கண்ணாமூச்சி ரே! ரே!

கண்ணாமூச்சி ரே! ரே!


ராகவன்:  நான் அவளை முதன் முதலில் என்னுடைய அலுவலகத்தில்தான் சந்தித்தேன். ஒரு வார மருத்துவ விடுப்பை முடித்துக்கொண்டு அலுவலகம் சென்ற போது அவள் என்னுடைய சீட்டில் அமர்ந்து கணிணியில் மும்முரமாய் ஏதோ பார்த்துக்கொண்டிருந்தாள். நான் தொண்டையை செறுமினேன். அவள் நிமிர்ந்து என்னை பார்த்த போது அவள் கண்களில் மின்னல் ஒரு கோடி பாய்ந்தது போன்று ஓர் உணர்வு எனக்குள் ஏற்பட்டது. ”யெஸ் உங்களுக்கு என்ன வேணும்?” என்று கேட்டபோது அந்த வார்த்தைகள் என் காதில் குயிலின் சங்கீதமாய் ஒலிக்க நான் மவுனமாய் நின்றேன். “ஹல்லோ! உங்களைத்தான்! என்ன வேண்டும்?” என்றாள்.

   “ அதை நான் கேட்கணும்! என்னோட சீட்டுல உக்காந்துட்டு நீங்க என்ன பண்றீங்க?” ஒருவாரம் லீவுல போயிருந்தா என்னென்னமோ மாறிடுதே?” என்றேன். “ ஓ! அப்ப நீங்க மிஸ்டர் ராகவனா? ஐ,யம் நிர்மலா! உங்களோட ஜூனியர் அஸிஸ்டெண்டா  அப்பாயிண்ட்மெண்ட் ஆகி ஃபோர் டேஸ் ஆகுது! நிறைய பெண்டிங்க் வொர்க் இருக்கிறதனாலே அதை க்ளியர் பண்ண முடியுமான்னு பாஸ் கேட்டதாலே உங்க சீட்டுல உட்கார்ந்து வேலை பண்ண வேண்டியதா போச்சு!” இப்ப பரவாயில்லையா? “டைபாயிட் பீவர்னு சார் சொன்னார் என்று அவள் சொல்லிக்கொண்டிருக்கும் போதே எம்.டி உள்ளே வந்தார். ஸாரி ராகவன்! உங்க ஜூனியரா இவங்களை அப்பாயிண்ட்மெண்ட் பண்ணியிருக்கேன்! உங்க கிட்ட சொல்ல மறந்துட்டேன்! வெரி கிளவர் லேடி! இந்த வார டார்கெட் அச்சீவ் பண்ண முடியாதோன்னு நினைச்சேன்! உங்க வேலையை க்ளவரா பண்ணி முடிச்சிட்டாங்க என்ற போது நான் அவளை மரியாதையாகப் பார்த்தேன்.
நிர்மலா:  நான் அவரை வேலைக்குச் சேர்ந்த நான்காம் நாள்தான் பார்த்தேன். என்னுடைய சீஃப் என்பதை அறிந்து மகிழ்ந்தேன். நல்ல ஹேண்ட்செம் மேன். அவருடைய சின்சியாரிட்டி ,வொர்க்கிங் ஸ்டைல் எல்லாமே பிடித்து இருந்தது. எல்லாவற்றுக்கும் மேல் கண்களை அலைய விடாது நேர்கொண்ட பார்வையால் நோக்கிய அவரது செயல் அவர் ஒரு பர்பெக்ட் ஜெண்டில் மேன் என்று சொல்லாமல் சொல்லிவிட்டது. அவரின் கீழ் பணியாற்ற நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

