தித்திக்கும் தமிழ்! பகுதி 17 ஆம்பலையொத்த சாம்பல் பறவைகள்!
தித்திக்கும் தமிழ்! பகுதி
17 ஆம்பலையொத்த சாம்பல் பறவைகள்!
பிரிவுத் துயர் பொல்லாதது. பிரிவை ஆற்றாது உயிரையும்
இழப்போர் உண்டு. தலைவன் தலைவியை பிரிந்து பொருளீட்டச் செல்கின்றான். தலைவனை பிரிந்த
தலைவி அவன் எப்பொழுது வருவானோ என்று பிரிவுத் துயரில் இருக்கின்றாள். பிரிவாற்றாமையால்
வருந்தும் தலைவிக்கு ஒரே துணை தோழிதான். தோழி கவலைப்படாதே வருந்தாதே தலைவன் வருவார்
என்று சொல்கின்றாள்.
ஆனால் தலைவியோ நான் வருந்தவில்லை! வெளியூர் சென்ற
இடத்திலும் என் நினைவு தலைவனுக்கு இருக்கும். அவர் விரைவில் திரும்பி வருவார் என்று
கூறி அதுவரை நான் காத்திருப்பேன் என்கின்றார்.
இன்று பொருளீட்ட வெளிநாடு செல்வதும் பெண்டீர் காத்திருப்பதும்,
அல்லது உடன் செல்வதும் சிறிய விஷயமாகிவிட்டது. அன்று ஓர் ஊரில் இருந்து வெளியூர் செல்வது
கூட பெருந்துன்பம் தரும் விஷயமாக இருந்துள்ளது. காடு மேடு, கரடுமுரடான பாதைகள், நிறைய
ஆபத்துக்கள், இதையெல்லாம் தலைவன் கடந்து வரவேண்டும்.
போகும் இடத்தில் வேறு துணை கிடைத்துவிட்டாலோ தலைவன்
தங்கிவிடுவான். இதையெல்லாம் மீறி தலைவன் தலைவியின் பால் கொண்ட அன்பால் திரும்பி வந்தான்
எனில் மகிழ்ச்சிதானே! அப்படி ஒரு நம்பிக்கையில் இந்த தலைவி இருக்கின்றாள்.
இதோ பாடல்!
ஆம்பற் பூவின் சாம்பல் அன்ன
கூம்பிய சிறகர் மனை உறை குரீஇ
முன்றி உணங்கள் மாந்தி மன்றத்து
எருவின் நுண் தாது குடைவன ஆடி
இல் இறைப் பள்ளித் தம் பிள்ளையோடு வதியும்
புண்கண் மாலையும் புலம்பும்
இன்றுகொல் தோழி! அவர் சென்ற நாட்டே
மாமிலாடனார்.
பிரிவுத் துயரில் இருப்போரை
மிகவும் வருத்தும் பொழுது மாலை! தென்றல்காற்று வீச புல்லினங்கள் கூடு திரும்ப மென்மையான
பூக்களின் வாசம் பெருக இன்ப நினைவுகள் வந்து எழுப்பும். இந்த மாதிரி ஒரு நல்ல பொழுது
துன்பம் ஆகிறது என்றால் அது பிரிந்து வாழ்பவர்களுக்குத்தான். இப்படியான ஒரு பொழுதைத் தான் தலைவி சுட்டுகின்றாள்.
ஆம்பல் பூவைப் போன்ற சாம்பல் நிறமுடைய கூம்பியசிறகுகளை
உடைய தவிட்டுக் குருவிகள் வீட்டு முற்றத்தில் தங்கி அங்கு கிடைக்கும் உலரும் தானியங்களைத்
தின்று மகிழும். பின்னர் தன் குஞ்சுகளோடு வீட்டின் பொதுவிடத்தில் குவிந்து கிடக்கும்
எருவினை குத்திக் கிளறி அதன் நுண்ணிய பொடிகளை சுவைக்கும். அதோடு மட்டும் இல்லாமல் வீட்டின்
இறப்பு எனக்கூடிய தாழ்வாரத்தில் தன் குஞ்சுகளோடு தங்கி இருக்கும்.
