ஏழு குடம் தங்கம்! பாப்பா மலர்!

ஏழு குடம் தங்கம்!


வல்லக்கோட்டை என்ற நாட்டை வல்லபன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். வல்லக்கோட்டை செல்வச்செழிப்பான நாடு. மக்களும் எந்த ஒரு குறையும் இல்லாமல் மன்னனின் நல்லாட்சியில் சிறப்பாக வாழ்ந்துவந்தார்கள். வல்லப மகாராஜாவுக்கு நாள்தோறும் அழகாக முகச்சவரம் செய்துவைக்க நாவிதர் ஒருவர் இருந்தார்.

    நாவிதர் தன் கைத்திறமை எல்லாம் காட்டி மிகச்சிறப்பாக சிறிது கூட வலி இல்லாமல் இதமாக முகச்சவரம் செய்துவிடுவார். இதனால் மகாராஜா மிகவும் அகம் மகிழ்ந்து அவருக்கு நிறைய ஊதியம் தந்துவந்தார்.

   நாவிதருக்கு தேவைக்கு அதிகமாகவே வருமானம் வந்தாலும் அதை செலவு செய்ய மனம் வருவதில்லை. வீட்டில் குழந்தைகள் கிழிந்த ஆடை உடுத்துவார்கள். விழா பண்டிகை எதையும் கொண்டாட மாட்டார். நல்ல உணவு வகைகளை சமைத்து உண்ண மாட்டார்கள். கிடைக்கும் பணத்தை எல்லாம் சேர்த்து வைத்துக்கொண்டிருந்தார் அந்த நாவிதர். நிறைய செல்வம் சேர்த்தபின்னும் இன்னும் சேர்க்க வேண்டும் என்ற தீராத ஆவலில் இருந்தார்.

  ஒருநாள் அந்த நாவிதர் வெளியூர் சென்று காட்டுவழியே திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது எங்கிருந்தோ ஓர் குரல் எதிரொலித்தது. “ ஐயா, நாவிதரே! உமக்கு ஏழுகுடம் தங்கம் வேண்டுமா?” என்று கேட்டது அந்த குரல்.

  நாவிதர் சுற்றும் முற்றும் பார்த்தார். யாரும் தென்படவே இல்லை! மிகவும் பயந்து போனார். ஆனால் ஆசை அவரை விடவில்லை! ஏழுகுடம் தங்கம் கிடைக்கிறதென்றால் சும்மாவா? “ யார் யார் கொடுப்பார்கள்?” என்று கேட்டார்.

 “ அதைப்பற்றி உனக்கென்ன கவலை? உனக்கு ஏழுகுடம் தங்கம் வேண்டுமா சொல்?” என்றது குரல்

   “ ஆனால் அப்புறம் திருப்ப கேட்க மாட்டாயே!” என்றார் நாவிதர்.
 “ நானாக கேட்கமாட்டேன்! ஆனால் நீயாக திருப்பிக் கொடுத்தால் வாங்கிக் கொள்வேன்!” என்றது குரல்.

    “ நான் ஏன் திருப்பிக் கொடுக்க போகிறேன்! சரி! எனக்கு ஏழுகுடம் தங்கம் வேண்டும்! என்றார் நாவிதர்.

   “ நீ கேட்டபடி ஏழுகுடம் தங்கம் உன் வீட்டில் இருக்கும்!”  சொல்லிவிட்டு குரல் மறைந்தது.

   நாவிதர் அவசர அவசரமாக தன் வீட்டுக்குச் சென்று  பார்த்தார். வீட்டுக்குள் ஏழு புதிய குடங்கள் மூடியுடன் இருந்தன. ஆவலாக திறந்து பார்த்தார். ஆறு குடங்களில் தங்கம் நிறைந்து இருந்தது. ஏழாவது குடம் நிறையாமல்  கொஞ்சம் குறைவாக இருந்தது.

  “ இந்த குடம் மட்டும் ஏன் நிறையாமல் இருக்கிறது?” என்று கேட்ட நாவிதர். அதுவரை தான் சேர்த்து வைத்த பணத்தையெல்லாம் தங்கமாக மாற்றி அதில் போட்டார். அப்போதும் குடம் நிறையவில்லை.
 எப்படியாவது இந்த குடத்தை நிரப்பிவிட வேண்டும் என்று முடிவு செய்தார் நாவிதர். மறுநாள் அரசனுக்கு முகச்சவரம் செய்கையில்,  “மஹாராஜா! தாங்கள் எனக்கு கொடுக்கும் ஊதியம் போதுமானதாக இல்லை!” என்றார்.

  ராஜாவுக்கு ஆச்சர்யமாக இருந்தது.  “நான் அதிகமாகத்தானே கொடுக்கிறேன்! அது உனக்கு போதவில்லையா? சரி! இப்போது கொடுப்பதை விட இரண்டு பங்கு அதிகமாக நாளை முதல் கொடுத்துவிடுகிறேன்!” என்றார்.

   நாவிதர் அந்த ஊதியத்தையும் தங்கமாக மாற்றி குடத்தில் போட ஆரம்பித்தார். பிள்ளை குட்டிகளை கவனிக்கவில்லை! சாப்பாட்டைப் பற்றி யோசிக்கவில்லை! அவர் நினைவெல்லாம் அந்த ஏழுகுடம் தங்கம் பற்றித்தான். ஆனால் அந்த ஏழாவது குடம் நிறைந்த பாடில்லை.

   மஹாராஜாவைத் தவிர மற்றவர்களுக்கு சவரம் செய்து சம்பாதித்தார். அதுவும் அந்த குடம் நிறைய போதவில்லை. சரி பிச்சை எடுப்போம் என்று நகர வீதிகளில் பிச்சை எடுத்து அதையும் தங்கமாக மாற்றி குடத்தில் போட்டார். அப்போதும் குடம் நிறையவே இல்லை.

