மோடி -லேடி சந்திப்பும்! கப்பைக்குழம்பும்! கதம்ப சோறு! பகுதி 64

கதம்ப சோறு!

மோடியும் லேடியும் சந்திப்பு:

       சென்னையில் அரசுமுறைப்பயணமாக முதல் முறையாக பிரதமர் மோடி வந்ததும் அவரை முதல்வர் ஜெயலலிதா வரவேற்றதும், விருந்து அளித்து உபசரித்ததும் இந்தவார டாபிக் ஆகிவிட்டது. பாராளுமன்றத் தேர்தலில் எதிரும் புதிருமாக மோடியா லேடியா என்று மோதிக்கொண்டவர்கள், தமிழக பா.ஜ.க வேறு ஆளும் அரசை கடுமையாக விமரிசித்து வரும் சூழல், பா.ஜ.க தலைவர் அமித் ஷா தமிழகத்தில் காட்டாட்சி நடக்கிறது என்று விமரிசித்து பேசியநிலை இதையெல்லாம் கடந்து முதல்வர் ஜெ. பிரதமரை வரவேற்று விருந்து உபசரிசத்தது நல்லதொரு ஆரம்பமாக அமைந்துவிட்டது. கூட்டாட்சி தத்துவத்தில் நடைபெறும் இந்திய அரசியலமைப்பில் மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருவது மாநிலத்துக்கு நல்லது அல்ல. இந்த சந்திப்பு சுமூக உறவை இரு தரப்பிற்கும் அளித்து தமிழகத்திற்கு நல்லது செய்தால் நன்றாக இருக்கும். இதற்கிடையில் காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் இந்த சந்திப்பை கள்ள உறவென்று வர்ணிக்கிறார். திமுகவும் மற்றுமொரு கேவலமான சொல்லாடலில் விமர்சிக்கிறது. இந்த இருவர் சந்திப்பில் அரசியல் இருந்தாலும் சரி மாநிலத்திற்கு வந்த ஓர் பிரதமரை முதல்வர் வரவேற்றதில் விருந்து உபசரித்ததில் என்ன தவறு இருக்கிறது? இப்படி மோசமாக விமர்சித்து தங்களை தரம் தாழ்த்திக் கொண்டுள்ளன எதிர்கட்சிகள். இந்த சந்திப்பு தமிழகத்தில் கூட்டணி மாற்றத்தின் அறிகுறியாகவும் அமைந்துவிட்டது.

ஏழைபெண் சுவாதிக்கு உதவிய நடை பயிற்சியாளர்கள்:

      கோவையில் வேளாண்பல்கலையில் சேர விரும்பிய பெண் சுவாதி தவறுதலாக சென்னைக்கு வந்து இங்கு கலந்தாய்வு நடைபெறவில்லை என்று தெரிந்து தவித்து போனார். அச்சமயம் அண்ணா பல்கலைகழகத்தில் நடைபயிற்சிக்கு வந்த சரவணன் மற்றும் சிலர் இணைந்து அந்த பெண்ணுக்கு விமான டிக்கெட் எடுத்துக் கொடுத்து கோவைக்கு செல்ல உதவியதோடு அந்த பல்கலைக்கழக கலந்தாய்வு நடத்துனரிடம் விவரம் சொல்லி உதவக் கேட்டனர். இறுதியில் அந்த பெண்ணுக்கு கல்லூரியில் இடமும் கிடைத்தது. ஆனாலும் இதில் வேதனையான செய்தி என்னவெனில் மேல்நிலை இறுதித் தேர்வில் ஆயிரத்திற்கும் அதிகமான மதிப்பெண் பெற்றும் இந்த வேளாண் பல்கலைகழக கலந்தாய்வு தகவல் கடிதத்தை சரிவர படித்து அந்தப் பெண் புரிந்து கொள்ளாமல் சென்னை வந்துள்ளார். அண்ணா அரங்கம் என்பதை அண்ணா பல்கலைக்கழகம் என்று தவறாக புரிந்து கொண்டுள்ளார். இது போன்ற முக்கியமான விஷயங்களில் தவறு நேர்கையில் வாழ்க்கை தடம் மாற வாய்ப்புள்ளது. நல்ல உள்ளங்கள் உதவியதால் அவர் விரும்பிய படிப்பை படிக்க முடிந்தது. அதே சமயம் உதவி கிடைக்காவிட்டால் அவரது படிப்பு கேள்விக்குறியாகி இருக்கும். மாணவர்கள் படிப்பு, மதிப்பெண் இதில் மட்டும் குறியாக இல்லாமல் வாழ்க்கைக்கு தேவையான இதர விஷயங்களிலும் கவனம் செலுத்த வேண்டும். பிளஸ்டூ வில் மதிப்பெண் இயந்திரங்களாக மாணவர்களை மாற்றாமல் அவர்களுக்கு எதிர்காலத்தில் பயனளிக்கும் வகையில் கல்வி முறையில் மாற்றம் கொண்டுவரவேண்டும். ஆசிரியர்களும் மதிப்பெண்ணை நோக்கி செல்லாமல் இதுபோன்ற வாழ்க்கைப்பாடங்களை சொல்லித்தரவேண்டும்.
.
நாடாளுமன்ற முடக்கம்:

