ராணியின் முத்துமாலை! பாப்பா மலர்!
அலங்காபுரி என்ற நாட்டின் ராணி நகைமுத்து. பெயருக்கேற்றார்போல நகைகள் அணிவதில் அளவற்ற ஆசை கொண்டவளாக இருந்தாள். உச்சி முதல் உள்ளங்கால் வரை ஆபரணங்களாக பொன், வெள்ளி, நவரத்தினங்களாக சூடிக்கொண்டு தன்னை அலங்காரம் செய்துகொள்வாள் அந்த ராணி.
ஒரு சமயம் அரண்மனை நந்தவனத்து தோட்டத்தில் உள்ள குளத்தில் நீராடச் சென்றாள் நகைமுத்து. அப்போது தான் அணிந்திருந்த ஆபரணங்களை கழற்றிவைத்துவிட்டு நீராடினாள். நீராடி முடித்து கரை ஏறியதும் மீண்டும் ஆபரணங்களை அணியத் துவங்கினால் முத்து மாலை ஒன்றைக் காணவில்லை. அரசிக்கு ஆச்சர்யமாக இருந்தது. சேடிகள் நாலாபுறமும் தேடியும் முத்து மாலை கிடைக்கவில்லை. மாயமாக மறைந்த அந்த முத்து மாலையைத் தேடச்சொல்லி கணவனான ராஜாவிடம் சொன்னாள்.
அந்த ராஜாவும் மனைவியின் சொல்லைத் தட்டாது காவலர்களை அனுப்பி முத்துமாலையைத் தேடச்சொன்னார். காவலர்கள் ஊரெல்லாம் அலசி தேடினர். கிடைத்தபாடில்லை.அப்போது ஓர் வழிப்போக்கன் காவலர்களை கண்டு மிரண்டு ஓடினான். அவன் தான் முத்துமாலையை எடுத்திருக்க வேண்டும் என்றெண்ணி அவனை பிடித்து மிரட்டினர் காவலர்கள்.
வழிப்போக்கன் என்ன சொல்லியும் அவர்கள் நம்பத்தயாராக இல்லை! அவர்களின் அடி தாங்க முடியாது நான் தான் எடுத்தேன் என்று ஒத்துக்கொண்ட வழிப்போக்கன் அதை நகைக் கடை காரரிடம் கொடுத்துவிட்டேன் என்று சொன்னான்.
உடனே காவலர்கள் ஓடிச்சென்று அந்த ஊரில் இருந்த நகைக்கடை காரனை பிடித்துவந்து விசாரித்தார்கள். அவன் இந்த வழிப்போக்கனை பார்த்ததே இல்லை என்று சொல்லியும் காவலர்கள் நம்பவில்லை. அவனை துன்புறுத்தினர். அதை தாங்க இயலாத நகைக்கடை காரன். வழிப்போக்கன் தன்னிடம் கொடுத்த மாலையை கோயில் பூஜாரியிடம் கொடுத்துவிட்டதாக கூறினான்.
உடனே கோயில் பூஜாரியை பிடித்துவந்து விசாரித்தார்கள். மரியாதையாக அரசியின் மாலையை கொடுத்துவிடு! என்று மிரட்டினார்கள். பூஜாரிக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை! இல்லாத முத்துமாலைக்கு எங்கே போவது? பைத்தியம் பிடித்து போனது போல் ஆளான அவர் தப்பிக்க என்ன வழி என்று யோசித்து, நகைக்கடைக்காரர் தன்னிடம் கொடுத்த முத்து மாலையை அவ்வூர் நாட்டியக் காரியிடம் கொடுத்துவிட்டதாக கூறினார்.
காவலர்கள் நாட்டியக்காரியை பிடித்து இழுத்துவந்து விசாரித்தனர். அவளுக்கு தூக்கிவாரிப்போட்டது. இந்த முத்து மாலையை கண்ணால் கூட காணவில்லை என்று சொன்னாள். பூசாரி தன்னிடம் எதுவும் கொடுக்கவில்லை என்று சத்தியம் செய்தாள்.
இதனால் நால்வரையும் ஒன்றாக சிறையில் அடைத்தனர் காவலர்கள். சிறைக்குள் நால்வரும் பேசிக்கொண்டனர். என் மீது எதற்கு வீணாக பழிபோட்டாய்? என்று பூசாரியிடம் நாட்டியக்காரி கேட்டாள்.
