தித்திக்கும் தமிழ்! பகுதி 18 ஐ அரையும் ஓர் அரையும் தருவாயா?

தித்திக்கும் தமிழ்! பகுதி 18  ஐ அரையும் ஓர் அரையும் தருவாயா?


இன்று சகட்டு மேனிக்கு சினிமாக்களில் பெண்களை கிண்டல் செய்து பாடல்கள் எழுதுகின்றனர். பார்த்தும் ரசிக்கின்றனர். அன்றைய கவிஞர்களும் இதற்கு விதிவிலக்கு இல்லை போலும். ஆனால் அன்றைய கவிஞர்களின் பாடல்களிலே ஓர் அழகும் அறிவும் மிளிர்ந்து காணப்படுகிறது. ஓர் சாதாரணப் பாட்டிலே கூட  கணிதத்தை புகுத்தி விளையாடுகின்றனர்.

  கணிதத்தில் ஓர் பெண்ணை வர்ணிக்க முடியுமா? கூட்டல் கழித்தல் பெருக்கல் வகுத்தல்தானே கணிதம் அதில் எப்படி பெண்ணை எப்படி வர்ணிக்க முடியும் என்கிறீர்களா? பண்டைத் தமிழர்கள் கவியில் மட்டுமல்ல கணிதத்தில் வல்லுனர்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? கணக்குப் போட்டே இந்த கவிஞர் குறும்பாய் கணக்கு பண்ணுகிறார்.
  ஓர் இளம்பெண்ணை கவிஞர் ஒருவர் எப்படி கணிதத்தில் வர்ணிக்கிறார் பாருங்கள்!

     ஒருநான்கும் ஈரரையும் ஒன்றே கேளாய்
        உண்மையாய் ஐ அரையும் அரையும் கேட்டேன்.
    இருநான்கும் மூன்றுடனே ஒன்றும் சொல்லாய்
        இம் மொழியைக் கேட்டபடி ஈந்தாய் ஆயின்
   பெருநான்கும் அறுநான்கும் பெறுவாய் பெண்ணே
       பின்னேஓர் மொழிபுகல வேண்டாம் இன்றே
   சரிநான்கும் பத்தும் ஓரு பதினைந் தாலே
      சகிக்க முடியாதினி என் சகியே மானே.

பாடலை படித்து ஒன்றும் விளங்க வில்லையா? எனக்கும் இதில் ஒன்றும் முதலில் புரியவில்லை! அப்புறம் விளக்கவுரையை படித்தேன். பாடலின் குறும்பும் அழகும் புரிந்தது.

ஒருநான்கு+ ஈரரை+ ஒன்று = ஆக ஆறு= ஆறாவது ராசி கன்னி

ஐஅரை+ அரை = மூன்று = மூன்றாவது கிழமை செவ்வாய்

இருநான்கு+ மூன்று+ ஒன்று = பன்னிரண்டு= பன்னிரண்டாவது நட்சத்திரம்  உத்திரம்

பெருநான்கு+ அறுநான்கு = இருபத்தெட்டு= இருபத்தெட்டாவது வருடம் ஜயவருடம்.

சரி நான்கு+ பத்து+ பதினைந்து= இருபத்தி ஒன்பது = இருபத்து ஒன்பதாவது வருடம் = மன்மத

விளக்கம்} கன்னிப்பெண்ணே! கேளாய்! உண்மையாய் உன்னுடைய செவ்வாயைக் கேட்டேன். நீ மறுத்து பேசாமல் உத்திரவு ( சம்மதம் ) தந்தாய் எனில் உனக்கு ஜயம் உண்டாகும். வேறு எதுவும்  சொல்லாதே! மன்மத வேதனையை இனி என்னால் சகித்துக் கொண்டு இருக்க முடியாது.

ஓர் இளம்பெண்ணிடம் தன்னை மணந்துகொள்ள சம்மதம் கேட்கிறான் கவிஞன்.மறுத்து பேசாது சம்மதம் கிடைத்தால் பெண்ணுக்கு நன்மை உண்டாகும். என்னால் இளமையின் வேகத்தை மன்மத வேதனையை தாங்க முடியாது என்கின்றான்.   

ஒர் இளம்பெண்ணை பார்த்து காதலன் பாடும் சாதாரண கருத்துதான்! ஆனால் அதை சொன்ன விதம்! அதில் உள்ள குறும்பு எல்லாம் இனிக்கின்றதுதானே!

 விவேக சிந்தாமணி என்ற புத்தகத்தில் இந்த பாடலை படித்தேன்! பிடித்து உங்களிடம் பகிர்ந்துள்ளேன்! இதைப் படித்துவிட்டு எந்தப்பெண்ணிடமாவது ஐ அரையும் ஓர் அரையும் கேட்டுவிடப் போகிறீர்கள்! கன்னத்தில் அறைவாங்கிவந்துவிட்டு என்னை குறை சொல்லக் கூடாது.

 மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தில் நல்லதொரு பாடலுடன் சந்திப்போம்!


உங்கள் கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. இந்த குறும்பும் அழகு... ரசித்தேன்...

    ReplyDelete
  2. விளக்கம் அருமை.

    ReplyDelete
  3. ரசித்தேன்நண்பரே
    நன்றி

    ReplyDelete
  4. விவேக சிந்தாமணியிலிருந்து தங்கள் பாணியில் அருமையான செய்தியைப் பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  5. விளக்கவுரை அருமை நண்பரே...

    ReplyDelete
  6. வணக்கம்
    ஐயா

    பாடலுக்கு அற்புதமான விளக்கம் கண்டு மகிழ்ந்தேன்.
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  7. நன்றி நண்பரே!
    கோனார் உரை போட்டு தந்தமைக்கு!
    ரசித்தேன்!
    இதுபோன்ற பாடலை எழுதுவோரைக் காண துடித்தேன்!

    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  8. கணக்கிலே காதல்.....

    ரசித்தேன் நண்பரே.

    ReplyDelete
  9. ஆஹா... அற்புதமான பாடல் விளக்கம்...
    கணக்கிலே காதல்... ரசித்தேன்.

    ReplyDelete
  10. கணக்கொடு காதல் என அருமையான
    பாடலும் விளக்கமும் தந்தீர்கள் சகோ!

    மிகவும் ரசித்தேன்! பகிர்விற்கு நன்றியுடன் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  11. கணக்கும் காதலும் அருமை! அதன் பொருள் மிகவும் அழகாக இருக்கின்றது..வியப்பாகவும்...அத்தனை அழகாக எழுதப்பட்டுள்ளது! மறைமுகமாக குறிப்புணர்த்துவது போல்....அருமை....

    ReplyDelete
  12. காதலி கணக்கில் வீக்காய் இருந்திருந்தால் கவிஞனின் கணக்கு முயற்சி பயனிலை ஆகியிருக்கும்! ஹி..ஹி...

    ReplyDelete
  13. கணக்குப் போட்ட காதல் - அருமை சகோ

    ReplyDelete
  14. வணக்கம்,
    நல்ல தேடல், அருமையான விளக்கம்.
    நன்றி.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2