ராகவன்:  பார்த்த உடனேயே எனக்கு அவளைப் பிடித்துப் போய்விட்டது. இன்றைய நவநாகரீக உலகில் சிறிதும் அலட்டல் இல்லாமல் எளிமையாக ட்ரெஸ் செய்திருந்தாள். ஆனால் அதில் ஒரு பர்பெக்ட் இருந்தது. நான் விட்டு வந்திருந்த வேலைகளை வெகு திறமையாக முடித்து வைத்திருந்த போது அவளது திறமை நன்கு வெளிப்பட்டது. ஆனால் அதற்கான கர்வம் அவளிடம் துளியும் இல்லை. என் உடல் நலன் குறித்து விசாரித்ததில் ஓர் அன்பு வெளிப்பட்டது. என்னுடைய வேலைகளை முடித்து கொடுத்தமைக்கு நன்றி சொன்னபோது ஜூனியரோட கடமைதானே அது என்று நாசூக்காய் சொன்னாள்.அவள் வந்தபின் என்னுடைய வொர்க்கிங் டென்சன் பாதியாய் குறைந்தது. சில விஷயங்கள் சில சிந்தனைகள் ஒத்து இருந்தது. இப்போது ஜுனியர் அஸிஸ்டெண்டாய் இருக்கும் இவள் என்னுடைய வீட்டுக்கும்…

நிர்மலா: ராகவனை எனக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது. ஒரு சீஃப் மேலதிகாரி என்ற பந்தாவெல்லாம் கிடையாது.. சகஜமாக பழகினார். அவர் அவருடைய வேலைகளை முடித்தமைக்கு நன்றி கூறியபோது இயல்பாக இருந்தது. ’மேல் சாவனிசம்’ இல்லாமல் இருந்தது அவரது மதிப்பை உயர்த்திக் காட்டியது. பங்க்சுவாலிட்டி, வேலையில் காட்டும் அக்கறை, தொழில் பக்தி, மேலதிகாரியிடம் வாங்கும் பாராட்டு அவரது புத்திசாலித்தனம் எல்லாமே என்னை கவர்ந்தது. கண்டிப்பாக இவரை மனைவி அதிர்ஷ்டக் காரிதான் என்று நினைத்தபோது அவள் மேல் ஓர் பொறாமை வெளிப்பட்டது. ஒருநாள் அவர் மதியம் லன்ச் எடுத்து வரவில்லை என்ன சார் வொய்ப் ஊரில் இல்லையா? என்று கேட்ட போது வொய்ப் இருந்தாத்தானே ஊருக்கு போறதுக்கு? வயசான அம்மா! அவங்களுக்கு உடம்பு முடியலை! ஒரு நாள் ஓட்டல்ல சாப்பிட்டுக்கிறேன்!னு வந்துட்டேன் என்றபோது எனக்கு அவர் அம்மாவை பார்க்க வேண்டுமென தோன்றியது.

ராகவன்: உடல்நிலை சரியில்லாத அம்மாவை பார்க்க வேண்டும் என்று நிர்மலா சொன்னபோது கொஞ்சம் மகிழ்ச்சியாத்தான் இருந்தது. அம்மாவிடம் வருங்கால மருமகளை அறிமுகப் படுத்தியதாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் எதுக்கு வேண்டாம்! என்று கொஞ்சம் பிகு செய்தேன். ஆனால் விடாப்பிடியாக நிர்மலா கிளம்பிவிட்டாள். 