“ நகைக் கடைக்காரன் என் மீது பழிபோட்டதாலேயே நான் தப்பிக்க அவ்வாறு செய்ததாக பூசாரி சொன்னான்.
வழிப்போக்கன் என்னை வீணாக மாட்டிவிட்டான்! அதனால்தான் நான் தப்பிக்க பூஜாரிமீது பழி போட வேண்டியதாகிவிட்டது என்று நகைக் கடைக்காரன் கூற
வழிப்போக்கனோ, வழியே சென்ற என்னை காவலர்கள் திருடன் என்று பிடித்து உதைத்து மிரட்டினர். அவர்களிடம் இருந்து தப்பிக்கவே இவ்வாறு சொன்னதாக கூறினான்.
நால்வருக்குமே நாம் திருடர் இல்லை என்று தெரிந்தது. வீணாகவந்து அகப்பட்டுக் கொண்டோமே! என்ன செய்வது என்று யோசித்தனர். அந்த ஊர் நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது.
ஊர்ப்பெரியவர் வழக்கை விசாரித்தார். அவருக்கு நால்வரும் திருடர்கள் இல்லை என்று தெரிந்துவிட்டது. அப்படியானால் முத்துமாலையை எடுத்தது யார்? நந்தவனத்துக்கு உள்ளேயே திருட்டு நடந்திருக்கிறது! வெளியார் யாரும் உள்ளே வர முடியாது. திருடனும் உள்ளேயேத்தான் இருக்க வேண்டும் என்று ஊகித்த அவர் நந்தவனத்தை நன்கு கண்காணிக்க உத்தரவிட்டார்.
நந்தவனத்து குளத்தின் அருகில் ஓர் ஆலமரம் இருந்தது. அதில் குரங்கு குடும்பம் ஒன்று இருந்தது. அந்த குரங்குகள் சண்டைப்போட்டு கீச் கீச் என சத்தம் எழுப்ப அதை விரட்ட காவலர்கள் சென்றனர்.
அப்போது மரத்தின் அடியில் அமர்ந்திருந்த குரங்கு ஒன்று முத்து மாலையை அணிந்து அழகுபார்த்துக்கொண்டிருப்பதை கண்டனர். அது அரசியின் முத்துமாலைதான் என்று தெரிந்து போயிற்று.
அரசி நகைகளை கழற்றிவைத்து குளத்தில் இறங்கிய சமயம் இந்த குரங்குதான் அதை எடுத்து சென்றிருக்க வேண்டும் என்று முடிவுக்கு வந்தனர். காவலாளிகளைக் கண்ட குரங்கு தன் கழுத்தில் அணிந்த முத்து மாலையை கழற்றி வீசிவிட்டு ஓடிவிட்டது. அதை எடுத்து சென்று அரசரிடம் ஒப்படைத்தனர் காவலர்கள்.
முத்துமாலை கிடைத்ததும் நிரபராதிகள் விடுவிக்கப்பட்டனர். இதற்கு ஆலோசனை சொன்ன ஊர் பெரியவர் கவுரவிக்கப்பட்டார். அவசரகதியில் செயல்பட்ட காவலர்களை அரசன் கடிந்து கொண்டான். அரசியின் நகைப்பைத்தியமும் தெளிந்தது.
(செவிவழிக்கதை)
(மீள்பதிவு)
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
வணக்கம், நலமா ?...
ReplyDeleteசில நிமிடங்கள் என் பால்ய பருவத்துக்கு சென்று மீன்டேன் ... பூந்தளிர் தொடங்கி, அம்புலிமாமா, ரத்னமாலா, கோகுலம் என அனைத்து குழந்தை பத்திரிக்கைகளும் மனதில் சுழன்றன !
தொடருவோம்...
சாமானியன்
அருமை...
ReplyDeleteஅருமை சகோதரரே....
வாழ்த்துக்கள்.
குரங்குதான் காரணமா? அரசர் அவசரப்பட்டுவிட்டாரே. தாமதமாயினும் நீதி வென்றது.
ReplyDeleteஅருமையான கதை நண்பரே
ReplyDeleteஅருமையான கதை. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
ReplyDeleteசிக்கல் விடுபட்டு விட்டது!
ReplyDelete