தித்திக்கும் தமிழ்! பகுதி 19. இனிது கொல் தோழி!

தித்திக்கும் தமிழ்! பகுதி 19. இனிது கொல் தோழி!


பணிக்குச் சென்ற கணவன் சீக்கிரம் வீடுதிரும்ப வேண்டும் என்று காத்திருப்பது இந்த காலம். இன்று அலுவலகப்பணி காரணம் காலையில் பணிக்குச் செல்பவர்கள் மாலையில் திரும்பிவிடலாம். அதிகபட்சம் இராப்பொழுதில் திரும்பிவிடுவர். அதற்கே வீட்டம்மணிகள் கோபித்துக் கொண்டு முகம் திருப்பவர். சதா ஆபிஸ் ஆபிஸ்னு கட்டிக்கிட்டு அழறீங்களே! வீட்டுல நீங்க தாலிக் கட்டுன பெண்டாட்டி ஒருத்தி இருக்கான்ற நினைப்பு இருக்கா? என்று  சொல்ல, அந்த நினைப்பு தான் இவ்ளோ தாமதத்தை கொடுக்குது! என்று சொல்லி மதுரைத் தமிழன் பாணியில் பூரிக்கட்டையால் ஓரு செல்ல அடி வாங்கி சமாளிப்பர் புருஷர்கள்.

  பாவம் அவர்கள்! காலை முதல் இரவு வரை பம்பரமாய் சுழன்று வீட்டு பணிகளை கவனிக்கிறார்கள். அலுவலகப் பணியோடு ஒப்பிடுகையில் வீட்டுப் பெண்களின் சுமை அதிகம். இந்த சுமையோடு எழுத்து பணியும் ஆற்றும் பெண்களை கட்டாயம் பாராட்டியே ஆகவேண்டும். அவர்களின் அபிலாஷைகள் சிலதை பூர்த்தி செய்யும் போது அவர்கள் அடையும் மகிழ்ச்சிக்கே அளவு கிடையாது. 

 சங்க காலத்திலும் இந்த தலைவன் தலைவியை பிரிந்து பணிக்குச் செல்கின்றான். கார்காலம் தொடங்கி விடுகின்றது. அவனது வருகையை காண முடியவில்லை! அவர் வந்தாலும் சரி! வராவிடினும் சரி! இந்த பொழுது அவருக்கு இனிதுகொல் வாழி தோழி! என்று தன் கண் சிவக்க அருந்துயரில் சொல்கின்றாளாம் தலைவி!

இதோ பாடல்!

அகநானூறு   திணை: முல்லை  பாடியவர்: மதுரை… மள்ளனார்.

   பசைபடு பச்சை நெய்தோய்த் தன்ன
   சேயுயர் சினைய மாச்சிறைப் பறவை
   பகலுறை முதுமரம் புலம்பப் போகி
   முகைவாய் திறந்த நகைவாய் முல்லை
   கடிமகள் கதுப்பின் நாறிக் கொடிமிசை
  வண்டினந் தவிர்க்குந் தண்பதக் காலை
   வரினும் வாரா ராயினும் ஆண்டவர்க்கு
  இனிதுகொல் வாழி தோழி யெனத்தன்
  பல்லிதழ் மழைக்கண் நல்லகம் சிவப்ப
  அருந்துய ருடையள் அவளென விரும்பிப்
  பாணன் வந்தனன் தூதே; நீயும்
  புல்லார் புரவி வல்விரைந்து பூட்டி
  நெடுந்தேர் ஊர்மதி வலவ
  முடிந்தன்று அம்மநாம் முன்னிய வினையே!



விளக்கம்: தேர்ப்பாகனே! புற்களை நிறைய விரும்பித் தின்னும் புரவிகளை விரைவாக நெடிய தேரில் பூட்டி விரைவாக செலுத்துவாயாக! நாம் வந்த வினை முடிந்தது.