    கோடிக்கணக்கில் செலவு செய்து நாட்டை வளர்ச்சிப்பாதைக்கு அழைத்துச்செல்வார்கள் என்று எம்.பி களை நாடாளுமன்றம் அனுப்பி வைத்தால் அவர்கள் சொகுசான வாழ்க்கையையும் சலுகை களையும் அனுபவித்துக் கொண்டு நாடாளுமன்றத்தை செயல்படவிடாமல் முடக்கி வருகின்றனர். இது இப்போதைய ஆளுங்கட்சி, மற்றும் எதிர்கட்சி அனைவருக்கும் பொருந்தும். எப்போது ஆளுங்கட்சியை மடக்கலாம் என்று கங்கணம் கட்டிக்கொண்டு இது போன்று நாடாளுமன்றத்தை செயல்படவிடாமல் போராட்டம் செய்துவருகின்றன எதிர்கட்சிகள். இப்போது காங்கிரஸ் என்றால் முன்பு பா.ஜ.க இதனால் மக்களின் பணம்தான் வீணாகின்றது. எதிர்கட்சிகள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல ஆளுங்கட்சிக்கு என்ன பயம் என்று தெரியவில்லை. இதனால் தொடர்ந்து நாடாளுமன்றம் செயல்படாமல் முடங்கிப் போய் உள்ளது. சமரச முயற்சியும் தோல்வியில் முடிந்துள்ளது. இனி இது போன்ற உறுப்பினர்களை நாம்  தேர்ந்தெடுக்க வேண்டுமா என்று மக்கள் யோசிக்க வேண்டும். எதிர்கட்சிகள் கேட்கும் கேள்விகளுக்கு துணிச்சலாக பதில் விவாதம் நடத்த ஆளுங்கட்சிகள் முயல வேண்டும். அதைவிடுத்து பதில் சொல்ல மறுப்பது அவர்கள் மீதுள்ள தவறை ஒப்புக்கொள்வது போல் ஆகிறது.

புக்ஸ் கார்னர்:

   இந்த வாரம் படித்த புத்தகம் காமராஜ் ஓர் சரித்திரம்.  எங்கள் ஊர் நூலகத்தில் இருந்து எடுத்து வாசித்த இந்த புத்தகம் காமராஜரின் வாழ்க்கையை நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகின்றது. முருக தனுஷ் கோடி என்பவர் எழுதி பூம்புகார் பிரசுரம் வெளியிட்டுள்ள இந்த நூலின் அப்போதைய விலை ( 1976 )ல் ரூபாய் 8.90 காசுகள். மத்திய அரசு சலுகை விலையில் வழங்கிய தாளில் இந்த நூலை அச்சிட்டுள்ளதாக முதல் பக்கத்தில் தகவல் உள்ளது. காமராஜரின் அரிய புகைப்படங்களும் நூலில் இடம்பெற்று அழகு சேர்க்கின்றது. மொத்தம் அறுபத்தி ஓரு அத்தியாயங்களில் காமாராஜரின் சரித்திரம் விளக்கப்பட்டுள்ளது. காமராஜரின் வாழ்வில் நடந்த பல சுவையான சம்பவங்களும் அந்தக்கால அரசியலும் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.  படிக்கமட்டும் அல்ல! உங்கள் நூலகத்திலும் அவசியம் இடம்பெற வேண்டிய நூல் இது.
காமராஜ் ஒரு சரித்திரம் ஆசிரியர் முருக தனுஷ்கோடி, வெளியீடு பூம்புகார் பதிப்பகம் சென்னை.

