வேலைக் கிடைச்சாச்சு!

வேலைக் கிடைச்சாச்சு! 


ரமேஷ் அந்த தனியார் அலுவலகத்தில் இருந்து சோர்வுடன் வெளியே வந்தான். கடைசி நம்பிக்கையாக இருந்த இந்த இண்டர்வியுவிலும் வேலை கிடைக்கவில்லை! வயது ஏறிக்கொண்டே போகிறது. முதலில் அரசு உத்தியோகமாக தேடிக்கொண்டிருந்தவன் இப்போது தனியார் நிறுவன வேலைக்கும் தயாராக இருந்தும் வேலை கிடைப்பது குதிரைக் கொம்பாக இருந்தது.

   எல்லோரும் பிரஷ்ஷர்ஸை கேட்கிறார்கள்! அப்படியானால் நம்மை போன்று பலவருடங்கள் முன்பு படித்து முடித்தவர்களுக்கு வாய்ப்பு அவ்வளவுதான் போல! இன்று கூட வேலை வேறு ஒருவருக்கு சிபாரிசு மூலம் கிடைத்துவிட்டது. கண் துடைப்பு இண்டர்வியு. “சாரி மிஸ்டர் ரமேஷ்! உங்க குவாலிபிகேஷன் ஓக்கே! ஆனா நீங்க டிகிரி முடிச்சு நாலு வருஷம் ஆகுது. எங்க கம்பெனியில பிரஷ்ஷர்ஸைத்தான் எடுக்கிறோம்! ஐயம் சாரி! என்று அவர் பைலை திருப்பி கொடுத்தபோது பொங்கிவிட்டான். “அப்புறம் ஏன் சார் என்னை கூப்பிட்டீங்க? வேலையில்லாம கையில் பணமில்லாம இருக்கிற நேரத்துல இன்னிக்கு எனக்கு வெட்டியா நூறு ரூபா செலவு! ரொம்ப நம்பிக்கையா வந்தேன் சார்! ஏமாத்திட்டீங்க! என்றான்.

   அவர் தலையை குலுக்கிக் கொண்டார். வெளியே போகும்படி சைகை காட்டினார். வெறுப்புடன் வெளியே வந்தான். தன் மீதும் நாட்டின் மீதும் கோபம் கோபமாக வந்தது. இந்த நாட்டில் தகுதிக்கு வேலை கிடையாது. சிபாரிசு உள்ளவனுக்குத்தான் மரியாதை! எத்தனை நாள் பெற்றோருக்கு பாரமாக இருப்பது? அவனுள் இயலாமையும் ஆத்திரமும் கரை புரண்டு வந்தது. கண்ணில் துளிர்த்த நீரை துடைத்துக் கொண்டு நடந்தான்.

சாலை ஓரம் ஓர் விநாயகர் கோயில்.பிரசித்தியான கோயில் கூட்டம் கரைபுரளும். அவரிடம் சென்று ஒர் அப்ளிகேசன் போட்டுவைப்போம். அவர் சிபாரிசிலாவது ஓர் வேலை கிடைக்காதா? என்று பாக்கெட்டில் கைவிட்டு காசைத் தேடினான். சில சில்லறைக் காசுகள் இருந்தன. கற்பூரம் வாங்கிக் கொண்டு உள்ளே சென்று அர்ச்சகரிடம் கொடுத்தான். தீபாராதணை முடிந்தது. சில்லறையாக போட்டதும் அர்ச்சகர் முகத்தில் கூடத் தெம்பில்லை. வேலை கிடைக்கட்டும் சாமி நோட்டாவே போடறேன்! என்று மனதுக்குள் கூறிக்கொண்டு பிரகார வலத்திற்கு வருகையில் வெளியே கலாட்டாவாக இருந்தது.

   “ இங்கதான் சார் வாசல்ல விட்டுட்டு போனேன்! சாமி கும்பிட்டு வந்து பார்த்தா காணோம் சார்! புது செருப்பு சார்! வி.கே.சி லைட் பிராண்ட் சார்! இருநூறு ரூபா! வாங்கி ரெண்டு நாள் தான் ஆகுது!” செருப்பை தொலைத்தவர் புலம்பிக் கொண்டிருக்க அவரை சுற்றி கும்பல் கூடியிருந்தது.

  “ திருட்டு பசங்க அதிகமாகிட்டாங்க! தினமும் பத்து ஜதை செருப்பாவது இங்கே காணாம போவுது! கோவில் நிர்வாகம் கண்டுக்கவே மாட்டேங்குது!”
 “இன்னிக்கு மட்டும் இல்லே! தினமும் இது தொடர்கதையா இருக்கு!”
 “வாங்க கோயில் ஆபிஸ்ல போயி முறையிடுவோம்!”
 “எல்லாம் சொல்லி ஆயிருச்சு! அவங்க எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டேங்கிறாங்க!”

  “ஒருவேளை அவங்களுக்கும் இந்த திருட்டுல சம்பந்தம் இருக்கோ என்னவோ?”
  பார்த்துக் கொண்டிருந்த ரமேஷின் மனதில் ஓர் எண்ணம் உருவானது. நேராக கோயில் அலுவலகத்தில் நுழைந்தான். வெளியே நடந்ததை சொல்லி தான் ஒரு வேலையில்லாத பட்டதாரி என்றும் தனக்கு ஒரு வாய்ப்பு தந்தால் இந்த செருப்பு திருட்டுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக கூறினான்.

   ”சார்! என்னால எதுவும் முன் பணம் தர முடியாது. கோயில் வாசல்ல கொஞ்சம் இடம் ஒதுக்கிக் கொடுங்க, அங்க வர்ற பக்தர்கள் செருப்பை வாங்கி டோக்கன் போட்டு வைச்சிருக்கேன். டோக்கன் கட்டணம் வாங்கறதில பாதியை கோயிலுக்கு கொடுத்திடறேன்! நானும் சம்பாதித்த மாதிரி இருக்கும். கோயிலுக்கும் வருமானம்! அதோட செருப்பு திருடு போவுதுங்கிற கெட்ட பேரும் வராது” என்றான்.

  நிர்வாகி யோசித்தார். பின்னர் ”அப்படியே செய்யுங்க! நான் இடம் ஒதுக்கித் தரேன்!” என்றார்
.
மறுநாள் காலை அந்த கோயில் எதிரே இங்கே காலணிகள் பாதுகாக்கப்படும் கட்டணம் ரூ 2.00 என்று போர்டு தொங்க உள்ளே படு பிஸியாக இருந்தான் ரமேஷ்.

டிஸ்கி}  96ம் ஆண்டு எழுதிய கதை! தற்போது பட்டி டிங்கரிங் பண்ணி பதிவிடுகிறேன். ஜோக்ஸிற்கு அதிகம் சிந்திப்பதால் கதை, கவிதை பஞ்சம் ஆகிவிட்டது.

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்!

Comments

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2