பழங்களை விரும்பி உண்ணக்கூடிய  ஓட்டக்கூடிய பசை போன்ற பச்சை தோலை நெய்யில் தோய்த்தது போன்ற கரிய சிறகுகளை உடைய வவ்வால் பறவையானது பகலில் தான் தங்கியிருந்தஉயர்ந்த கிளைகளை உடைய பழைய மரத்தை தனியே வாடவிட்டு மாலையில் பிரிந்து போய்விடும். அதுபோல தலைவன் ஆனவன் தான் கூடியிருந்த இனிமையான இல்லத்தை விட்டு பிரிந்து தலைவியை வருத்தமுறச் செய்தனன்.

    மொட்டவிழ்ந்த முல்லைமலர்கள் தன்னுடைய இதழ்விரித்து ஒளிவீசி சிரிக்கும் இந்த மலர்கள் மணமகளின் ஈரக்கூந்தலில் வாசம் பரப்பக்கூடியவை அந்த மலர்கள் கூட தன்னிடத்தே சேர்ந்த வண்டுகளை பிரியவிடாமல் தன்னுடைய இதழ்களை மூடி தடுத்துக் கொண்டிருக்க கூடிய  குளிரூட்டும் கார்கால நிலையில்.

தலைவியானவள் தன்னுடைய தாமரைமலரையொத்த விழிகளில் ஈரம் கசிய கண்ணீர்விட்டு சிவந்து துயருற்றிருக்கிறாள். தலைவன் இந்த ஈரம் கசியும் கார்ப்பொழுதில் வந்தாலும் வராது போயினும் அவர் சென்றுள்ள இடம் அவருக்கு இனிதாய் இருக்கட்டும்  என்று வாழ்த்துகின்றாள். இவ்வாறு தலைவியின் துயரை பாணன் வந்து தூது சொல்கின்றான் . எனவே தேரை விரைந்து செலுத்து என்கின்றான் தலைவன்.

 கார்காலப் பொழுது இனிமையாய் என்னைக் கொல்கிறது! தலைவனுக்கு இது புரியவில்லையே! இந்த இனிய பொழுது அவரை கொன்று என்னை நினைவு படுத்தாமல் இனிதாய் இருக்கிறது போலும்! அவர் வாழ்க! என்று சொல்கின்றாள். தலைவி.

என்னவொரு இனிமையான பாடல்! உவமைகளும் உவமேயங்களும்   சிறப்பாக கையாளப்பட்ட பாடல் இது!  மீண்டும் படித்து ரசியுங்கள்!

அடுத்த பகுதியில் மீண்டுமொரு சுவையான பாடலுடன் சந்திக்கிறேன்!


Comments

  1. நகைச்சுவையோடு தொடங்கி அழகான முறையில் விளக்கவுரை தந்தீர்கள் நண்பரே வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. அழகான விளக்கம்... ரசித்தேன்...

    ReplyDelete
  3. அற்புதமான பாடலும் அதன் விளக்கமும் தந்தீர்கள்!
    சொற்பதங்கள், உவமான உவமேயங்கள் என்று
    நல்ல சொல்லாட்சி காண்கிறேன்.

    அறியத் தந்தமைக்கு உளமார்ந்த நன்றியுடன்
    வாழ்த்துக்கள் சகோ!

    ReplyDelete
  4. விளக்கங்கள் எங்களை நிகழ்விடத்திற்கு அழைத்துச்சென்றுவிட்டன. நகைச்சுவை என்றாலும் சரி, குழந்தைகளுக்கான நீதிக்கதை என்றாலும் சரி, இவ்வாறான இலக்கியமென்றாலும் சரி அனைத்திலும் அசத்தும் தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. அருமையான பாடல், சிறப்பான விளக்கம், எழில்மிகு ஓவியங்கள் என அனைத்தும் சிறப்பு. பாராட்டுகள்.

    ReplyDelete
  6. அருமையான விளக்கம் ரசிக்கத்தக்க அகநானூறு!!

    ReplyDelete
  7. நல்லதொரு பாடல்...சிறப்பான விளக்கத்துடன்..அருமை சுரேஷ் நண்பரே!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2