கிச்சன் கார்னர்.

தஞ்சை மன்னர்கள் இந்த குழம்புக்கு அடிமையாம்.  செஃப் புகழேந்தி 2007ல் மங்கையர் மலரில் எழுதிய ஓர் குழம்பு தயாரிப்பை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.

  கப்பைக்கிழங்கு குழம்பு.

தேவையானவை: கப்பைக்கிழங்கு அல்லது மரவள்ளிக்கிழங்கு 1/4கிலோ,
பொரித்த உளுந்து அப்பளம் 2
நெய் 3 டேபிள் ஸ்பூன், மஞ்சள்தூள்,1/4 டீஸ்பூன் சோம்புத்தூள் ½ டீஸ்பூன், குறுமிளகுத்தூள் 1 டேபிள் ஸ்பூன், கறிவேப்பிலை சிறிது, இஞ்சிவிழுது 2 டேபிள் ஸ்பூன், தேங்காய் 1 மூடி (அரைத்தது) கறுப்பு எள் வறுத்து பொடி செய்யப்பட்டது 2 டேபிள் ஸ்பூன். கல் உப்பு தேவையான அளவு.

செய்முறை:  கப்பைக்கிழங்கை நன்றாக வேகவைத்து தோல் உரித்து இரண்டு இஞ்ச் சைசில் வெட்டி வைத்துக் கொள்ளவும். வாணலியில் நெய் ஊற்றிக் காய்ந்ததும் இஞ்சிவிழுது, மிளகுத்தூள், மஞ்சள்தூள், சோம்புத்தூள் போட்டு நன்றாக வதக்கவும். பின் உப்பு சேர்க்கவும். இத்துடன் கப்பைக்கிழங்கு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு வதக்கவும். நன்றாக வெந்து மசாலா வாசனை போனவுடன் அரைத்த தேங்காய் மற்றும் கறுப்பு எள்ளுப்பொடி அப்பளம் சேர்க்கவும்.அப்பளங்களை நொறுக்கிப் போட வேண்டும். இரண்டு நிமிடங்கள் கிளறி இறக்கினால் புகழேந்தி குழம்பு என்ற கப்பை கிழங்கு குழம்பு ரெடி!

டிப்ஸ்! டிப்ஸ்! டிப்ஸ்!

பால்பாக்கெட்டுகள் மீது ஈ எறும்புகள் மொய்க்காதிருக்க ரசாயணங்கள் தடவப்படுகின்றது. பிரிட்ஜில் வைக்கும் முன்னர் பாக்கெட்டுக்களை நன்கு கழுவி பின்னர் ப்ரிசரில் வைக்கவும். ப்ரிசர் டப்பாவையும் அடிக்கடி சுத்தம் செய்யவும்.

சர்க்கரைப்பொடி ½ டீஸ்பூன், முல்தானி மெட்டி ½ டீஸ்பூன், திப்பிலிப்பொடிஒரு சிட்டிகை சேர்த்து முகத்தில் தடவி ஊறவைத்து கழுவினால் முகம் ஜொலி ஜொலிக்கும்.

அஜீரணக் கோளாறா? திப்பிலி பொடி ஒரு சிட்டிகை தேனில் கலந்து சாப்பிட கோளாறு சரியாகும்.

எந்த வகை காய்கறியை வேக வைப்பதானாலும் உப்பை  கடைசியில் போட வேண்டும். அப்பொழுதுதான் உப்பின் சக்தி முழுமையாக கிடைக்கும். அத்துடன் காய்கறிகளும் சீக்கிரமாக வேகும்.

பால்பாயிண்ட் பேனா கறையைப் போக்க வேண்டுமா? காட்டன் பட்ஸை சிறிது யூடிகோலனில் நனைத்து கறையின் மீது தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால் கறை போயே போச்சு!