வீட்டுக்கு வந்தவள் அம்மாவை பார்த்து நலம் விசாரித்துவிட்டு சமையல் கட்டில் புகுந்துவிட்டாள். சிங்கில் கிடந்த பாத்திரங்களை கழுவி சூடாக காபி போட்டு கொடுத்தவள், நான் எவ்வளவோ மறுத்தும் இரவு சாப்பாட்டுக்கு கொஞ்சம் சாப்பாடும் ரசமும் வைத்துவிட்டாள். அம்மாவுக்கு நிர்மலாவை ரொம்ப பிடிச்சு போய் விட்டது. வழக்கம் போல என் புராணம் பாடி கல்யாணமே பண்ணிக்க மாட்டேங்கிறாம்மா! எனக்கு வயசாகிட்டே போவுது!  நீயாவது கொஞ்சம் சொல்லேன்! உனக்கு கல்யாணம் ஆயிருச்சா? என்றபோது அவள் முகம் சிவந்தது.
நிர்மலா: ராகவனின் அம்மா என்னிடம் பையன் கல்யாணம் பண்ணிக்கலை! நீ சொல்லக் கூடாதா? என்று கேட்டபோது நானே உங்க பையனை கல்யாணம் பண்ணிக்கிடட்டுமா? என்று கேட்கலாம் போலத் தோன்றியது. ஆனால் அதெல்லாம் நடக்க கூடிய விஷயமா?  மறுநாள் மாலையில் ராகவன் என்னிடம் உங்கிட்டே பர்சனலா ஒரு விஷயம் பேசனும் என்று சொன்ன போதே விளங்கி விட்டது. இத்தனை நாளாய் நான் எதற்கு ஆசைப்பட்டேனோ அது நடக்க போகிறது. என் உள்ளம் மகிழ்ச்சியால் பொங்கியது. நிர்மலா! நான் உன்னை விரும்பறேன்! எங்க அம்மாவுக்கு உன்னை பிடிச்சு போச்சு! உனக்கும் என்னை பிடிச்சிருக்குன்னு நினைக்கிறேன்! உனக்கு சம்மதம்னு சொன்னா எங்க அம்மாவை கூட்டிக்கிட்டு உன்னை பெண் கேட்டு உன் வீட்டுக்கு வரலாம்னு நினைக்கிறேன்! அவர் சொன்ன போது நான் ஆனந்தக் கடலில் நீந்திக் கொண்டிருந்தேன். ஆனால் எல்லாம் சில விநாடிகள் தான்.

ராகவன்:

      நிர்மலா இப்படி ஒரு பதிலைச் சொல்வாள் என்று கனவிலும் கூட நான் நினைத்துப் பார்க்கவில்லை! அவளும் என்னை விரும்புகிறாள் என்றுதான் அவளிடம் என் காதலைச் சொன்னேன். ஆனால் அவளோ மறுத்துவிட்டாள். “ஸாரி ராகவன்! நான் உங்க கிட்ட ப்ரெண்ட்லியா பழகறதை அட்வாண்டேஜா எடுத்துக்கிட்டீங்க! நான் வேற ஒருத்தரை விரும்பறேன்! உங்களுக்கு என்னை விட நல்ல பொண்ணு கிடைக்கும்! கண்டிப்பா அந்த கல்யாணத்துல நான் எல்லா வேலையையும் இழுத்துப் போட்டுகிட்டு செய்வேன்!” என்று சொன்ன போது அதிர்ந்து போனேன். நிர்மலா வேறு ஒருவரை காதலிக்கிறாள் என்று சொன்னதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை! அம்மாவோ அவளை மருமகளாகவே எண்ணிவிட்டாள். இதை அம்மாவிடம் சொல்லி அவள் ஏமாறுவதை எப்படி என்னால் தாங்க முடியும்? நிர்மலா என்னிடம் பழகியது காதல் இல்லையா? நம்ப முடியவில்லையே! ஏதோ சிந்தனையில் வண்டி ஓட்ட எதிரெ வந்த வாகனம் உரசியது தூக்கி வீசப்பட்டேன்.. ஆ!

நிர்மலா:
     ராகவனை பிடித்து இருந்தது. அவர் வந்து காதலை சொன்னபோது தேனாய் இனித்தது. ஆனால் என் மகிழ்ச்சி எல்லாம் சில நொடிகளே! சின்ன வயதில் இருந்தே நான் நேசித்த எதுவும் என்னிடம் நிலைத்தது இல்லை! ஆசையாய் வளர்த்த நாய்க்குட்டி, அப்புறம் நான் நேசித்த எனது அம்மா! என் இனிய பத்தாம் வகுப்புத் தோழி! இவ்வளவு ஏன்? நான் ரொம்பவும் விரும்பி வாங்கிய ஸ்மார்ட் போன் கூட முழுசாய் பத்து நாள் என்னுடன் இருக்கவில்லை! தொலைந்து போனது. நான் விரும்பும் எதுவும் என்னிடம் நிலைப்பது இல்லை! நான் ராகவனை விரும்பினால் அவரும் என்னிடம் நிலைப்பாரா? நாளைக்கு அவருக்கு ஏதாவது ஒன்று என்றால்… அப்புறம் என்னால் தாங்க முடியாதே! இப்படி தூர இருந்தே அவரோடு வாழ்வோம்! நெருங்கிப் போய் அவருக்கு தீங்கு இழைக்க வேண்டாம். அதனால்தான் அவர் காதலை மறுத்தேன். என்ன எல்லோரும் பரபரப்பாக இருக்கிறார்கள் ரிசப்ஷனில் விசாரித்தபோது  ராகவனுக்கு ஆக்ஸிடெண்ட் என்றார்கள். ஐயோ!

