அனலாசுரனை வென்ற ஆனைமுகன்! பாப்பாமலர்!

  அனலாசுரனை வென்ற ஆனைமுகன்!  பாப்பாமலர்!


   முன்னொரு காலத்தில் தாபரம் என்ற நகரத்தின் தென் திசையில்  பனைமரங்கள் நிறைந்த தோப்பு ஒன்றில் கவுண்டின்யர் என்ற முனிவர் ஒருவர் ஆசிரமம் அமைத்து வாழ்ந்து வந்தார். கவுண்டின்ய முனிவர் தம் ஆசிரமத்தில் விநாயகரை பிரதிஷ்டை செய்து அவற்றுக்கு தினமும் 21 அருகம்புற்களால் அர்ச்சனை செய்து வந்தார்.

   இதை கவனித்து வந்த அவரது மனைவி," நாதா! மணம் கமழும் மலர்கள் பல இருக்கையில் அருகம் புல்லால் தினமும் ஆனைமுகனுக்கு அர்ச்சனை செய்வது ஏன்? அதற்கான காரணத்தை தயை செய்து கூற வேண்டும்" என்று கேட்டாள்.
   "அருகம்புல்லின் மகிமை அதி ரகசியமானது. நீ பக்தியோடு அதை கேட்டமையால் கூறுகின்றேன் கேள்!" என்ற கவுண்டின்யர்  கூறலானார்.

    முன்னொரு காலத்தில்  ஒரு விஷேசமான தினத்தில் யமதர்ம ராஜன் தன்னுடைய அரசவையில் முனிவர்கள், தேவர்கள் சூழ அமர்ந்திருக்கையில் தேவ கன்னிகைகளில் நடனம் நடைபெற்றது. ரம்பை, திலோத்தமை, ஊர்வசி முதலானவர்கள் நாட்டியம் ஆடுகையில் தேவ கன்னிகைகளில் ஒருவளான திலோத்தமையின் மேலாடை நழுவியது. மேலாடை இல்லாத திலோத்தமையை பார்த்து எமதர்ம ராஜன் மோகம் கொண்டான். அவனது காம இச்சையானது வெளிப்படவும் அனலாய் அவன் உடல் தகித்தது. அப்போது அவனது உடலில் இருந்து பயங்கரமான தோற்றத்தை உடைய அசுரன் ஒருவன் தோன்றினான். கலப்பையைப் போன்ற கோரைப்பற்களும் உடலெங்கும் நெருப்பு ரோமங்களும் அனலாய் கோபம் கொப்பளிக்கும் விழிகளுமாய் அவன் தோன்றிய போது அனைத்து தேவர்களும் நடுநடுங்கிப் போனார்கள்.

  அனலாசுரனின் கோர உருவத்தை பார்த்து எமதர்ம ராஜனும் கூட பயந்துவிட்டான். உடனே தன்னுடைய அறைக்குள் சென்று கதவை தாழிட்டுக் கொண்டான். எமன் தன் தந்தை என்பதால் அவரைமட்டும் விட்டுவிட்டு பூலோகத்திற்கு வந்த அனலாசுரன் அங்குள்ள உயிர்களை எல்லாம் அனல் கக்கும் தன் வாயால் சுட்டு அழித்தான். சிலரை உயிரோடு பிடித்து விழுங்கினான். பின்னர் தேவலோகத்திற்கு புறப்பட்டான்.

   தேவர்கள் அனைவரும் சிவபெருமானை சரண் அடைந்தார்கள். அவரோ அனலாசுரனை வதைப்பது கணபதியால் மட்டும் முடியும் அவரைச் சென்று சரண் அடையுங்கள்! என்று கூறிவிட்டார்.

      தேவர்கள் கணபதியின் பெருமையை உணர்ந்து அவரது இருப்பிடம் சென்று அவரை பலவாறு தொழுது அனலாசுரனிடம் இருந்து தங்களை காத்தருளுமாறு வேண்டிக் கேட்டுக் கொண்டனர். அச்சமயம் அவ்விடத்தேயே தேவர்களைத் தேடி அனலாசுரன் வந்துவிட்டான்.

   தேவர்கள் அனைவரும் விநாயகப் பெருமானின் பின்னே ஒளிந்து கொண்டனர்.  அவர்களை பயப்பட வேண்டாம் என்று சொன்ன ஆனைமுகன், விஸ்வரூப உருவம் எடுத்து அனலாசுரனை தம் கரங்களால் எடுத்து வாயில் போட்டு விழுங்கி விட்டார். அப்போது "அனலாசுரா! நீ பல்வேறு உலகங்களை விழுங்கியது போல நான் உன்னை விழுங்கினேன்! என் வயிறில் இன்னும் பல்வேறு உலகங்கள் உள்ளது அதை சென்று பார்!" என்று சொல்லி விழுங்கி விட்டார்.
   அனலாசுரனை விநாயகர் விழுங்கியதும் தேவர்களின் உடல் எல்லாம் வெப்பம் தகிக்க துவங்கியது. விநாயகப் பெருமானும் வெப்பம் தாளாது அவதி பட்டார். தங்களை காத்தருளிய கணபதியின் துன்பத்தை துடைக்க தேவர்கள் முனைந்தனர்.
  சந்திரன் தன்னுடைய குளிர்ச்சியான கிரணங்களை விநாயகப் பெருமான் மீது படரச்செய்தான். அப்போதும் வெப்பம் தணியவில்லை. மஹாவிஷ்ணு தாமரைப் பூக்களால் தடவிக் கொடுத்தார். தேவர்கள் சந்தனத்தை குழைத்து பூசினர். சிலர் இளநீர் அபிஷேகம் செய்தனர். வருணன் குளிர்ந்த நீரால் அபிஷேகம் செய்தான்.. சிவபெருமான் ஆதிசேடனை விட்டு கட்டித் தழுவச்செய்தார். இப்படி எத்தனை செய்தும் விநாயகரின் வெப்பம் தணிய வில்லை.
    கடைசியில் எண்பத்தெண்ணாயிரம் ரிஷிகள் வந்து ஒவ்வொருவரும் தனித்தனியாக இருபத்தோரு அருகம்புற்களால் அர்ச்சனை செய்தார்கள். அவர்கள் அருகம்புல்லை சொரிய சொரிய விநாயகரை பீடித்திருந்த வெப்பம் விலகியது. குளிர்ந்தார். தேவர்களும் வெப்பம் தணிந்தார்கள்.
   அப்போது விநாயகப் பெருமான், "முனி சிரேஷ்டர்களே! தேவர்கள் செய்த எவ்வளவோ பரிகாரங்களால் தீராத எனது வெம்மை நோய் நீங்கள் செய்த அருகம் புல் அர்ச்சனையால் நீங்கியது. ஆகவே என்னை வழிபடுவோர் எத்தனை விதமான நறுமண மலர்கள் கொண்டு அர்சித்தாலும் அதில் அருகம்புல் இல்லையெனில் அந்த பூஜை பலன் தராது. வெறும் அருகம்புல்லினால் பூஜை செய்தால் கூட பலன் தருவேன். அருகம் புல்லை நிறைய திரட்டி என்னை பூஜிக்க வேண்டும். முடியாதவர்கள் 21 அருகம்புல்லினால் பூஜிக்கலாம். அப்படியும் முடியாதவர்கள் ஒரே அருகம்புல்லாவது கொண்டு பூஜித்தால் நான் மகிழ்வேன். அவர்களின் கஷ்டம் தீர்ப்பேன்!" என்று சொல்லி அருளினார்.

  அனலாசுரனை விழுங்கிய கணேசர் காலானப்பிரசமர் என்றபெயர் வழங்கியது. அன்று முதல் அருகம்புல் விநாயகருக்கு உரிய பூஜையில் முக்கியத்துவம் பெற்றது என்றார்.
 கவுண்டின்ய முனிவர் கூறிய கதையைக் கேட்ட அவரது மனைவி "அருகம்புல்லின் மேன்மையை அறிந்தேன். அதனால் தினமும் நானும் அருகினால் கணேசரை தொழுது மகிழ்வேன்" என்றாள்.

அருகம்புல் விநாயகருக்கு எதனால் சார்த்துகிறோம் என்று தெரிஞ்சுதா குட்டீஸ்! அருகம்புல் எளிதில் கிடைக்க கூடியது. மூலிகைத் தன்மை நிறைந்தது. உடல் வெப்பத்தை தணிக்க கூடியது. நீங்களும் விநாயகப்பெருமானை அருகம் புல்லால் அர்ச்சித்து அவரின் அருளை பெற்று மகிழுங்கள்!


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. விநாயகர் சதுர்த்திக்கு அருமையான கதை.
    அருகபுல் எதற்கு சாற்றுகிறோம் என்பதை அறிந்து சாற்றினால் நலம் தான்.
    கணேஷ்ரை தொழுது மகிழ்வோம்.

    ReplyDelete
  2. அருமையான தகவல். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி சுரேஷ்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2