உணவு வகைகளை பார்சல் செய்கையில் பச்சை வாழையில் கட்டும் போது கிழிந்துவிடும். வெந்நீரில் நனைத்து எடுத்து கட்டினால் இலை கிழியாது.


வெந்நீரில் குளிப்பவர்கள் முதலில் பாதங்களில் இருந்து ஊற்றிக் குளிக்கவேண்டும். குளிர்ந்த நீரில் குளிப்பவர்கள் முதலில் தலைக்கு நீர் ஊற்றிபிறகு உடலில் ஊற்றிக் கொள்ளவேண்டும். இதனால் மூளை களைப்படையாமல் சுறுசுறுப்பாக இயங்கும். 

கூகுளின் புதிய் சி.இ.ஒ அமெரிக்கத் தமிழர் சுந்தர் பிச்சை:

தகவல் தொழில்நுட்பத் துறையில், அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான, 'கூகுள்' தலைமை நிர்வாக அதிகாரியாக, தமிழகத்தின், சென்னையைச் சேர்ந்த, சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டுள்ளார். கூகுள் நிறுவனத்தை நிறுவியவர்களில் ஒருவரான லாரி பேஜ், நேற்று, கூகுள் மற்றும் அதன் துணை நிறுவனங்களை மறுசீரமைத்து, அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். கூகுள் மற்றும் அதன் துணை நிறுவனங்களை மறுசீரமைக்கும், பிரதான நிறுவனமாக, 'ஆல்பபெட்' என்ற பெயரில் புதிய நிறுவனத்தை, லாரி பேஜ் உருவாக்கி உள்ளார். அதன் தலைமை நிர்வாக அதிகாரியாக, தன்னை நியமித்துக் கொண்ட லாரி பேஜ், 'கூகுள்' தலைமை நிர்வாக அதிகாரியாக, தமிழகத்தை சேர்ந்த சுந்தர் பிச்சையை, 43, நியமித்தார். இதன் மூலம், உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பை வகிக்கும் ஜாம்பவான்கள் பட்டியலில், சுந்தர் பிச்சையும் இணைந்துள்ளார். இவர், இதற்கு முன், கூகுள் நிறுவனத்தின் உற்பத்தி பிரிவு தலைவராக பதவி வகித்தார்.கூகுள் நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள, சுந்தர் பிச்சைக்கு, பிரதமர் நரேந்திர மோடி, 'டுவிட்டர்' இணையதளத்தில் வாழ்த்து கூறியுள்ளார். மோடியின் வாழ்த்துச் செய்தியில், 'கூகுள் நிறுவனத்தில், புதிய பொறுப்பில், சிறப்பாக செயலாற்ற வாழ்த்துகிறேன்' என, கூறியுள்ளார். 

உலகளவில், முன்னணி நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில், இந்தியர்கள் அதிகமாக இடம் பெற்று வருவதற்கு, சர்வதேச முன்னணி பத்திரிகையான, 'டைம்' இதழும் பாராட்டு 
தெரிவித்துள்ளது. 


உலகெங்கும் தமிழர்கள் கொலொச்சுவதை பார்க்கையில் பெருமிதம் ஏற்படுகிறது. சுந்தர் பிச்சை அவர்களை வாழ்த்துவோம்!

இவரை தெரிந்து கொள்வோம்! பத்து ரூபாய் டாக்டர்;

 டாக்டர்களை பற்றி எவ்வளவோ ஜோக்குகள், பணம் பிடுங்குகிறார்கள் என்று, இதோ இந்த டாக்டர் பத்து ரூபாய்க்கு மேல் பீஸ் வாங்குவதில்லை! இவரை அறிந்து கொள்ள இங்கு:  பத்துரூபாய் டாக்டர்