ராகவன்:
    நிர்மலா கொடுத்த அதிர்ச்சியில் கவனக்குறைவாக வண்டி ஓட்டியதில் ஒரு கார்க்காரன் உரசியதில் தூக்கி வீசப்பட்டேன் நல்ல வேளை எதிர்ப்புறம் ஏதும் வண்டி வரவில்லை! நல்ல உள்ளங்கள் உதவியால் அருகில் உள்ள மருத்துவ மனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டேன். வெளியே ஏதோ சத்தம் கேட்கிறதே! ஆ! அதோ நிர்மலா…

நிர்மலா:  ராகவனுக்கு ஆக்ஸிடெண்ட் என்றதும் அவசரமாய் விசாரித்து ஆஸ்பிடலில் நுழைந்து விசாரித்தேன். ராகவனா! அவர் கோமா ஸ்டேஜில் இருக்கார். தேறுவது கஷ்டம்! என்று ரிசப்ஷன் பெண் சொல்ல அப்படியே அதிர்ந்து போனேன். இங்கும் என் துரதிருஷ்டம் துரத்துகிறதே! நான் ஆசைப்பட்டாலே இப்படித்தான் நடக்குமா? ஐயோ கடவுளே! அந்த அம்மா தன் பிள்ளையை இழந்து என்ன துடி துடிப்பாளோ? அவருக்கு ஒன்றும் ஆகக் கூடாது. என்று பிரார்த்திக்க அந்த பெண் என்னைக் கேட்டாள் நீங்கதானே ராகவனை பார்க்கணும்னு சொன்னது. ஆமாம்! நீங்க அவருக்கு என்ன உறவு?  எதுக்கு கேக்கறீங்க? சொல்றேன்! நீங்க அவருக்கு என்ன வேணும்னு சொல்லுங்க! என்ற போது “வொய்ஃப்” என்றேன். ஸாரி மேடம்! ராகவன் ஈஸ் நோ மோர்! அந்த பெண் சொல்லும்போதே மயங்கி விழுந்தேன்.

ராகவன் –நிர்மலா
           நிர்மலா மயங்கி விழும்போதே நான் வெளியே வந்தேன். அவளை அப்படியே பிடித்து முதல் உதவி செய்ய மெல்ல கண்விழித்தாள். ராகவ்! நீ.. நீங்க சாகலியா? என்றாள். “அதான் சாகடிச்சிட்டியே!” என்றேன். அவள் வாய் பொத்தினாள். ஸாரி ராகவ்! என்னோட துரதிருஷ்டம்! என்று அவளது பழங்கதைகளை கூறிய போது ஸ்டுப்பிட்! என்றேன்.

நீங்க இந்த ராகவனை சொன்னீங்களா? நான் தப்பா புரிஞ்சிட்டு ஐசியூவில இருந்த வேற ராகவன் இறந்ததை உங்க வொய்ப் கிட்ட சொல்லவும் மயங்கிட்டாங்க என்று நர்ஸ் கூற ராகவன் அமர்த்தலாக பார்த்த பார்வையில் நான் தலை குனிந்து நாணினேன்.

    அப்புறம் என்ன? நீயே சொல்லிட்டே! என் வொய்ப்னு! கிளம்பு வீட்டுக்கு என்று ராகவ் என்னை அழைத்துக்கொண்டு வெளியேற ஒரு சுபயோக சுபதினத்தில் கல்யாணம் நடந்து மகிழ்ச்சியா இருக்கிறோம்! இவ்வளோ நேரம் பொறுமையா கதை கேட்ட உங்களை அழைக்காமலேயே விட்டுட்டோம்! கோச்சுக்காதீங்க ப்ளீஸ்!


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!