எடை!

  எடை!


  “என்னங்க! பழைய பேப்பர் நிறைய சேர்ந்து போச்சு! எடைக்கு போடனும்!” என்றாள் மீனாட்சி

 “சரி சரி! வழக்கமா வர பொன்னுசாமி அண்ணாச்சியை வந்து எடை போட்டு எடுத்துட்டு போக சொல்லறேன்!”

   ”வேணாங்க! புதுசா ஒரு பையன் வந்து கேட்டுட்டு போயிருக்கான்! கிலோவுக்கு பத்துரூபா தரேன்னு சொன்னான். அண்ணாச்சி 8 ரூபாவுக்குத்தான் எடுத்துப்பாரு! சுளையா ரெண்டு ரூபா கூட வருது! உங்ககிட்டே சொல்லிட்டு போடுவோம்னு நாளைக்கு வா!ன்னு சொல்லி அனுப்பிச்சிட்டேன்! அந்த பையன்கிட்டேயே போட்டுருவோமா?”

  ”பொண்ணுசாமி அண்ணாச்சி ஏமாத்திற ஆள் கிடையாதே! நியாயமான விலைக்கு எடுத்துக்கிறவர்  வேணும்னா அவர்கிட்டேயே இந்த மாதிரி பத்துரூபாய்க்கு எடுத்துக்கறேன்னு சொல்றாங்க என்ன சொல்றீங்கன்னு கேட்டு பார்ப்போமே!” என்றேன் நான்.

  ”நீங்கதான் அவரை மெச்சிக்கணும்! காலத்துக்கேற்ப மாத்திக்கணும்! இன்னும் அதே பழைய சைக்கிள்  பழைய தராசு எடுத்துட்டு வந்துகிட்டிருக்காரு! புது பையன் எலக்ட்ராணிக் தராசுலே எடை போடறான்! கூடுதலா ரெண்டு ரூபாவும் தரான் அவன்கிட்டே போடாம நீங்க என்னடான்னா அண்ணாச்சிக்கிட்டே கெஞ்சறேன்னு சொல்றீங்க!” மீனாட்சி சிடுசிடுத்தாள்.

   சரி சரி கொஞ்சம் பொறு! வாடிக்கையா நம்ம கிட்டே பேப்பர் எடுக்கிறவர் ஏமாத்த வேணாம்னு பார்த்தேன்!”

  அவர் நம்மை ஏமாத்திகிட்டே இருக்கார்! விலைவாசி உயர்ந்துட்டு போவுது! இன்னும் பழைய ரேட்ல எடுத்திட்டு இருந்தா எப்படி?
   சரி உன் இஷ்டம்!  என்று சொல்லவும் அந்த புது பையன் வரவும் சரியாக இருந்தது.

   கொண்டுவந்த புது தராசில் எடை போட ஆரம்பித்தான். மூன்று மாத பேப்பர்கள் வார இதழ்கள் மொத்தமாய் பத்து கிலோ இருந்தது இந்தாங்க சார் நூறு ரூபா என்று கொடுக்க வந்தவனை தடுத்து, போன தடவை அண்ணாச்சி மூணு மாச பேப்பர் எடை போட்டப்போ எவ்ளோ இருந்தது என்று மீனாட்சியை கேட்டேன்.

   “அது யாருக்கு ஞாபகம் இருக்கு?”

  ”என் டைரியை கொண்டா? அதுலே குறிச்சு வைச்சிருக்கேன்!”
டைரியை புரட்டவும். சார் இந்தாங்க காசு! எனக்கு எவ்வளோ வேலை இருக்கு கிளம்பணும் என்று பேப்பரை மூட்டை கட்ட முனைந்தவனை நிறுத்தினேன்.
   ”இதே மூணுமாச பேப்பர் போன தடவை எடை போட்டப்ப பதினைஞ்சு கிலோ! அதுக்கு முந்தியும் பதினைஞ்சு கிலோ! ஆனா இப்போ பத்துகிலோவா குறைஞ்சிருக்கு!”

  பையனின் முகம் வெளிறியது! ”நான் சரியா எடை போடலைன்னு சொல்றீங்களா? எலக்ட்ரானிக் எடை சார்!”
   “வெளியே மளிகை கடை இருக்கு அந்த தராசில் எடை போட்டு பார்ப்போம்! உன் எடை சரியா இருந்தா எடுத்திட்டு போ!”
    “அங்க எல்லாம் எடை போட வரமாட்டேன் சார்! என் மிசின்லதான் எடை போடணும் சம்மதம்னா போடுங்க!”
      “அப்ப நீ கிளம்பு!”

அவன் முறைத்துக் கொண்டு வெளியே செல்ல, ”என்னங்க! அஞ்சு கிலோ குறைச்சு எடை போடறான்னு எப்படிங்க கண்டு பிடிச்சீங்க?”

   “கிலோவுக்கு ரெண்டு ரூபா அதிகம் தரான்னு சொன்னப்பவே சந்தேகமா இருந்துச்சு! அதான் செக் பண்ணேன். அவன் எடை சரியா இருந்தா வெளியே எடை போட சம்மதிச்சு இருப்பான். அஞ்சு கிலோ பேப்பர் 40 ரூபா அவனுக்கு லாபம் அதுல இருபது ரூபா நமக்கு போனாலும் இருபது ரூபா நிக்குது!” அதான் வலிய வந்து அதிகவிலைக்கு எடுத்துக்கறேன்னு சொல்லி இருக்கான்.”

   பொன்னுசாமி அண்ணாச்சியையே வரச்சொல்லிடுங்க! அவர் தராசு பழசா இருந்தாலும் எடை குறைச்சலா போட மாட்டாரு. நீங்களும் சரியா மனுசங்களை எடை போடறீங்க! என்றாள் மீனாட்சி.

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!



Comments

  1. நல்ல கதை. பாராட்டுகள்.

    ReplyDelete
  2. புருஷன்காரன் வியாபாரிகளை சரியாய் எடை போட்டு
    வைத்திறுக்கிறாரே:)

    ReplyDelete
  3. இப்படித்தான் நிறைய பேர் ஏமாற்றுகிறார்கள்
    அருமை

    ReplyDelete
  4. அருமையான கதை. ரசித்தேன்.

    ReplyDelete
  5. ஒரு சிறிய நிகழ்வினை
    அற்புதமான கருத்தைச் சொல்லும்
    கதையாக்கிய விதம் அருமை
    வாழ்த்துக்களுடன்...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2