படிச்சதில் பிடிச்சது!
ஒருநாள் அக்பரும் பீர்பாலும் பூங்காவனத்தில் உலாவிக்கொண்டு இருந்தனர். அப்போது அக்பருக்கு ஓர் சந்தேகம் ஏற்பட்டது. பீர்பால் அவர்களே!  உலகத்தில் உண்மையானவை, பொய்யானவை என்று இருவிதமான விஷயங்கள் பேசப்படுகின்றன. உண்மைக்கு நேர்மாறானது பொய். என்றாலும் ஆழ்ந்து சிந்தித்து பார்த்து உண்மை, பொய் இரண்டுக்கும் உள்ள வேறுபாடுகளை தங்களால் கூறமுடியுமா? என்று கேட்டார்.
 உடனே பீர்பால் சொன்னார். மன்னா! உண்மைக்கும் பொய்க்கும் உள்ள இடைவெளி ஐந்துவிரற்கடை அளவுதான் என்றார்.
 எப்படி? என்றார் மன்னர்.
சக்ரவர்த்தியாரே! நம்முடைய கண்களால் பெரும்பாலும் உண்மையைத்தான் பார்க்க முடியும். ஆனால் காதுகளினால் பொய்யைத்தான் அதிக அளவில் கேட்க முடியும். ஆகையினால் கண்ணுக்கும் காதுக்கும் அதாவது உண்மைக்கும் பொய்க்கும் உள்ள இடைவெளி ஏறத்தாழ ஐந்து விரற்கடை அளவுதான் இருக்கும் என்றார் பீர்பால்.
பீர்பாலின் சாதுர்ய பதிலால் அக்பர் மகிழ்ந்துபோனார்.

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

 1. அனைத்தும் அருமையான செய்திகள். பத்து ரூபாய் டாக்டர் வியக்கவைத்துவிட்டார்.

  ReplyDelete
 2. அனைவரும் அறிய வேண்டிய செய்திகளை
  தேடிக் கொணர்ந்து சேர்த்த பாங்கு! வரவேற்புக்குரிய தமிழ்த் தொண்டு தளிர் சுரேஷ் அவர்களே!
  உங்களது அறிவுத் திறன் விசாலாமனது! வீரியமிக்கது! வாழ்துகள்!
  நட்புடன்,
  புதுவை வேலு

  ReplyDelete
 3. காமராஜ் ஓர் சரித்திரம் நூல் வாங்கி விட வேண்டும்... நன்றி... அனைத்து செய்திகளும் சிறப்பு...

  டிப்ஸ்... டிப்ஸ்... நன்றி...

  ReplyDelete
 4. வணக்கம் தளீர்,
  தகவல்கள் அனைத்தும் அருமை,
  குழம்பு ஏற்கனவே படித்தது என்று நினைவில்,,,,,,,,
  தகவல்கள் தங்கள் பார்வையில் அருமை,
  வாழ்த்துக்கள்.
  நன்றி.

  ReplyDelete
 5. தகவல் அனைத்தும் அருமை நண்பரே...

  ReplyDelete
 6. காமராஜரும், பத்து ரூபாய் டாக்டர் செய்தியும் அசர வைக்கின்றது.
  படத்துக்கு நன்றி. ஜெ அம்மாஉக்கு உடல் நலமில்லை என்று எங்கோ படித்தேன்.
  நலமாக இருக்கிறார்களா.
  அனைத்து தகவல்களுக்கும் நன்றி சுரேஷ் ஜி.

  ReplyDelete
 7. This comment has been removed by the author.

  ReplyDelete
 8. ஜெவுக்கும் மோடிக்கும் ஒருபோதும் பகைமை இருந்ததாக நான் நினைக்கவில்லை. ஜெ நம்பகத் தன்மை அற்றவர். அதிக எம்பி சீட்டுகள் பிடித்து பாஜகாவை ஆட்டிப் படிக்கலாம் என கனவு கண்டார் .அது நடக்கவில்லை. தற்போது சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து தப்பிக்க ஜெவுக்கு மோடி உதவ வேண்டும். அம்பானி அதானி தமிழகத்தை கொள்ளையடிக்கவும், நில அபகரிப்பு சட்டத்திற்கு ஆதரவு தரவும் ஜெ உதவி மோடிக்கு தேவைப் படுகிறது. ரெண்டு கேடிகள் ஒன்றாகத்தான் மக்களுக்கு மோசடிகள் செய்கின்றனர்.

  ReplyDelete
 9. கதம்ப சோறு நல்ல ருசி..கப்பைக் கிழங்கு செய்வதுண்டு ஆனால் இந்த ரெசிப்பி புதியது...குறித்துக் கொண்டோம்...

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2