    என்ன செய்தால் அந்த குடம் நிறையும் என்று நாவிதருக்கு புரியவில்லை! எவ்வளவு போட்டாலும் நிறையவில்லையே! நான் என்ன செய்வேன்? என்று  புலம்பியபடியே பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார் நாவிதர்.

   ஒரு சமயம், நகர்வலம் வந்தார் வல்லப மஹாராஜா. அப்போது பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் நாவிதரை பார்த்து அவருக்கு அதிர்ச்சியாக இருந்தது. உடனே நாவிதரை அழைத்தார். “ ஏனய்யா! நாவிதரே! உனக்கு நான் இரண்டு மடங்கு அதிகமாக ஊதியம் தருகின்றேன். போதாக்குறைக்கு இன்னும் பலருக்கு முகச்சவரம் செய்து சம்பாதிக்கிறாய்! அப்புறமும் ஏன் பணம் பணம் என்று அலைந்து பிச்சை எடுக்கிறாய்? ஒருவேளை உனக்கு அந்த ஏழுகுடம் தங்கம் கிடைத்துவிட்டதா?” என்றார்.

   “மஹாராஜா! உங்களுக்கு அந்த ஏழுகுடம் தங்கம் பற்றித் தெரியுமா?”

  “ ஏன் தெரியாமல்? அதில் ஏழாவது குடம் நிறையவே நிறையாது! அதுதான் நமது ஆசை! அதற்கு அளவே கிடையாது! மீதி ஆறுகுடத்தில் இருந்தும் நம்மால் தங்கத்தை எடுக்க முடியாது. ஏழாவது குடத்தை நிரப்பவும் முடியாது!”

   “ ஐயோ! பேராசையால் மோசம் போனேனே! என் வீட்டில் ஏழுகுடம் தங்கம் இருக்கிறதே! என்ன செய்வேன்?”

   ”அந்த ஏழு தங்க குடங்களால் உனக்கு ஒரு குன்றிமணி அளவு கூட பிரயோசனம் கிடையாது. எங்கு கிடைத்ததோ அங்கே சென்று திருப்பி எடுத்துக் கொள் என்றுசொல்லி விட்டுவிடு! இல்லையேல் உன் நிம்மதிதான் கெடும். இனியாவது கிடைக்கும் பணத்தை  உன் மனைவி மக்களுக்கு செலவு செய்து குடும்பத்தை காப்பாற்றும் வழியைப் பார்! இல்லை இப்படி பணப்பேயாக அலைவதானால் நாளை முதல் உனக்கு அரண்மனையில் வேலை இல்லை!.”

     “ வேண்டாம் மஹாராஜா! அந்த குடங்களை நான் திருப்பி கொடுத்துவிடுகின்றேன்! எனக்கு நிம்மதி கிடைத்தால் போதும்!”

   நாவிதர் காட்டிற்கு சென்று   “எனக்கு ஏழுகுடம் தங்கம் வேண்டாம் திருப்பி எடுத்துக் கொள்!” என்றார். திரும்பவும் வீட்டிற்கு வந்து பார்த்தார். அந்த ஏழு குடங்களும் காணாமல் போயிருந்தன.  அந்தோ பரிதாபம்! அந்த ஏழாவது குடத்தில் அவர் உழைத்து போட்ட  தங்கமும் சேர்ந்து காணாமல் போய்விட்டது.

   பேராசையால் இருந்த சொத்தையும் இழந்த அவர் திருந்தினார். அதன் பின் கிடைக்கும் பணத்தை மனைவி குழந்தைகளுக்கு செலவு செய்து மகிழ்ச்சியாக வாழ்ந்தார்.

(செவிவழிக்கதை)

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!Comments

 1. அருமையான கதை நண்பரே
  நன்றி

  ReplyDelete
 2. நல்ல நீதிச் சொல்லும் கதை, வாழ்த்துக்கள் தளீர்,

  ReplyDelete
 3. நல்ல படிப்பினையை கொடுத்தது நமக்கும் ...

  ReplyDelete
 4. வணக்கம்
  ஐயா
  கதை மிக அருமையாக உள்ளது பகிர்வுக்கு நன்றி
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 5. மிக மிக நல்ல கதை சுரேஷ்! ..

  கீதா: என்னிடமும் இது போன்று நிறைய கதைகள்...எனது மகனுக்குச் சிறிய வயதில் சொல்லி இருக்கின்றேன். கணக்கில் அடங்காதவை. பின்னர் அவன் வளர்ந்ததும் அவனுக்குப் புத்தகம் வாசிக்கும் வழக்கம் வேண்டும் என்று நிறைய புத்தகங்களும் நடைபாதைக் கடையில் வாங்கி கொடுத்திருக்கின்றேன். இப்போது வெளிநாடுகளில் இருக்கும் எனது கசின்களின் பேரன் பேத்திகளுக்கும், அவர்களின் அம்மாக்களுக்கும் ஸ்கைப்பில் சொல்லி வருகின்றேன். வாரியாரின் கதைகள் உட்பட...அதை எங்கள் தளத்திலும் பகிரலமா என்றும் தோன்றுகின்றது. இத்தனை நாள் ஏனோ எனக்கு அது உரைக்கவே இல்லை...மிக்க நன்றி சுரேஷ்...

  ReplyDelete
 6. நல்ல நீதிக்கதை. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் ஒரு பாடம்.

  ReplyDelete
 7. நல்ல அறிவுரை சொல்லும் கதை
  பகிர்விற்கு நன்றி சகோ

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

என்னைக் கவர்ந்த நேரு! குழந்தைகள் தின ஸ்பெஷல்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா?