒளி தினமும் தேயும் முழுவதும் மறைந்துபின் படிப்படியாக வளரும். இது எப்போதும் நடக்கும் ஒரு சுழற்சியாக இருக்கும்என்று அருளிச் செய்தார் விடைவாகனர். திங்கள் முடிசூடியவருக்கு மதிமுழுமையான ஒளியுடன் இருக்கும் நாளில் சிறப்பு வழிபாடு செய்வதுதானே சிறப்பு !

ஆன்மிக ரீதியாக மட்டுமன்றி அறிவியல் ரீதியாகவும் இதற்கு ஆதாரம் இருக்கிறது.அக்டோபர் (ஐப்பசி) மாதத்தில்தான் நிலவு, பூமிக்கு மிக அருகில் வந்து தனது முழுஒளியையும் பூமியை நோக்கி வீசுகிறது என்கிறது வானவியல். நவகிரங்களில்சந்திரனுக்கு உரிய தானியம் அரிசி. இதை உணர்ந்த நமது ரிஷிகள் அந்த மாதத்தில்அன்னாபிஷேகம் செய்வது சிறப்பு என்று கண்டறிந்து அதனைநடைமுறைப்படுத்தினார்கள்.

இந்நாளில் உபவாசம் இருந்து மஹாபிஷேகம் செய்து பின் சிவனுக்கு அன்னாபிஶேகம் செய்த பிரசாதத்தை உண்ணும் போது பக்தி புண்ணிய பலன்கள் சேர்கின்றன.
வாடாமல் உயிரெனும் பயிர் தழைத்து
ஓங்கிமிக  அருள் மழை பொழிந்தும் இன்ப
வாரிதியிலே நின்ன தன் பெனுஞ் சிறகால்
வருந்தாமலே யணைத்து
கோடாமல் வளர் சிற்றெறும்பு முதல்
குஞ்சரக்  கூட்ட முதலான ž
கோடிகள் தமக்கு புசிக்கும் புசிப்பினை
குறையாமலே கொடுக்கும்
அந்த சர்வேஸ்வரனை அன்னாபிஷேக கோலத்தில் வருடத்தின் ஒரு நாள் மட்டுமே கிட்டும் அந்த அற்புத திருக்கோலத்தை கண்டு தரிசித்து, ஆலயம் தோறும் அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெற நம்மால் முடிந்த உதவி செய்து நன்மையடைவோமாக.

(படித்து தொகுத்தது)


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. நல்ல தகவல்கள் நன்றி நண்பரே

    ReplyDelete
  2. தரிசனம் கிடைத்தது உங்கள் தளத்தில்!!
    இன்று சூப்பர் மூன் - நிலாவை பெரியதாக பூமிக்கு அருகில் பார்க்கலாம்!!

    ReplyDelete
  3. உங்கள் கட்டுரையைப் படித்த எனக்கு, ஐப்பசி மாத பவுர்ணமியைத்தான், இப்போது சூப்பர் நிலா என்று சொல்லுகிறார்கள் என்று எண்ண வைக்கிறது.

    ReplyDelete
  4. சிவனின் சிறப்பு அருமை

    ReplyDelete
  5. சிவனின் சிறப்பு அருமை

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2