இத்தகைய மாலைநேரம் தலைவர் பிரிந்து சென்ற நாட்டில்
இல்லை போலும் என்று கூறுகின்றாள் தலைவி.
அதாவது இத்தகைய மாலை நேரம் அவர் சென்ற நாட்டிலும்
உண்டு. தனிமையில் வாடக்கூடிய அவருக்கு என்னுடைய நினைவு வந்து மீண்டு வருவார். அதுவரை
நான் பிரிவுத் துயரை ஆற்றியிருப்பேன் என்று தோழிக்கு உரைக்கின்றாள் தலைவி.
அதாவது இனிமையான மாலைப்பொழுதும் தனிமையும் எல்லா
நாட்டிலும் உண்டு. தலைவர் சென்ற நாட்டிலும் உண்டு. அப்போது அவர் என்னை நினைத்து வருந்தி
விரைவில் தன் பணியை முடித்து திரும்பி வருவார் என்ற நம்பிக்கையோடு காத்திருப்பதாகச்
சொல்கின்றாள்.
நம்பிக்கையில் தானே இருக்கிறது வாழ்க்கை! தலைவியின்
நம்பிக்கை கைகூடட்டும்!
மீண்டுமொரு சந்தர்ப்பத்தில்
அழகிய தமிழ் பாடலுடன் சந்திப்போம்! உங்கள் கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து
ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
இன்பம் சில நாள் துன்பம் சில நாள் என்றவர் யார் தோழி...?
ReplyDeleteஇன்பம் கனவில் துன்பம் எதிரில் காண்பது ஏன் தோழி...?
காண்பது ஏன் தோழி...? ஆஆ ஆஆஆ....
மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி...
மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி...
மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை காரணம் ஏன் தோழி...?
காரணம் ஏன் தோழி...? ஆஆ ஆஆஆ...
அந்தக் காலத்தில் பெரும் துன்பம் தான் பட்டிருப்பார்கள் பாவங்கள் ஆனாலும் இப்படிக் கவிதைகள் கிடைத்திருக்கிறதே நாமும் உணர. அருமை அருமை பதிவுக்கு நன்றி !
ReplyDeleteஇதையெல்லாம் புத்தகமாக போடுங்க பாஸ்
ReplyDeleteரசித்தேன் நண்பரே.....
ReplyDeleteஅருமை
ReplyDeleteநம்பிக்கைதானே வாழ்க்கை
நன்றி நண்பரே
அருமையான பாடல்
ReplyDeleteஎளிமையான அருமையான விளக்கம்
மிகவும் இரசித்தேன்
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
பதிவைப் படித்தபோது இதயத்தை வருடியது போல இருந்தது. படத்தில் உள்ளது பொன்னியின் செல்வனில் வரும் பூங்குழலிதானே?
ReplyDeleteஅழகான தொரு வர்ணனை காட்சிகளை கண் முன் கொண்டு வருகிறது.
ReplyDeleteசெமை
ReplyDeleteவாழ்த்துக்கள்
தம +
பல்பு
ReplyDeleteதம பட்டையே இல்லையே!
நான் வாங்கிய பல்பை சொன்னேன்
ReplyDeleteஅருமை நண்பரே! அன்றைய துன்பங்கள் இன்றும் உண்டே. துணை கிடைத்தால், தெரியாமல், அல்லது அங்கேயே தங்குதல் என்று இன்றும் நடக்கத்தான் செய்கின்றது....காலம் மாறலாம் ...ஆனால் நிகழ்வுகள் அதே...
ReplyDeleteஅருமையானபாடல் விளக்கத்துடன் இன்றும் பொருந்துவது போல்...